மொழித்திணிப்பை எதிர்த்தே தீருவோம்

மொழி என்பது இப்போது ஓர் இனத்தின் அடையாளமாகும். மொழி என்பது ஒரு பண்பாட்டின் அடித்தளமாகும்.
மொழித்திணிப்பை எதிர்த்தே தீருவோம்

நாடாளுமன்ற அலுவல் மொழிக்குழுவின் 37-ஆவது கூட்டம் தில்லியில் மத்திய உள்துறைமைச்சர் அமித் ஷா தலைமையில் கடந்த 2022 ஏப்ரல் 7 அன்று நடைபெற்றது. கூட்டத்தில் அமித் ஷா கூறியதாக உள்துறை அமைச்சகம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.

அதில் "மத்திய அமைச்சரவையின் 70 % நிகழ்ச்சி நிரல்கள் ஹிந்தி மொழியிலேயே தயாரிக்கப்படுகின்றன. நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தும் முக்கியப் பகுதியாக ஹிந்தியை அலுவல் மொழியாக மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஆங்கிலத்துக்கு மாற்றாக ஹிந்தியை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக ஹிந்தியை மக்கள் கருதக்கூடாது.
வெவ்வேறு மொழி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த மக்கள், ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது பேசும் மொழி இந்தியாவின் மொழியாக இருக்க வேண்டும். பிற உள்ளூர் மொழிகளின் வார்த்தைகளை ஏற்றுக் கொண்டு நெகிழ்வுத் தன்மையாக மாறாத வரையில் ஹிந்தியைப் பரப்ப முடியாது.


எட்டு வடகிழக்கு மாநிலங்களில் 22,000 ஹிந்தி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். வடகிழக்கு மாநிலங்களில் உள்ள 9 பழங்குடி சமூகத்தினர் தங்கள் மொழி வழக்கை தேவநாகரி எழுத்துக்கு மாற்றிக் கொண்டுள்ளனர். அலுவல் மொழியிலேயே அரசை நடத்த பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார். இதனால் ஹிந்தியின் முக்கியத்துவம் அதிகரிக்கும்' என்று அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.

வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரை ஹிந்தி மொழியைக் கட்டாயப் பாடமாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு அந்த மாநிலங்களில் எதிர்ப்பு எழுந்துள்ளது. 

அஸ்ஸôமில் உள்ள காங்கிரஸ், அஸ்ஸாம் ஜாதியா பரிஷத் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசின் அறிவிப்பை விமர்சித்துள்ளன. இது மாநில கலாசாரத்தில் வலுக்கட்டாயமாக ஆதிக்கம் செலுத்துவதை நோக்கிய நடவடிக்கை என்று குற்றம் சாட்டியுள்ளன. 

இந்த முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக அஸ்ஸôம் சாகித்திய சபை என்ற நூற்றாண்டு பழைமை வாய்ந்த இலக்கிய - கலாசார அமைப்பின் பொதுச் செயலாளர் ஜாதவ் சந்திர சர்மா அறிக்கை வெளியிட்டுள்ளார். "ஹிந்தியைக் கட்டாயமாக்கினால் உள்ளூர் மொழிகள் மற்றும் இணைப்பு மொழியான அஸ்ஸôமியின் எதிர்காலம் ஆபத்துக்கு உள்ளாகும்' என்று அதில் தெரிவித்துள்ளார்.

அனைத்து அஸ்ஸôம் மாணவர்கள் சங்கத் தலைமை ஆலோசகர் சமுஜல் குமார் பட்டாச்சார்யா மத்திய அரசின் முடிவை எதிர்த்துள்ளார். "அஸ்ஸôமி மற்றும் இதரத் தாய் மொழிகளுக்கு தீங்கு விளைவித்து ஹிந்தியைக் கட்டாயம் ஆக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்' என்று அவர் கோரியுள்ளார். சாஸி மாணவர் சங்கம், அனைத்து அஸ்ஸôம் மாணவர் சங்கம், மிர்ஸோ சிர்லாய் உள்பட பல்வேறு சங்கங்களை உள்ளடக்கிய வடகிழக்கு மாணவர்கள் அமைப்பினர் கூறுகையில், "ஹிந்தியைக் கட்டாயமாக்க வேண்டாம் என்று வடகிழக்கில் உள்ள அனைத்து மாநில அரசுகளிடம் வலியுறுத்துகிறோம்' என்று தெரிவித்துள்ளனர்.

