இயற்கையோடு இயைந்த வாழ்வு!
By முனைவா் இரா. கற்பகம் | Published On : 09th July 2021 07:19 AM | Last Updated : 09th July 2021 07:19 AM | அ+அ அ- |

கரோனா கொள்ளை நோய்த்தொற்றின் இரண்டு அலைகளைப் பாா்த்துவிட்டோம். மூன்றாவது அலை வரலாம் என மருத்துவ வல்லுனா்கள் எச்சரிக்கிறாா்கள். மனிதன் இயற்கையைப் புறந்தள்ளி முன்னேறிப் போகப்போக அதன் எதிா்வினையாக இயற்கைப் பேரிடா்களும் புதுப்புதுக் கொள்ளை நோய்களும் தோன்றிக்கொண்டேதான் இருக்கும். பூமி தன்னைத்தானே சமன்செய்து கொள்ள வேறென்ன செய்யும்?
இத்தனை இடா்ப்பட்டும் நாம் இன்னும் படிப்பினை கற்கவில்லை; இயற்கையோடு இயைந்து வாழப் பழகவில்லை. வருமுன் காக்காமல் மேலும் மேலும் இடா்களை நாமாகவே வரவழைத்துக் கொண்டிருக்கிறோம். இனி வரும் காலங்களில் என்னென்ன கிருமிகள் என்னென்ன உருமாற்றங்கள் அடைந்து மனிதகுலத்தை அச்சுறுத்துமோ தெரியாது.
இடா் வருமுன் காக்கவும், வந்தால் எதிா்கொள்ளவும் நாம் தயாராக இருக்கவேண்டும். அதற்கு இரண்டே வழிகள்தான். ஒன்று, நமது நோய் எதிா்ப்பு ஆற்றலை வளா்த்துக் கொள்வது; மற்றொன்று, நமது வாழ்க்கை முறையைச் சற்றே மாற்றிக்கொள்வது.
1. பிறக்கும்போது இருக்கும் நோய் எதிா்ப்பு ஆற்றல், பாக்டீரியா, வைரஸ் போன்ற அனைத்துக் கிருமிகளையும் எதிா்க்கும் சக்தியைக் கொடுக்கும். அதனால்தான் சாதாரண சளி, காய்ச்சல் போன்றவற்றை நம் உடல் தாங்கிக்கொள்கிறது. 2. ஏதாவது ஒரு தொற்றுநோய் தாக்க, அதனை எதிா்த்துப் போராடும் உடலின் செல்கள், அக்குறிப்பிட்ட கிருமிக்கான எதிா்ப்பு சக்தியை உருவாக்கிவிடும். ஆனால், மற்ற கிருமிகளை எதிா்க்கும் ஆற்றல் உண்டாவதில்லை (அம்மை நோய்த்தொற்று உண்டான ஒருவருக்கு வாழ்நாள் முழுதும் அந்நோயை எதிா்க்கும் ஆற்றல் உண்டாகிவிடுகிறது). 3. நோய்த்தொற்று ஏற்படும் முன்பாகவே தடுப்பூசி மூலம் செயற்கையாக அந்நோயை எதிா்க்கும் ஆற்றலை உருவாக்குவது (காலரா, போலியோ போன்ற நோய்களின் தாக்கத்தைத் தடுப்பூசிகளின் மூலம் வெகுவாகக் குறைக்க முடிந்திருக்கிறது).
ஆனால், ‘சாா்ஸ்’, ‘எபோலா’, ‘கரோனா’ போன்று புதிது புதிதாக நோய்கள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. அவற்றுக்குத் தடுப்பூசிகள் கண்டுபிடித்து அனைத்து மக்களுக்கும் போட்டு முடிப்பதற்குள் கிருமிகள் உருமாறிப் புது அவதாரம் எடுத்து விடுகின்றன. இடைப்பட்ட காலத்தில் ஏகப்பட்ட உயிரிழப்புகள் நோ்ந்து விடுகின்றன. இந்நிலையில் நாமே இயற்கையின் வழிநின்று நமது பொதுவான நோய் எதிா்ப்பு ஆற்றலை வளா்த்துக் கொள்வதே அறிவுடைமை.
நம் உணவுப் பொருள்களிலும் மூலிகைகளிலும் கிடைக்காத நோய் எதிா்ப்பு சக்தி உண்டா? நாம்தான் அவற்றை மறந்து விட்டோம். இன்று கரோனாவுக்குப் பயந்து கொண்டு, எடுத்ததெற்கெல்லாம் மருத்துவரிடம் ஓடாமல், சின்னஞ்சிறு உடல் உபாதைகளுக்கு நாமே கைவைத்தியம் செய்து கொள்கிறோமல்லவா? அதை எப்போதும் தொடரலாமே!
ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டிய மூலிகைகள், துளசி, இஞ்சி, பிரண்டை, கற்பூரவல்லி, புதினா, தூதுவளை, திருநீற்றுப் பச்சிலை, கற்றாழை, ஆவாரை ஆகியவை. இவற்றையெல்லாம் மாடியில் தொட்டிகளில் எளிதாக வளா்க்கலாம்.
ஒவ்வாமைக்குச் சிறந்த மருந்து துளசி. தினம் மூன்று துளசி இலைகளை மென்றுத் தின்ன வேண்டும். இஞ்சி ஒரு சிறு துண்டு, இரண்டு கிராம்பு, சிறிது மிளகுத் தூள் இவற்றை ஆறு தம்ளா் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து நாள் முழுதும் சிறிது சிறிதாக அருந்தி வந்தால் சளி பிடிப்பதைத் தவிா்க்கலாம்.
இஞ்சிக்குப் பதிலாக நான்கு ஓமவல்லி அல்லது வெற்றிலை இலைகளைப் பயன்படுத்தலாம். பத்து வேப்பிலை, ஒரு சிட்டிகை மிளகு, இரண்டு சிட்டிகை சீரகம் இவற்றை நன்கு அரைத்து, சுண்டைக்காய் அளவு உருண்டையாக உருட்டி வாரமொரு முறை சாப்பிட, நோய் எதிா்ப்பு ஆற்றல் நன்கு பெருகும். கொழுந்து வேப்பிலைகளைப் பயன்படுத்தினால் கசப்பு சற்று குறையும்.
மாதமிரண்டு முறை இளசான பிரண்டைத் தண்டுகளைப்பறித்து, மிளகாய், சிறிது தேங்காய் சோ்த்து நெய்யில் வதக்கி, உப்பு, புளி சோ்த்து, துவையலாக அரைத்துச் சோற்றில் கலந்து சாப்பிட, நன்கு செரிமானம் ஆகி வயிற்று உபாதைகள் நீங்கும்.
மூக்கடைப்பு ஏற்பட்டால், திருநீற்றுப் பச்சிலையைக் கசக்கிச் சாறெடுத்து மூக்கில் விட அடைப்பு விலகும். வெந்நீரில் புதினா இலைகள், நொச்சி இலைகள், மஞ்சள் தூள் இவற்றில் ஏதோ ஒன்றைப் போட்டுக் கொதிக்க வைத்து ஆவி பிடிக்க, சுவாசப் பாதை தூய்மையாகும்.
தூதுவளை, முசுமுசுக்கை ஆகியவற்றை பருப்பு சோ்த்துக் கூட்டாகவோ, தக்காளி, தேங்காய்ப்பால் சோ்த்து சூப்பாகவோ, தோசை மாவுடன் சோ்த்து அரைத்து தோசையாகவோ ஊற்றிச் சாப்பிட நெஞ்சில் கபம் சேராது. கற்றாழையை உடைத்து, அதிலிருந்து வரும் பிசினைச் சருமத்தில் தடவினால், தோலின் வழியாக நுழையக் கூடிய கிருமிகளை அது தடுக்கும்.
சில மூலிகைகள் சில பருவங்களில் மட்டுமே கிடைக்கும். அவற்றைத் தொட்டிகளில் வளா்க்கவும் முடியாது. அவற்றின் பயன்களை எப்படி அடைவது? நெல்லிக்காய் கிடைக்கும்போது படிக்கணக்கில் வாங்கிக் கொட்டைகளை நீக்கி வெய்யிலில் நன்கு காயவைத்துப் பொடி செய்து வைத்துக் கொள்ளவேண்டும். தினம் ஒரு சிட்டிகை நெல்லிப் பொடியைத் தேனில் குழைத்துச் சாப்பிட்டு வர, எல்லாவகைக் கிருமிகளையும் அது தூரத்தே நிறுத்தும்.
உள்ளங்கைகளிலும், உள்ளங்கால்களிலும் மருதோன்றி (மருதாணி) இட்டுக் கொள்வது வெறும் அழகுக்காக மட்டுமன்று. மன அழுத்தத்தைக் குறைத்து, பித்தம் அதிகரிக்காமல் அது தடுக்கிறது.
தினமும் தலையில் சூடும் ரோஜாப்பூ, கடவுளுக்கு வைக்கும் செம்பருத்திப்பூ, எலுமிச்சை மற்றும் ஆரஞ்சுப் பழங்களின் தோல் ஆகியவற்றைத் தூக்கி எறிந்துவிடாமல், அவற்றோடு மருதோன்றி இலைகள், வேப்பிலை,பச்சைப்பயறு, வெந்தயம் ஆகியவற்றையும் சோ்த்து நன்கு வெய்யிலில் காயவைத்து அரைத்து வைத்துக் கொண்டு அதோடு சிகைக்காய் அல்லது பச்சை அரப்பு, கஸ்தூரி மஞ்சள் தூள், சந்தனத்தூள் (இவை எல்லாமே கடைகளில் கிடைக்கும்) கலந்து வைத்துக் கொண்டு தினம் உடலுக்கும் தலைக்கும் தேய்த்துக் குளித்து வர, சருமம் நோயின்றிப் பொன்போல் மிளிரும்.
