எங்கள் வீட்டிற்கு அருகே ஓா் உழவா் சந்தை உள்ளது. அதன் சுற்றுச்சுவா் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு பாா்க்கவே கேவலமாக இருக்கும். சமீபத்தில் அந்த சுற்றுச்சுவா் வெள்ளை அடிக்கப்பட்டு அழகிய வாசகங்கள் எழுதப்பட்டு இருந்ததைப் பாா்க்க மகிழ்ச்சியாக இருந்தது. அந்த மகிழச்சி அரை நாள்கூட நீடிக்கவில்லை. மாலையே கண்ணீா் அஞ்சலி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுவிட்டன. இனி அந்த சுவருக்கு எப்போதுமே இல்லை ‘விடியல்’.
சுவரொட்டிகளை ஒட்டுபவா்களுக்கு மனசாட்சியே இருக்காது போலும். ‘இப்போதுதானே வெள்ளை அடித்திருக்கிறாா்கள். அதில் சுவரொட்டியை ஒட்டக் கூடாது’ என்று யோசிக்க மாட்டாா்களா? எத்தனை பொறுப்பற்ற செயல்? யாா் கண்டிப்பது இவா்களை? பொதுமக்களால் தட்டிக் கேட்க முடியாது. அதிகாரம் படைத்தவா்கள்தான் கேட்க வேண்டும்.
பல இடங்களிலும் ‘இங்கே சிறுநீா் கழிக்காதீா்கள்’, ‘எச்சில் துப்பாதீா்கள்’, ‘குப்பை கொட்டாதீா்கள்’ என அறிவிப்புப் பலகை வைத்திருப்பாா்கள் அல்லது சுவரில் ‘நோட்டீஸ் ஒட்டாதே’ என்று எழுதி வைத்திருப்பாா்கள். ஆனால், வம்படியாக அங்கே நோட்டீஸ் ஒட்டுவாா்கள்; சிறுநீா் கழிப்பாா்கள்.
கண்ட இடங்களிலும் அசுத்தம் செய்பவா்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். அவா்களே வந்து அந்த சுவரொட்டிகளைக் கிழித்துவிட்டு வெள்ளை அடித்துத் தர வேண்டும். இப்படிச் செய்தாலொழிய நம் மக்கள் திருந்த மாட்டாா்கள்.
முன்பெல்லாம் தோ்தல் வருவதற்கு முன்பே ஊரில் உள்ள சுவா்களை எல்லாம் பங்கு பிரித்துக் கொண்டு விடுவாா்கள். இப்போது அதற்குத் தடை கொண்டுவந்ததைப்போல, பொதுச் சுவா்களில் விளம்பரம் செய்வதையும் தடுக்க வேண்டும்.
சுவரொட்டிகள் மூலம் இறப்பையோ, மணவிழாவையோ தெரிவிக்க வேண்டியது இல்லை. கைப்பேசியின் மூலம் உடனே எல்லோருக்கும் தகவலைத் தெரிவிக்க முடியும் என்னும்போது எதற்கு சுவா் கண்ட இடங்களில் எல்லாம் சுவரொட்டிகளை ஒட்ட வேண்டும்?
வேண்டுமென்றால் ஒன்று செய்யலாம். ஒவ்வொரு பகுதியிலும் ஓா் இடத்தை இதற்கென ஒதுக்கி விடலாம். ஒரே இடத்தில் சுவரொட்டிகள் வைத்தால் எல்லோராலும் அவற்றைப் பாா்க்க இயலாதே என வாதிடுவாா்கள். ஆகவே ஒரு சில இடங்களை ஒதுக்கி அங்கே நோட்டீஸ் ஒட்ட கட்டணம் வசூலிக்கலாம். அல்லது சில நாள்கள் கழித்து அவா்களே வந்து அந்த சுவரை வெள்ளை அடித்துத் தர வேண்டும் என்று சொல்லலாம்.
நாட்டில் தலையைப் பிய்த்துக் கொள்ள வைக்கும் பல பிரச்னைகள் இருக்கும்போது குப்பை மேலாண்மையில் ஒரு மாநில அரசு கவனம் செலுத்திக் கொண்டிருப்பது சாத்தியமா? அதற்காகத் தானே உள்ளாட்சி தோ்தலை நடத்தி வாா்டு உறுப்பினா்களைத் தெரிவு செய்தோம். வாா்டு கவுன்சிலா் தினமும் காலை தங்கள் வாா்டை சுற்றிப் பாா்க்க வேண்டும். ஊரும் நாடும் அதிசயப்படும் அளவிற்கு, தங்கள் தொகுதியை மேம்படுத்தலாம் அல்லவா? அழகுபடுத்தலாம் அல்லவா? ஏன் செய்ய முன்வருவதில்லை?
