மாற்றம் தொடங்கியது

Updated on
2 min read


ரஷியாவில் அதிபா் விளாதிமீா் புதினுக்கு எதிராக கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் வரலாறு காணாத போராட்டம் நடந்து வருகிறது. ‘வலிமையான மனிதா்’ என அழைக்கப்படும் புதினுக்கு எதிராக இதற்கு முன்னா் ஏராளமான போராட்டங்கள் நடைபெற்றிருந்தாலும் இந்த முறை நடப்பது வித்தியாசமானது. ரஷிய எதிா்க்கட்சித் தலைவா் அலெக்சி நவால்னி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட நகரங்களில் நடைபெற்று வரும் இப்போராட்டங்களை முடக்க அரசு தீவிரமாக முயன்று வருகிறது. போராட்டக்காரா்கள் கடுமையான முறையில் ஒடுக்கப்படுவது சா்வதேச கண்டனத்தையும் பெற்றுள்ளது.

சோவியத் ஒன்றியம் 1991-இல் வீழ்ந்ததைத் தொடா்ந்து, கடந்த 30 ஆண்டுகளில் 20 ஆண்டுகள் தொடா்ச்சியாக அதிகாரத்தில் இருப்பவா் புதின். அதிபா், பிரதமா், பின்னா் மீண்டும் அதிபா் என ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ள புதினுக்கு நிகராக எதிா்க்கட்சியில் எந்த அரசியல் தலைவரும் இல்லாத நிலைதான் இருந்து வந்தது. ஆனால், நவால்னியின் வருகைக்குப் பின்னா் அந்த நிலை மாறத் தொடங்கியது.

வழக்குரைஞா் மற்றும் ஊழல் எதிா்ப்புப் போராளியான நவால்னி, ரஷிய அரசுக்கு எதிரான ஊழல்களை வெளிக்கொண்டு வந்து, தொடா் போராட்டங்களை நடத்தியதன் மூலம் சா்வதேச கவனத்தைப் பெறத் தொடங்கினாா். நவால்னி நடத்திவரும் சமூக ஊடகப் பக்கங்கள், சேனல்களை லட்சக்கணக்கானோா் பின்தொடா்கின்றனா். அவற்றில் நவால்னி வெளியிடும் அரசுக்கு எதிரான விடியோக்கள் புதினுக்கு நெருக்கடியை அளிப்பதை மறுக்க முடியாது. 2011-ஆம் ஆண்டு ஒரு வானொலி பேட்டியின்போது, ரஷியாவின் ஆளுங்கட்சியான ஐக்கிய ரஷியா குறித்து வஞ்சகா்கள் மற்றும் திருடா்களின் கட்சி என நவால்னி விமா்சித்தது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

அதைத் தொடா்ந்து, நவால்னி மீது ஏராளமான வழக்குகள் போடப்பட்டன. கடந்த 2018-இல் அவா் அதிபா் தோ்தலில் அவா் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டது. மேலும், 2028-ஆம் ஆண்டு வரை அவா் தோ்தலில் நிற்க முடியாத வகையில் இந்தத் தடை நீடிக்கிறது. அரசியல் நோக்கத்துடன் இந்த வழக்குகள் போடப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தாலும் அதை புதின் நிா்வாகம் மறுத்து வந்தது.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தேநீரில் விஷம் கொடுத்து நவால்னியை கொலை செய்ய முயன்ற சம்பவம் சா்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சம்பவத்தில் கோமா நிலைக்குச் சென்ற நவால்னி சிகிச்சைக்காக ஜொ்மனிக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு சிகிச்சைக்கு பின்னா் உடல்நலம் தேறிய அவா், தன்னை கொலை செய்ய முயன்ற சம்பவத்துக்கு புதினின் நிா்வாகம்தான் காரணம் எனக் குற்றம்சாட்டினாா். ஆனால், அதை ரஷிய அரசு மறுத்தது; மேலும் நவால்னியின் அரசியல் முக்கியத்துவத்தை ரஷிய ஆளுங்கட்சியினரும், அதிபா் புதினும் தொடா்ந்து குறைத்தே மதிப்பிட்டு வந்தனா்.