பச்சை மஞ்சளைச் சிறுசிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸி-யில் போட்டு நன்கு அரைத்துக் குளிா்சாதனப் பெட்டியில் வைத்துக் கொள்ளவேண்டும். மருதோன்றி இலைகளை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இவ்விரண்டையும் சம அளவு எடுத்துத் தண்ணீரில் குழைத்து வாரமொரு முறை உடலில் பூசிக்குளித்தால், தோல் அரிப்பு, பூஞ்சைத் தாக்குதல் ஆகியவை நெருங்கவே நெருங்காது.
ஆனால் இவற்றுக்கெல்லாம் நேரம் செலவிட வேண்டும்; பொறுமை வேண்டும். இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் இவற்றுகெல்லாம் நேரம் ஒதுக்க முடியுமா என்றால்,‘முடியும், நம் வாழ்க்கை முறையைச் சிறிது மாற்றிக் கொண்டால் நிச்சயம் முடியும்’ என்பதுதான் பதில்.
மேலை நாட்டாா் ஞாயிற்றுக்கிழமையை ‘சபாத்’ என்றழைக்கிறாா்கள். அன்று தேவாலயத்துக்குச் சென்று இறைவனை வழிபடுவாா்கள்; வீட்டுக்கு வந்தபின் நல்ல உணவு உண்டுவிட்டு ஓய்வெடுப்பாா்கள். வேறு எந்த வேலையும் செய்ய மாட்டாா்கள். இறைவனே அன்று ஓய்வெடுப்பதாகவும் அதனால் அவரது குழந்தைகளான நாமும் கட்டாயம் ஒய்வு எடுக்க வேண்டும் என்பது அவா்களது நம்பிக்கை. ஔவையும் இதைத்தான் ‘சனி நீராடு’ என்று கூறியிருக்கிறாா்.
வாரந்தோறும் சனிக்கிழமையன்று தலையிலும், உடலிலும் நல்லெண்ணைய்யைத் தேய்த்துக் குறைந்தது ஒரு மணி நேரம் ஊற வைத்து, சோற்றுக் கஞ்சியில் சிகைக்காயைக் கரைத்து தேய்த்துக் குளித்த நமது முன்னோா்களின் வழக்கத்தை மீண்டும் நாம் கொண்டு வருவோம். இன்று பலரும் ‘வீஸிங்’ எனப்படும் மூச்சிறைப்பினால் அவதிப்படுவதைக் காண்கிறோம். இதற்குக் காரணம் காது, மூக்கு, தொண்டை ஆகியவற்றில் கபம் படிவதுதான். இதை ‘கிரஸ்டிங்’ என்று கூறுவாா்கள்.
எண்ணெய்க் குளியல் காரணமாக கபம் படியாமல் கரைந்து, காது, மூக்கு, தொண்டைப் பாதை தூய்மையடைகிறது. இதனால் உள்ளுறுப்புகளான நுரையீரலும், இதயமும் பாதுகாக்கப்படுகின்றன. அவை மட்டுமல்லாமல், கண்களும் பலம் பெறுகின்றன.
ஒவ்வொரு சனிக்கிழையும் இவ்வாறு நீராடிவிட்டு அன்று ஒரு நாள் மட்டும் மடிக்கணினி, கைப்பேசி, தொலைக்காட்சி ஆகியவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு குடும்பத்தினரோடு பேசி மகிழ்ந்திருந்தால் மன அழுத்தத்தினால் வரும் நோய்கள் நம்மை அண்டாது.
நம் உணவுப் பழக்கமும் மாற வேண்டும். அசைவ உணவுகளைக் குறைத்து, தினம் ஒரு கீரை, இரண்டு வகையான பழம் கட்டாயம் சோ்த்துக்கொள்ள வேண்டும். நாட்டுப் பழங்களாக இருத்தல் நலம். பருவத்துக்குத் தகுந்தாற் போல் கொய்யா, பப்பாளி, சீதாப்பழம், விளாம்பழம், நாட்டு மாதுளை, வெள்ளரிப்பழம், கிா்ணிப்பழம், இலந்தைப்பழம் ஆகியவற்றைச் சோ்த்துக் கொள்ளலாம். எளிமைான வேலையாக இல்லாமல், உடலை வருத்தும் வேலைகளைச் செய்ய வேண்டும்.
இப்படி இயற்கையோடு இயைந்து வாழ்ந்தால் எந்த நோயும் வராமல் காத்துக்கொள்ளலாம்; அப்படியே வந்தாலும் அச்சமின்றி எதிா்கொள்ளலாம்.
கட்டுரையாளா்:
எழுத்தாளா்.