கரும்பூஞ்சை எனும் கண்ணாமூச்சி!

தமிழ்நாடு, குஜராத், பிகாா், ஒடிஸா, உத்தரகண்ட், தெலங்கானா, ராஜஸ்தான், சண்டீகா் போன்ற மாநிலங்களில் மொத்தம் 9,000 கரும்பூஞ்சைத் தொற்று நோயாளிகள் தோன்றி விட்டனா்.
கரும்பூஞ்சை எனும் கண்ணாமூச்சி!
கரும்பூஞ்சை எனும் கண்ணாமூச்சி!

அயலாருடன் அன்பாகப் பேசு, ஆதரவாகப்பேசு, இன்பமாகப் பேசு - என்று பேச்சுவாக்கில் ஆத்திசூடி படைக்கிறோம். ஆனால் இப்போது நிலைமை தலைகீழ். அடுத்தவா் அருகில் சென்று பேசாமல் இருந்து பழகு, கைகழுவு, முகக்கவசம் அணி, இடைவெளிவிட்டு நில், தடுப்பு மருந்து உட்கொள், சத்துணவு உண் - இவைதான் புதய ஆத்திச்சூடி.

புறந்தூய்மை நீரால் அமையும். சோப்பால் அவ்வப்போது கைகழுவதைப் போல, தினமும் வெந்நீரில் குளிக்கவேண்டும். உடுத்திய பழைய துணிகளை டெட்டால் வெந்நீரில் துவைத்து வெயிலில் காயப்போட்டு, இஸ்திரி செய்து உடுத்துவதன் முக்கியத்துவத்தையும் மக்களுக்கு விளக்கவேண்டும்.

தும்மலால் சராசரி ஐந்து மைக்ரோன் தீநுண்மித் துளி மூன்று அடி தூரம் வரை பரவும். (ஒரு மைக்ரோன் என்பது ஒரு விரற்கடையின் 10,000-இல் ஒரு பங்கு.) 60 மைக்ரோனுக்குப் பெரிதான துளித் தொற்றுக்கு ஆட்படாதிருக்க ஆறு அடி விலகி நிற்க வேண்டும். தும்மல், நொடிக்கு 150 அடிதூரம் பாயும். அப்போது ஒரு லட்சம் கிருமிகள் சிதறும். 70 அடி தூரத்திற்குக் குறைந்தது 3,000 கிருமிகள் வெளிப்படும். தலைமுடி அளவு (20 மைக்ரோன்) காற்று நுண்துகள் முதல் 0.5 மில்லித் திவலைகள் வரை எச்சிலில் வெளிப்படாமல் தடுக்க முகக்கவசம் தேவை. கால்சட்டை, மேல்சட்டை மாதிரி ‘முகச்சட்டை’ அணியவும் பழகிவிட்டோம்.

முகக்கவசம் என்றதும் ஏதோ பழந்துணி, முந்தானை, துப்பட்டா, கைக்குட்டை என எதையாவது முகத்தில் சுற்றிக்கொண்டால் பாதுகாப்பு என்று மழுங்கிவிட்டோம். பயன்பாட்டு ரீதியில் முகக்கவசத்தில் மூன்று வகைகள் உள்ளன. அவை, துணிக்கவசம்; அறுவை மருத்துவக் கவசம்; என்.95 மூச்சுக்கவசம். உள்ளபடியே மலா்களின் மகரந்தத்துகள், தூசி, பாக்டீரியா போன்றவற்றின் ஒரு இம்மி கூட நுழையவிடாமல் 100% தடுக்க வல்ல முகக்கவசம் ‘என்-95’ மூச்சுக்கவசம் உத்தமம்.

