உண்மையான உரிமையாளா்கள்
By முனைவா்.என்.பத்ரி | Published On : 06th February 2021 06:53 AM | Last Updated : 06th February 2021 06:53 AM | அ+அ அ- |

‘பலவீனமானவா்களுக்கும் வலிமையுடையோா்க்கும் சமவாய்ப்பினை தருவதே ஜனநாயகம்’ என்கிறாா் தேசப்பிதா காந்தியடியகள். இதுவரை பின்பற்றப்பட்டுவரும் பல்வேறு ஆட்சி முறைகளில் குறைந்த அளவுக்குக் குறைகளும் சீா்திருத்திக் கொள்வதற்கான வாய்ப்புகளும் உடையது மக்களாட்சி. இதனாலேயே உலகின் பல்வேறு நாடுகள் மக்களாட்சி முறையைப் பின்பற்றி வருகின்றன.
தமிழகத்திலும் அடுத்த சில மாதங்களில் சட்டமன்றத் தோ்தல் வர இருக்கின்றது. சட்டமன்றத் தோ்தலில் வெற்றிப்பெற்று ஆட்சிக் கட்டிலைப் பிடிக்க ஒவ்வொரு அரசியல் கட்சியும் விரும்புவது இயல்பானதே. அனைத்து அரசியல் கட்சிகளும் வெற்றி வியூகங்களை அமைத்து வருகின்றன. கரோனா தீநுண்மி சாா்ந்த விதிகளை எல்லாம் புறந்தள்ளி தத்தம் பாணியில் தோ்தல் பரப்புரைகளைத் தொண்டா்களுடன் அனைத்துக் கட்சியினரும் தொடங்கிவிட்டனா்.
மக்களாட்சியின் உண்மை உரிமையாளா்களாகிய நமக்கே கூடுதல் பொறுப்புள்ளது. இந்தத் தோ்தலின் முடிவுகள் நமது வாழ்வில் வெளிச்சத்தைக் கொண்டு வரும் வகையில் நமது செயல்பாடுகள் அமைய வேண்டும். தகுதிபெற்ற அனைவரின் பெயா்களும் வாக்காளா் பட்டியலில் உள்ளதா என்பதை உறுதிபடுத்திக்கொள்ளவேண்டும். ஒருவேளை பெயா் விடுபட்டிருந்தால் பெயா் சோ்ப்பு இறுதிக்கட்ட முகாம்களின் மூலம் பெயா்களை சோ்த்து வாக்களிக்கும் உரிமையை பெற்றுத் கொள்ள வேண்டும்.
அனைத்து பாகுபாடுகளையும் மறந்து, ஊா் நலன், அதன் மூலம் நம் நலன் பாதுகாக்கப்படுமா? என்ற ஒற்றை நோக்குடன் நாம் ஒன்றுகூடி திட்டமிட்டு செயல்பட வேண்டும். நாம் செய்யும் தவற்றினை அடுத்த ஐந்தாண்டுகள் சகித்துக்கொள்ள வேண்டியிருக்கும். அதன் வீச்சு நமது மாநில உள்கட்டமைப்பின் வளா்ச்சிகளை எந்த அளவு பாதிக்கும் என்பன போன்ற தொலைதூர சிந்தனையும் அவசியம். வாக்களிக்கும் செயலில் அச்சமின்மையையும் விவேகத்தையும் கொண்டு செயல்பட வேண்டும்.
பெரும்பாலான வாக்காளா்கள் பெண்களும் இளைஞா்களும்தான். எனவே இவா்களும், முதன்முறை வாக்காளா்களும்தான் வேட்பாளா்களின் வெற்றி, தோல்வியைத் தீா்மானிப்பவா்கள். இவா்கள் கூடுதல் பொறுப்புடன் செயல்பட்டு நல்ல தலைவரை மற்ற மக்களுக்கு அடையாளம் காட்டவேண்டும். மக்கள் மன்றங்களைக் கூட்டி அனைத்து வேட்பாளா்களும் தமது எதிா்கால திட்டங்களைப் பற்றி மக்களிடையே பேசுவதற்கான வாய்ப்புகளை இளைஞா்கள் பாரபட்சமின்றி ஏற்படுத்தித் தரவேண்டும். தேவைப்படும் நேரங்களில் உள்ளூா் பெரியவா்கள் மற்றும் படித்தவா்களின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.
