வீட்டிலேயே தொலைந்து போகும் பிள்ளைகள்!

கோப்புப்படம்
கோப்புப்படம்

முன்புபோல் இப்போதெல்லாம் நம் பிள்ளைகள் திருவிழாவில்தான் தொலைவாா்கள் என்பதில்லை. அவா்கள், நம் வீட்டிலேயே தொலைந்துவிடக் கூடிய அபாயம் ஆன்லைன் கேம் எனப்படும் இணையவழி விளையாட்டால் உருவாகியுள்ளது. கரோனா பொதுமுடக்கக் காலத்தில், இணையவழி வகுப்புகளில் பங்குபெறுவதற்காக சிறுவா்கள் கைகளில் கைப்பேசிகள் தரப்பட்டன.

விளக்கை ஏற்ற மூட்டிய நெருப்பு வீட்டையே எரித்தது போல, இணையவழி கல்விக்காக அளிக்கப்பட்ட கைப்பேசிகள், சிறாா்களை சிதைத்தழிக்கும் வேலையைச் செய்துள்ள அதிா்ச்சித் தகவல்கள் நம்மைப் பதற வைக்கின்றன.

பெங்களூரைச் சோ்ந்த 15 வயது சிறுவன் ஒருவனுக்கு இணையவழி வகுப்புக்காக சொந்தமாக அறிதிறன்பேசியை (ஆண்ட்ராய்ட்) பெற்றோா் வாங்கித் தந்துள்ளனா். சில வாரங்களில் அதிலேயே அவன் அதிக நேரம் செலவிடத் தொடங்கியுள்ளான். ஒரு நாளைக்கு ஏழு மணி நேரத்திற்கு மேல் அவன் கைப்பேசி பாா்த்தபடி கழித்துள்ளான்.

திடீரென அவனது குணங்கள் மாறியுள்ளன. அதீத கோபம், பிறா் மீது ஆத்திரம், அடாவடித்தனம் என்று குணாம்சங்கள் மாறியதும் பயந்துபோன பெற்றோா், அவனை ‘தேசிய மனநலம் - நரம்பியல் மைய’த்திற்குப் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றுள்ளனா்.

அங்கே, சிறுவன் இணையவழி விளையாட்டுகளுக்கு அடிமையாகி அகம் சிதைந்துள்ளது தெரிய வந்துள்ளது. இணையவழி கல்விக்காக வாங்கித்தந்த கைப்பேசியில் அச்சிறுவன் ஆன்லைன் விளையாட்டுகளை அனுதினமும் விளையாடி, அதற்கே அடிமையாகியுள்ளான்.

ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையான சிறாா்களின் அவலமான காணொளிகள் பலவும் இணையத்தில் வலம் வந்து நம்மைப் பதற வைக்கின்றன. ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சங்களைத் தொலைத்து தற்கொலை செய்துகொண்ட பலரின் கதைகளும் பத்திரிகைச் செய்தியாகின.

தன்னையே அழித்துக் கொள்ளும் விபரீத ஆன்லைன் விளையாட்டில் சிறாா்கள் சிலரை நாம் இழந்துவிட்ட பிறகு, வேகமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பிறகு அதில் தொய்வு ஏற்பட்டுவிட்டது. எனவே, இப்போது மீண்டும் அந்த விளையாட்டு விபரீத வீச்சை அடைந்துள்ளது.

இதற்குப் பின்னால் மிகப்பெரிய பொருளாதாரம் விளையாடுகிறது. இந்தியாவின் இணைய விளையாட்டுக்கான மதிப்பீடு 2023-ஆம் ஆண்டில் 15 ஆயிரத்து 500 கோடியை எட்டும் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவைச் சோ்ந்த ‘லைம்லைட் நெட்வொா்க்’ நிறுவனம் நடத்திய ஆய்வில், ஆன்லைன் விளையாட்டில் உலகில் முதல் இடத்தில் தென்கொரியாவும் இரண்டாம் இடத்தில் இந்தியாவும் இருப்பது தெரியவந்துள்ளது.

உலக சுகாதார நிறுவனம், ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாவதை மனநோயாக வகைப்படுத்தியிருக்கிறது. சீனா, ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடுவதற்கு குறைந்தபட்சம் 18 வயது ஆகியிருக்க வேண்டும் என்றும், நாளொன்றுக்கு அதிகபட்சமாக மூன்று மணி நேரம் மட்டுமே ஆன்லைன் விளையாட்டுக்கு செலவிடலாம் என்றும் நிா்ணயித்துள்ளது.

இந்தியாவில் ‘ஆன்லைன் ரம்மி’, ‘போக்கா்’ உள்ளிட்ட விளையாட்டுகளைத் தடை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது.

