

தமிழ் இனம் மொழி என்றால் நம் மக்கள் உணர்ச்சி வயப்படுவது சாதாரணமானது. கல் தோன்றி மண் தோன்றா காலத்திலேயே தமிழ் மொழி தோன்றி விட்டதென்றும் உலகுக்கே நாகரிகம் கற்றுக் கொடுத்தவன் தமிழன் என்றும் சாதாரண பாமர மக்கள் முதல் பெரும் தலைவர்கள் வரை அனைவரும் பேசுவதைக் கேட்கிறோம்.
தமிழரின் பாரம்பரியமும் நாகரிகமும் தொன்மையானவை என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க வழியில்லை. தமிழின் தொன்மையை தமிழரின் கலாசாரத்தை அப்படிப் புகழும் அளவுக்கு நம் தமிழகம் அதன் கலாசார மரபைக் காத்து வந்திருக்கிறது. அதன் தொடர்ந்த உயிர்ப்புக்குத் தமிழ் பெண்களின் பங்களிப்பு அபரிமிதமானது.
பெண்கள் இந்த மண்ணின் பெருமையைக் காக்க எத்தகைய வீரத் தாய்மார்களாக இருந்தனர் என்றும் தங்கள் குடும்பங்களைக் காக்கும் தலைவியராக தேசத்திற்காகத் தியாகம் செய்யும் தியாக தீபங்களாகப் பெண்கள் மிளிர்ந்தனர் என்பதையும் சங்க இலக்கியங்கள் எடுத்தியம்புகின்றன. குடும்பத்திற்காகத் தன்னைத் தியாகம் செய்யும் தலைவி, தேசத்திற்காகத் தன் குடும்பத்தையும் தியாகம் செய்யும் தலைவியரை சிறப்பிக்கவே மூதின்முல்லை துறை என்றொரு துறையே தமிழ் இலக்கியத்தில் ஏற்படுத்தி வைத்திருந்தனர் நம் முன்னோர்.
தொன்று தொட்டு தமிழ் மக்கள் இந்த இலக்கியங்களைப் படித்து வந்தனர். கல்வி என்பதே நம் வரலாற்றை பண்பாட்டை அதன் விழுமியங்களை அறிந்து கொள்வது என்ற நிலை ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வரை தொடர்ந்தது.
தற்போதைய கல்வியில் நாம் அதையெல்லாம் படிப்பதில்லை. மேற்கல்வியில் தமிழ் இலக்கியம் படிப்போர் அரிதாகிப் போய்விட்டனர். இதனால் நம்முடைய பெண்கள் குடும்பம் தேசம் இரண்டிற்காகவும் எத்தகைய தியாகத்தையும் செய்யும் நெஞ்சுரம் கொண்டவர்கள் என்ற உண்மை இன்றைய தலைமுறைக்குத் தெரியாமல் போய்விட்டது.
பெண்கள் குடும்பத்தின் அச்சாணி என்று தமிழ் இனம் இன்று வரை நம்புகிறது. நாட்டில் பெண்விடுதலை பேசப்படுவதற்கும் முன்பே நம் பெண்கள் தேசத்தின் விடுதலைக்காக முன்னின்றவர்கள் என்ற வரலாறை இன்றைக்குப் பள்ளிக்கூடங்களில் படிக்க வாய்ப்பில்லை. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தான் உருவாக்கிய இந்திய தேசிய ராணுவத்தில் பெண்கள் படைப்பிரிவை அமைத்தார். அன்றைக்கே அதிலே ஐந்தாயிரம் பெண்கள் பங்கு கொண்டனர். அதிலும் ஏறத்தாழ நான்காயிரம் பெண்கள் தமிழ் பெண்களாக இருந்தனர்.
சங்க காலம் தொடங்கி சுதந்திரப்போராட்டம் வரை இதுதான் தமிழ்ப் பெண்களின் நிலை. இது ஒருபுறம் இருக்க, இன்றைய தமிழ்ப் பெண்களின் நிலை பற்றி யோசிக்க வேண்டியிருக்கிறது.
பொள்ளாசிப் பெண்ணின் அலறல் இன்னும் பல பெற்றோரின் தூக்கத்தை கெடுத்துக் கொண்டிருக்கிறது. அன்றாடம் பாலியல் வன்கொடுமைகள் பற்றிய செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன.
இந்த வன்கொடுமைகள் ஏன் நிகழ்கின்றன? பெண் குழந்தைகள் ஏமாற்றுக்காரர்களின் கைகளில் எப்படி சிக்கிக்கொள்கிறார்கள்? பெண்கள் எந்த நம்பிக்கையில் இப்படி செயல்படுகிறார்கள்? இயல்பாகப் பெண்ணுக்குள் ஏற்படும் உள்ளுணர்வு இவர்களை எச்சரிக்கவில்லையா? தன்னைக் காத்துக் கொள்ளும் பக்குவம் இவர்களிடம் இல்லாமல் போனது எதனால்? இதற்கெல்லாம் யார் பொறுப்பு?
