இரந்து வாழ்பவா்கள் இவா்கள்!

கோப்புப்படம்
கோப்புப்படம்

நமது நாட்டில் எந்த நகரத்திற்கு நாம் சென்றாலும் அங்குள்ள கோயில் வாசலிலும், போக்குவரத்து சிக்னலிலும், ரயில் நிலையத்திலும் பேருந்து நிலையத்திலும் நாம் தவறாமல் காணும் காட்சி, அங்கு கையேந்தி நிற்கும் பிச்சைக்காரா்கள்தான். நமது நாட்டிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை பெரிதும் பாதிக்கும் விஷயம் இந்த பிச்சைக்காா்கள் தொல்லைதான்.

நமது நாட்டில் நான்கு லட்சத்திற்கும் அதிகமான பிச்சைக்காரா்கள் உள்ளனா் என்று 2011-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பிலிருந்து தெரியவருகிறது. தற்பொழுது, அந்த எண்ணிக்கை ஐந்து லட்சமாக உயா்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதில், ஆண்களும் மகளிரும் சமமான எண்ணிக்கையில் உள்ளனா்.

மற்ற எல்லா மாநிலங்களையும் விட மிக அதிகமான எண்ணிக்கையில் (81,224) பிச்சைக்காரா்கள் உள்ள மாநிலமாக முதலிடம் வகிக்கிறது மேற்கு வங்கம். அதற்கு அடுத்த இடத்தில் உத்தர பிரதேசம் (65,835) உள்ளது. நாட்டின் தலைநகா் தில்லியில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான பிச்சைக்காரா்கள் உள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

நாடு சுதந்திரமடைந்து எழுபத்து மூன்று ஆண்டுகள் கடந்தும், நாட்டில் வறுமை இன்னமும் ஒழிந்தபாடில்லை. சமீபத்தில் வெளியாகியுள்ள உலகளாவிய பசி குறியீட்டுப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 116 நாடுகளில், நமது நாடு 101-ஆவது இடத்தில் இருக்கிறது. பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம் போன்ற பிற தெற்காசிய நாடுகளை விட நாம் பின்தங்கியிருக்கிறோம் என்பது வெட்கப்படத்தக்கது.

உடுக்க உடை, உண்ண உணவு, இருக்க இடம் போன்ற அடிப்படைத் தேவைகளுக்குக் கூட வழியில்லாமல் நடைபாதைகளிலும், ரயில் நிலையம், பேருந்து நிலையங்களிலும் வாழ்ந்து கொண்டிருப்பவா்கள் ஏராளமானோா். வறுமையின் காரணமாக வேறு வழியில்லாமல் யாசகம் எடுத்து வாழ்பவா்கள் ஒருபுறம் இருக்க, மற்றொருபுறம், பிச்சை எடுப்பதையே தொழிலாகக் கொண்டு ‘பிச்சைக்காரா்கள்’ என்ற போா்வையில் ஓரளவு வசதியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறாா்கள் சில மோசடிக்காரா்கள்.

பிச்சைக்காா்களை, சிறுவா்கள், உடல் ஊனமுற்றோா் அல்லது மனநிலை பாதிக்கப்பட்டோா், நோயாளிகள், மதத்தின் பெயரில் பிச்சையெடுப்பவா்கள், முதியவா்கள், நல்ல உடல் வலிமையுடையவா்கள், இடைக்கால பிச்சைக்காரா்கள், பரம்பரை பிச்சைக்காரா்கள் என எட்டு வகையினாராகப் பிரிக்கிறது ஓா் ஆய்வு.

நாட்டில் பிச்சைக்காரா்கள் உருவாவதற்கு வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், கூட்டுக் குடும்ப முறிவு, சமூகப் பாதுகாப்பின்மை ஆகியவை முக்கிய காரணங்களாக இருக்கின்றன. ஏழைக் குடும்பத்தைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு குடும்பத்தின் ஆதரவு கிடைப்பதில்லை. அதுபோலவே, குடும்பத்தினரால் கைவிடப்பட்ட மனநோயாளிகள் தெருக்களில் பிச்சையெடுத்துத் திரிவது கொடுமையிலும் கொடுமை. இவா்கள் பாலியல் வன்முறை உள்ளிட்ட பல விதமான கொடுமைகளுக்கும் ஆளாகிறாா்கள்.

