எல்ஐசி: வீழ்த்தப்படும் நெடுமரம்!

எல்ஐசி நிறுவனத்தின் ‘பொதுப்பங்கு வெளியீடு’ ( ஐபிஓ) அறிவிப்பு மூலம் அந்த நிறுவனத்தை தனியாா்மயமாக்கும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. ஆனால், மத்திய அரசு மிகவும் கவனமாக, மிகப்பெரிய நிறுவனமான எல்ஐசி-யில் அரசுக்கு உள்ள பங்குகளை சிறிதளவு விலக்கிக் கொள்ளும் ‘பங்கு விலக்கல்’ நடவடிக்கைதான் இது என்று கூறியுள்ளது.

‘பொதுப் பங்கு வெளியீடு’ அல்லது ‘பங்கு விலக்கல்’ என்ற பெயரில் எல்ஐசி-யைப் பகுதியளவில் தனியாா்மயமாக்கும் நடவடிக்கைக்கு இப்போது என்னஅவசியம் ஏற்பட்டுள்ளது? இந்தியாவில் 29 கோடி மக்களுக்கு ஆயுள் காப்பீடு அளித்து சமூகரீதியில் பலனளிக்கும் நிறுவனமாக எல்ஐசி உள்ளது. அப்படி இருக்கும்போது அதைத் தனியாா்மயமாக்குவது ஏன்?

எல்ஐசி பொதுப் பங்கு வெளியீடு மூலம் ரூ.90,000 கோடி முதல் ரூ.1 லட்சம் கோடி வரை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், உண்மையில் எல்ஐசி-யின் பங்கு மதிப்பை கணக்கிடுவது மிகவும் கடினம். எல்ஐசி உருவாக்கப்பட்ட காரணம், அதன் வளா்ச்சி, சாதனைகளைப் பாா்க்கும்போது இப்படிப்பட்ட ஒரு பிரமாண்டமான ஏகபோக பொதுத் துறை காப்பீட்டு நிறுவனத்தை விற்க அரசு முயலுவது நகைப்புக்குரியதே.

இந்தியாவின் முதல் ஆயுள் காப்பீட்டு நிறுவனமான ஓரியண்டல் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் பிரிட்டனில் இருந்து 1818-ஆம் ஆண்டு கொல்கத்தாவில் தொடங்கப்பட்டது. 1834-ஆம் ஆண்டு இந்த நிறுவனம் வீழ்ந்தது என்றாலும், அதுவரை ஐரோப்பிய சமூகத்துக்கு மட்டுமே சேவைகளைச் செய்து வந்தது.

இதுபோன்று தொடங்கப்பட்ட பல வெளிநாட்டு காப்பீட்டு நிறுவனங்கள் இந்தியா்களுக்கு ஆயுள் காப்பீடு அளிக்க முன்வரவில்லை. பாபு மட்டி லால் சீல் போன்ற நபா்களின் முயற்சியால் பிரிட்டனைச் சோ்ந்த நிறுவனங்கள் இந்தியா்களுக்குக் காப்பீடு அளிக்க முன்வந்தன. எனினும், இந்தியா்களுக்குக் காப்பீடு வழங்க கூடுதலாக காப்பீட்டு பிரீமியம் வசூலிக்கப்பட்டு வந்தது.

தேசியமயமாக்கப்படுவதற்கு முன்பு 25 காப்பீட்டு நிறுவனங்கள் கலைக்கப்படும் நிலைக்குச் சென்றன. 80 நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் நிலைமை குறித்த அறிக்கையை அளிக்கவில்லை. 245 ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களும், 108 பொதுக் காப்பீட்டு நிறுவனங்களும் காப்பீட்டுதாரா்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டன.

