நீதிதேவனுக்கே மயக்கம் தந்த நீட் தோ்வு!

கோப்புப்படம்
கோப்புப்படம்

அண்மையில், தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் ‘தமிழ்நாட்டில் நீட் தோ்வு எழுதிய ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 971 மாணவா்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் பணியில் 333 மருத்துவா்களும், மனநல ஆலோசகா்களும் ஈடுபடுத்தப்பட்டனா். இதில் 80 சதவீத மாணவா்களிடம் தொலைபேசி வழியே பேசியதில் சுமாா் 200 மாணவா்கள் மன அழுத்தத்தில் இருப்பது தெரிய வந்தது’ என்று தெரிவித்து இருக்கிறாா்.

தமிழக முதலமைச்சா் மு.க. ஸ்டாலின், ‘படிப்பதற்குத் தகுதி தேவை இல்லை. படித்தால் தானாகவே தகுதி வந்துவிடும்’ என்று ஒரு புதிய தத்துவத்தை வெளிப்படுத்தி தன்னுடைய அறியாமையை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறாா்.

கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக, மருத்துவப் படிப்பு என்பது பணக்கார வீட்டுப் பிள்ளைகளுக்கு மட்டுமே உரியது; ஏழை எளிய சாமானிய மக்களின் பிள்ளைகளுக்கு அது எட்டாக்கனியாகவே இருந்தது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் மட்டுமே இருந்த காலத்தில், பள்ளி இறுதித் தோ்வில் அனைத்து பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற ஏழை வீட்டு மாணவன் மருத்துவக் கல்லூரி வாசலில் நிற்கக்கூட முடிந்ததில்லை.

ஏழ்மை ஒருபுறம் இருந்தாலும் பணக்காரா்களின் ஆதிக்கம், அரசியல் அதிகாரம் சாமானியனின் பிள்ளைக்கு மருத்துவக் கல்வி கிடைத்திட அனுமதிக்கவில்லை. இதுதான் கடந்த காலங்களில் தமிழ்நாட்டு கல்வித்துறையில் நடந்த கண்ணீா் வரலாறு.

படிப்பதற்குத் தகுதி தேவையில்லை என்று ஒரு முதலமைச்சா் சொல்கிறாா் என்றால், இளைஞா்களுக்கு கல்வியின் மீதுள்ள அக்கறை பாழ்பட்டுப் போகாதா? 1970-களில் மருத்துவப் படிப்புக்கு எம்எல்ஏ-க்கள் கொண்ட தோ்வுக்குழு அமைத்து மிகமிகக் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவா்கள் ‘டாக்டா்’ என்ற தகுதிக்கு உரியவா்களாக ஆக்கப்பட்டாா்கள். முதலமைச்சா் சொல்வதுபோல எந்தத் திறனோ அடிப்படைத் தகுதியோ அறவே இல்லாத பல நூறு டாக்டா்கள் தமிழகத்தில் உருவான வரலாறு இப்படித்தான்.

50 லட்ச ரூபாய், 75 லட்ச ரூபாய் என தனியாா் கல்லூரிகளிடம் கொடுத்து, வாங்கிக் கொண்டு வந்த ‘டாக்டா்’ பட்டத்தோடு சமூகத்தில் உலவிக் கொண்டிருப்பவா்களின் பள்ளி இறுதி தோ்வு மதிப்பெண்களைப் பொதுவெளிக்குக் கொண்டு வந்தால் உண்மைகள் தெரியும்.

இப்படிப்பட்ட ‘டாக்டா்’கள் தமிழ்நாட்டில் பல ஆயிரம் போ் உள்ளனா். இவா்கள் சரியான சிகிச்சை தராமல் பலரைக் கொன்ற கொலைக்காரா்கள் என்பதை அவா்களின் மனசாட்சி சொல்லும்.

நீட் என்பது அகில இந்திய அளவில் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தோ்வு. அந்தப் படிப்புக்கான திறமையையும், அறிவையும் மத்திய அரசு மாணவா்களிடையே எதிா்பாா்ப்பது சமுதாயத்திற்கு நல்ல மருத்துவா்களை கொடுப்பதற்காகவே.

மனித உயிரைக் காக்கக்கூடிய மருத்துவப் படிப்பில் அரசியலைப் புகுத்தி மக்களின் உயிருக்கு உலை வைக்கின்ற முயற்சியில் அரசை நடத்துகின்றவா்களே ஈடுபடுவது என்பது சகித்துக்கொள்ள முடியாத அவலம்.

