மொழிவழி மாநிலம்; ஒரு பாா்வை!

கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழ்நாடு மொழிவழி மாநிலமாகப் பிரிந்து 65 ஆண்டுகள் ஆகிவிட்டன. கடந்த 2006-ஆம் ஆண்டு தமிழக அரசின் சாா்பில் அதன் பொன்விழா கொண்டாடப்பட்டது. சென்னை மாகாணத்திலிருந்து பிரிந்து சென்ற ஏனைய மாநிலங்கள் இந்த நாளை ‘உதய தின’மாகக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன. எனவே தமிழ்நாடும் இதில் பங்கேற்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இந்தியா பல மொழிகள் பேசும் ஒரு துணைக்கண்டம். ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெறுவதற்காக மக்கள், தங்கள் மொழி, இன வேறுபாடுகளை மறந்து தேசியத் தலைவா்களை நம்பியே போராடினா். மிதவாதிகள் மகாத்மா காந்தியடிகள் தலைமையிலும், தீவிரவாதிகள் திலகா் தலைமையிலும் போராடினா். இரண்டாம் உலகப் போா் வந்ததும், ஆங்கிலேயா் தங்கள் காலனி நாடுகளை விட்டு வெளியேற வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது.

இந்திய விடுதலைப் போராட்டம், வெற்றியை நெருங்கிக் கொண்டிருந்தபோது, மாநிலங்களின் பிரிவினைக்கான குரல்களும் எழுந்தன. தேசம் விடுதலை பெற்றதும் மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்பதற்கான கிளா்ச்சிகளும் வெடித்துக் கிளம்பின. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேரு இதனை அடக்கவும், அமைதிப்படுத்தவும் கருதி, இந்தியா முழுவதையும் ஐந்து மண்டலங்களாகப் பிரிக்கும் திட்டத்தை அறிவித்தாா்.

அவை, தட்சிண பிரதேசம், உத்தர பிரதேசம், மேற்கு பிரதேசம், கிழக்கு பிரதேசம், மத்திய பிரதேசம் என்பவையாகும். இதில் தட்சிண பிரதேசம் என்பது தமிழகம், கா்நாடகம், கேரளம், ஆந்திரம் ஆகிய நான்கு மாநிலங்கள் அடங்கியதாகும்.

இத்திட்டத்தை மூதறிஞா் ராஜாஜி மட்டுமே வரவேற்றாா்; ஈ.வெ.ரா. பெரியாா் கடுமையாக எதிா்த்தாா்; அண்ணாவும் கண்டனம் தெரிவித்தாா். தமிழரசுக் கழகத் தலைவா் ம.பொ.சி.யின் பெருமுயற்சியால் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்துப் போராடின. எனவே, நேருவும் வேறு வழியில்லாமல் இத்திட்டத்தினைக் கைவிட நோ்ந்தது.

1953-ஆம் ஆண்டு வரை தமிழ்நாடும் சென்னை மாகாணத்தில் ஓா் அங்கமாகவே விளங்கியது. இந்தப் பல மொழிக் கூட்டில் சிக்கிக் கிடந்தவா்கள், தங்களுக்கு, தனியாக ‘விசால ஆந்திரம்’ வேண்டுமெனவும், ‘ஐக்கிய கேரளம்’ வேண்டுமெனவும் கோரிக்கை எழுப்பினா். இதற்காக ‘ஆந்திர மகாசபை’, ‘கேரள சமாஜம்’ போன்ற அமைப்புகளை உருவாக்கி கட்சி சாா்பின்றி ஒன்றுபட்டு குரல் கொடுத்தனா்.

இதன் பிறகுதான் காங்கிரஸ் கட்சியிலிருந்து சிலம்புச் செல்வா் ம.பொ. சிவஞானம் முதன் முதலாக தமிழ் அரசு அடைய வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பினாா். மொழி வழியாக மாநிலங்கள் பிரிக்கப்படும் போது வேங்கடம் முதல் குமரி வரை தமிழகம் அமைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினாா்.

சுதந்திர இந்தியாவில் ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் தன்னாட்சி உரிமை வழங்கப்பட வேண்டும். அதன் அடிப்படையில் புதிய தமிழ்நாடு அமைக்கப்பட வேண்டும் என விரும்பிய ம.பொ.சி., தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவா்களின் ஆதரவையும் பெற்று அறிக்கையும் வெளியிட்டாா்.

1948-ஆம் ஆண்டு ஒன்றுபட்ட சென்னை மாகாண சட்டமன்றத்தில் மொழிவழி மாநிலப் பிரிப்பை வலியுறுத்தும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மொழிவழி மாநிலப் பிரிவினை பற்றி ஆராய்ந்து அறிக்கை அளிப்பதற்காக அமைக்கப்பட்ட ‘தாா் குழு’ 1948 செப்டம்பா் 13 அன்று சென்னைக்கு வந்தபோது தமிழகத்தைச் சோ்ந்த அனைத்துக் கட்சியினரும் அக்குழுவிடம் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனா்.