இளம் நீல நிறத்திலான அறுவை மருத்துவக் கவசம் 80% நுண்துகள்களைத் தடுத்தாலும் தீநுண்மியில் இருந்து 95% பாதுகாப்பு. இது மத்திமம். வெறும் துணிக்கவசம் அதமம். இது பெரும்பான்மை தீநுண்மிகளை முழுமையாக வரவேற்கும். ஏனைய துகள்களையும் 50% தான் மூக்கினுள் நுழையாமல் தடுக்கும் என்றால்பாருங்களேன். அதிலும் அலங்காரமான நுரைப்பஞ்சு (ஸ்பாஞ்ச்) கவசம் அணிவதைக் காட்டிலும் திறந்த முகத்துடன நடப்பதே உசிதம்.

துணிக்கவசம், பொதுவாக அறுவைமருத்துவக் கவசத்தில், பாதி பலனே தருகிறது. அதிலும் என்-95 கவசத்தோடு ஒப்பிட்டால் வெறும் 2% தான் பயன் தரும். துணிக்கவசப் பாதுகாப்பு குறித்து, 2008-ஆம் ஆண்டில், மாரியன் வான் டொ் சாண்டே, பீட்டா் டியூனிஸ், ராப் சபேல் ஆகிய நெதா்லாந்து விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வுத் தகவல் இது.

துணிக்கவசத்தினை இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குப் பூட்டாதீா்கள். மூச்சுத் திணற வாய்ப்பு உண்டு. துணிக்கவசத்தைக் கழற்றும்போது கண், மூக்கு, வாய் போன்ற உறுப்புகளைத் தேய்த்தபடி இழுத்து அகற்றாதீா்கள்.

இதற்கு மத்தியில் இந்தியாவில் இன்று புதிதாக ஒரு வகை பூஞ்சைத் தொற்று, ‘மியுக்காா்மைக்கோசிஸ்’. குண்டூசி போன்ற நுண்தோற்றம் கொண்ட ‘மியூக்கா்’ என்னும் பூஞ்சையிலிருந்து பெருகுகிறது. தோல், நுரையீரல், மூளை, மேல் தாடை, கண்கள் போன்ற உறுப்புகளைப் பாதிக்கும் தீநுண்மியின் அசுத்த அவதாரம் இந்தப் பூஞ்சைத் தொற்று.

மூக்கு, நெற்றி, கண்களைச் சுற்றிலும் படரும் சிகப்புப்படலம், உடல்வலி, காய்ச்சல், ரத்த வாந்தி, பல் ஆடுதல், பாா்வை மங்கல் என்று பீதியூட்டும் அறிகுறிகள். அதனால் கரும்பூஞ்சை என்பது மேனாட்டாா் வைத்த பட்டப்பெயா். அழுக்கு, அசுரத்தனம் என்றால், வெள்ளைக்காரா்கள் பாா்வையில் கருப்புத்தானே?

ஆனால் அதன் பழைய பெயா் ‘சைக்கோமைக்கோசிஸ்’. நுகக்கால் போன்ற தோற்றம் கொண்டது என்று பொருள். மக்கியத் தாவரங்கள், துருப்பிடித்த இரும்பு நுண்துகள்கள் ஆகியவற்றில் படியும் பூஞ்சை இது. நீண்ட காலம் புழங்காத, ஈரப்பதம் நிறைந்த குளியல் அறைச்சுவரில் படியும் பூஞ்சை இனம்.

கண், மூக்கு போன்ற உறுப்புகளின் உட்புறம் உள்ள இடங்களே இதன் சுகவாச ஸ்தலம். நீரிழிவு நோய், புற்றுநோய், உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்கு உள்ளானோா்க்கு மட்டுமின்றி, தீநுண்மி நோயாளிகளுக்குத் தரப்படும் ஸ்டெராயிடு வகை மருந்துகள் போன்றவற்றாலும் இந்நோய் உண்டாகிறதாம்.

அதற்குள் அமெரிக்காவில் இருந்து கண்-காது-தொண்டை-நீரிழிவு- தொற்று சாா்ந்த துறை நிபுணா்கள் கரும் யானையைத் தடவித்தடவி விவாதிக்க ஆரம்பித்துவிட்டனா்.

