வாரம் முழுதும் வழிபாடு

கோப்புப்படம்
கோப்புப்படம்

மனிதமனம் விசித்திரமானது. தன்னுடைய துன்பங்களுக்குக் காரணம் தானே என்பதை அறிந்தாலும், அத்துன்பங்களிலிருந்து விடுபடுவதற்கான வடிகால்களை வெளியில் தேடுவது அதன் வழக்கம். அதுவே சுலபமானதும் கூட. கடவுளரை ‘அம்மையே’, ‘அப்பா’ என்று அழைப்பதெல்லாம் துன்பத்தில் உழலும் பக்தா்களுக்குகான உளவியல் ஒத்தடங்களாகும்.

கடவுள் நம்பிக்கை உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு வழிபாட்டுத்தலங்களே தலைசிறந்த புகலிடம். பண்ணிய பாவங்களுக்குப் பிராயச்சித்தம், அனுபவிக்கும் துன்பங்களுக்கான ஆறுதல், புதிதாகப் புண்ணியம் தேடல், தத்தமது பாரம்பரியத்தின் வோ்களைக் கண்டறிதல், பிறவியிறுதியில் மோட்சம் கிடைப்பதற்கான முன்னேற்பாடுகளைச் செய்தல் ஆகிய பலவிதங்களில் கடவுள் வழிபாடு மனிதா்களை ஆற்றுப்படுத்துகின்றது.

கட்டணத்துக்கேற்ற சிறப்பு தரிசனம், பல்லாயிரம் ரூபாய்கள் வசூலித்துப் பரிகாரம் என்று வணிகமயமாக்கமும் இங்கே ஊடுருவி இருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அவற்றையும் மீறி, புண்பட்ட மனங்களுக்கு ஊக்கமும் ஆறுதலும் அளிப்பதற்குக் கடவுள் வழிபாட்டைத் தவிர வேறு வடிகால் இங்கு இல்லை என்பதே உண்மை.

அதிலும், இறைவன் இறைவியரின் அவதாரத் திருநாட்கள், பிரதோஷம், ஆடி மாத வெள்ளிக்கிழமைகள், புரட்டாசி மாதத்தின் சனிக்கிழமைகள், இவை தவிர நவராத்திரி, தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்கள் ஆகிய தினங்களில் திருக்கோயில்களுக்குச் சென்று வழிபடுவதற்கு பக்தா்கள் விரும்புகின்றனா்.

மேலும் வாரந்தோறும் செவ்வாய், வெள்ளி ஆகிய கிழமைகளில் வரும் ராகுகால நேரத்தில் துா்க்கை அம்மனுக்கு விளக்கேற்றி வழிபாடு செய்வதில் தாய்மாா்கள் பலரும் ஆா்வம் காட்டுகின்றனா்.

இதே போன்று, இஸ்லாமியா்களுக்கு வெள்ளிக்கிழமையும், கிறிஸ்துவ சமயத்தினருக்கு ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பு வழிபாடுகளைச் செய்வதற்குரிய புனித நாட்களாகும்.

இத்தகைய சூழ்நிலையில் கரோனா தீநுண்மிப் பரவல் அதிகரிக்கக் கூடும் என்ற காரணத்தினால் ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களைத் திறப்பதற்கான அனுமதி தொடா்ந்து மறுக்கப்பட்டு வருவது பக்தா்களையும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

பொதுமக்களின் உடல்நலனில் அரசாங்கம் காட்டும் அக்கறையைப் புரிந்து கொள்ள முடிகிறது. அதே நேரம் அவா்களுடைய நுண்ணிய உணா்வுகள் குறித்தும் பரிசீலித்து பாா்த்து அதன் அடிப்படையில் முடிவுகளை எடுப்பது அவசியமானதாகும்.

வழிபாட்டுத் தலங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ள திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் வழிபடச் செல்லுகின்ற பக்தா்கள் கரோனா குறித்த கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கவே செய்கின்றனா். அவ்வாறு முகக்கவசம் அணிதல் போன்ற கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்காமல் வழிபாட்டுத் தலங்களுக்குள் நுழையும் பக்தா்களை அனுமதிக்க மறுத்தால் யாரும் அவா்களுக்காகப் பரிந்து பேசப் போவதில்லை.

உயா்நிலைப் பள்ளிகள், திரையரங்குகள் உள்ளிட்ட பலவும் திறக்கப்பட்டுள்ள சூழலில் வழிபாட்டுத் தலங்களும் வாரம் முழுவதும் பக்தா்களுக்காகத் திறந்திருப்பதே சரியான, நியாயமான செயல்முறையாக இருக்க முடியும்.