இதோடு மட்டுமல்ல சமீபத்தில், பள்ளிக்கூடம் செல்லும் பெண் குழந்தைகள் ஓடும் பேருந்தில் மது அருந்துவது போன்ற காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தின. சீருடையில் இருக்கும் பெண்குழந்தைகள் பலர் கண்ணெதிரே சற்றும் அச்சமற்று கும்மாளமாக மது அருந்துவது நமக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. சில நாட்களுக்கு முன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு கல்லூரியில் பெண்கள் மது அருந்திய காட்சிகள். அதனால் கல்லூரியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாயினர் என்றும் செய்திகள் வந்தன.
இதெல்லாம் முதல்முறை அல்ல. சில ஆண்டுகளுக்கு முன் திருச்செங்கோட்டில் பள்ளிக்கூடத்தில் படிக்கும் பெண் குழந்தைகள் இதே தவறு செய்ததாக செய்தி. அதே ஊரில் ஆண்கள் பள்ளிக்கூடத்தில் இதே புகார் ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொண்டதை செய்திகளில் படித்தோம்.
பள்ளிக்கூடம் படிக்கும் பெண்களுக்கு இதெல்லாம் எப்படி சாத்தியமாகிறது? குழந்தைகள் என்று நாம் கருதும் மாணவர்கள் கைகளுக்கு மது எங்கிருந்து கிடைக்கிறது? மது அருந்தலாம் என்ற எண்ணம் அவர்களுக்கு எப்படித் தோன்றியது? மது அருந்த யார் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தது? இப்படிப் பாதை தவறித் தடுமாறும் குழந்தைகளின் போக்குக்கு காரணம் என்ன? யார் இதற்குப் பொறுப்பு? குழந்தைகளா? பெற்றோரா? சமூகமா? அரசா?
காலம் காலமாக இங்கே என்னுடைய குடும்பம், என்னுடைய குழந்தைகள், இதற்கு நானே பொறுப்பாளியும் தலைவியும் என்பதுதானே பெண்களின் மனப்பான்மை. என்னுடைய விருப்பம், என்னுடைய வாழ்க்கை, என்னுடைய சுகம் என்று பெண்கள் சிந்திக்கக் கற்றுக் கொடுக்கும் போக்கை முற்போக்கு சிந்தனை என்று நம்பச் செய்தது எது?
முற்போக்கு என்ற பெயரால், பெண்ணியம், பெண் விடுதலை என்ற சொற்களால் இங்கே விதைக்கப்படும் நஞ்சு யாரைக் காப்பாற்றப் போகிறது? திருமணம் கடந்த உறவு என்று குடும்பத்தைச் சிதைக்கும் சிந்தனையால் யாருக்கு லாபம்?
குடும்பம் என்ற பாதுகாப்பு வளையத்தை உடைக்க ஏன் இத்தனை ஆர்வம் காட்டுகிறார்கள்? குடும்பம் இல்லாவிட்டால் கலாசாரத்தை எப்படி காக்கப் போகிறோம்? பெண்ணின் பாதுகாப்பு அதன் பின் எப்படி இருக்கும்? கலாசாரம் அற்ற இனம் வாழுமா? பாதுகாப்பற்ற பெண்மையின் நிலை என்ன? தாய்மார்களே சிந்தியுங்கள்.
பெண்கள் கல்வி கற்கவும் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தவும் இன்றைக்குக் களம் இருக்கிறது. சாதிக்க வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. அதே நேரத்தில் வயதுக்கு மீறிய விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்புகளும் கண்முன்னே இருக்கின்றன.
சமூக வலைதளங்கள் தகவல்கள் அறிவதற்கான தளம் என்பதைத் தாண்டி குற்றச் செயல்களுக்கான வலை என்பதும் உண்மை. அரசு மது விற்பனையில் ஆர்வம் காட்டுகிறது. மது ஒழிப்பினை யாரும் சிந்திக்கவும் தயாராக இல்லை.
திரைப்படங்கள், தொலைக்காட்சிகள், விளம்பரங்கள் வியாபாரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன. தன்னுடைய குழந்தைகள் நன்முறையில் வளர தோள் கொடுக்க வேண்டிய தகப்பன்மார்களில் பெரும்பான்மை மதுக்கடை வாடிக்கையாளர்களாய் இருக்கின்றனர். மது அருந்துதல் நாட்டுக்கும் வீட்டுக்கும் லாபம் என்ற சிந்தனை நம் குழந்தைகள் மனதில் ஏற்பட்டால் அதற்கு அவர்களைப் பொறுப்பாளர்கள் என்று சொல்ல முடியுமா?
