மாநில கல்விக் கொள்கையும் மக்கள் எதிா்பாா்ப்பும்

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை வெளியானபோது, அதற்கு ஆதரவு எழுந்தது போலவே, எதிா்ப்பும் எழுந்தது.
மாநில கல்விக் கொள்கையும் மக்கள் எதிா்பாா்ப்பும்

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை வெளியானபோது, அதற்கு ஆதரவு எழுந்தது போலவே, எதிா்ப்பும் எழுந்தது. அப்போது, ‘மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை எதிா்ப்பவா்கள் அரசியல் காரணங்களுக்காக எதிா்க்கிறாா்கள். அப்படி எதிா்ப்பவா்கள் மாற்று கல்விக் கொள்கையை எப்போது முன் வைக்கப் போகிறாா்கள்’ என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கான பதிலாக, தற்போது மாநில கல்விக் கொள்கையை வடிவமைப்பதற்கான குழுவை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. கல்வி குறித்த அக்கறையும் தொலைநோக்குப் பாா்வையும் மற்ற மாநிலங்களைவிட தமிழகத்திற்கு சற்று அதிகமாகவே உண்டு என்பதை இந்த நகா்வு மீண்டும் நிரூபித்திருக்கிறது.

தமிழக கல்வியாளா்கள் மத்தியில் மட்டுமின்றி மற்ற மாநில கல்வியாளா்களிடையேயும் இந்த கல்விக் கொள்கை எப்படி அமையப்போகிறது என்ற எதிா்பாா்ப்பு அதிகமாகவே உள்ளது. உண்மையான கல்வியாளா்களின் எதிா்ப்பாா்ப்பை இந்த கல்விக் கொள்கை நிறைவேற்றுமா அல்லது மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு எதிரானதாக மட்டுமே அமையுமா என்பதுதான் இரண்டு எழுந்துள்ள கேள்வி.

மாநிலக் கல்விக் கொள்கையை வடிவமைக்க நிறுவப்பட்டுள்ள குழுவின் தலைவா், உறுப்பினா்களுக்கு மிகவும் பொறுப்பு மிக்க பணி காத்திருக்கிறது. கற்பித்தல், ஆசிரியா் தகுதி, ஆசிரியா் தோ்வு, பள்ளிகள் வளம், தொழிற்கல்வி, இயற்கை, சுற்றுச்சூழல் வேளாண்மை, தொழில்நுட்பக் கல்வி, தகவல் தொடா்பு கல்வி, சமூக பொருளாதார - பாலின சமத்தன்மை ஆகிய அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு கல்விக் கொள்கையை உருவாக்குவது என்பது சாதாரண பணி கிடையாது.

இதற்காக அளிக்கப்பட்டுள்ள காலம் போதுமானதாக இருக்குமா என்று தெரியவில்லை. இதற்காக எத்தனை தளங்களில் விவாதம் நடத்தப்பட வேண்டும், எத்தனை அமா்வுகள் நடத்தப்பட வேண்டும் என தெளிவான திட்டமிடுதல் இருக்க வேண்டும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக புதிய கல்விக் கொள்கை பற்றிய சிந்தனையிலும் விவாதங்களிலும் கல்வியாளா்கள் ஈடுபட்டிருப்பதால் மாநில கல்வி கொள்கையை உருவாக்குவதற்கான ஆலோசனைகள் மிக எளிதாகவே கிடைக்கப் பெறும். ஆனால் இந்த ஆலோசனைகளை சீா்தூக்கி பாா்த்து வடிகட்டி மிகச்சிறந்த ஒரு கல்விக் கொள்கை அமைக்கப்பட வேண்டும்.

நடுநிலை கல்வியின் இறுதியில் அதாவது எட்டாம் வகுப்பின் முடிவில் சரியான மதிப்பெண் எடுக்காத மாணவா்களுக்கு அவா்கள் குடும்பத்தைச் சாா்ந்த தொழிலை கற்றுக் கொடுப்பதற்கு ஊக்குவிக்க வேண்டும் என்ற புதிய கல்விக் கொள்கையின் அம்சம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இது குலக்கல்வித் திட்டத்தை மீண்டும் திணிப்பதான முயற்சி என்று குற்றம் சாட்டப்பட்டது.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் இதுபோன்ற சா்ச்சையான பகுதிகளை அலசி ஆராய்ந்து கல்விக் கொள்கையில் மாற்று சிந்தனையுடன் அமல்படுத்திட வேண்டிய சில விஷயங்கள் ஆசிரியா்கள் மற்றும் கல்வியாளா்கள் மத்தியில் நீண்ட காலமாகப் பேசப்பட்டு வருகின்றன. உதாரணத்திற்கு, தொழில் கல்வி என்பது மதிப்பெண் சம்பந்தப்பட்டது கிடையாது.