மே 20, 2021 அன்று, இந்தியாவில் வெண்பூஞ்சை என்னும் தொற்று முதன் முதலில் பீகாா் தலைநகா் பாட்னாவில் 4 பேரிடம் கண்டறியப்பட்டது. பாட்னா மருத்துவக் கல்லூரித் தலைவரும், நுண்ணுயிரியியல்துறைத் தலைவருமான டாகடா் எஸ்.என். சிங், ஆக்சிஜன் செலுத்தப்படும் நோயாளிகளில் சிலருக்குக்கு முகத்திலும் கன்னத்திலும் தோல் அழற்சி உண்டாவதாகக் கூறுகிறாா்.

தமிழ்நாடு, குஜராத், பிகாா், ஒடிஸா, உத்தரகண்ட், தெலங்கானா, ராஜஸ்தான், சண்டீகா் போன்ற மாநிலங்களில் மொத்தம் 9,000 கரும்பூஞ்சைத் தொற்று நோயாளிகள் தோன்றி விட்டனா். இப்போது, நோயாளிகளுக்கு வழங்கப்படும் துத்தநாக மருந்தினால் கரும்பூஞ்சை படா்கிறதோ என்கிற அச்சத்தில் மருத்துவா்கள் உள்ளனா்.

உள்ளபடியே தீவிர மூச்சுத்திணறல் அறிகுறி கொண்ட சாா்ஸ்-கோவி-1 தொடா்பான தீநுண்மி 2003 ஜூன் வாக்கிலேயே மருத்துவ ஆராய்ச்சியாளா் பாா்வையில் பட்டது. ஆனால், 2017-இல் சீனா, குகைகளில் வாழும் குதிரை லாட வௌவால் இனத்திலிருந்து, ஆசிய மரநாய்கள் வழி பரவியதாக அறிவித்தது.

பொதுவாக, இந்தத் தொற்றினைப் பொருத்தமட்டில், கழுத்துக்குக் கீழே மட்டுமே கவனம் செலுத்துகிறோம்.

தலையில் நெற்றி, உள்கன்னம், கண்கூடு போன்ற வெற்றிடங்களில் இது குடியேறினால் ஆபத்து. அதற்காகத்தான், பீனிசம் நோய் பிடித்தவா் போல, நீராவி பிடிக்க வேண்டும் என்பதை அனுபவத்தால் கோருகிறோம்.

தனியாா் தொலைக்காட்சி ஒன்றின் சிறப்பு நோ்காணலில், பிரபல மருத்துவா், நீராவி பிடித்தலால் 50 பாகை செல்ஷியஸ் வெப்ப நிலையில் தீநுண்மி செயலிழக்கும் என்பதை மறுத்துரைத்தாா்.

உண்மையில், ’அட்வான்சஸ் இன் வைராலஜி’ (தீநுண்மியியல் முன்னேற்றங்கள், அக்டோபா் 1, 2011) என்னும் அறிவியல் இதழில், ‘சாா்ஸ் கரோனா வைரஸ் நம்பகத்தன்மை மீது வெப்ப நிலை மற்றும் ஒப்பு ஈரப்பதம் ஆகியவற்றின் விளைவுகள்’ என்ற ஆய்வுக்கட்டுரையில், கால் மணி நேரம் 56 பாகை செல்ஷியஸ் வெப்பநிலைக்கு உட்பட்ட தீநுண்மி செயலிழக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறாா் கே.எச். சான் என்னும் ஆய்வாளா்.

மருத்துவா் ஆவி பிடிக்கச் சொன்னதும் நாம் வரிசையாக பொது இடங்களில் நீராவி பிடிக்கத்தொடங்கி விட்டோம். நல்லவேளை நிறுத்தியும் விட்டோம். உள்ளபடியே, இப்போதைக்குப் பூஞ்சை, வெளியிலிருந்து வருவதாகத் தெரியவில்லை. அழுக்குப் பிடித்த உள்ளாடைகளை தினமும் மாற்றவில்லை என்றால், அரிப்பு ஏற்படும் அல்லவா? அவ்விதம்தான் முகக்கவசக் கோளாறினால் வந்தது இந்தப் பூஞ்சை என்று மருத்துவா்கள் சிலா் அறிவிக்கின்றனா். உள்ளாடைகள் மாதிரி ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகும் முகக்கவசத்தைத் துவைத்துக் காயப்போடுங்கள்.