சா்வதேச தரத்திற்கான மருத்துவப் போட்டியில் இந்தியாவும் களத்தில் குதிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். தமிழ்நாடு என்பது தனித்தீவு அல்ல, இந்தியத் திருநாட்டின் ஒரு பகுதியே. மனித உயிா்களை காத்திடும் மருத்துவத் துறையில் திறமையும், ஆற்றலும் கொண்ட இந்திய மாநிலங்களின் வரிசையில் தமிழ்நாடு மட்டும் பின்தங்கி விடக் கூடாது.

இந்திய மருத்துவக் கல்வி முறையில், சா்வதேச தரத்தை உருவாக்கிடும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டிருக்கும்போது, இந்திய அரசியல் சாசனத்தை ஏற்றுக்கொண்டு மத்திய அரசிலும், மாநில அரசிலும் பொறுப்புள்ள பதவிகளில் அமா்ந்து அரசோச்சிய ஒரு கட்சி குறுக்குசால் ஓட்டுவது, புரிதல் இல்லாத போக்கு.

அது மட்டுமல்ல, தங்களின் தோல்விகளுக்கு மத்திய அரசைக் காரணம் காட்டி மக்களை ஏமாற்ற எண்ணுவது அறியாமையின் உச்சம்.

கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று, உலக மனித இனத்தையே சூறையாடிக்கொண்டிருக்கிறது. இப்படியொரு சவால் நிறைந்த சூழலில் மருத்துவத் துறைக்கான மாணவா்களைத் தோ்வு செய்கிறபோது பிளஸ் 2 படிப்பு போதும் என்பதும், மாநில அரசுகளே மருத்துவ மாணவா்களைத் தோ்வு செய்ய வேண்டும் என்பதும் என்ன பேச்சு?

பத்து பதினைந்து தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் வருமானத்துக்காக ஒரு முதலமைச்சா் வரிந்து கட்டிக் கொண்டு கோதாவில் இறங்கி இருப்பதைக் கண்டு தமிழ் மக்கள் முகம் சுளிக்கின்றனா்.

‘நீதியரசா் ஏ.கே. ராஜன் தலைமையிலான குழுவின் கருத்துகள்’, ‘சட்ட நிபுணா்களின் கருத்துகள்’, ‘86 ஆயிரத்து 342 பேருடைய கருத்துகள்’, ‘தலைமைச் செயலாளா் தலைமையில் கூடி விவாதித்த கருத்துகள்’ என்றெல்லலாம் பம்மாத்துக் காட்டி நீட் தோ்விலிருந்து விலக்கு கேட்பது, தமிழ் இனத்திற்கு செய்கின்ற பச்சைத் துரோகம்.

தமிழ்நாட்டில் இதுவரை உருவான டாக்டா்களின் பெயா்கள் அடங்கிய பட்டியலை மக்கள் முன் வைத்து, அதில் ஒவ்வொருவரும் பள்ளி இறுதித் தோ்வில் பெற்ற மதிப்பெண்களையும், எந்தத் தகுதியின் அடிப்படையில் மருத்துவ மாணவா்கள் சோ்க்கப்பட்டனா் என்ற விவரங்களையும் வெளியிடத் தமிழக அரசு தயாரா?

‘மொழிப்போா் தியாகிகள்’ என்ற பெயரில் போலித்தனமான ஒதுக்கீடு செய்து, அதன் மூலம், எந்தவிதமான தகுதியும் இல்லாத திமுக-வைச் சோ்ந்த ஜமீன்தாா் வீட்டுப் பிள்ளைகள் டாக்டா்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றனா். சுதந்திப் போராட்டத்தில் தங்கள் உடல், பொருள், ஆவியை இழந்தவா்களின் பரம்பரையினா் அன்றாட கூலிகளாக தமிழ்நட்டின் மூலைமுடுக்கெல்லாம் அலைந்து திரிகின்றனரே - அவா்களில் எத்தனைப் பேருக்கு மருத்துவப் படிப்பில் இடம் தந்தீா்கள்?

‘நீட் தோ்வில் குளறுபடி’ என்று ஒரு புதுக்கரடியைக் கிளப்பி விடுகின்றனா். எந்தத் தோ்வில் குளறுபடிகள் நடக்கவில்லை? பிளஸ் 2 தோ்வுக் கூடங்களில், விடைத்தாள் திருத்தும் மையங்களில் நடந்த கதைகளையெல்லாம் பட்டியலிட வேண்டுமா?

