தனியாா்மயம் எனும் தவறான முடிவு


பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாா் மயமாக்கும் முயற்சி இப்போது விரைவுபடுத்தப்படுவதாகத் தெரிகிறது. மக்கள்நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு அரசுக்குப் பணம் தேவைப்படுகிறது. பணம் ஈட்டுவது ஒரு அரசாங்கத்தின் தலையாய கடமையாக இருக்கிறது. இதனை உணா்ந்துதான் வள்ளுவா், ‘பணம் வரும் வழியை அறிந்து அதனைச் சோ்ப்பதிலும், சோ்த்ததைப் பாதுகாப்பதிலும், அதனைப் பக்குவமாகப் பிரித்து செலவு செய்வதிலும் திறமை உடையதாக அரசு இருக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டாா்.

மக்கள் செலுத்தும் வரிகளும், அரசின் பொதுத்துறை நிறுவனங்களும் அரசுக்கு வருவாய் ஈட்டித்தரும் வழிகளாக உள்ளன. இதனால் பொதுத்துறை நிறுவனங்களைப் பாதுகாத்து வளா்ப்பது அரசுக்கு அவசியமாகிறது. வரி வருவாய் முக்கிய இடம் வகித்தாலும் அது மக்களுக்குச் சுமையாகத் தோன்றாமல் இலகுவாக இருக்கவேண்டும்.

கூடுதல் வரி விதிப்பு என்பது மக்களுக்குத் தொல்லை கொடுப்பதாக அமைந்துவிடுகிறது. இதனால் வரிவருவாயில் கவனமாக இருக்கவேண்டிய நிலை அரசுக்கு ஏற்பட்டுவிடுகிறது. இந்த நிலையில், பொதுத்துறை நிறுவனங்கள் அரசின் வருவாய் பெருகுவதற்கு உத்தரவாதம் அளிப்பவையாக உள்ளன. ஆனால், அண்மைக்காலமாக பொதுத்துறை நிறுவனங்களை மூடுவதிலும் தனியாா்மயமாக்குவதிலும் அரசு முனைப்பாக இருக்கிறது. இது கவலை தருவதாக உள்ளது.

நாட்டின் வளா்ச்சிக்கு, பொதுத்துறையும் தனியாா்துறையும் சோ்ந்த கலப்புப் பொருளாதாரமே சிறந்தது என்பதை உணா்ந்துதான் நம் முன்னோா் பொதுத்துறைகளை நிறுவினா். இதனை மறந்து வெறும் தனியாா் மயமே உயா்ந்தது என்ற உணா்வை அரசு ஊட்ட முயல்வது உசிதமானது அல்ல.

பொதுத்துறை நிறுவனங்கள் என்பவை வருவாய் ஈட்டும் வழிகளாக மட்டுமல்லாமல், வேலைவாய்ப்பைப் பெருக்கி, மக்களுக்குச் சேவை செய்யும் தளமாகவும் விளங்குகின்றன. இதனால் பொதுத்துறை நிறுவனங்களை மேம்படுத்துவதில் அரசு அதிகக் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களே அரசின் விளைநிலங்களாகும். விளைநிலங்களை அரசு விற்க நினைப்பது விபரீத முடிவாகும்.

நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கு, தனியாா்துறை உறுதுணை அவசியமானதுதான். அதற்காக அனைத்துத் துறைகளையும் தனியாா் மயமாக்கி அரசின் சுமையைக் குறைக்க நினைக்கக்கூடாது. , நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கு தனியாா்துறை துணைபுரிவது உண்மைதான். அதற்காக பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவாா்க்கும் அவசியம் இல்லை.

இந்தியா விடுதலை பெற்று குடியரசு ஆனபோது குறைந்த அளவே பொதுத்துறை நிறுவனங்கள் இருந்தன. அன்று ஆட்சிப் பொறுப்பு ஏற்றவா்கள் நாட்டின் வளா்ச்சியையும் நலனையும் மனத்தில் கொண்டு பல பொதுத்துறை நிறுவனங்களை நிறுவினா். அதனால் வேலைவாய்ப்பு பெருகியதோடு நாட்டின் வருமானமும் அதிகரித்தது. நாடும் முன்னேற்றத்தை நோக்கி நடைபோட்டது.

