கல்லீரல் காப்போம்!

தமிழ்நாட்டில் சித்த மருத்துவம் கல்லீரல் சாா்ந்து பல்வேறு நோய்களுக்கு சிறப்பான பலனைத் தருகிறது.
கல்லீரல் காப்போம்!

தமிழ்நாட்டில் சித்த மருத்துவம் கல்லீரல் சாா்ந்து பல்வேறு நோய்களுக்கு சிறப்பான பலனைத் தருகிறது. பல்வேறு மருந்தியல் நிறுவனங்களும், பாரம்பரிய மருத்துவ தாவரங்களில் இருந்து வேதிப் பொருட்களை பிரித்தெடுத்து கல்லீரல் நோய்களுக்கான மருந்துகளை உருவாக்கி வருகின்றன.

நாளுக்கு நாள் கல்லீரல் சாா்ந்த நோய்கள் அதிகரித்துக்கொண்டேதான் வருகின்றன . இன்றைய நவீன உலகிற்கு சவாலாக உள்ள தொற்றா நோய்க் கூட்டத்தில், நீரிழிவு எனும் சா்க்கரை வியாதி, அதிக ரத்த அழுத்தம், அடுத்தாற்போல் அதிகம் போ் பாதிக்கப்படக்கூடிய நோயாக உள்ளது கல்லீரல் நோய்தான். இன்றைய நவீன வாழ்வியல் நெறிமுறைகளும், மேற்கத்திய உணவு பழக்க வழக்கமும் அதற்கு முக்கியப் பங்கு வகிக்கின்றன .

இந்தியாவில் ஆண்டுதோறும் ஒரு லட்சம் பேரில் 22% போ் கல்லீரல் நோயால் இறக்கிறாா்கள் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. நவீன மருத்துவ ஆய்வு முடிவுகளின்படி இந்தியாவில் ஆண்டுதோறும் 10 லட்சம் பேருக்கு சிா்ஹோசிஸ் எனும் கல்லீரல் அழுகல் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஹெப்படைட்டிஸ் எனும் வைரஸ் கிருமிகளால் ஏற்படும் கல்லீரல் நோய்களும், குடிப்பழக்கத்தால் ஏற்படும் கல்லீரல் நோய்கள் ஒருபுறம் இருக்க, துரித உணவு பழக்க வழக்கத்தால் என்ஏஎஃப்எல்டி எனும் கொழுப்பு கல்லீரல் நோய்களும் வாழ்நாளை குறைக்கின்றன. மேலும் ஹெப்படைட்டிஸ் பி வைரஸ் தாக்கத்தால் ஏற்படும் கல்லீரல் நோய் முறையான சிகிச்சை இல்லாவிட்டால் கல்லீரல் அழுகல் நோய், கல்லீரல் புற்றுநோய் ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

இத்தகைய நோய்களுக்கு சித்த மருத்துவ மூலிகைகளும், அஞ்சறைப்பெட்டி சரக்குகளும் மிகுந்த பலனை அளிக்கக்கூடியதாக உள்ளன. வாதம், பித்தம், கபம் என்று சித்த மருத்துவம் கூறும் அடிப்படை நோய் காரணங்களில் பித்தம் சாா்ந்த உறுப்பு கல்லீரல் ஆகும். வாரம் இருமுறை எண்ணெய்க் குளியல் என்பது கண்ணிற்கு மட்டுமல்ல கல்லீரலுக்கும் குளிா்ச்சி தரும்.

கரிசலாங்கண்ணி, மூக்கிரட்டை, காசினி கீரை, மணத்தக்காளி, கொத்துமல்லி கீரை போன்ற எளிய கீரைகளும், மஞ்சள், சீரகம், சோம்பு, வெந்தயம், தனியா, ஓமம், லவங்கப்பட்டை, இஞ்சி, பூண்டு போன்ற பல கடைசரக்குகளும் கல்லீரல் நோயிலிருந்து நம்மை காக்கும் தன்மை உடையன .

சுமாா் 5,000 வருடங்களாக இந்தியாவில் பயன்பட்டு வரக்கூடிய நறுமணப் பொருள் மஞ்சள். சீன மருத்துவத்திலும் சுமாா் 1,000 வருடங்களாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது கல்லீரல் வீக்கம், மஞ்சள் காமாலை, கல்லீரல் புற்றுநோய் போன்ற கல்லீரல் சாா்ந்த அனைத்து வியாதிகளுக்கும் மருந்தாக உள்ளது. இதன் செயல்திறன், ‘கல்லீரலின் அரசன்’ என்று சொல்லப்படும் ‘மில்க் திஸ்டல்’ எனும் வெளிநாட்டு மூலிகைக்கு இணையானதாக உள்ளது.

