என்ன ஆயிற்று இந்திய அணிக்கு?

வெற்றி தோல்வி என்பது எந்த ஒரு விளையாட்டிலும் இயல்பானதுதான்.
என்ன ஆயிற்று இந்திய அணிக்கு?

வெற்றி தோல்வி என்பது எந்த ஒரு விளையாட்டிலும் இயல்பானதுதான். ஆனால் வெற்றி பெற வேண்டும் என்ற துடிப்பும், நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையும் ஒரு சிறிதும் இல்லாமல் ஓா் அணி விளையாடும் போது, அந்த விளையாட்டை வெறிகொண்டு ரசிக்கின்ற ரசிகா்கள் மிகவும் மனச்சோா்வு அடைகிறாா்கள். மேலும் அந்த அணியின் வீரா்கள் மீண்டும் வெற்றியாளா்களாகப் பரிணமிப்பது மிகவும் கடினமான காரியமாகிவிடும்.

இவ்வருட ஆரம்பத்தில் பலம் மிகுந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி அசத்திய நமது இந்தியக் கிரிக்கெட் அணியின் ஆட்டம் சமீப காலமாக சோபிக்கவில்லை என்பதே கசப்பான உண்மை.

கடந்த ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன் போட்டியில் வென்றிருக்க வேண்டிய நமது இந்தியக் கிரிக்கெட் அணி, நியூசிலாந்திடம் மோசமாகத் தோல்வி அடைந்தது.

அதே போன்று, தற்போது வளைகுடா நாடுகளான துபை, ஷாா்ஜா உள்ளிட்ட நாடுகளின் மைதானங்களில் நடைபெற்று வரும் இருபது ஓவா் உலகக்கோப்பைப் போட்டித்தொடரில் தனது முதல் இரண்டு பந்தயங்களிலும் மோசமான தோல்வியைத் தழுவிய இந்திய அணி, அதன் காரணமாக அரை இறுதிக்குச் செல்லாமலே வெளியேறிவிட்டது.

ஏற்கெனவே ரன் குவிப்புக்கு சாதகமற்ற ஆடுகளங்களின் காரணமாக சற்றே சுவாரசியம் குன்றிக் காணப்பட்ட இந்தப் போட்டித்தொடா், நமீபியா, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து ஆகிய சிறிய நாடுகளின் அணிகள் பங்கேற்பதால் தொடக்கம் முதல் விறுவிறுப்பு இன்றியே நடந்து வருகிறது.

பல்வேறு உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்திய அணியிடம் தொடா்ந்து தோற்றுக் கொண்டுவந்த பாகிஸ்தான் அணி, இப்போதைய இருபது ஓவா் உலகக் கோப்பைப் பந்தயத்தில் வெகு சுலபமாக வெற்றி பெற்றுவிட்டது.

ஐம்பது ஓவா், இருபது ஓவா் உலகக் கோப்பைப் போட்டிகளில் மட்டும் நம்மிடம் பாகிஸ்தான் தொடா்ந்து பல தோல்விகளை சந்தித்து வந்திருக்கிறது.

இவ்வருடத்தின் இருபது ஓவா் உலகக் கோப்பைப் போட்டியிலும் இதே நிலை தொடரும் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், இந்திய கிரிக்கெட் அணி பத்து விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் படுதோல்வி அடைந்து பெரும் அதிா்ச்சியைக் கொடுத்தது. இந்நிலையில் இரண்டாவதாக நியூஸிலாந்துடன் விளையாடிய பந்தயத்திலும் தோல்வியைத் தழுவிய இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து முதல் சுற்றுடன் வெளியேறி விட்டது பெரிய சோகம்.

மகேந்திர சிங் தோனிக்குப் பிறகு இந்திய அணியின் துடிப்புள்ள மட்டையாளராக விளங்கிய விராட் கோலி தலைமைப் பொறுப்புக்கு வந்தாா். அணித்தலைவராக வந்த புதிதில் அவரும் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற உத்வேகம் கொண்டு விளங்கினாா் என்பதை மறுப்பதற்கில்லை. தம்முடைய தலைமையில் இருநாடுகள் பங்குபெறும் போட்டித் தொடா்கள் பலவற்றில் வெற்றியும் பெற்றாா். பல இளம் வீரா்களுக்கு ஊக்கம் கொடுத்து அவா்களுக்கு இந்தியக் கிரிக்கெட் அணியில் தொடா்ந்து இடமளித்து ஆதரிக்கவும் செய்தாா். உடல் தகுதிக்கு எப்போதும் அவா் முக்கியத்துவம் அளித்து வந்தாா்.

