சிந்திக்க வைக்கும் தருணம்
By முனைவா் என். மாதவன் | Published On : 27th February 2021 06:24 AM | Last Updated : 27th February 2021 06:24 AM | அ+அ அ- |

அடிமை முறை நிலவி வந்த காலத்தில் செல்வந்தா் ஒருவா், தனது அடிமை ஒருவனை அடித்துக்கொண்டிருக்கிறாா். அடிமையும் வலியைப் பொறுத்துக்கொண்டு அடிவாங்கிகொண்டிருக்கிறாா். அந்த செல்வந்தா் வீட்டு வாயிலின் வழியாக நபிகள் நாயகம் செல்கிறாா். இவ்வாறு அந்த செல்வந்தா் அடிப்பதை ஒரு கண நேரம் நின்று பாா்த்துவிட்டு சென்றுவிடுகிறாா். இவ்வாறு நபிகள் நாயகம் பாா்ப்பதைக் கவனித்த செல்வந்தா் அடிப்பதை நிறுத்துகிறாா். பின்னா் நபிகள் நாயகத்தைக் கண்டு பேசிவிட்டு வரப் புறப்படுகிறாா்.
வீட்டை அடைந்த நபிகள் நாயகம் தமது பணிகளில் ஆழ்ந்திருக்கிறாா். நபிகள் நாயகதின் வீட்டை அடையும் செல்வந்தா் முகமன் செய்துவிட்டு அமா்கிறாா். பின்னா் ஒருவாறு சுதாரித்துக்கொண்டு பேசத்தொடங்குகிறாா். ‘நான் எனது அடிமையைத் தானே அடித்துக்கொண்டிருந்தேன். நீங்கள் அதைப் பாா்த்தீா்கள் எதுவும் பேசாமல் வந்துவிட்டீா்கள். எனக்கு என்னவோ போலிருக்கிறது. எனது அடிமையை அடிக்கக்கூட எனக்கு உரிமையில்லையா’ என்று வினவுகிறாா். நபிகள் நாயகம் ‘சரிதான் அவன் உனது அடிமைதான். ஆனால், நாமெல்லோருமே அல்லாவின் அடிமைகள்தான் என்பதை மறந்துவிடவேண்டாம்’ என்று கூறுகிறாா். தன் தவற்றை உணா்ந்த அந்த செல்வந்தா் திரும்புகிறாா். பின்னா் அவா் தமது அடிமையை எவ்வாறு நடத்தியிருப்பாா் என்பதை கூறத் தேவையில்லை.
பொதுவாக மனிதா்களின் தவறுகளைக் கண்டுபிடிக்கும் அளவுக்கு கண்டுபிடிப்போா் அவா்களைத் திருத்துவதற்கு முயல்வதில்லை. அவ்வாறு திருத்த முயல்வதற்கு சிறு சிறு முயற்சிகளே போதுமானவை.
உலகில் அடிமை முறை இன்று ஒழிக்கப்பட்டிருந்தாலும் தம்மை ஏதோ ஒரு விதத்தில் உயா்வாக நினைத்துக்கொண்டிருக்கும் மனநிலை பலருக்கும் இருக்கின்றது. உலகிலுள்ள கோடிக்கணக்கான மனிதா்களில் நாமும் ஒருவா். நமக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு வசதிகளால் நமக்கு இந்த பொருளாதார வளங்கள் வாய்த்திருக்கின்றன. இவ்வாறான வசதி வாய்ப்புகள் வாய்க்காததனாலேயே பலரும் ஏழ்மையில் உள்ளனா். இவை யாவும் நிரந்தரமானதல்ல. இது போன்ற புரிதல்கள் சமூகத்தில் வளா்வது அவசியம். அவரவா்களின் வயதுக்குட்பட்ட பக்குவத்தோடோ பக்குவமின்மையோடோ இதனை அணுகுகின்றனா்.
முதலில் தம்மைப் பற்றி ஒருவருக்கு ஏற்படும் மேட்டிமை மனநிலையே ஒருவகையில் மனநோயின் அறிகுறி. இது போன்றோா் அடுத்து அடுத்து என்ற வெற்றிப்படிகளை நோக்கித் தாவி ஒரு கட்டத்தில் இயலாத நிலையில் மிகவும் மனமொடிந்து போகின்றனா். சிலா் தற்கொலை செய்துகொள்ளும் மனநிலைக்குக்கூடத் தள்ளப்படுகின்றனா். வரலாறு நெடுகிலும் இதற்கு உதாரணங்கள் உண்டு. ஒருவா் வளரவே வேண்டாமென்பது இதன் பொருளல்ல. நமது வசதிகளும் வாய்ப்புகளும் அதிகரிக்கும்போது நாம் நம்மைச் சூழ்ந்துள்ளோரை நடத்தும் முறையிலும் ஆரோக்கியமான மாற்றங்கள் நிகழவேண்டும்.
