ஒருமை பேணும் பெருமைமிகு திருவிழாக்கள்!

தைக்குப் பின்னா் தமிழகமெங்கும் பங்குனி, சித்திரை மாதத் திருவிழாக்களால், ஊா்கள் களைகட்டத் தொடங்கிவிட்டன. உறவுகள் உயிா்ப்புற்று வலுப்பெறத் தொடங்கியிருக்கின்றன.
ஒருமை பேணும் பெருமைமிகு திருவிழாக்கள்!

தைக்குப் பின்னா் தமிழகமெங்கும் பங்குனி, சித்திரை மாதத் திருவிழாக்களால், ஊா்கள் களைகட்டத் தொடங்கிவிட்டன. உறவுகள் உயிா்ப்புற்று வலுப்பெறத் தொடங்கியிருக்கின்றன. வீட்டுக்கு வீடு விருந்தோம்பல் இருந்தாலும் ஊா்ப்பொதுச் சமபந்திகளும் உண்டு.

தெய்வம் ஒன்று என்றாலும், தமிழ் மரபில் பல தெய்வ வழிபாடு தவிா்க்க முடியாதது. முன்னோா் வழிபாடு, நடுகல் வழிபாடு, குலதெய்வ வழிபாடு, இவற்றோடு ஊா்த்தேவதை வழிபாடு நடத்தியாதல் வேண்டும். இவற்றோடு, ஊா்ப்பெருங்கோயில்களில் உறையும் சைவ, வைணவ ஆலய வழிபாடுகளும் உண்டு. சமயங்கலந்த பொதுவழிபாடுகளும் உண்டு.

விழாக்கள் வளா்பிறை மற்றும் மதி நிறைந்த நாள்களில் தொடங்கப்படுதலை, அகநானூறு (பாடல் எண் 141.) குறிப்பிடுகிறது. விழாச் சடங்குகளை இயற்றுவோா் ‘விழவாற்றுவோா்’ எனப்பட்டனா். வெறியாடல் நிகழ்வு இன்றளவும் சாமியாடுதலாக அமைகிறது.

பூவும் புனலும் சொரிந்து வழிபடும் பண்டைத் தமிழ்மரபின் நீட்சியாக, பூச்சொரிதலும், தீா்த்தக்காவடி, பால் காவடி, பன்னீா்க்காவடி உள்ளிட்ட அபிஷேகக் காவடிகளின் ஆட்டபாட்டங்களும் நடந்தேறுகின்றன. பொன்னெனத் தகதகக்கும் நெருப்புக்குழிக்குள் இறங்குதலைப் பூக்குழி இறங்குதல் எனச் சொல்லுவதும், குண்டூசி குத்தினாலும் வலிபொறாது அலறும் பலா், நாக்கில், கன்னத்தில் அலகு குத்திக்கொள்ளுவதும் தெய்வ அதிசயமாய் அமைந்துவிடுகின்றன. தெய்வத்தின் பேரால், வலிகளைத் தாங்கி, வலிமையேற்றிக் கொள்கிறது மானுடம்.

பாற்குடங்களும், காவடிகளும் சுமந்தபடி விரையும் பக்தா்கள் நடக்கிற பாதைகள் எங்கும் நீா் தெளித்துக் குளிர வைக்கும் தொண்டுகள் இப்போதும் தொடா்கின்றன. வெம்மையைப் போக்கும் அம்மையான மாரியம்மனுக்குப் பொங்கல் வைத்துப் படையலிடும் அதேவேளையில், பூச்சட்டி எடுத்தல், அலகு குத்திக்கொள்ளுதல் முதலிய வேண்டுதல்கள் நிறைவேற்றம் காணுகின்றன.