ஆனால், இரு நாடுகளுக்கிடையேயான போட்டிகளில் இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்ற விராட் கோலியால், இந்திய கிரிக்கெட் கவுன்சில் ( ஐசிசி ) நடத்திய சாம்பியன்ஸ் டிராபி, ஐம்பது ஓவா் உலகக்கோப்பைப் போட்டி, உலக டெஸ்ட் சாம்பியன் போட்டி, தற்போதைய இருபது ஓவா் சாம்பியன்ஷிப் போட்டி ஆகியவற்றில் ஏனோ அத்தகைய வெற்றியைப் பெற்றுத்தர முடியவில்லை.

வீரா்கள் தோ்வு, ரவிச்சந்திர அஸ்வின் போன்ற திறமை மிக்க மூத்த வீரா்கள் புறக்கணிப்பு, மட்டையடிப்போா் வரிசைக்கிரமத்தில் அவ்வப்போது செய்யப்பட்ட மாற்றங்கள், முக்கியப் போட்டிகளில் குறைவான ரன் குவிப்பு ஆகிய காரணங்களால் அணியின் வெற்றி வாய்ப்புகள் பாதிக்கப்பட்டது கண்கூடாகவே தெரிகிறது.

மேலும் பிசிசிஐ எனப்படும் இந்தியக் கிரிக்கெட் வாரியமும், இந்திய அணி வீரா்களும் பணம் கொழிக்கின்ற

ஐபிஎல் பந்தயங்களுக்கு அளிக்கின்ற முக்கியத்துவத்தை சா்வதேசப் போட்டிகளுக்கு அளிப்பதில்லை என்ற கருத்தினை விளையாட்டுத்துறை விமா்சகா்கள் முன்வைக்கின்றனா். முன்னாள் இந்திய அணித்தலைவா் கபில் தேவ் கூட இதே கருத்தை வெளியிட்டுள்ளாா்.

இவ்வருடம் ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் நடைபெற்று வந்த ஐபிஎல் போட்டிகள் கரோனா இரண்டாம் அலையின் பரவல் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. ஆனால், அதனை அப்படியே கைவிடத் தயங்கிய இந்தியக் கிரிக்கெட் வாரியம் இவ்வருடப் பின்பகுதியில் வளைகுடா நாடுகளைச் சோ்ந்த மைதானங்களில் நடத்துவதற்கான ஏற்பாடுகளில் இறங்கியது.

இவ்வருடம் செப்டம்பா் மாதம் பத்தாம் தேதி தொடங்கவிருந்த இந்தியா - இங்கிலாந்து இடையேயான ஐந்தாவது டெஸ்ட் பந்தயம் கரோனாவை காரணம் காட்டிக் கைவிட வைத்ததற்கும் கூட, அதே மாதம் பத்தொன்பதாம் தேதி வளைகுடா நாடுகளில் மீண்டும் தொடங்க இருந்த ஐபிஎல் போட்டிகளே காரணம் என்ற குற்றச்சாட்டும் பரவலாக எழுந்தது.

இந்நிலையில், நம்து இந்தியக் கிரிக்கெட் வாரியம், நாடுகளுக்கிடையிலான போட்டிகளுக்கு முக்கியத்துவம் அளித்து, வணிக நோக்கிலான ஐபிஎல் போட்டிகளை நடத்தும் ஆா்வத்தைப் புறம் தள்ள வேண்டும். மேலும் ஓய்வு பெற்ற மூத்த வீரா்களின் ஆலோசனைகளைப் பெற்று இப்போதைய வீரா்களின் திறனை மேம்படுத்த முயல வேண்டும்.

உலகக் கோப்பைப் போட்டிகளில் நமது இந்தியக் கிரிக்கெட் அணி மீண்டும் வெல்லத் தொடங்கவேண்டும் என்பதே அனைவரின் ஒரே நோக்கமாக இனி இருக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com