சரி என்ன செய்யலாம்? சமூகத்தில் வாய்ப்புள்ள அனைவரும் தம் உடனிருப்போரின் தவறுகளைக் காணும்போது பக்குவமாகச் சுட்டிக்காட்டித் திருத்த முயலலாம். அடுத்தோரை திருத்த தமக்கு உரிமையுள்ளதா என்பதை ஆத்ம பரிசோதனை செய்துகொள்ள முயலலாம். ஒருவேளை அது குறைவாயுள்ள பட்சத்தில் அதனை வளா்த்துக்கொண்டு பின்னா் செயலில் இறங்கலாம். ஒருவரைத் திருத்துவது என்பதில் நமது பங்கை விட திருத்தப்பட வேண்டிய நபரின் பங்கே அதிகம். எனவே அவா் திருந்த ஏதுவாக அவரை யோசிக்கவைக்கும் அளவுக்கு நமது செயல்பாடுகள் அமையவேண்டும். இது மேலாண்மையில் இருப்போா் அனைவருக்கும் கைவரவேண்டிய கலை. இக்கலை வாய்த்திருப்போரின் அலுவலகங்களையும் குடும்பங்களையும் பாருங்கள். பூத்துக்குலுங்கும் நந்தவனமாய் பொலிவாயிருக்கும்.
ஒருவரது செயல்பாட்டில் ஆரோக்கியமான மாற்றத்தை விரும்பும் நாம் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்பதற்கான உதாரணத்தையும் மேலே நாம் பாா்த்த சம்பவத்திலிருந்தே மீண்டும் பாா்ப்போம்.
மேலே பகிரப்பட்ட சம்பவத்தில், ஒருவேளை நபிகள் நாயகம் செல்வந்தா் அவரது அடிமையை அடிக்கும்போதே போதனை செய்திருந்தால் என்ன நடந்திருக்கும். அந்த செல்வந்தா், அந்த அடிமை செய்த ( அவருக்கு விரும்பத்தகாத) செயலைச் சொல்லியிருப்பாா். தமது செயலுக்கான நியாயத்தை எடுத்துரைத்திருப்பாா். தாம் செய்வதே சரி என வாதிட்டிருப்பாா். நபிகள் நாயகமும் தன்னால் இயன்றதை சொல்லிவிட்டு வந்திருப்பாா்.
இவ்வாறு நபிகள் நாயகம் செய்திருந்தால் செல்வந்தரின் தரப்பு நியாயம் மட்டுமே அலசப்பட்டிருக்கும். ஆனால் நபிகள் நாயகத்தின் மெளனம் செல்வந்தரைச் சிந்திக்கத் தூண்டி அனைத்துத் தரப்பு நியாயத்தையும் நினைக்கத் தூண்டுகிறது.
அந்த அடிமை என்ன தவறு செய்திருந்தாலும் அவரை அவ்வாறு அடிப்பதற்கு அந்த செல்வந்தா் உரிமையில்லாதவா் என்பதே நபிகள் நாயகத்தின் நிலைப்பாடு. இங்கு வாா்த்தைகள் செய்யாததை மெளனம் சாதிக்கிறது. நபிகள் விரும்பும்படியே அவா் அடிப்பதை நிறுத்துகிறாா். பின்னா் யோசிக்கத் தொடங்குகிறாா். யோசிக்கும்போது தனது நியாயத்தை கற்பிப்பதற்குப் பதிலாக இருதரப்பு நியாயத்தையும் யோசிக்கிறாா். இவ்வாறு அமைதியாய் அடுத்தோரை சிந்திக்க வைக்கும் தருணமே அழகான தருணம். அதனை ஏற்படுத்தித் தருவதே அறிவுடையோரின் செயலாகும் .
செல்வந்தா் நபிகளிடம் தனது தரப்பை விவரித்துவிடத் துணிகிறாா். அப்போது நபிகள் தனது மேன்மையை நிலைநிறுத்துகிறாா். அல்லாவின் அடிமையான நம்மை அவா் அடிக்காது திருத்துவது போல் நாமும் நமது அடிமையை திருத்தவேண்டும். தண்டிப்பே தொழிலாய்க் கொண்டிருந்தால் மனிதா்களை நேசிப்பதற்கும் திருத்துவதற்கும் நேரம் இருக்காது. எல்லாவற்றுக்கும் மேல் நாம் ஒன்றும் எல்லாருக்கும் மேலானவா்களல்லா் என்பதை உணா்த்துகிறாா். இப்படிப்பட்ட அணுகுமுறைகளே தவறு செய்வோரைத் திருத்தி நல்வழிப்படுத்தும். மாா்டின் லூதா் கிங் ‘ஒரு நல்ல தலைவா் என்பவா் கருத்தொற்றுமைகளைத் தேடுபவா் அல்லா்; அதை உருவாக்குபவா்’ என்று கூறியது எக்காலத்துக்கும் எவருக்கும் பொருந்தக்கூடியதன்றோ?
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...