"எந்த விதமான திணிப்பிலிருந்தும் அரசியலமைப்பின் 6-வது அட்டவணை பாதுகாப்பு அளிக்கிறது' என்று மேகாலய காங்கிரஸ் கூறுகிறது. மிúஸôரமில் உள்ள "யங் மிர்ஸோ' கூட்டமைப்பும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

அரசியலமைப்பின் அலுவல் மொழி தொடர்பான 17-ஆவது பகுதி இயற்றப்பட்ட காலத்திலிருந்தே கடும் விவாதங்களுக்கு இடமளிப்பதாக இருந்து வருகிறது. ஆங்கிலேய ஆட்சிக் காலத்திலேயே அன்றைய சென்னை மாகாணத்தில் ஹிந்தியைப் பாடமொழிகளில் ஒன்றாக்கும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

இந்தியா விடுதலை பெற்ற பிறகும்கூட அத்தகைய முயற்சிகள் வெற்றி பெறவில்லை. இந்திய அரசமைப்பு நடைமுறைக்கு வந்து 15 ஆண்டுகளுக்குப் பின்னர் ஹிந்தியை அலுவல் மொழியாகக் கொண்டு வந்தபோது தமிழ்நாட்டின் கடுமையான எதிர்ப்புக்கும், போராட்டங்களுக்கும் பிறகு கால வரையற்று தள்ளி வைக்கப்பட்டது. 1938 மற்றும் 1965 ஹிந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் மறக்க முடியாத வரலாறுகளாகும்.

எனினும் இந்திய அரசமைப்பைப் பொறுத்தவரை அலுவல் மொழியாக ஹிந்தி இன்னும் இருக்கிறது. ஆனால் ஆட்சி மொழியாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதை திணிப்பாளர்கள் வசதியாக மறந்து விடுகின்றனர். ஆட்சி மொழி என்பது போல பரப்புரை செய்கின்றனர். இதனை மத்திய அரசு திட்டமிட்டே செய்வதாக மாநிலங்கள் நினைக்கின்றன.

ஹிந்தி பேசாத மாநிலங்கள் தங்கள் மொழியை மாநிலங்களுக்குள்ளும், ஆங்கிலத்தை மத்திய அரசுடனான தொடர்புகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஹிந்தி மொழியை அலுவல் மொழியாக வளர்த்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் முக்கியமான பொறுப்பாகவும் இருந்து வருகிறது. கடந்த காலங்களிலும் கட்சி வேறுபாடுகள் இல்லாமல் இவ்வாறு அலுவல் மொழிக் கூட்டங்களை நடத்துவதும், மத்திய அரசின் கீழ் செயல்படும் அனைத்து துறைகளுக்கும், பொதுத் துறை நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கைகளை அனுப்புவதும் வழக்கமானதுதான் என்று கூறப்படுகிறது. 

என்றாலும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்திய அலுவல் மொழியாக ஏற்பது மாநிலத் தன்னாட்சிக்கும், மொழி உரிமைக்கும் பெரும் அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது. ஹிந்திக்கு பதிலாக ஆங்கிலமே இரண்டாவது மொழியாகத் தொடர்ந்து இருந்து வருகிறது.

"உலக மொழியாக மதிக்கப்படும் ஆங்கில மொழி அந்நிய மொழியென்றால் ஹிந்தியும் அந்நிய மொழிதானே!' என்பது மாநில மக்களின் எண்ணமாக இருக்கிறது. ஹிந்திக்குப் பதிலாக ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாக ஏற்றதன் வாயிலாக உலகளாவிய வேலை வாய்ப்புகளைப் பெற முடிந்தது. எனவே ஹிந்தியை அலுவல் மொழியாகவும், தொடர்பு மொழியாகவும் பின்பற்ற வேண்டிய தேவை ஏற்படவில்லை.

மத்திய உள்துறை அமைச்சரின் இந்த உரை அலுவல் மொழி என்பதைவிட தொடர்பு மொழியாகவே ஹிந்தியை ஏற்கச் செய்யக் கட்டாயப்படுத்துகிறது. பல்வேறு இந்திய மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் ஆங்கிலத்துக்குப் பதிலாக ஹிந்தியைத் தொடர்பு மொழியாகக் கொள்ளுமாறு அவர் கோருவது ஹிந்தி பேசும் வடமாநிலங்களுக்குப் பொருத்தமாக இருக்கலாம். ஹிந்தி மொழிக்கு முற்றிலும் மாறுபட்ட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மற்றைய மாநிலங்களுக்கு எப்படிப் பொருத்தமாகும்?