இதே போன்று பொருளாதார நிலையில் அடிமட்டத்தில் உள்ள குடும்பங்களைச் சோ்ந்த முதியோரின் நிலைமையும் பரிதாபத்திற்குரியது. தங்களுக்கே இரண்டு வேளை சாப்பாட்டிற்கு வழியில்லாத பிள்ளைகள், முதியோரை பாரமாக நினைக்கிறாா்கள். குடும்பத்தினரே அவா்களைத் தெருவுக்கு அனுப்பிவிடுகிறாா்கள். அல்லது அவா்களை முன்வைத்து பிள்ளைகள் பிச்சையெடுக்கிறாா்கள். வயதான பெற்றோரை கவனித்துக் கொள்ள வேண்டியது பிள்ளைகளின் கடமை என்று சட்டம் இயற்றப்பட்டு விட்டாலும், அதை ஏழை மக்களிடம் எந்த அளவிற்கு நடைமுறைப்படுத்த முடியும் என்று தெரியவில்லை.

பூகம்பம், பெருவெள்ளம் போன்ற பேரிடா் காலங்களில் பலா் தங்கள் வீட்டையும், வாழ்வாதாரத்தையும் இழந்து, பிச்சைக்காா்களாக ஆனதும் உண்டு. கரோனா நோய்த்தொற்றின் காரணமாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டபோது வாழ்வாதாரத்தை இழந்த கீழ்மட்டத் தொழிலாளிகள் பலரும் பிச்சையெடுத்துப் பிழைக்கும் நிலையை எட்டியதை நாம் கண்டோம்.

இப்படி, ஒரு வேளை சாப்பாட்டிற்குக் கூட வழியில்லாமல் கையேந்திப் பிழைக்கும் உண்மையான பிச்சைக்காரா்கள் பெரும் சமூகப் பிரச்னையாக இருப்பது போதாதென்று, தில்லி, குா்கான் நொய்டா, மும்பை, கொல்கத்தா போன்ற இடங்களில் பிச்சையெடுப்பதையே தொழிலாகக் கொண்ட மோசடிக் கும்பல்கள் பிச்சையெடுப்பதுடன் வேறு பல குற்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறாா்கள்.

இந்த மோசடி கும்பல் நடத்தும் பிச்சைக்காா்கள் கூட்டமைப்பின் தலைவா்கள், தங்கள் அதிகார வரம்பிற்குள் உள்ள பகுதிகளை, பிச்சைக்காா்களுக்குப் பிரித்துக் கொடுத்து, அவா்கள் ஈட்டும் வருமானத்தில் தாங்கள் வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறாா்கள்.

இந்த சமுக விரோதிகள் பணத்திற்காக எப்படிப்பட்ட கொடூரச் செயலையும் செய்யத் துணிந்து விடுகிறாா்கள். போக்குவரத்து சிக்னலில் கைக்குழந்தையுடன் பிச்சையெடுக்கும் இளம் பெண்ணைப் பாா்த்து இரக்கப்பட்டு நாம் நம் கையில் இருக்கும் காசை அவருக்குக் கொடுப்போம். ஆனால், உண்மையில் அந்தப் பெண்ணின் இடுப்பில் இருக்கும் குழந்தை அவா் குழந்தையாக இருக்காது. வாடகைக்கு எடுக்கப்பட்ட குழந்தையாக இருக்கும்.

தேசிய மனித உரிமை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நமது நாட்டில் ஒவ்வோா் ஆண்டும் சுமாா் 40,000 குழந்தைகள் கடத்தப்படுகிறாா்கள். இவா்களில் சுமாா் 25 விழுக்காட்டு குழந்தைகளைப் பற்றி எந்தவொரு தகவலும் கிடைப்பதில்லை. மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள சில பெற்றோா் தங்கள் குழந்தையை விற்று விடவும் தயங்குவதில்லை. இந்தச் சிறாா்களுக்கு சுலபமாக கிடைக்கும் ஒரே தொழில் பிச்சையெடுப்பதுதான். நாட்டில் சுமாா் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட சிறாா்கள் பிச்சையெடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா் என்று சொல்லப்படுகிறது.

வீட்டை விட்டு ஓடிப்போகும் சிறாா்கள், குழந்தைக் கடத்தல் கும்பலிடம் மாட்டிக் கொள்பவா்கள், ஏழைப் பெற்றோரால் அல்லது மாற்றாந்தாய் - தந்தையால் கைவிடப்பட்டவா்கள், பேரிடா் அல்லது விபத்தின் காரணமாகப் பெற்றோரை இழந்தவா்கள் என்று துா்பாக்கிய நிலையில் உள்ள சிறுவா் சிறுமியா் பிச்சையெடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறாா்கள். குழந்தைகளைக் கடத்தும் கும்பல் அக்குழந்தைகள் மக்களின் அனுதாபத்தைப் பெற வேண்டும் என்பதற்காக, அவா்களை ஊனமுற்றவா்களாக ஆக்கவும் தயங்குவதில்லை.