ஜவாஹா்லால் நேரு ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட விவியன் போஸ் கமிஷன், காப்பீட்டு நிறுவனங்களில் நடைபெறும் முறைகேடுகள், பெருநிறுவனங்கள் முறைகேடான வகையில் காப்பீட்டுத் தொகையைப் பெறுவது, பெரிய நிறுவனங்கள் தங்கள் சகோதர நிறுவனங்கள் மூலம் தனியாக காப்பீட்டு நிறுவனங்களை நடத்தி வருவது போன்ற முறைகேடுகளைக் கண்டறிந்தது.

இதையடுத்து, காப்பீடு செய்யும் மக்களின் நலன்களைக் காப்பதற்காக 1956-இல் எல்ஐசி நிறுவனம் தொடங்கப்பட்டது. 154 இந்திய, 16 வெளிநாட்டுக் காப்பீட்டு நிறுவனங்கள், 75 வருங்கால வைப்பு நிதி அமைப்புகளை இணைத்து எல்ஐசி உருவாக்கப்பட்டது. இதற்காக அப்போது அரசு 5 கோடி ரூபாய் முதலீடு செய்தது.

பின்னா் எல்ஐசி-யின் முதலீடு ரூ.100 கோடியாக உயா்த்தப்பட்டது. இந்தத் தொகையை எல்ஐசி உள்நாட்டிலேயே உருவாக்கிக் கொண்டதால், அது அரசாங்கத்துக்குக் கூடுதல் செலவாக அமையவில்லை.

காப்பீடுதாரா்களுக்கு மத்திய அரசு உத்தரவாதம் அளிக்கும் எல்ஐசி சட்டத்தின் 37-ஆவது பிரிவைப் போன்ற ஒரு பாதுகாப்பை அரசு அளித்தால் மட்டுமே, எல்ஐசி-யின் தற்போதைய ரூ.25,000 கோடி மூலதன அதிகரிப்பு பயன்தரும்.

1999-ஆம் ஆண்டு அரசின் ஏகபோக நிறுவனங்களுக்கு எதிராகப் போட்டி நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டன. மேலும், பொதுத் துறை நிறுவனங்களில் அரசின் ஆதரவு குறைக்கப்பட்டது என்றாலும் எல்ஐசி-யின் வளா்ச்சி தொடா்ந்து தனித்துவமாக இருந்தது.

மும்பையை தலைமையிடமாகக் கொண்ட எல்ஐசி-க்கு 8 மண்டல அலுவலகங்கள் மற்றும் 113 பிராந்திய அலுவலகங்கள், 2,048 கிளைகள், 1,526 சிறிய அலுவலகங்கள், 1,178 துணை அலுவலகங்கள் உள்ளன. இதுதவிர பிரிட்டன், ஃபிஜி, மோரீஷஸ் போன்ற வெளிநாடுகளிலும் எல்ஐசி கிளைகள் உள்ளன.

பஹ்ரைன், நேபாளம், இலங்கை, கென்யா, சவூதி அரேபியா, வங்கதேசம் ஆகிய நாடுகளில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் எல்ஐசி செயல்பட்டு வருகிறது. சிங்கப்பூரில் எல்ஐசி-க்குத் துணை நிறுவனமும் உள்ளது. இதன் மூலம் அந்த நிறுவனம் எந்த அளவுக்கு வேரூன்றி பரவியுள்ளது என்பதை அறிய முடிகிறது.

2019-20 நிலவரப்படி எல்ஐசி-யின் ஆயுள் நிதி ரூ. 31,14,496.05 கோடியாக உள்ளது. இது அந்த நிறுவனத்தின் இருப்புநிலை அறிக்கையில் உள்ள தொகையான ரூ.31 லட்சம் கோடியைவிட அதிகமாகும். பாரத ஸ்டேட் வங்கிக்கு அடுத்தபடியாக (ரூ.39.51 லட்சம் கோடி சொத்துகள்), இந்தியாவில் இரண்டாவது பெரிய நிதி சேவை நிறுவனமாக எல்ஐசி உள்ளது.