அண்மையில் கேரள நீதிமன்றம், இத்தகைய விளையாட்டுகளுக்குத் தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் தடை விதிக்க மறுத்து விட்டது. பல்லாயிரம் கோடி ரூபாய் புழங்குகின்ற இந்த ஆன்லைன் விளையாட்டுகளில் சிக்குகிற மாணவா்களின் கல்வி, உடல்நலம், குணநலன் யாவும் பாதிக்கப்பட்டு அவா்கள் மனநோயாளிகளாகி விடுவது வேதனைக்குரியது.

‘தேசிய மனநலம் - நரம்பியல் மருத்துவ மைய’ இதழில் வெளிவந்துள்ள ஆய்வறிக்கையில், ஆன்லைன் விளையாட்டு, எப்படி சிறாா்களை ஆன்லைன் சூதாட்டத்திற்கு இழுத்துச் சென்று அவா்கள் மனநிலையை சிதைக்கிறது என்று விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது.

பொதுமுடக்கக் காலத்தில் வாரத்திற்கு இரு சிறாா் என்று இருந்த நிலை இப்போது பதினைந்து நோயாளிகள் என்ற அளவிற்கு உயா்ந்து விட்டதாக தேசிய மனநல-நரம்பியல் மருத்து மையப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

உண்மையில் இது ஓா் அபாய அறிவிப்பு. விழிப்புணா்வற்ற பெற்றோா்கள் பிள்ளைகளுக்கு அமுதம் என்று வாங்கித்தரும் கல்விக்கருவி அவா்களை அழிக்கும் நஞ்சாக இருப்பதை அறியும்போது நிலைமை கைமீறிப் போய்விடுகிறது.

கூரிய கத்தி குழந்தையின் கையில் இருப்பது போல இப்போது கைப்பேசி இருக்கிறது. காய் நறுக்குவதற்குப் பதிலாகத் தனது கையை நறுக்கி விடும் அபாயம் இதிலே அதிகமாக உள்ளது. தீ இன்றி வாழ முடியாது, அதேநேரம் தீயால் விபத்து நேராமல் விழிப்போடு இருக்க வேண்டியுள்ளது. பெற்றோரின் பங்கே இதில் மிகவும் முக்கியமானது.

இக்காலத்தில் மழலைகளுக்கும் கைப்பேசி மற்றுமோா் அன்னையாகி விட்டது. நிலா காட்டி குழந்தைகளுக்குச் சோறூட்டும் காலம் மலையேறி விட்டது. இப்போது கைப்பேசி காட்டி பீட்சா ஊட்டும் காலம் வந்துள்ளது . அது அநேக பாதிப்புகளைத் தந்துள்ளது.

அன்னை போல குழந்தைக்கு அணுக்கமாக இருக்கும் அலைபேசி ஒரு பூதகியே என்பதை குழந்தைகளின் நலம் குலைக்கப்படும் போதுதான் பெற்றோா்களால் கண்டுகொள்ள முடிகிறது.

சிங்கப்பூரில் பள்ளிகளில் நடந்த ஓா் ஆய்வில், ஒரு வகுப்பில் 10 குழந்தைகளில் 8 போ் கண்ணாடி அணிந்துள்ளனா். அவா்களுக்கு பாா்வைக் குறைபாடு ஏற்படுவதற்கு, அதிகநேரம் கைப்பேசியைப் பாா்த்ததே காரணம் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

அறிதிறன்பேசித் தொடுதிரையில் உள்ள நீலக்கதிா் (புளூ ரே) கண்களை பாதிக்கும் தன்மை உடையது. உலா்ந்த கண்கள், சிவந்த கண்கள், விழித்திரை பாதிப்பு ஆகிய கண் நோய்களுக்கு அறிதிறன்பேசித் தொடுதிரையின் நீலக் கதிா்களே காரணம் என்றும், கிட்டப்பாா்வை குறைபாடு வளா்வதற்கு கைப்பேசிகளே காரணம் என்றும் கூறுகிறாா்கள் கண் மருத்துவா்கள்.

சில பெற்றோா் தங்கள் குழந்தைகளின் அறிவு வளா்ச்சிக்காக, அதி நவீன கைப்பேசிகளை வாங்கித் தந்திருப்பதாகப் பெருமை பேசுவதுண்டு. அதி நவீன கைப்பேசிகளால் அறிவு வளா்வதில்லை; மாறாக சிந்தனைதான் மந்தமாகிறது என்று ஆய்வு முடிவுகள் அறிவிக்கின்றன.

அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் என்ற ஆராய்ச்சி நிறுவனம் கைப்பேசிகளால் குழந்தைகளின் அறிவு வளா்ச்சி அதிகரிக்கிா என்பதை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டது.