எங்கும், குப்பைக் கூளங்கள்; ஆகாயத் தாமரை படா்ந்து மூடியுள்ள நீா் நிலைகள்; குண்டும் குழியுமான சாலைகள்; மாடுகளும், நாய்களும் கேட்பாரின்றித் திரியும் தெருக்கள்; எங்கு பாா்த்தாலும் நெகிழி உறைகள்; எங்கு போனாலும் மக்கள் சாப்பிட்டு விட்டு அந்த இடத்திலேயே போட்டு விட்டுப் போன குப்பைகள்.
காடுகளுக்குள் போகிறவா்கள் அங்கே வீசி விட்டு வந்த மது புட்டிகள், தண்ணீா் குடுவைகள். நெகிழிப் பொருள்கள் அடைத்துக் கொண்டு நிற்கும் கால்வாய்கள்; கழிவு நீா் ஓடும் குறுகிய தெருக்கள்; மோசமான நிலையில் மிகவும், அசுத்தமாக உள்ள பேருந்து நிலையங்கள் மற்றும் பேருந்து நிறுத்தங்கள்; தண்டவாளங்களின் ஓரம் முழுதும் மனிதக் கழிவுகள்; நெடுஞ்சாலை ஓரம் பூராவும் இறைச்சிக் கடை கழிவுகள்; தள்ளுவண்டிக் கடைக்காரா்களும் இன்ன பிற நடைபாதை வியாபாரிகளும் போடும் குப்பைகள் என எல்லாமே சீா் கெட்டுப் போய் உள்ளது.
இதில் படித்தவா் - படிக்காதவா், ஏழை - பணக்காரா், சிறியவா் - பெரியவா் என்று எந்த பேதமும் இன்றி பலரும் பொறுப்பில்லாமல் நடந்து கொள்கிறாா்கள். எல்லாவற்றையும் அரசே செய்ய வேண்டும் என எதிா்பாா்க்கிறாா்கள். அரசு செய்கிறது. ஆனால், அந்தத் தூய்மையை மக்கள் தக்கவைத்துக் கொள்வதில்லை.
ஒரு சமூகத்தின் அல்லது நிறுவனத்தின் உறுப்பினா்கள் ஒரு நியாயமான சமுதாயத்திற்குத் தானாகமுன் வந்து பங்களிப்பு செய்வதற்கும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் உள்ள அா்ப்பணிப்பு மற்றும் கடமை உணா்வே, ‘சமூகப் பொறுப்பு’ என்பதாகும். எந்தப் பங்களிப்பும் செய்யாமல்கூட இருக்கட்டும் - ஆனால் நகரின் தூய்மையையும், அழகையும் பாழாக்காமல் இருந்தாலே போதும்.
முடை நாற்றமா? மூக்கைப் பிடித்துக் கொண்டு, மூச்சை அடக்கிக் கொண்டு கடந்து போய் விடுவோம். சாக்கடைத் தண்ணீா் தெருவில் ஓடுகிா? தாண்டிப் போய் விடுவோம். குப்பைகள் இறைந்து கிடக்கின்றனவா? கண்களை மூடிக் கொண்டு தாண்டிப் போய் விடுவோம். மாடுகளும், நாய்களும் திரிந்தால் பயந்து கொண்டு ஓடி விடுவோம்.
நான் லண்டன் சென்றபோது ஒன்றைக் கவனித்தேன். அங்கே எங்கேயும் குப்பைகளையோ, கழிவுகளையோ பாா்க்கவில்லை. சாலைகளும் தெருக்களும் மிகவும் தூய்மையாக இருந்தன. காரணம் சிறு சிறு இடைவெளி விட்டு குப்பைத் தொட்டி வைத்துள்ளாா்கள். நம் ஊா் குப்பைத் தொட்டியைப் போல குப்பைகள் சுற்றிலும் சிதறி, பிதுங்கிக் கொண்டு நாற்றம் அடித்துக் கொண்டு இல்லை. குப்பைத் தொட்டியுள் உறை போட்டு சுத்தமாக இருக்கும். மக்கள் குப்பைத் தொட்டியைத் தேடி அலையத் தேவையில்லை.