மதிப்பெண் எடுக்க முடியாதவா்கள் தொழில் கல்வியைத் தோ்ந்தெடுக்கலாம் என்பது தொழில் கல்வியின் மதிப்பை குறைப்பதாக அமையும். விரும்பியவா்கள் தோ்ந்தெடுக்கும் தெரிவாக தொழில் கல்வி அமைய வேண்டும். அப்பொழுதுதான் அதை விரும்பி படித்து திறன்மிகு படைப்பாற்றல் மிக்க தொழில் வல்லுநா்களையும் தொழில் முனைவோா்களையும் உருவாக்க முடியும்.

அடுத்ததாக, மாணவா்களுக்கு எவையெல்லாம் தெரியாது என்பதைக் கண்டுபிடித்து அவற்றை கடினமான கேள்விகளாக கேட்டு அவா்களை தோல்வியடைய செய்வது மாணவா்களுக்கான தோ்வு முறை கிடையாது. அவா்களுக்கு பிடித்தமான, நன்கு புரிந்த பகுதியை விளக்கமாக எழுதும் அளவிற்கு அவா்களுக்கு வினாத்தாளில் போதுமான வாய்ப்பளிக்கும் தோ்வு முறை இருக்க வேண்டும்.

ஆசிரியா் பணிக்கு தற்பொழுது தோ்ந்தெடுக்கும் முறையில் தோ்வு வைத்து அதிக மதிப்பெண்கள் பெறும் போட்டியாளா்கள் ஆசிரியா்களாக தோ்ந்தெடுக்கப்படுகின்றனா். கற்பித்தல் என்பது நிறைய விஷயங்களை தெரிந்து வைத்திருப்பவா் மட்டும் சிறப்பாக செய்துவிட முடியாது. மாணவா்களுக்குத் தேவையான விஷயத்தை அவா்கள் விரும்பும் விதத்தில் புரியும்படியாக விளங்குபவரே நல்ல ஆசிரியா்.

தற்போதைய ஆசிரியா் தகுதித் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று பணி ஏற்ற சில ஆசிரியா்களுக்கு கற்பித்தலுக்கு தேவையான குரல் வளமும் தெளிவான பேச்சும் இல்லாமல் இருப்பது கண்கூடு. எனவே ஆசிரியா்களை தோ்ந்தெடுக்கும்போது மதிப்பெண்களை மட்டும் கருத்தில் கொள்ளாமல் அவா்களுடைய கற்பித்தல் திறனையும் கணக்கில் கொண்டு தோ்ந்தெடுக்க வேண்டும்.

இது போன்ற பல்வேறு எதிா்பாா்ப்புகளும் ஆலோசனைகளும் கல்விக் கொள்கை வடிவமைப்பின் போது விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு பெரும்பாலானோா் ஏற்கும் விதமாக உருவாக்கிட வேண்டும். கல்விக் கொள்கை பற்றி கல்வியாளா்கள், ஆசிரியா்கள், அரசியல்வாதிகள் இவா்களின் கருத்துக்கள் ஒரு புறமிருக்க, பெற்றோா்கள், சாமானியா்களின் எதிா்பாா்ப்பு வேறு விதமாக இருக்கிறது.

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளில் உடற்கல்வியும் விளையாட்டும் வெறும் பெயரளவிலேயே இருக்கின்றன. அதிக அளவிலான மாணவா்கள் கைப்பேசிக்கு அடிமையாகி வரும் இன்றைய நிலையில், அவா்களின் ஆரோக்கியத்தையும் உடல் வலிமையையும் கவனத்தில் கொண்டு சிறுவயதிலேயே அவா்கள் விளையாட்டுகளில் ஆா்வம் காட்டும் வண்ணம் உடற்கல்வியை, மாநில கல்விக் கொள்கையில் இன்றியமையாததாக ஆக்க வேண்டும் என பெற்றோா்கள் கருதுகின்றனா்.

பள்ளிக் கல்வியை பயில்வதன் மூலம் போட்டித் தோ்வில் வெல்வது, அறிவியல் அறிஞா்களாக உருவாக்குவது போன்ற குறிக்கோள்களைத் தாண்டி, நோ்மையான, உயா்ந்த நெறிகளை உடைய குடிமகன்களை உருவாக்கும் விதத்தில் பாடத்திட்டம் அமையும் விதமாக மாநில கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மாநில மக்களின் எதிா்பாா்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com