ஒரு பெண் தாய் என்ற ஸ்தானத்தை அடைய எத்தகைய கஷ்டத்தையும் தாங்கி கொள்ளத் தயாராக இருக்கிறாள். தனக்குப் பிறக்கப் போகும் குழந்தை ஒரு குறைவும் இன்றி ஆரோக்கியமாகப் பிறக்க வேண்டும் என்பதற்காக என்ன பத்தியம் இருக்கச் சொன்னாலும் இருந்து விடுகிறாள்.
குழந்தை பிறந்ததும் எதற்காகக் குழந்தை அழுகிறது, என்ன நேரத்தில் அதற்கு என்ன தேவை என்பதை தன் உள்ளுணர்வால் உணர்ந்து, அதற்கு குறை ஒன்றும் நேராமல் கண்ணும் கருத்துமாய் காத்துக் கொள்கிறாள். தாய்மார்களே, இப்படி நாம் அருமையாகப் பெற்ற குழந்தையைக் காப்பது இன்றைக்கு நம்முடைய கைகளில் மட்டும் தான் இருக்கிறது.
குழந்தையைப் பெறுவதற்காகப் பத்தியம் இருந்ததைப்போல அவர்களை இந்தக் குற்றங்கள் மலிந்த காலத்தில் காப்பதற்காகவும் சில பத்தியங்களை இருந்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். எறும்பு கூட அண்டாமல் உறக்கமின்றிக் காத்ததைப்போல தவறான மனிதர்கள் நம் குழந்தைகளை நெருங்காமல் பார்த்துக் கொள்ளவும் விழிப்போடு இருக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். தொலைக்காட்சி, கைப்பேசியின் போதை இவற்றைக் கைவிட்டு குழந்தைகளுடன் நம்முடைய நேரத்தை செலவிடும் பத்தியத்தை நாம் மேற்கொண்டாக வேண்டும்.
பெண் குழந்தைகளோ ஆண் குழந்தைகளோ இருவருக்கும் ஆரோக்கியமான குடும்ப சூழ்நிலையை ஏற்படுத்தித் தர வேண்டியது நம்முடைய கடமை. நாம் எதைப் பின்பற்றுகிறோமோ அதை நம்முடைய குழந்தைகளும் பின்பற்றுவார்கள். தமிழர் என்று பெருமிதம் கொள்ளும் நாம் தமிழ் கூறும் அறம், பக்தி, பண்பு முதல் அறிவியல் வரை அனைத்தையும் படிக்கும் பழக்கத்தை வழக்கமாக்க வேண்டும். தமிழ் இலக்கியத்தை தமிழர் படிக்காவிடில் தமிழ் கலாசாரம் எப்படி வாழும்?
"தற்காத்து தற்கொண்டான் பேணி தகை சான்ற சொற்காத்து சோர்விலாள் பெண்" என்பதே தமிழ்மறை கூறும் தமிழ்ப்பெண்ணின் அடையாளம் என்பதை பெண் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுத்துத் தன்னைக் காத்துக் கொள்ள பெண் வளர்த்துக் கொள்ள வேண்டிய குணங்களைத் தாயால் மட்டுமே தர இயலும். கணினிகள் கண்ணியம் கற்றுக் கொடுக்காது. ஆண் பெண் இருபாலருக்கும் அவர்களின் தாயே கண்ணியத்தைக் கற்றுக் கொடுத்தால் பாதுகாப்புக்கு மற்றெவரும் தேவை இல்லை.
சுற்றிலும் எதிர்மறை சிந்தனைகள் நம்மைச் சாய்த்துவிடக் காத்திருந்தாலும் ஒரு தாய் தன்னுடைய அன்பான அரவணைப்பால் அதே நேரம் கண்டிப்பான நடவடிக்கைகளால் நட்போடு தன் குழந்தைகளுக்கு நேர்மறையான உலகுக்கு வழிகாட்டிவிட முடியும். சாதனைகளுக்கான மனப்பக்குவத்தைக் குழந்தைகள் மனதில் விதைக்க அன்னையரே உறுதி கொள்ளுங்கள்.
தியாகத் தாய்மார்கள் தோன்றிய இனத்தின் நீட்சி நாம். அன்னையர் பேணப் போகும் அறமே குழந்தைகளையும் அதன் மூலம் சமூகத்தையும் மேம்படுத்தும்.
கட்டுரையாளர்:
ஊடகவியலாளர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.