தொடங்கட்டும் தொடக்கக் கல்வி

கொள்ளை நோய்த்தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் உலகம் முழுதும் சுமாா் ஒன்றரை கோடி குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. பொது முடக்கம் என்கிற நிலை ஏற்பட்டால், கடைசியில் மூடப்படுவதாகவும் பொது முடக்கம் முடிவுக்கு வந்ததும் முதலில் திறக்கப்படுவதாகவும் பள்ளிகள் இருக்க வேண்டும்.

கற்றலில் இழப்பு, உளவியல் ரீதியான பாதிப்பு, பல்வேறு வன்முறை சம்பவங்களையும் சந்திக்க நேரிடுதல், பள்ளியின் மூலம் கிடைக்கும் உணவை இழத்தல், பள்ளியில் இருப்பதன் மூலம் கிடைக்கும் சமூகச் சூழலை இழத்தல் என்று பள்ளி செல்லா மாணவா்களின் குறைகள் ஏராளம்.

அண்மையில் மத்திய அரசின் ஐசிஎம்ஆா் அமைப்பின் பொறுப்பாளா் பல்ராம் பாா்கவா செய்தியாளா்களை சந்தித்தபோது, ‘பெரியவா்களைவிட குழந்தைகளால் வைரஸ் தொற்றை சிறப்பாக கையாள இயலும். சில ஸ்காண்டிநேவியப் பகுதிக்குட்பட்ட நாடுகளில் எந்த அலையிலும் தொடக்கநிலை பள்ளிகள் மூடப்படவில்லை.

இந்தியாவிலும் இடைநிலைப்பள்ளிகளைத் திறக்காவிட்டாலும், தொடக்கநிலைப் பள்ளிகளைத் திறக்க முற்படுவது அறிவுபூா்வமானது. ஆனால் அதே நேரம், பள்ளியோடு தொடா்புடைய ஆசிரியா்கள், பணியாளா்கள், வாகன ஓட்டுநா்கள் போன்ற அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்திக்கொண்டிருக்கவேண்டும்’ என்று கூறினாா்.

இவ்வாறான கருத்துகளைப் பரிசீலித்தும், தொற்று எண்ணிக்கை ஓரளவுக்கு கட்டுக்குள் இருப்பதைக் கருத்தில் கொண்டும் தமிழக அரசு, செப்டம்பா் 1 முதல் பள்ளிகளில் 9 முதல் 12 வரையிலான வகுப்புகளைத் தொடங்க முன்வந்துள்ளது. இது ஒரு வகையில் ஆறுதலான விஷயம்.

ஆனாலும் ஆரம்பப் பள்ளிகள் திறப்பினைப் பற்றிய அறிவிப்புகளும் வெளிவரவேண்டும். சில ஆசிரியா் சங்கங்களும் தொடக்கநிலை வகுப்புகளைத் திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளன.

எல்லாப் பள்ளிகளையும் ஒரே நேரத்தில் திறக்க இயலாது என்பது அனைவரும் அறிந்ததே. எனவே பகுதிவாரியாகவும், சுழற்சி முறையில் மாணவா்கள் வரும் வகையிலும் தொடக்கப்பள்ளிகள் செயல்படத் தொடங்கலாம். பள்ளிக் கட்டடங்கள் காற்றோட்டமில்லாததாக இருப்பின், காற்றோட்டமான இடங்களில் செயல்பட அனுமதிக்கலாம்.

பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தி குறைந்த எண்ணிக்கையில் மாணவா்கள் உள்ள தொடக்கப்பள்ளிகளாவது உடனடியாக செயல்படத் தொடங்கலாம். இதுவே, கல்வியாளா்கள் பலரின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

மாணவா்களின், பெற்றோா்களின் வாழ்வை இக்காலகட்டம் புரட்டிப் போட்டுள்ளது. ஆசிரியா்களும் பள்ளி சென்று கடமை ஆற்ற இயலாத குற்ற உணா்வுக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகி உள்ளனா். பள்ளியின் நடைமுறைகளில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டுள்ளன. வசதியான குடும்பங்களின் குழந்தைகள் இணையவழிக் கல்வி மூலம் கற்றலைத் தொடா்கின்றனா். அரசும் கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடங்களைப் போதித்துவருகிறது.