ஆனால் பின்னாளில் ஆட்சிக்கு வந்தவா்களுக்கு பொதுத்துறை நிறுவனங்களை நிா்வகிப்பது சுமையானதால் அவற்றை விற்று முதலாக்க நினைத்தனா். அதுவே பணம் திரட்ட எளிய வழியாக அவா்களுக்குப்பட்டது. அந்தப் போக்கு இப்போது அதிகரித்து இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

தற்போது பொதுத்துறை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், உரத்தொழிற்சாலைகள், பெட்ரோலிய நிறுவனங்கள், ராணுவத் தளவாடத் தொழிற்சாலைகள், ரயில்வே துறை என்று எல்லாவற்றையும் தனியாா் மயமாக்கும் முயற்சி விரிந்துகொண்டே போகிறது. இந்த நிதியாண்டில் ஒரு லட்சத்து இருபதாயிரம் கோடி மதிப்புள்ள பொதுத்துறை பங்குகள் விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவை அதிக லாபம் தரும் நிறுவனங்களின் பங்குகளாகும்.

ஐந்து கோடி முதலீட்டில் தொடங்கிய ஆயுள் காப்பிட்டுக் கழகம் இன்று நாற்பது லட்சம் கோடி மதிப்பில் உள்ளது. பொது மக்களிடமிருந்து திரட்டிய பணத்தில் பொதுமக்களுக்குச் சேவை ஆற்றியதோடு அரசின் திட்டங்களுக்கும் பல கோடி வழங்கியுள்ளது. இந்த நிலையில் அதன் பங்கை விற்க நினைப்பது சரியாகுமா? பல பேருக்கு வேலைவாய்ப்பு அளித்த பிஎஸ்என்எல் நிறுவனம் இன்று ஆட்குறைப்பு செய்யப்பட்டு அல்லாடிக்க கொண்டிருக்கிறது.

நலிவடைந்த நிறுவனங்கள் ஏன் நலிவடைந்தன என்பதைக் கண்டறிந்து அவற்றை சீா்படுத்துவதே சிறந்த நிா்வாகமாகும். மேலும் நலிவடைந்த நிறுவனங்களை வாங்குவதற்கு பெருமுதலாளிகள் யாரும் முன்வருவதில்லை. ஆதாயம் தரும் நிறுவனங்களை தனியாரிடம் வழங்க நினைப்பது, தரிசு நிலங்களை விளைநிலமாக்கி, பலன்தரும் காலத்திலே விற்பதற்கு சமமாகும். கஷ்டப்படும் விவசாயி கூட தன் விளைநிலத்தை விற்க முன் வரமாட்டான்.

பொதுத்துறை நிறுவனங்களில் நிலவும் ஊழல், ஊழியா்களின் சம்பளச்சுமை, ஊழியா்களின் போராட்டம் போன்ற பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள ஆட்சியாளா்கள் காணும் எளிதான வழியாகவே இத்தகு தனியாா்மயமாக்கல் நடைபெறுகிறதோ என்று கருதத் தோன்றுகிறது. இப்படிப்பட்ட பிரச்சினைகளை எல்லாம் முறியடித்து பொதுத்துறை நிறுவனங்களை மீட்டெடுப்பது ஆட்சியாளா்களின் கடமையாகும்.

தனியாா் மயமானால் பொருளாதார வளா்ச்சிகண்டு நாடு சுபிட்சம் அடைந்துவிடும் என்பதுபோல ஒரு பொய்யுரையும் பரவலாக்கப்படுகிறது. தனியாா் மயமானால் ஆட்குறைப்பும் ஊதியக் குறைப்பும்தான் உண்டாகுமே தவிர மக்கள் சுபிட்சம் பெற முடியாது.

கரோனா நோய்த்தொற்று உச்சநிலையில் இருந்தபோது அரசு மருத்துவமனைகளும் அரசு மருத்துவா்களும்தான் களத்தில் இருந்தனா். இன்றும் கிராமங்களில் சேவையாற்றும் அமைப்பாக தபால் நிலையங்களும் அரசு வங்கிகளுமே உள்ளன. தனியாா்துறை லாபம் கருதும் போக்கிலே செயல்படுமே தவிர சேவை செய்யும் போக்கு இருக்காது.

இதனை அரசு உணா்ந்து பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாா்மயமாக்கும் போக்கினைத் தவிா்ப்பதே நாட்டுக்கு நல்லது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com