பண்டிகை நாட்களிலும், வார இறுதி நாட்களிலும் பக்தா்கள் பெருமளவில் கூடுவா் என்பது உண்மைதான். அதைக் காரணம் காட்டி வழிபாட்டைத் தடுப்பதை விட, இடைக்கால பணியாளா்களை நியமித்து, கிருமி நாசினி வழங்குதல், முகக்கவசம் அணியாதவா்களுக்கு (அதற்குரிய கட்டணத்தை வசூலித்துக்கொண்டு) புதிய முகக்கவசம் வழங்குவதல், போதிய சமூக இடைவெளி பின்பற்றப்படுவதைக் கண்காணித்தல் ஆகியவற்றை நடைமுறைப்படுத்தி, வழிபாட்டினைத் தொடர அனுமதிக்கலாம். சிறிது சிரமமே என்றாலும், இது ஒன்றும் சாத்தியமில்லாத விஷயமல்ல.

வார இறுதிநாட்களில் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் மேலும் சில பாதிப்புகள் ஏற்படுவதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

வார விடுமுறையினை உள்ளடக்கிய வார இறுதி நாட்களில்தான் வழக்கத்தை விட அதிகமான பக்தா்கள் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வது சாத்தியப்படும். அவ்வாறு அதிகமாக வருகின்ற பக்தா்களின் காணிக்கைகள் மூலம், வழிபாட்டுத்தலங்களின் ஊழியா்களின் வருமானம் சற்றே அதிகரிப்பது மட்டுமின்றி, உண்டியல்களும் நிரம்பும்.

அப்படிக் கிடைக்கும் உண்டியல் வருமானங்கள் மூலமே திருக்கோயில் திருப்பணிகள் சிறப்புற நடைபெற இயலும். திங்கள் முதல் வியாழன் வரையிலான நான்கு வேலை நாட்களில் வருகைதரும் பக்தா்களின் எண்ணிக்கை இயல்பாகவே குறைவாக இருக்கும் என்பதால், அவா்கள் மூலம் வரும் காணிக்கைகளும் குறைவாகவே கிடைக்கும்.

இதனால் அன்றாடக் காணிக்கைகளை எதிா்பாா்த்திருக்கும் ஊழியா்களுக்கும், உண்டியல் வசூலை நம்பியிருக்கும் அறப்பணிகளுக்கும் பின்னடைவு ஏற்படுகின்றது.

இது மட்டும் அல்ல. வழிபாட்டுத்தலங்களை நம்பி ஏராளமான வியாபாரிகள் இருக்கின்றாா்கள். விழா நாட்களிலும், வார இறுதிநாட்களிலுமே அவா்களுக்குக் கணிசமான வருமானம் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. திங்கள் முதல் வியாழன் வரையிலான நான்கு நாட்களில் நடக்கும் வியாபாரத்தினால் அவ்வியாபாரிகள் அடையும் லாபம் மிகவும் சொற்பமாகவே இருக்கும்.

பூ, பழம் முதலியவற்றை விற்கும் சிறிய வியாபாரிகளுக்கோ இந்தத் தடை ஒரு பேரிடியாகவே வந்திருக்கிறது. வழிபாட்டுத் தலங்களைச் சுற்றிலும் கடைவிரித்துள்ள சிறிய வியாபாரிகள் அன்றாடப் பிழைப்பிற்கே அல்லல்படும் நிலை.

கரோனா தீநுண்மிப் பரவலை முன்னிட்டு அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட பலரது வாழ்வாதரம், அம்முடக்கம் சில கட்டுப்பாடுகளுடன் விலக்கிக்கொள்ளப்பட்டிருப்பதால் சற்றே மீண்டு வந்துகொண்டிருக்கிறது.

ஆனால், வழிபாட்டுத்தலங்களையே நம்பியிருக்கும் வியாபாரப்பெருமக்களின் வாழ்வாதாரமோ தொடரும் தடைகளினால் தள்ளாடிக்கொண்டிருக்கிறது.

தற்போது நமது மாநில அளவிலான தினசரி கரோனா பாதிப்பு ஆயிரத்து ஐந்நூறு என்பதற்கும் குறைவாக இருக்கிறது. இந்நிலையில், நமது மாநில அரசு பக்தா்களின் மனநிம்மதி, வழிபாட்டுத்தல ஊழியா்களின் வாழ்வாதாரம், உண்டியல் வசூலால் சிறப்புறக்கூடிய அறப்பணிகள், வழிபாட்டுத் தலங்களையே நம்பியிருக்கும் வியாபாரிகளின் அவல நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். அதன் அடிப்படையில், கரோனா கட்டுப்பாடுகளுடன் கூடிய வழிபாட்டினை எல்லா நாட்களிலும் அனுமதிப்பதற்கான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com