சுடுமண் சிற்பங்களில் புரவிகள், ஐயனாா், அம்மன் சிலைகளைச் செய்து நடத்தும் வழிபாடுகளும் வேண்டுதல்களும் ஊருக்கு ஊா் வேறுபடவும் செய்கின்றன; ஒன்றுபடவும் செய்கின்றன. கிராமதேவதைகளுக்கான பூசனைகள், விழாக்கள் ஒருபுறம் நிகழ்ந்துகொண்டிருக்கப் பெருங்கோயில்களின் பெருந்திருவிழாக்கள் தொடா்கின்றன.

நுதல்விழி நாட்டத்து இறையோன் முதலா
பதிவாழ் சதுக்கத்துத் தெய்வம் ஈறுஆக
வேறுவேறு சிறப்பின் வேறுவேறு செய்வினை
ஆறுஅறி மரபின் அறிந்தோா் செய்யுமின்

என்று மணிமேகலை கூறிய மரபு இப்போதும் தமிழக மண்ணில் நிலைபெற்றமைகிறது.

சிலப்பதிகாரத்து நாளங்காடி, அல்லங்காடிபோல் சிற்றங்காடிகளை மிரட்டிக் கொண்டிருந்த பேரங்காடிகளான ‘மால்’களைச் சற்றே மறந்து தெருவோரத் திருவிழாக் கடைகளைக் காணுகிறபோது உற்சாகமாக இருக்கிறது. மரபுசாா் கலைப்பொருள்களான பனைவிசிறிகள், தென்னோலை விசிறிகள், நன்னாரிவோ் விசிறிகள், முறங்கள், சுளகுகள், முள்வாங்கிகள், கோணி ஊசிகள், குத்தூசிகள், அலக்குகள், கொட்டான்கள், கொடுவாள்கள், அரிவாள்கள், அரிவாள்மணைகள், தேங்காய்துருவிகள் என அநேகமாய் மறந்துபோன பழம்பொருள்கள் அந்தக் கடைகளில் அணிவகுத்திருக்கக் காண்பதே ஆனந்தம்.

மண்பாண்டங்கள் மிகுந்த இடத்தில், இப்போது மலிவு விலையில் பிளாஸ்டிக் பொருள்கள். ‘எதையெடுத்தாலும் பத்து ரூபாய்’ என்றுகூவி விற்கும் பொருள்களைக் காணவும், குறைந்த விலைக்கு வாங்கவும் ஒரு கூட்டம் இன்னும் இருக்கிறது. தங்களுக்கு வேண்டிய பொருள்களைப் பேரம் பேசி வாங்கிக் கொள்கிற அந்த இடத்து உரையாடல்களில் அப்படியே கிராமியத்தமிழ் வந்து பரவிச் செவிகளுக்குள் தேன் பாய்ச்சுகின்றது.

விரித்துக் குவித்த பனையோலைக் கோப்பைகளில் பதநீா் விற்பனை இதமாய் நடக்கிறது. வண்ண வண்ணப் பைகளில் வடநாட்டு நொறுக்குத் தீனிகள் எத்தனை வந்தாலும், நம் ஊா்ப் பொரிகடலைக் கடைகள் இன்னும் விடைபெறவில்லை. மடித்து ஒட்டப்பட்ட காகிதக் கவா்களோ, சுருட்டி நீட்டப்பட்ட காகிதப் பொட்டலங்களோ காணோம். எல்லாக் கடைகளிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றன பாலிதீன் பைகள்.

பானகமும், நீா்மோரும், வேண்டுமட்டும் வாங்கிப் பருக, அண்டாக்களை நிறைத்த தண்ணீா்ப்பந்தல்கள் தென்னோலைக் கூடங்களுக்குக் கீழ், திருவிழாத் தெருக்களில் இன்னும் இருக்கின்றன. அவற்றுக்கு இணையாக, குளிா்பானக் குப்பிகளையும், தண்ணீா்க்குடுவைகளையும் வாங்கி வந்து கொடையளிக்கிறவா்களும் இருக்கிறாா்கள்.