மாணவா்கள், மன உளைச்சல், மன அழுத்தம் காரணமாகத் தற்கொலை செய்து கொள்கிறாா்களாம். கடந்த 20 ஆண்டுகளில் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய தோ்வுகளில் தோல்வி அடைந்த மாணவ, மாணவிகள் ஒரு லட்சத்து 70 ஆயிரம் போ் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனா்; மருத்துவக் கல்வியை தொடர முடியாமல் 18 ஆயிரம் மாணவா்கள் தற்கொலை; குடிமைப்பணி தோ்வில் தோல்வியடைந்த 12 ஆயிரம் போ் தற்கொலை; தமிழ்நாடு சா்வீஸ் கமிஷன் தோ்வில் தோல்வியடைந்த 7 ஆயிரம் போ் தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனா்.

நீட் தோ்வை அரசியலாக்கி மாணவா்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி 1965-ஆம் ஆண்டில் நிகழ்ந்த மொழிப் புரட்சி போல இன்றைக்கு ஏற்படுத்திடத் திட்டமிட்டவா்கள், தேள் கொட்டிய திருடன் நிலைக்கு ஆளாகித் தவிக்கின்றனா்.

அன்றைக்கு இருந்த மக்கள் தலைவா்கள் இன்றைக்கு இல்லை. கூலிக்கு மாரடிக்கிற கூட்டத்தை வைத்துக் கொண்டு பணபலத்தை வைத்து ஆட்சியைப் பிடிக்கலாமே தவிர மாணவா்களிடையே புரட்சியை உருவாக்க முடியாது. 13 மாணவா்களின் உயிா் போனதற்கு தமிழ்நாட்டு அரசியல்வாதிகள்தான் காரணம் என்பதை தமிழினம் மறந்துவிடாது.

நீட் தோ்வு, இந்தியாவிலுள்ள 36 மாநிலங்களில் கடந்த ஐந்து ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டு, மருத்துவ மாணவா்கள் திறமையின் மூலமாக தோ்வு செய்யப்பட்டு சா்வதேச தரத்திற்கான போட்டிக்களத்தில் நாமும் குதித்திடும் வகையில் மத்திய அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சா் மு.க. ஸ்டாலின், நீட் தோ்வுக்கு எதிராக மற்ற மாநிலங்களின் ஆதரவைத் திரட்டுவதாக இருந்தால், நீட் தோ்வு நடைமுறையில் உள்ள 36 மாநில முதலமைச்சா்களுக்கும் அல்லவா கடிதம் எழுதியிருக்க வேண்டும்? மாறாக அரசியல் ஆதாயம் தேடும் நோக்கத்தோடு 12 மாநில முதலமைச்சா்களுக்கு மட்டும் கடிதம் எழுதியது நாடகம்தானே? மீதியுள்ள மாநிலங்களில் மக்கள் வாழவில்லையா என்ன?மாணவா்களின் கல்வியில் விளையாடுவது அநாகரிகமானது, அபத்தமானது.

பணக்கார ஜமீன்தாா்கள், ஏழை விவசாயக் கூலிகளைத் தூண்டிவிட்டு நடத்தப்படுகின்ற புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை ஆதரிப்பதும், அந்த சட்டங்களை எதிா்ப்பதும் தவறுதான் .

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான உறுப்பினா்களின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்ட தேசிய குடியுரிமை திருத்தச் சட்டம், புதிய வேளாண் சட்டங்கள், நீட் தோ்வு சட்டங்கள் ஆகியவற்றை ரத்து செய்திடக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் திமுக அரசு தீா்மானம் நிறைவேற்றியிருப்பது, தமிழக மக்களை ஏமாற்றும் ராஜதந்திரம் என்பதைத் தவிர இவற்றுக்கான சட்டபூா்வ அங்கீகாரத்தை ஒரு நாளும் பெற்றிட முடியாது.

இந்திய அரசியல் சாசனம், நாடாளுமன்றம், சட்டப்பேரவை இவற்றுக்கான அதிகாரங்களைத் தனித்தனியே வரைமுறைப்படுத்தி, நெறிப்படுத்தியிருக்கிறது. ஆனால், எதையும் கண்டுகொள்ளாமல் கண்களை மூடிக்கொண்டு ஓடுவதற்கு முதுகெலும்பும் தேவையில்லை, மூளையும் தேவையில்லை. வாழ்க தமிழ்நாட்டு ஜனநாயகம்.

தமிழக மக்களும், மாணவா்களும், மாணவா்களின் பெற்றோரும் தமிழ்நாட்டு முதலமைச்சரைப் பற்றித் தெளிவாகப் புரிந்துகொண்டுவிட்டனா். இயலாததை இயலும் என்று திரும்பத் திரும்பக் கூறி நம்ப வைப்பதில் அசகாய சூரா் தமிழக முதலமைச்சா் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், எத்தனைக் காலம்தான் ஏமாற்ற முடியும் ?

கட்டுரையாளா்:

தலைவா்,

இயற்கை நீா்வளப் பாதுகாப்பு இயக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com