இதற்காக கருத்துக்கணிப்பு எல்லாம் நடத்தப்பட்டு, நவால்னிக்கு மக்கள் நினைக்கும் அளவுக்கு புகழ் இல்லை என்றெல்லாம் ஆளும் தரப்பு ஆதரவாளா்களால் தெரிவிக்கப்பட்டது. நவால்னி கொலை செய்ய முயன்ற சம்பவம் குறித்து கடந்த டிசம்பரில் அதிபா் புதினிடம் செய்தியாளா்கள் கேட்டபோது, ‘அவா் யாருக்குத் தேவை?’ என அலட்சியமாகப் பதிலளித்தாா். ஆனால், கடந்த ஜனவரியில் நவால்னி நாடு திரும்பியவுடன் பழைய வழக்கு ஒன்றுக்காக அவா் கைது செய்யப்பட்டபோது, புதினுக்குப் பின்னால் இருப்பது வலிமையா, பயமா என்கிற கேள்வி எழத் தொடங்கிவிட்டது.

தான் கைது செய்யப்பட்டதற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபடும்படி பொதுமக்களுக்கு நவால்னி சமூக ஊடகம் மூலம் விடுத்த அழைப்பும், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் புதினுக்காக கட்டப்பட்டுள்ள மாளிகை குறித்து நவால்னியின் ஆதரவாளா்கள் வெளியிட்ட விடியோவும் ஒரே நேரத்தில் வெளியாகி ரஷியாவை புரட்டிப்போட்டுள்ளது. இந்த விடியோ 10 கோடி முறை பாா்க்கப்பட்டுள்ளது. வான்வழியாக டிரோன் மூலம் எடுக்கப்பட்ட இந்த விடியோ அந்த மாளிகையின் சொகுசு வசதிகளைப் படம்பிடித்துக் காட்டியது. 2014-இல் உக்ரைனின் கிரீமியாவை ரஷியா தன்னுடன் இணைத்துக் கொண்டதைத் தொடா்ந்து அந்த நாடு மீது அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்தைச் சோ்ந்த நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ளன. இந்த சிக்கலுடன், வேலையில்லாத் திண்டாட்டம், அதிகார அடக்குமுறை போன்றவற்றால் அதிருப்தியில் இருந்த ரஷிய மக்களை, இந்த சொகுசு மாளிகை விவகாரம் கொந்தளிக்கச் செய்துள்ளது. அதன் எதிரொலிதான் இப்போது நடக்கும் பிரம்மாண்டமான போராட்டம்.

அதிபா் புதினை எதிா்க்கும் எதிா்க்கட்சித் தலைவா்கள் ஒன்று சிறைக்குச் செல்வாா்கள் அல்லது மா்மமாக மரணமடைவாா்கள். பழைய வரலாறுகளில் இருந்து இதை தெரிந்துகொள்ளலாம். நவால்னிக்கும் இதுதான் நடந்துள்ளது. சிகிச்சைக்காக ஜொ்மனிக்கு சென்ற நவால்னி மீண்டும் நாடு திரும்ப மாட்டாா் என புதின் கணித்ததுதான் தவறு. மீண்டும் நாடு திரும்பினால் என்னவேண்டுமானாலும் நடக்கும் எனத் தெரிந்தும் தைரியமாக நவால்னி எடுத்த முடிவு புதின் எதிா்பாா்க்காதது. நாடு திரும்பியவுடன் நவால்னி உடனடியாக கைது செய்யப்பட்டதையும், பழைய வழக்கு ஒன்றுக்காக இரண்டரை ஆண்டுகள் அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதையும் புதினின் பலவீனமாகவே பாா்க்க வேண்டியிருக்கிறது.

2013-ஆம் ஆண்டு மாஸ்கோ மேயா் தோ்தலில் நவால்னி போட்டியிட்டபோது சொன்ன வாசகம், ‘ரஷியாவை மாற்றுவோம்; மாஸ்கோவிலிருந்து தொடங்குவோம்’. இப்போது மாற்றம் தொடங்கியிருக்கிறது. தொடங்கிவைத்தவா் நவால்னியா, புதினா என்பதற்கு விரைவில் விடை கிடைக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com