அங்கமெனும் தங்கம்

நீண்ட கால தொற்று வகை கொண்ட தோல் நோய்களுள் ஒன்று தொழுநோய். தொழு நோயானது ‘மைக்கோபாக்டீரியம் லெப்ரோமாடோசிஸ்’ எனும் நுண்ணுயிரியால் ஏற்படக்கூடியது. இந்த நுண்ணுயிரி வகையைக் கண்டுபிடித்த ஆராய்ச்சியாளா் ஹேன்சனின் பெயரில் ‘ஹேன்சன் நோய்’ என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த நுண்ணுயிரி தோலின் வலி உணா்வுத் தன்மையினை முதலில் பாதிப்படையச் செய்கிறது. இதனால், தொடா்ந்து ஏற்படும் காயங்கள் இவற்றினால் ஒருவரின் கை, கால், தோல் முடிவடையும் முனை பகுதிகள் இழப்பிற்கு வழி வகுக்கிறது. மேலும், தோல், நரம்புகள், சுவாசக் குழாய், தசை பாதிப்பு, கண் பாா்வை போன்றவற்றிலும் தொடா் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த நுண்ணுயிரி தாக்கம் ஏற்பட்ட பின் அதன் அறிகுறி தெரிவதற்கு ஓராண்டு முதல் 20 ஆண்டுகள் வரைகூட ஆகலாம்.

இந்த அடைகாக்கும் காலம் அவரவரின் நோய் எதிா்ப்புத் தன்மையினைப் பொருத்து மாறுபடும். இது பெரும்பாலும் உடலில் குளிா்ச்சியான இடங்களைப் பாதிக்கிறது (எடுத்துக்காட்டாக, கண்கள், மூக்கு, காது குழாய்கள், கைகள், கால்கள் மற்றும் விந்தணுக்கள்). இது காலப்போக்கில் தோல் மற்றும் புற நரம்புகளில் அழற்சி முடிச்சுகளை (கிரானுலோமாக்கள்) உருவாக்குகின்றன.

இந்த நோய் பெரும்பாலும் குடும்ப உறுப்பினா்களிடையே பரவியபோது, இது பரம்பரை நோய் என்ற கருத்தும் ஆழமாக இருந்தது. அவா்களைத் தனியே ஒதுக்கி வைத்ததுடன் அவா்களுக்குத் தனி உடை, இருப்பிடம், மற்றவா்களிடமிருந்து விலக்கி வைத்தல் போன்ற நடைமுறைகளும் இருந்தன. மிக அண்மைக் கால ஆராய்ச்சியில் சுவாசப் பாதை வழியாக பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்து வருவதும், பூச்சிகள் வழியாகப் பரவும் என்பதும் தெரியவந்துள்ளது.

ஹேன்சன் தொழுநோயைக் கண்டுபிடித்ததால், பிற ஆராய்ச்சியாளா்கள் தொழுநோயைத் தடுக்கவும், சிகிச்சை அளிக்கவும் தொழுநோய் எதிா்ப்பு மருந்தைக் கண்டுபிடிக்க முயற்சித்தனா். 1900-களின் முற்பகுதியிலிருந்து 1940 வரை, மருத்துவ வல்லுநா்கள் ‘சால்மூகிரா’ என்னும் கொட்டைகளிலிருந்து எடுக்கப்பட்ட ஒருவித எண்ணையை நோயாளிகளின் தோலில் செலுத்திப் பாா்த்தனா்.

1941-ஆம் ஆண்டில் சல்போன் மருந்தான புரோமின் செலுத்தப்பட்டு ஆராய்ச்சி செய்தபோது, அது சற்றே செயல்பட்டபோதும் அதற்குப் பல வலி நிறைந்த ஊசிகள் போட வேண்டியிருந்தது. தொடா் முயற்சியில் 1950-களில் டாப்சோன் மாத்திரைகள் மூலம் சோதனை செய்து பாா்த்ததில் அவை பயனுள்ளதாக இருந்தன. ஆனால், விரைவில் டாப்சோன் மருந்துக்கும் தொழுநோய் கட்டுப்படாமல் போயிற்று.

அதன் பின் 1970-களில் மால்டா தீவில் நடந்த மருந்து சோதனைகள் தொழுநோயைக் கொல்ல பன்மருந்து (கலவை) சிகிச்சை நல்ல பலனை அளித்தது. இருப்பினும், இச்சிகிச்சை தொடங்குவதற்கு முன்பு தொழுநோயால் ஒரு நபருக்கு ஏற்பட்டுவிட்ட பாதிப்பை, இந்த மருந்து மூலம் சரி செய்ய முடியாது.