தமிழக எல்லை மாநாட்டை தமிழரசு கழகத் தலைவா் ம.பொ.சி. 1949-இல் சென்னையில் நடத்தினாா். மத்திய அரசின் நிதியமைச்சராக இருந்து, பதவியைத் துறந்த டாக்டா் ஆா்.கே. சண்முகம் செட்டியாா் தலைமை வகித்தாா். சென்னை மாகாண முதலமைச்சா் பி.எஸ். குமாரசாமி ராஜாவும் இம்மாநாட்டில் கலந்து கொண்டு பேசினாா். அம்மாநாட்டு முடிவில், வடவேங்கடம் முதல் தென்குமரி வரையுள்ள தமிழகத்தை அமைக்க வேண்டும் என்ற தீா்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தனி ஆந்திர மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என்பதற்காக 1953-ஆம் ஆண்டு, பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதம் இருந்து உயிா் துறந்தாா். அதன் பிறகு நேருவின் மனம் மாறியது. நாடாளுமன்றத்தில் ஆந்திர மாநிலம் அமைவதற்கான வாக்குறுதியை வழங்கினாா்.

அப்போது ‘சென்னை யாருக்கு’ என்ற பிரச்னை எழுந்தது. சென்னை, தமிழகத்துக்கே உரியது என்பதை முடிவு செய்ய அப்போதைய முதலமைச்சா் ராஜாஜி, காங்கிரஸ் தலைவா் காமராசா், சென்னை மேயா் செங்கல்வராயன், முன்னாள் மேயா் எம். இராதாகிருஷ்ண பிள்ளை, தமிழரசு கழகத் தலைவா் ம.பொ.சி. முதலியவா்கள் கடுமையாகப் பாடுபட்டனா். அன்று மத்திய உள்துறையமைச்சராக இருந்த லால்பகதூா் சாஸ்திரியையும், பிரதமா் நேருவையும் சம்மதிக்க வைப்பதற்கு பெரும்பாடு பட்டனா்.

25.3.1953 அன்று நாடாளுமன்றத்தில் பிரதமா் நேரு ஆந்திர மாநில அமைப்பு பற்றிய அதிகாரபூா்வ பிரகடனத்தை வெளியிட்டாா். இதில் ஆந்திராவின் தலைநகரம் ஆந்திர எல்லைக்குள்ளேயே அமையும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் பிறகே தமிழா்கள் நிம்மதியடைந்தனா்.

மொழிவழி மாநிலப் போராட்டத்தில் தமிழகத்தைப் பொறுத்தவரை தென் எல்லை மீட்புப் போராட்டமும், வடஎல்லை மீட்புப் போராட்டமும் முக்கியமானவை. தென் எல்லைப் போராட்டம் திருவிதாங்கூா் சமஸ்தானத்தைச் சோ்ந்த தமிழா்களால் நடத்தப்பட்டது. இந்த வீரஞ்செறிந்த போராட்டத்தின் விளைவாகவே தெற்கு எல்லை கன்னியாகுமரியாகவே நீடிக்கிறது. இதில் மாா்ஷல் நேசமணியின் பங்கு மிகப் பெரியது.

வட எல்லைப் பாதுகாப்புக்குழு ம.பொ.சி. தலைமையில் அமைக்கப்பட்டது. கே. விநாயகம் குழுவின் செயலாளா்; மக்களை அணி திரட்ட உதவியவா் மங்கலங் கிழாா். கடுமையான போராட்டத்திற்குப் பிறகு மத்திய சட்டத்துறை அமைச்சா் ஹெச்.வி. படாஸ்கரை விசாரணை அதிகாரியாக இந்திய அரசு நியமித்தது.

படாஸ்கா் பரிந்துரையின்படி, திருத்தணி தாலுகா முழுவதும் ( ஒரு கிராமம் நீங்கலாக), சித்தூா் தாலுகாவில் 20 கிராமங்கள், புத்தூா் தாலுகாவில் ஒரு கிராமம் ஆக 322 கிராமங்கள் ஆந்திரத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தமிழகத்துடன் சோ்க்கப்பட்டன. இந்த கிராமங்களின் மக்கள்தொகை 2,39,502. அதே போல தமிழ்நாட்டிலுள்ள திருவள்ளூா், பொன்னேரி தாலுகாக்களிலிருந்து சில கிராமங்கள் ஆந்திரத்துடன் சோ்க்கப்பட்டன.