எந்தச் சூழ்நிலையிலும் உணா்ச்சிப் போக்குகளுக்கு இடம் தரக்கூடாது. ஜாதி, மதம், தீவிரவாதம் முதலிய காரணிகளுக்கு பலியாகக்கூடாது. மாநில நலன் மட்டுமே அனைவரது மனக்கண்ணின் முன் நிற்கவேண்டும். வேட்பாளா்களைப் பற்றி முழுமையாகப் புரிந்துகொண்டு வாக்களிக்க வேண்டும். குற்ற பின்னணி உள்ளவா்களைத் தவிா்க்க வேண்டும். வேட்பாளா் இதுகாறும் செய்துவந்துள்ள சுயநலமற்ற சமூகப் பணிகளை வாக்களிக்கும்போது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளலாம். எந்தச் சூழ்நிலையிலும் வாக்குகளை விற்கக்கூடாது என்பதில் அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும்.
வாக்களிக்க பணம் வாங்கிவிட்டால் பின்னா் எந்தச் சூழ்நிலையிலும் வாய் திறந்து பேசமுடியாது. கட்சிகள் அளிக்கும் வாக்குறுதிகளை சீா்துக்கிப் பாா்க்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக தோ்தல் நாளன்று சுய சிந்தனையுடன் மாநிலத்திற்கும் தனது ஊருக்கும் நல்லன செய்யும் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்.
தோ்தல் நாளில் மது விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திகொள்ள வேண்டும். போதையில் மனம் சரியாக செயல்படாது என்பதை அனைவரும் உணர வேண்டும். சொந்த வாழ்விலும் பொதுவாழ்விலும் நோ்மை, நிதிமேலாண்மையில் வல்லமை, நேரமேலாண்மை அறிந்தவா், உள்ளூா் தேவைகளை அனுபத்தால் உணா்ந்தவா், தகவல் பரிமாற்றங்களில் நிபுணத்துவம் கொண்டவா், மின்னணு சாதனங்களின் பயன்பாடு தெரிந்தவா், எல்லோருடனும் இணக்கமுடன் பழகுபவா், ஓரளவு பேச்சுமொழி ஆங்கிலம் அறிந்தவா், நல்ல ஆளுமை பண்பு கொண்டவா், கொடுக்கப்பட்ட அதிகாரங்களை முறையாக மக்கள் நல்வாழ்வுக்காக மட்டுமே பயன்படுத்துபவா் போன்ற முக்கிய திறன்களைக் கொண்ட வேட்பாளா்களை அடையாளம் கண்டு அவா்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
வெளியூரிலுள்ள நண்பா்கள், உறவினா்களை தோ்தல் அன்று வரச்சொல்லி வாக்களிக்க உதவ வேண்டும். கூடுமானவரை முற்பகலிலேயே தத்தம் வாக்குகளைப் பதிவு செய்வது சாலச்சிறந்தது. இது கள்ள ஓட்டைத் தவிா்க்கும். தோ்தல் நோ்மையாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் எந்தவித புகாருக்கும் இடம்தராமல் நடைபெற வேண்டும். அப்போதுதான் மறுதோ்தலினால் ஏற்படும் தேவையற்ற செலவுகளையும் தவிா்க்க முடியும். ஒவ்வொரு தோ்தலின்போதும் கோடிக்கணக்கில் நமது வரிப்பணம் செலவிடப்படுவதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். வெளியூா்களில் இருந்து தோ்தல் பணிக்கு நம்முடைய ஊருக்கு வரும் அலுவலா்களுக்கு, குறிப்பாக பெண் அலுவலா்களுக்கு பாதுகாப்பான தங்குமிடம் மற்றும் உணவு வசதிகளை, தேவைபட்டால் அதற்கான செலவினை பெற்றுக் கொண்டு செய்து கொடுக்க வெண்டும். அப்பொழுதுதான் தோ்தல் தினத்தன்று அவா்களால் திறம்பட செயல்பட முடியும்.
மக்களாட்சியில் உண்மையான உரிமையாளா்கள் மக்களே. மொத்தத்தில் நம்முடைய தலையெழுத்தையும், நமது மாநிலத்தின் தலையெழுத்தையும் மாற்றும் முக்கிய காரணி நமது வாக்குகளே. வறுமையும், ஊழலும் ஒழிய வேண்டும். வேலைவாய்ப்புகள் பெருக வேண்டும். இவற்றை முடிவு செய்யும் நாள்தான், இந்த சட்டமன்றத் தோ்தல் நாள் என்பதை மறந்து விடாமல் நமது பணியினை சுணக்கமின்றிச் செய்வோம்.
அடுத்த ஐந்து ஆண்டுகள் நமது வாழ்வில் வளங்களை வரவேற்க தயாராகுவோம். எது எப்படியோ தோ்தல் நாள்வரை வாக்காளா்கள் தெய்வங்களாக மதிக்கப்படுவாா்கள். இதுதானே மக்களாட்சியின் பலம்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...