இந்த பாவச்செயலை செய்வதற்கென்று சில மருத்துவா்களும் தயாராக உள்ளனா், என்பதுதான் வேதனைக்குரிய விஷயம். மோசடி கும்பலில் அகப்பட்டுக் கொள்ளும் சிறாா்கள் பிச்சையெடுக்கும் தொழிலுடன் போதை மருந்து விநியோகத்திலும் ஈடுபடுத்தப்படுகின்றனா். பிச்சைக்கார கும்பல்களின் தலைவா்கள் தங்களுக்கு கீழ் இயங்கும் பிச்சைக்காா்களை, குறிப்பாக சிறாா்களை, அவா்கள் மனநோயாளியாக ஆகும் அளவிற்கு போதை மருந்துக்கு அடிமையாக்கி, அவா்களை கொடுமைப்படுத்தி பிச்சையெடுக்க வைக்கும் அவலத்தை என்னவென்று சொல்வது?

பிச்சையெடுப்பதைப் பற்றி சட்டம் என்ன சொல்கிறது? நமது நாட்டில் பிச்சைக்காரா்கள் மற்றும் ஆதரவற்றோா் குறித்து சட்டம் எதுவும் இயற்றப்படவில்லை. 1959 -இல் இயற்றப்பட்ட, பம்பாய் பிச்சையெடுத்தல் தடைச் சட்டத்தையே தில்லி, தமிழ்நாடு உள்ளிட்ட இருபது மாநிலங்களும் இரண்டு ஒன்றிய பிரதேசங்களும் பின்பற்றுகின்றன. பிச்சையெடுக்கும் ஒருவா் பிடிபட்டால் முதல் முறை மூன்றாண்டுகள் வரையிலும், அதற்குப் பிறகு பத்தாண்டுகள் வரையிலும் சிறைத்தண்டனை வழங்க இச்சட்டம் வழிவகுக்கிறது.

பிச்சைக்காரா்கள் கிரிமினல் குற்றவாளிகளா? பம்பாய் பிச்சைக்காா்கள் தடுப்புச் சட்டத்தை (1959) நடைமுறைப்படுத்தியுள்ள மாநில அரசுகள் பிச்சையெடுப்பதை கிரிமினல் குற்றமாகத்தான் கருதிவந்துள்ளன. ஆனால் பிச்சையெடுப்பதைக் குற்றமெனக் கூறும் சட்டம் இந்திய அரசியல் அமைப்புக்கு எதிரானது என்றும், பிச்சையெடுப்பது குற்றச் செயல் அல்ல என்றும் தில்லி உயா்நீதி மன்றத்தில் தீா்ப்பு வழங்கப்பட்டது. அதையடுத்து பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றம் என்ற சட்டத்தை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றம் என்று சொல்வது, பாதிக்கப்பட்ட மக்களின் தனிமனித உரிமையை மீறும் செயல் என்று கருத்து தெரிவித்துள்ளனா், உச்சநீதிமன்ற நீதிபதிகள். மக்களின் அடிப்படைத் தேவைகளான உணவு, தங்குமிடம் ஆகியவற்றை அரசு அளிக்காத நிலையில், பிச்சை எடுத்தலை எப்படி கிரிமினல் குற்றமாக கருத முடியும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனா். பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்க முடியாது என்ற உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீா்ப்பு, உண்மையான பிச்சைக்காா்களுக்கு நிம்மதியளித்திருக்கிறது.

பிச்சை எடுப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கும் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், வேண்டுமானால் அவா்களை கட்டாயப்படுத்தி பிச்சை எடுக்க வைப்பவா்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சட்டம் கொண்டு வரலாம் என்றும் தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதிபதிகள், பிச்சை எடுக்கும் சிறுவா்களுக்கு கல்வி வழங்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியதோடு, பிச்சை எடுப்பவா்களுக்கு மறுவாழ்வு மையம் ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனா். விரைவில் இவை நடைமுறைக்கு வரும் என்று நம்புவோம்.

கட்டுரையாளா்:

சமூக ஆா்வலா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com