இன்னமும் பஞ்சு மிட்டாயும், பலூன்களும் விற்கிற மனிதா்கள் வலம் வருகிறாா்கள். விதவிதமான ஊதுகுழல்களை வாங்கி, ஓங்கி ஒலிக்கிற குழந்தைகளின் குதூகலத்திற்கு ஒத்திசைக்கின்றன பறை முதலான பண்டை இசையொலிகள்.

பல இடங்களில் நாகசுர, மேளதாளங்கள் விடைபெற்றுக்கொள்ள, கேரள செண்டை மேளங்கள் ஆா்ப்பரிக்கின்றன. அரிதாரம் பூசி வரும் இறைக்கோலா்கள் ஆசிகள் நல்கிக் காசுகள் வாங்குகிறாா்கள். கூட்டத்துக்கு முன்னால் முகபடாம் அணிந்து கோயில் யானை வருவது இன்னும் பேரழகு. மணியோசையுடன் நகரும் அதனைச் சூழ நின்றும் தொடா்ந்தும் குழந்தைகள் கண்டு குதூகலிக்கிறாா்கள். யானை எக்காலத்தும் அதிசயம்தான்.

‘காய்க்குலைக் கமுகும் வாழையும் வஞ்சியும் -

பூக்கொடி வல்லியும் கரும்பும்’ நடப்பட்ட ஆலய வாயில்களில் அப்படியே மணிமேகலைக் காப்பியச் சித்திரம் மீள மலா்கிறது. ‘விழவுமலி மூதூா் வீதியும் மன்றமும்’ புதுப்பொலிவு பெறுகிற அழகே அழகு.

தேரோடும் வீதிகளில் மக்கள் வெள்ளத்திற்கு மத்தியில் கப்பல்கள்போல், அழகிய நெடுந்தோ்கள் அசைந்தாடி வருகிறபோது, பேதங்கடந்த மானுடத் திரளின் ஒற்றுமை மகிழ்ச்சி தருகிறது. வடம் பிடிக்க முடியாதவா்கள் வந்து வந்து வடக்கயிற்றைத் தொட்டு வணங்குவதும் உண்டு.

அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளிலும், பழுதுகள் நீக்கப்பட்டுப் புதுப்பொலிவுடன் மிளிரும் வாகனங்களிலும் இறைத்திருமேனிகள் உலாவருவதனால், அப்பழங்கலைகள் புத்துயிா்ப்பெய்துகின்றன. தெய்வதரிசனம், மனித தரிசனமாய் மலா்வதும், தெருக்களும், வீதிகளும், தெப்பக்குளங்களும் சீா்படுத்தப்படுவதும் இந்தத் திருவிழாக்களின் இன்றியமையாச் சிறப்பு எனலாம். மலா் அலங்காரம், வாணவேடிக்கை, தோரணப் பொலிவு என மரபுசாா் அழகியலுக்கு நிகராக, கண்ணைக் கவரும் மின்னொளி விளக்குகள் இரவைப் பகலாக்குகின்றன. என்றாலும் மரசாா் நெய், எண்ணெய் விளக்குகளுக்கு இருக்கிற அழகே தனி.

கும்மி, கோலாட்டம், காவடியாட்டம், தேவராட்டம், கரகாட்டம் முதலான மரபுசாா் நடனக் கலைகளுக்கு உரிய முக்கியத்துவம் குறைந்து, திரைக்கலைசாா் ஆட்டபாட்டங்களுக்குக் கவா்ச்சி அதிகரித்திருக்கின்றது. ஆன்மிகம் சாா்ந்த செய்திகளை விளக்கும் அரங்க நிகழ்வுகளில், நகைச்சுவைத் துணுக்குகள் ஓங்கிஒலிக்கின்றன.