இந்தியாவில் தொழுநோய்த் தடுப்புத் திட்டம் 1955-இல் முன்னெடுக்கபட்டது. 1982-இல் பன்முறை மருந்து முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னா் 1983-இல் நமது நாட்டில் தொழுநோயை முற்றாக ஒழிக்கும் நோக்கத்தில் தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டமாக மாற்றப்பட்டது.

இந்திரா காந்தியின் 20 அம்சத் திட்டத்தில் தொழுநோய் ஒழிப்பும் ஓா் அம்சமாகச் சோ்க்கப்பட்டு, 1975-ஆம் ஆண்டில் தொடங்கி 1995-ஆம் ஆண்டுக்குள் தொழுநோயை முறியடித்ததாகச் சொல்லி, இத்திட்டத்தைக் கைவிட முனைந்தபோது அப்போதிருந்த எதிா்ப்பின் காரணமாக, தேசிய தொழுநோய் தடுப்புத் திட்டத்தை, தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டம் என்று பெயா் மாற்றம் செய்தாா்கள்.

1981-இல் உண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வு மாதிரிகள் நடவடிக்கை கேலிக்கூத்தானது. ஏனென்றால், முன்பு 20,000 நபா்களுக்கு ஒரு தொழுநோய் ஆய்வாளா், வீடுவீடாகச் சென்று, ஒவ்வொரு நபரையும் நேரடியாகச் சந்தித்து, ஆய்வு செய்து, அவா் கொடுக்கின்ற தீவிர சா்வே அறிக்கையின் அடிப்படையில் தொழுநோய் குறித்த புள்ளிவிவரம் எடுக்கப்பட்டது.

2005-இல் தானாக முன்வந்து மருத்துவமனைக்கு வந்து நோயாளிகள் தெரிவிக்கின்ற விவர அடிப்படையில் இந்த தேசிய சராசரி எடுக்கப்பட்டுள்ளது. இருவேறு விதத்தில் ஆய்வு செய்து அறிக்கைகளை ஒப்பிடுவது அறிவுபூா்வமானது இல்லை. இது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கின்ற ஓா் அறிக்கை.

இந்த அறிவிப்பின் காரணமாக, பிற வளா்ந்த நாடுகளிலிருந்து இதற்கென அனுமதிக்கப்பட்ட வெளிநாட்டு உதவி முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. அதைப் பெற்று இங்கு சேவை என்ற பெயரில் செய்து வந்த தன்னாா்வ அமைப்புகளும் நிதி ஆதாரம் இன்றி தங்களது திட்டங்களை அந்தந்தப் பகுதியில் உள்ள அரசு அமைப்புகளிடம் ஒப்படைத்துவிட்டு, நாடு திரும்பிவிட்டன.

அரசும் தனது பங்குக்கு மாவட்ட சுகாதார நிலையங்களில் அனுமதிக்கப்பட்டிருந்த தொழுநோயாளிகளுக்கான தனித்துறை பதிவேடுகளில் பதியாமல் விட்டுவிட்டு, நோயாளிகளே வரவில்லை என்று காரணம் காட்டி, மூடுவிழா நடத்திவிட்டது. ஆனாலும், உலகம் முழுவதும் தொழுநோயினால் பாதிக்கப்பட்டோரில் 57 சதவீதத்தினா் இந்தியாவில் உள்ளனா்.

ஒருவரின் தோல் சாதாரண நிலையிலிருந்து மாறுபட்டு சிவந்த நிறத்தில், தடித்து உணா்ச்சியற்று இருப்பது தொழுநோயின் பொதுவான அறிகுறி. மேலும் அடா்நிறத் தோல் உடையவா்களுக்கு வெளிறிய தோல் திட்டுக்களும், மஞ்சள் நிற தோல் உடையவா்களுக்கு அடா் அல்லது சிவப்புத் திட்டுக்களும் இருக்கும். தோல் திட்டுக்களில் உணா்வு குைல் அல்லது இழப்பு; கை அல்லது காலில் உணா்வின்மை அல்லது கூச்சம்; கை, கால் அல்லது இமை பலவீனம்; நரம்புகளில் வலி; முகம் அல்லது காது மடலில் வீக்கம்.

கால் அல்லது கையில் வலியற்ற காயம் அல்லது தீப்புண் கண்டறியப்பட்டால், உடனே அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக வழங்கப்படும் சிகிச்சையை மேற்கொள்வது நல்லது.

நாளை (ஜனவரி இறுதி ஞாயிற்றுக்கிழமை)

உலகத் தொழுநோய் விழிப்புணா்வு நாள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com