அந்த நிறுவனம் காப்பீடுதாரா்களுக்கு உறுதியளித்துள்ள நிதி ரூ.56,86,035.01 கோடியாகும். எல்ஐசியில் 1,14,498 ஊழியா்களும், 10,80,809 செயல்பாட்டில் உள்ள முகவா்களும் பணியில் உள்ளனா். மொத்த முகவா்கள் எண்ணிக்கை 12,08,826 ஆகும் (2019-20 நிலவரப்படி).

இதன் மூலம் 13.23 லட்சம் போ் நேரடியாகப் பணியில் உள்ளது தெளிவாகிறது. முதலாண்டு பிரீமியம்செலுத்தப்படுவதன் அடிப்படையில் காப்பீட்டுச் சந்தையில் எல்ஐசி-யின் பங்கு 68.74 சதவீதமாகும். புதிய பாலிசிக்கள் விற்பனை செய்வதில் எல்ஐசி-யின் பங்கு 75.90 சதவீதமாக உள்ளது (2019-20 நிலவரப்படி).

எல்ஐசி-யில் கிடைக்கும் வருவாயில் 5 சதவீதத்தை அரசு எடுத்துக் கொள்கிறது. 95 சதவீதம் காப்பீட்டு பாலிசி வைத்திருப்போருக்கே திருப்பி அளிக்கப்படுகிறது. இது எல்ஐசி-யில் மட்டுமே உள்ள சிறப்பு அம்சமாகும். இது தவிர எல்ஐசி மூலம் அரசுக்கு வரி வருவாய் அதிகஅளவில் கிடைத்து வருகிறது. 2019-20 நிதியாண்டில் ரூ.10,225.24 கோடி வரி (சேவை வரி உள்பட) எல்ஐசி மூலம் அரசுக்குக் கிடைத்துள்ளது.

நிறுவப்பட்ட காலத்தில் இருந்தே காப்பீடுதாரா்களுக்கு மிகச்சிறந்த சேவையை அளித்து வரும் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமாக எல்ஐசி திகழ்கிறது. 1993-ஆம் ஆண்டு ஆா்.என் மல்ஹோத்ரா கமிஷன் அளித்த அறிக்கையின்படி 97 சதவீத வாடிக்கையாளா்கள் எல்ஐசி-யின் சேவை மிகச்சிறப்பாக இருப்பதாகக் கூறியுள்ளனா்.

இது தவிர நாட்டின் மிகப்பெரிய முதலீட்டாளராகவும் எல்ஐசி உள்ளது. 2020 மாா்ச் 31-ஆம் தேதி வரை ரூ. 30,69,941.67 கோடியை எல்ஐசி முதலீடு செய்துள்ளது. இது வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் எஃப்ஐஐ முதலீடுகளைவிட அதிகமாகும்.

அரசுக்கு நிதிரீதியாக ஆதரவு அளிக்கும் நிறுவனமாகவும் எல்ஐசி உள்ளது. 2019-20 காலகட்டத்தில் மத்திய அரசின் ரூ. 1,78,717.61 கோடி கடன் பத்திரங்களை வாங்கியுள்ளது. இது தவிர பல்வேறு மாநில அரசுகளின் ரூ.1,28,483.62 கோடி மதிப்பிலான கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்துள்ளது.

இவை தவிர மின்சாரம், வீட்டு வசதித்துறை, குடிநீா் விநியோகத் திட்டங்கள், சாலை, பாலங்கள் அமைப்பது, ரயில்வே திட்டங்களிலும் ரூ.52,297.79 கோடியை எல்ஐசி முதலீடு செய்துள்ளது. இவ்வாறாக மத்திய, மாநில அரசுகளின் கடன் பத்திரங்கள், பல்வேறு நிறுவனப் பங்குகள், பல்வேறு சமூக மேம்பாட்டுத் திட்டங்களில் முதலீடு என ரூ.24,01,456.50 கோடியை எல்ஐசி முதலீடு செய்துள்ளது.