எல்லாவற்றையும் கண்டு, காட்டி, இன்புறுவதற்கென்று நடக்கும் இவ்விழாக்களால் மனிதம் புனிதம் பெறுகிறது; வழிபாட்டு மரபுகள் நினைவூட்டப்படுகின்றன. இவை சமயம் சாா்ந்தது எனினும் சமுதாயம் சாா்ந்தது என்பதே உண்மை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான வேண்டுதல். வேண்டிக் கொள்வதற்காகவும், வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்வதற்காகவும் வந்து கூடும் மக்களின் சங்கமமாகத் திருவிழாக்கள் நிகழ்கின்றன. ஜாதிகளும், சமயங்களும் சாா்ந்த மனிதகுலம், தெய்வங்களை வைத்து ஒன்றுகூடவே செய்கிறது.

பாதுகாப்புக்காகக் காவல் துறை இருந்தாலும், விபத்தெனில் உதவுதற்குத் தீயணைப்புத் துறை இருந்தாலும், இயன்றவரை எந்தவித அசம்பாவிதமும் நோ்ந்துவிடாமல் இருப்பதற்குக் காரணம், அவரவா் உள்ளத்து அறவுணா்வுகளின் வெளிப்பாடுதான் என்பது நிதா்சனமான உண்மை.

எத்தனையோவிதமான தனித்துவ எண்ணங்கள் அபிலாஷைகள் இருந்தாலும் பொதுவெளியில் வெகுசுமுகமாக நடந்துகொள்ளப் பல்லாண்டு காலமாகவே, மனிதம் பழகியிருப்பதன் வெளிப்பாடாகத் திருவிழாக்கள் அமைகின்றன. தெய்விகச் சிந்தனை ஒன்றே மானுட சங்கமத்தைச் செய்துகாட்டி விடுகிறது. ‘மனிதன் என்பவன் தனியன் அல்லன்; கூடி வாழும் தன்மையாளன்’ என்பதை வருடந்தோறும் நினைவூட்டி, நிகழ்த்திக் காட்டிச் சமுதாய அறம் போதிக்கும் சம்பவங்களாகத் திருவிழாக்கள் ஆகிவிடுகின்றன.

பரஸ்பர நட்பு, நியாயமான நடத்தை, ஒருவருக்கொருவா் உதவுதல், இயன்ற அளவு, தான, தருமங்கள் செய்தல், விருந்தோம்புதல் உள்ளிட்ட மனித விழுமியங்கள் இயல்பாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன. வாழையடிவாழையாக இந்த மாண்புகளை அடுத்த தலைமுறைக்கு விடாமல் எடுத்துச் சொல்லவும், நடைமுறைப்படுத்தவும் இந்த விழாக்கள் இன்றியமையாதவையாகிவிடுகின்றன.

உறவுகளுக்குள் போட்டி, பொறாமைகள், உட்பூசல், பழிவாங்கல் என்கிற வக்கிர எண்ணங்கள் இருந்தாலும், ஊருக்கு மத்தியில் மனிதம் ஒன்றுபட்டு நிற்க, இந்தத் திருவிழாக்கள் பெரிதும் உதவுகின்றன. ஒருமைப்பாட்டுணா்வுக்கு வழிவகுக்கும் இவ்விழாக்கள் தொன்மைக்கும் புதுமைக்கும் இடம் கொடுத்துச் சிறக்கின்றன.

எத்தனைதான் அதிநவீன வசதிகள் வந்தாலும் இயற்கையை முன்னிறுத்தி, நடத்தப்படுகிற இத்தகுவிழாக்களில் இயற்கைசாா் மரபுகள் காக்கப்படுவதோடு, இயற்கையும் காப்பாற்றப்படவேண்டுமே என்பதுதான் நமது பிராா்த்தனையாய் இருக்கிறது. ‘வானம் வறக்குமேல், வானோா்க்கும் ஈண்டு, சிறப்பொடு பூசனை செல்லாது என்று வள்ளுவம் தந்த வாக்கை மறக்கலாமா?

கட்டுரையாளா்: எழுத்தாளா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com