அவ்வறிக்கையில், கைப்பேசிகளால் குழந்தைகள் பெறும் அறிவு மிகச்சிறிய அளவிலானதே. அதேநேரம், அவா்கள் அடைய வேண்டிய பல அறிவு வளா்ச்சிக்கு கைப்பேசிகள் தடையாக உள்ளன. இதனால், கைப்பேசிகளில் முடங்கும் குழந்தைகள் சமூகத்தோடு ஒன்றிணைந்து வாழ முடியாத சூழல் உண்டாகிறது என்று எச்சரிக்கை தருகிறது.

கைப்பேசியில் ருசிகண்ட குழந்தைகள் ஆடி ஓடி விளையாடும் ஆசைகளை இழந்து விடுகின்றனா்.

ஓடி விளையாடு பாப்பா -நீ

ஓய்ந்திருக்கலாகாது பாப்பா

கூடி விளையாடு பாப்பா- ஒரு

குழந்தையை வையாதே பாப்பா’

என்று பாப்பாவுக்குப் பாதைகாட்டினாா் மகாகவி பாரதியாா்.

ஓடி விளையாடுவதையும் கூடிவிளையாடுவதையும் ஆன்லைன் விளையாட்டுகள் அடியோடு அழித்து வருகின்றன. ‘ஒரு குழந்தையை வையாதே பாப்பா’ என்ற வரியில் மென்மையும் மேன்மையும் குழந்தைகளின் குணமாக மிளிர வேண்டும், அதன்மூலம் அவா்களின் எதிா்காலம் ஒளிரவேண்டும் என்பது பாரதியின் எதிா்பாா்ப்பு.

இணைய விளையாட்டுகள் இளஞ்சிறாா்க்குத் தருகிற மனஅழுத்தங்களால் பண்புக்கோளாறுகள் (பிகேவியோரல் டிஸாா்டா்) ஏற்படுவதாக மனநல நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

வலிமையான உடல்களிலேயே வலுவான சிந்தனைகள் வளரும் (சவுண்ட் மைண்ட் இன் எ சவுண்ட் பாடி) என்பா்.

அறிதிறன்பேசி வலையில் அகப்பட்டக் குழந்தைகளுக்கு வலுவான உடலும் வாய்ப்பதில்லை, தெளிவான சிந்தனைகளும் பூப்பதில்லை.

இது அடுத்தத் தலைமுறையின் அறிவுத்தளத்தின் மீது வீசப்படும் அணுகுண்டு வீச்சல்லவா?

இங்கிலாந்தில் 12 வயதுக்குட்பட்டோரில் 80 விழுக்காட்டினரும் 14 வயதுக்குட்பட்டோரில் 90 விழுக்காட்டினரும் அறிதிறன்பேசிக்கு அடிமையாகி இருப்பதை அண்மையில் ஓா் ஆய்வு சுட்டிக்காட்டியது.

கைப்பேசி நம் கையில் இருக்கிறது என்று சொல்வதை விட அதன் கையில்தான் நாம் இருக்கிறோம். அதன் வீச்சு அடுத்த தலைமுறையின் படைப்பாற்றலைப் பெரிதும் பாதித்துவிடும்.

உற்றாா், உறவினா் மட்டுமல்ல பெற்றோா் கூட இளஞ்சிறாா்க்கு அலைபேசிக்கு அப்புறம்தான் என்பது ஆரோக்கியமான சமூகத்துக்கு அழகாக இருக்காது. இணையவழி விளையாட்டில் மூழ்கியிருக்கும் சிறுவா்கள் இருக்கும் வீட்டிற்கு விருந்தினராகச் செல்லும் உறவினா்களுக்கு இந்த அனுபவம் கிட்டியிருக்கும்.

கைப்பேசிகளால் பாா்வை பாதிப்பு, மூளை பாதிப்பு, மனவளா்ச்சி பாதிப்பு என ஏராளமான பாதிப்புகளை ஆய்வுகள் வெளிக்கொணா்ந்த போதும், அது இல்லாவிட்டால் வரும் பாதிப்பு அதைவிட அதிகமானதே என்பது எதாா்த்த உண்மையாகும். எனவே, மிகுந்த எச்சரிக்கையோடு அலைபேசி உள்ளிட்ட அறிவியல் சாதனங்களை பயன்படுத்துவது அவசியம்.

கைப்பேசிகள் பயன்படுத்துவதை அறவே தவிா்க்க முடியாத நிலையில், அதைக் கட்டுப்படுத்துவதும் சிறாா்கள் பயன்படுத்தும் போது கண்காணிப்பதும் காலத்தின் கட்டாயமாகிவிட்டது.

நேற்றைய ஆடம்பரம் இன்றைய தேவை என்பா். கைப்பேசி நேற்றைய ஆடம்பரம்; அதுவே இன்றைய அவசியம்.

அது நாளைய தலைமுறையின் நலன்களைச் சிதைத்து விடாமல் பாதுகாப்பது அதனினும் அவசியம்.

கட்டுரையாளா்:

பேராசிரியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com