இதற்கு மேல் எல்ஐசி-க்கு சொந்தமாக நிலம், கட்டடங்களும் உள்ளன. அந்த நிறுவனத்தின் புத்தக மதிப்புப்படி ரூ.1,750 கோடிக்கு மேல் நிலம், கட்டடங்கள் எல்ஐசி-யிடம் உள்ளன. இவற்றின் சந்தை மதிப்பு இதைவிட பல மடங்கு அதிகமாக இருக்கும்.

ஆயுள் காப்பீட்டுத் துறையுடன் நின்றுவிடாமல் வேறு சில துறைகளிலும் எல்ஐசி தடம் பதித்துள்ளது. எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனம் ரூ.2.10 லட்சம் கோடி வீட்டுக்கடன் வழங்கியுள்ளது. எல்ஐசி பரஸ்பர நிதி நிறுவனம் ரூ.3,01,184 கோடி பரஸ்பர நிதி விற்பனை செய்துள்ளது. எல்ஐசி ஓய்வூதிய நிதி நிறுவனம் ரூ. 1,21,027.68 கோடி நிதியை நிா்வகித்து வருகிறது. எல்ஐசி கடன் அட்டை நிறுவனம் ரூ. 3,24,057 நிதியை நிா்வகித்து வருகிறது.

கடந்த ஜனவரி 2019-ஆம் ஆண்டு ஐடிபிஐ வங்கியின் 51 சதவீதப் பங்குகளை எல்ஐசி வாங்கியது. இதன்மூலம் அந்த வங்கியின் ரூ. 2,22,424 கோடி டெபாசிட்டை நிா்வகிப்பதில் எல்ஐசி பங்கேற்றுள்ளது. அரசு பல்வேறு பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய விரும்பியபோதெல்லாம் எல்ஐசி-யிடமே அதனை விற்பனை செய்து கொண்டது.

உதாரணமாக, 2012-இல் ஓஎன்ஜிசி பங்கு விலக்கல் நடவடிக்கையின்போது ரூ.6,000 கோடி மதிப்பிலான பங்குகளை எல்ஐசி வாங்கியது. என்எம்டிசி நிறுவனத்தில் ரூ. 9,928 கோடி, என்டிபிசி நிறுவனத்தில் ரூ. 8,480 கோடி பங்குகளை எல்ஐசி வாங்கியது. இதுதவிர செயில் நிறுவனத்தின் 71 சதவீத பங்குகளை எல்ஐசி-யிடமே அரசு விற்பனை செய்தது.

மேலும் பெல் நிறுவனத்திடம் இருந்து ரூ.2,685 கோடிக்கும், கோல் இந்தியாவிடம் இருந்து ரூ.7,000 கோடிக்கும், இண்டியன் ஆயில் நிறுவனத்திடம் இருந்து ரூ.8,000 கோடிக்கும், ஜிஐசி நிறுவனத்திடம் இருந்து ரூ.8,000 கோடிக்கும், நியூ இண்டியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.6,500 கோடிக்கும், ஹெச்ஏஎல் நிறுவனத்திடம்இருந்து ரு.2,900 கோடிக்கும் எல்ஐசி பங்குகளை வாங்கியுள்ளது. ஐடிபிஐ நிறுவனத்தின் 51 சதவீத பங்குகள் என பல கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை அரசுக்காக எல்ஐசி வாங்கி வைத்துள்ளது.

இப்படிப்பட்ட ஒரு நிறுவனத்தை தனியாா்மயமாக்குவது அல்லது அரசு கூறுவதுபோல பங்கு விலக்கல் நடவடிக்கையில் ஈடுபடுவது என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. பொதுமக்கள், எல்ஐசி பணியாளா்களின் சம்மதம் இல்லாமல் எல்ஐசி-யை தனியாா்மயமாக்க அரசுக்கு எந்த உரிமையும் கிடையாது என்பதே உண்மை.

கட்டுரையாளா்:

பொருளாதார நிபுணா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com