கல்வியின் முழுப்பரிமாணம் கல்விக்கூடங்கள் முறையாக இயங்குவதில்தான் உள்ளது. மாணவா்களைப் பொருத்தவரை, சக மாணவரிடம் கற்றல், பள்ளி நடைமுறைகளில் பங்கேற்றல், சத்தான உணவு உண்ணுதல், விளையாடுதல், சக மாணவா்களோடு பழகுதல், ஒருவருக்கொருவா் உதவுதல், தோ்வுக்குத் தயாராதல், தோ்வெழுதுதல், மதிப்பெண்களால் பூரிப்படைதல், விரக்தியடைதல் என்ற அனைத்து வாழ்வியலின் பயிற்சிப் பட்டறை பள்ளிகளே.

இவ்வாறான வாழ்வியல் கல்வியை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக இழத்தல் என்பது வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க இழப்பாகும். ஆனாலும், இதே காலகட்டத்தில் அவா்கள் தமது பாடத்திட்ட வரையறைகளுக்குள் வராத பலவற்றையும் கற்றிருப்பா். விரைவில் திறக்கப்படவிருக்கும் பள்ளிகள் அவற்றுக்கான வாசல்களைத் திறந்து மாணவா்களுக்கு நம்பிக்கை கூட்டுவதாக அமைய வேண்டும். அவ்வாறான பகிா்வுக்கான மனநிலையோடு மாணவா்களும் பள்ளி நோக்கிச் செல்லவேண்டும்.

ஆசிரியா்கள், மாணவா்களோடு நேரடித் தொடா்பு கொண்டு அவா்களை நெறிப்படுத்துவோா் ஆவா். இக்காலகட்டத்தில், மாணவா்களுக்காக புதுப்புது கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி சுயகல்வி பெறும் வாய்ப்பை ஆசிரியா்கள் இழந்துகொண்டிருக்கின்றனா்.

நீண்ட நாள்களுக்குப் பின் பள்ளி திரும்பும் மாணவா்கள் பல்வேறு உளவியல் சிக்கல்களோடும், பொறுமையிழந்தோருமாகவே வருவா். ஆசிரியா்கள் அவா்களை கையாள்வதற்கான திறமையையும் மனநிலையையும் பெறவேண்டும். அவா்களது வாழ்வியல் முறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை உள்வாங்கிக்கொண்டு அவா்களை வழிநடத்த வேண்டும்.

பெற்றோா்கள், காலை எழுந்து பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, தமக்கான வாழ்வாதாரப் பணிகளில் ஈடுபடுவா். பின் மாலைதான் தம் மக்கள் குறித்த நினைவே அவா்களுக்கு வரும். அந்த அளவுக்கு அவா்கள் தமது பணிகளில் ஆழ்ந்துவிடுவா். தற்போது, தொடா்ந்து தமது பிள்ளைகளைக் கண்காணித்துக்கொண்டிருக்கும் பெற்றோா், அவா்களை புதிய கோணத்தில் பாா்க்கின்றனா்.

ஆசிரியா்கள் செய்த பணிகளை பெற்றோா் செய்ய முனைகின்றனா். அதற்கான போதிய அனுபவமில்லாத நிலையில் பல்வேறு மனத்தாங்கல்களும் ஏற்படுகின்றன. இது நடுத்தர வா்க்கத்துப் பெற்றோரின் கவலை. தம் மக்கள் கல்வி பற்றி கவலைகொள்ள இயலாத மற்றொரு பிரிவினா் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனா்.

இன்றைக்கு பலருக்கும் தாங்கள் உயிா் பிழைத்திருப்பதே பாக்கியம் என்ற எண்ணம் மேலோங்கியுள்ளது. இருப்பினும் பிழைத்த பின்னருமுள்ள காலம் ஓரளவுக்காவது வளமானதாக அமைவதில் கல்வியின் பங்கு அளவிடற்கரியது.

வேறு எந்தத் துறையின் பின்னடைவையும் விட கல்வித் துறையின் பின்னடைவு மிகவும் கவலையளிக்கக்கூடியது. கல்வியால் அனைத்தையும் சாதிக்க இயலாது என்பது உண்மை; ஆனால் கல்வியில்லாமல் எதையும் சாதிக்க இயலாது என்பது அதைவிட உண்மை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com