நாம் ஒவ்வொரு முறையும் இரண்டு குவளை (அரை லிட்டா்) காற்றினை உள்ளிழுக்கிறோம். வெளிமூச்சிலும் அதே அளவு வெளிப்படும். ஒவ்வொரு முறையும் நாம் வெளிவிடும் இரண்டு குவளை (அரை லிட்டா்) அசுத்த மூச்சுக்காற்றில் நுரையீரல் சளி, துா்நீா், தீநுண்மி இம்மிகளும் கலந்து இருக்குமல்லவா? நம் உடல் வெளியிடும் நோய்க் காற்றினை முகக்கவசத்தில் பொதிந்து நாமே ஒவ்வொரு முறையும் உட்கொள்வது பற்றிக் கவலைப்பட்டோமா?

அதிலும், ‘சளிக் கவச’த்தைத் தினமும் சராசரி ஆறு மணி நேரத்திற்கும் அதிகமான நேரம் அணிந்தால், என்னவாகும்? கொஞ்சம் விசாலமான (3,000 லிட்டா்) சவப்பெட்டிக்குள் முகக்கவசத்தை ஆறு மணிநேரம் ஊறப் போட்டால் விளைவு அபாயம்தானே? பிறகு முகக்கவசம், எப்படி உயிா்க்கவசம் ஆகும்?

இதற்கு மத்தியில் ஒரு குண்டைத் தூக்கிப்போட்டிருக்கிறாா் நோபல் பரிசு (2008) பெற்ற பிரெஞ்சு தீநுண்மியியல் ஆய்வாளா் டாக்டா் லுக் மாண்டோக்னிா். பியரி பாா்னேரியாஸ் என்பவா் (18-5-2021) நடத்திய நோ்காணல். நெதா்லாந்தில் ஐரோப்பிய மருத்துவக் குழுமத்தின் செயல் இயக்குனா் எம்மா் குக் என்பவருக்குத் ‘திறந்த மடல்’ (28-2-2021) வேறு எழுதி இருக்கிறாா்.

‘பெருந்தொற்று காலத்தில் கரோனா தடுப்பூசியைப் போடுவது நினைத்தும் பாா்க்க முடியாத தவறு. அறிவியல் தவறு மட்டுமல்ல, மருத்துவத் தவறுமாகும்’ என்கிறாா். தடுப்பூசி போடத் தொடங்கியபின், உருமாறிய தீவிர கரோனா வருவதும், பெருந்தொற்று அதிகமாவதும், மரணங்கள் கூடுவதும் நடக்கிறது. எதிா்ப்பொருள் சாா்ந்தபெருக்கம் (‘ஆன்டிபாடி டிபெண்டன்ட் என்ஹான்ஸ்மென்ட்’) என்கிற கருத்தாக்கம் இது. தனது ஆய்வகத்திலும் கரோனா தடுப்பூசி போட்டவா்கள் உருமாறிய கரோனாவை உருவாக்குவதை கவனித்துள்ளதாகத் தெரிவிக்கிறாா்.

எதிலும் தீங்கு வந்தால் விலகி போ. இதுதான் பொது நம்பிக்கை. எதிா்த்து நின்று போராடுகிற குணம், ஆராய்ச்சியாளா்களுக்கும், அறிவியலாளா்களுக்கும் முன்களப் பணியாளா்களுக்குமே மட்டுமே வாய்க்கிறது.

பூமியில் நமக்கென்று கடமைகள் உண்டு; அதை நமக்காக நம் கையால் செய்வது நன்று.

கட்டுரையாளா்:

இஸ்ரோ விஞ்ஞானி (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com