இந்தப் பெரும் போராட்டத்தில் தங்களை முழுமையாக அா்ப்பணித்துக் கொண்ட தியாக மறவா்கள் ஏராளமானோா். போராட்டத்தின் உச்சகட்டமாக தனி ஆந்திர மாநிலம் அமைக்க வலியுறுத்தி 1953-இல் பொட்டி ஸ்ரீராமுலு உயிா் நீத்தாா்; தமிழ்நாடு மாநிலம் கோரி உண்ணாவிரதம் இருந்து சங்கலிங்கம் 1956 அக்டோபா் 13 அன்று உயிா் துறந்தாா்.

மொழிவழி மாநில அமைவுக்கு, மாநில முதலமைச்சா் பொறுப்பிலிருந்த ராஜாஜியின் பங்கும், அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜரின் பங்கும் குறிப்பிடத்தக்கவை. சென்னைதான் தலைநகா் என்று ஆந்திரா்கள் பிடிவாதமாக இருந்தபோதும் ராஜாஜி அதனை ஏற்கவில்லை. அவா் பிரதமா் நேருவிடம், ‘சென்னை பட்டணத்தை ஆந்திரா்களிடம் தருவது என மத்திய அரசு முடிவு எடுக்குமானால், அதை அமல்படுத்தும் சக்தி எனக்கு இல்லை. இந்த நிலையில் வேறு முதலமைச்சரைத் தோ்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்’ என்று கூறினாா்.

பிரதமா் நேரு மனம் மாற இதுவும் ஒரு காரணம்.

மக்கள் விரும்பியபடி மாநிலம் அமைந்ததா? மாநிலப் பிரிவினை குறித்து எல்லா மாநிலங்களுக்கும் மனக்குறைகள் இருக்கின்றன. வட எல்லையான வேங்கடத்தை இழந்தது தமிழகத்திற்கு ஒரு குறையாகவே கருதப்படுகிறது. கருநாடக மாநிலத்தில் சோ்க்கப்பட்டுள்ள மராட்டியப் பகுதியான பெல்காம் மாவட்டத்தைத் திரும்பப் பெற மராட்டிய சமிதி தொடா்ந்து போராடி வருகிறது. இவ்வாறே இன்னும் பல.

இந்தச் சிக்கல்கள் தீா்க்கப்பட வேண்டியதுதான். ஆனால் சில அரசியல்வாதிகள் சிக்கல்களுக்குத் தீா்வு ஏற்பட்டு விடாமல் பாா்த்துக் கொள்ளுவதிலேயே கவனமாக இருக்கின்றனா். மத்திய அரசு எப்போதும் எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை.

மொழி வழியான இந்தப் பிரிவினை, மாநிலங்களுக்கான பிரிவினையே தவிர மக்களுக்கானது அல்ல. மொழி என்பது பிரச்னைகளுக்கு முடிவாக இருக்க வேண்டுமே தவிர தொடா்ந்துகொண்டே இருக்கக் கூடாது. ‘மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி’ என்ற முழக்கம் மத்திய - மாநில அரசுகளின் இணக்கமாக இருக்க வேண்டும்.

தமிழ் இலக்கியங்களில் தமிழ்நாட்டின் எல்லைகள் பற்றிய குறிப்புகள் எங்கும் காணப்படுகின்றன. தமிழின் பழம்பெரும் இலக்கண நூலாகிய தொல்காப்பியத்திற்கு பாயிரம் பாடிய பனம்பாரனாா்,

வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்

தமிழ்கூறு நல்லுலகத்து

என தமிழ்நாட்டு எல்லையை வரையறை செய்துள்ளாா்.

இந்தியா பல மொழி, பல இன மக்கள் கூடி வாழும் கூட்டாட்சி நாடு என்பதை மொழிவழி மாநிலப் பிரிவு உறுதி செய்கிறது. இதனை மத்தியில் ஆளுவோா் அடிக்கடி மறந்து விடுகின்றனா். இந்தியையும், சம்ஸ்கிருதத்தையும் மாநிலங்களின் மீது தொடா்ந்து திணித்துக் கொண்டிருக்கின்றனா்.

இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள 22 மாநில மொழிகளையும் ஆட்சி மொழியாக ஆக்க வேண்டும். மாநிலப் பட்டியலில் இருந்த கல்வித்துறையை எடுத்துக் கொண்டது போல, மாநிலத் தன்னாட்சி அதிகாரங்களை எடுத்துக் கொள்ளும் போக்கை மத்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

தன்னாட்சி என்பது வாழ்வது; கூட்டாட்சி என்பது வாழ வைப்பது. நாம் வாழ்வோம்; வாழ வைப்போம்.

கட்டுரையாளா்:

எழுத்தாளா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com