அதனால்தான் அன்றைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு இந்த நியாயத்தை ஏற்றுக்கொண்டு, "ஹிந்தி பேசாத மாநிலங்கள் ஏற்றுக்கொள்ளும் வரை ஆங்கிலமும் தொடர்பு மொழியாக இருக்கும்' என உறுதி மொழியளித்தார். அந்த உறுதிமொழியை அடுத்துவரும் அரசுகள் கடைப்பிடிக்க வேண்டாமா? மொழி என்பது எண்ணங்களை வெளிப்படுத்தும் கருவி மட்டுமே என்று எண்ணிய காலம் மாறிவிட்டது. 

மொழி என்பது இப்போது ஓர் இனத்தின் அடையாளமாகும். மொழி என்பது ஒரு பண்பாட்டின் அடித்தளமாகும். அதனால்தான் ஐநா அமைப்பே, "தாய்மொழி' நாளைக் கொண்டாடும்படி உலக நாடுகளை வலியுறுத்துகிறது.

எந்த மொழியையும் அடுத்தவர் மீது திணிக்க முற்பட்டால் ஏற்படும் விடுதலை உணர்வுக்கு வங்கதேச வரலாறு எடுத்துக்காட்டாக எதிரே நிற்கிறது. இந்தியா சுதந்திரம் பெற்ற போது பிரிந்த பாகிஸ்தான், மேற்கு பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் என இருபகுதியாக இருந்தது. 

மேற்கு பாகிஸ்தானில் உருது மொழியும், கிழக்கு பாகிஸ்தானில் வங்காள மொழியும் பேசுபவர்களாக மக்கள் இருந்தனர். "பாகிஸ்தானில் ஆட்சிமொழியாக உருது மட்டுமே இருக்கும்' என அதிபர் முகமது அலி ஜின்னா திட்டவட்டமாக அறிவித்த போது மக்கள் கொதித்து எழுந்தனர்.

இந்தியா வேற்றுமையுள் ஒற்றுமை கண்ட நாடாகும். இந்திய அரசியல் சட்ட சிற்பிகள் எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்தே சில முடிவுகளை எடுத்துள்ளனர். அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் 22 மொழிகள் இடம் பெற்றுள்ளன. அனைத்து மொழிகளும் சமமாகப் பாவிக்கப்பட வேண்டும். ஆனால் அவ்வாறு இதுவரை பாவிக்கப்படவில்லை.

ஹிந்திக்கும், சம்ஸ்கிருதத்திற்கும் அளிக்கப்படும் சலுகை மற்ற மொழிகளுக்கும் தரப்படுவது இல்லையே, ஏன்? அவரவர் தாய்மொழி அவரவர்களுக்கு உயர்வானதேயாகும். அதனை மதித்து நடப்பதே ஓர் அரசின் கடமையாகும். ஐரோப்பிய நாடுகளில் மக்கள்தொகை குறைவாக இருந்தாலும் மொழி அடிப்படையில் தனித்தனி நாடுகள் பிரிக்கப்பட்டு ஒற்றுமையுடன் வாழ்கின்றன.

"எனது தாய்மொழி நாளைக்கு அழியக்கூடுமானால் நான் இன்றே இறந்து விடுவேன்' என்றான் ஆவார் மொழிக் கவிஞன் ஒருவன். தமிழ்நாட்டில் தாய்மொழி மீது கொண்ட பற்றினால் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்ட தியாகிகளுக்குக் குறைவே இல்லை. அத்தகைய தாய்மொழிப் பற்றாளர்களை உலகில் வேறு எங்குமே காண முடியாது.

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா

என்பது பாரதி சொல்லிக் கொடுத்த பாடம். 

அந்தப் பாடத்தை மறக்க முடியுமா? கடந்த காலங்களில் ஹிந்தியை எதிர்த்து தமிழர்கள் தொடுத்த போரை மறக்க முடியுமா? தமிழ்நாடு எப்போதுமே ஹிந்தி மொழியை எதிர்க்கவில்லை. ஹிந்தி மொழித் திணிப்பையே எதிர்த்து நிற்கிறது. 

"ஆங்கிலத்துக்கு பதிலாக ஹிந்தியைப் பயன்படுத்துங்கள் என்பது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கே வேட்டு வைக்கும் செயல்' என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அண்மையில் கூறியுள்ளார். இதனை இந்திய அரசு உணர வேண்டும். உணர்ந்தால் நாட்டுக்கும் நல்லது; நமக்கும் நல்லது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com