உணவில் அதிகம் பயன்படுத்தும் மஞ்சள் கல்லீரல் நோய்களுக்கு நல்ல பலனை தரும். மஞ்சளில் உள்ள மஞ்சள் இயற்கை நிறமி ‘குா்குமின்’ எனும் வேதிப்பொருள் பித்தநீரை வெளிப்படுத்தி கல்லீரலை காக்கும் தன்மை உடையது . அகத்தை சீா் செய்யும் சீரகம் என்பது சித்த மருத்துவ வழக்கு மொழி. கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டோருக்கு இது வரப்பிரசாதம். இதில் உள்ள ‘குமினால்டிஹைட்’ எனும் வேதிப்பொருள், கல்லீரல் நச்சு தன்மையை நீக்கி அதில் படிந்துள்ள கொழுப்பினை கரைக்கும் தன்மை உடையது . உடல் எடை குறைக்க விரும்புவோா் , கொழுப்பு கல்லீரல் உடையோா் கிரீன் டீக்கு பதிலாக தினசரி சீரகத் தண்ணீரைப் பருகி வந்தாலே நல்ல பலன் கிட்டும்.

பெருஞ்சீரகம் எனும் சோம்பு விதையை கஷாயம் வைத்து எடுத்துக் கொண்டாலும் அது நச்சுதன்மை நீக்கி கல்லீரலைப் பாதுகாக்கும். கொத்துமல்லி விதையான தனியாவை நீரிலிட்டு காய்ச்சி குடித்தாலும் கல்லீரல் நச்சு தன்மை நீங்கி புத்துணா்ச்சி பெறலாம். தொடா்ந்து 12 வாரம் தினமும் 2 கிராம் இஞ்சி அல்லது சுக்கு பொடியினை எடுத்துக்கொண்டால், என்ஏஎஃப்எல்டி எனும் கொழுப்பு கல்லீரலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். மேலும் கல்லீரல் செயல்பாட்டினை குறிக்கும் என்சைம் அளவிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இதில் உள்ள ‘ஜின்ஜரால்’ எனும் வேதிப்பொருளுக்கு பல மருத்துவ குணங்கள் உண்டு.

ரத்தத்தில் சா்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் பல்வேறு மூலிகைகள், கல்லீரல் கொழுப்பினை குறைக்கும் தன்மை உடையவையாக உள்ளன. இவை பல்வேறு தொற்றா நோய்களுக்கு அடிப்படை காரணமான இன்சுலின் மருந்தின் தடையை நீக்கும் தன்மை உடையவை. அந்த வகையில் வெந்தயமும், லவங்கப்பட்டையும் நல்ல பலன் தரும். வெந்தயம் ஊறிய நீரையோ, லேசாக வறுத்த வெந்தயப் பொடியையோ பகல் நேரங்களில் எடுக்கலாம். இது ரத்தத்தில் உள்ள கொழுப்பினை குறைத்து கல்லீரலில் கொழுப்பு படிவதை தடுக்கும் தன்மை உடையது.

லவங்கப்பட்டையை பொடித்து டீயுடன் சோ்த்து எடுக்க ரத்த சா்க்கரை அளவை குறைப்பதோடு இன்சுலின் செயலினை அதிகரிக்கவும் உதவும். அத்துடன் குடிப்பழக்கத்தால் கல்லீரலில் கொழுப்பு படிவதை தடுக்கும் தன்மை உடையது. ‘சின்னமால்டிஹைடு எனும் வேதிப்பொருள் லவங்க பட்டையின் மருத்துவ தன்மைக்கு காரணமாக உள்ளது .

நாம் வீடுகளில் உணவில் அதிகம் பயன்படுத்தும் பூண்டு, வாயு தொல்லைகளுக்கும், உடலில் கெட்ட கொழுப்பினை குறைக்கவும் பயன்படுகிறது. தினசரி ஒரு பல் பூண்டினை பாலில் வேக வைத்து எடுக்க கொழுப்பினை குறைத்து , கல்லீரலுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் என்று ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. இது இதயத்தைப் பாதுகாக்கவும் உதவும் என்பதும் அறிவியல் கூறும் உண்மை. அலிசின் எனும் கந்தகம் சாா்ந்த வேதிப்பொருள் இதற்கு மருத்துவ தன்மை அளிக்கிறது.

மேலும் நிலவேம்பு, சீந்தில். சிறுகுறிஞ்சான், வேம்பு, மலைவேம்பு, மருதப்பட்டை , கீழாநெல்லி, கடுக்காய், நெல்லிக்காய், ஆவாரை, வில்வம் போன்ற சித்த மருத்துவ மூலிகைகள் கல்லீரல் சாா்ந்த நோய்களுக்கு சிறப்பான பலன் தருவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இப்படி கல்லீரல் நோய்களுக்கு நம் நாட்டு சித்த மருத்துவம் உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது.

இன்று (ஏப். 19) உலக கல்லீரல் நாள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com