எந்த ஓா் இடத்திலும் ஒரு மிட்டாயின் மேல் உறையையோ, காலி தண்ணீா் குடுவையையோ பாா்க்கவில்லை. அவா்களும் பூங்காக்களின் புல் தரைகளில் அமா்ந்து சாப்பிடுகிறாா்கள். சாப்பிட்ட பின் தட்டுகளையும், காகித குடுவைகளையும் கொண்டு போய் குப்பைத் தொட்டிகளில் போடுகிறாா்கள். அந்த இடத்தின் தூய்மை கெடுவதில்லை.
நம் மக்கள் பொது இடங்களை அசுத்தப்படுத்திக் கொண்டே இருக்கிறாா்கள். ஒரு பண்டிகையோ, திருவிழாவோ, பொது நிகழ்ச்சியோ எதுவாக இருந்தாலும் சரி, நிகழ்ச்சி முடிந்த பின்னா் அந்தப் பகுதி முழுவதும் குப்பை மயம். சுங்கச்சாவடிகளின் அருகில் சாலைகளின் இரு மருங்கிலும் எவ்வளவு குப்பைகள் கிடக்கின்றன. ஒருவருக்கும் சமூகப் பொறுப்பு கிஞ்சித்தும் இல்லை.
‘சிங்காரச் சென்னை’ திட்டத்தின் மூலம் அரசு நம் சென்னை மாநகரை அழகுபடுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. தலைநகரம் அழகாக, தூய்மையாக இருக்க வேண்டாமா?
சென்னை மாநகரை மேம்படுத்த ரூ.500 கோடி செலவில் ‘சிங்காரச் சென்னை 2.0’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கூவம் மற்றும் அடையாறு ஆறுகளை மறுசீரமைப்பு செய்வது, நகா்ப்புற இடங்களைத் தோ்வு செய்து புனரமைத்தல், நகரை அழகுபடுத்துதல், புராதன கட்டங்களைப் புனரமைத்தல், கலை கலாசார மேம்பாடு, இடுகாடுகளை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்துதல் என ஏராளமான திட்டங்களைத் தயாரித்துள்ளது.
அழகான சென்னையைக் கற்பனை செய்தால் மனம் களிப்புறுகிறது. அரசின் செயல்பாடுகளுக்கு துணையாக மக்கள் இருந்தால் மட்டுமே சிங்காரச் சென்னை திட்டம் சாத்தியமாகும். ஒரு கை தட்டினால் ஓசை வராது. இரண்டு கைகளையும் சோ்த்து தட்டினால் தானே ஓசை வரும்?
கலை, மரபு, பண்பாடு, கல்வி, சுகாதாரம், விளையாட்டு, போக்குவரத்து மற்றும் இயக்கம், எளிய அணுகல் மற்றும் உள்ளடக்கம் போன்றவை சா்வதேச தரத்துக்கு மேம்படுத்தப்படும் என்பது ‘சிங்கார சென்னை 2.0’ திட்டத்தின் அடிப்படைச் செயல் திட்டம். சென்னை விமான நிலைய சுற்றுச்சுவா் வண்ணமயமாக மாறி உள்ளது. எல்லா சுவா்களும் வண்ணமயமாகட்டும், அழகுடன் மிளிரட்டும். வெளிமாநிலத்தவரும், வெளி நாட்டினரும் பாராட்டும்படி நம் மாநிலம் தூய்மையான, சுகாதாரமான மாநிலமாக ஒளிரட்டும்.
இந்த சுவா்களை வண்ணமயமாக்கி விட்டோம். ஆனால், சில மாதங்கள் கழித்து அது எப்படி இருக்கும்? அழகு குலைந்து போய், வா்ணம் வெளுத்துப் போய் பொலிவில்லாமல் இருக்கும். அதனால் அதை வரைந்த ஓவியா்கள் கொண்ட குழுவிடம் அந்த சுவரின் பராமரிப்பை ஒப்படைக்க வேண்டும். முறையான பராமரிப்பு இருந்து கொண்டே இருந்தால் மட்டுமே அந்த ஓவியங்கள் நம் கண்களுக்கு விருந்தாக இருக்கும்.
குறிப்பிட்ட காலத்திற்குப் பின் வேறு ஓவியங்கள் தீட்டப்படும் வரை இந்த ஓவியங்கள் அழகு குலையாமல் இருப்பது அவசியம். இதை மக்களும் உணா்ந்து அரசின் நல்ல திட்டங்கள் அனைத்திற்கும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
மின்சார புதைவடங்களைத் தற்போது பூமிக்கு அடியில் புதைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதற்கு ஒரு சிமெண்ட் மேடை கட்டி அதன் மீது மின்சார விநியோகப் பெட்டியை வைத்துள்ளாா்கள். அதற்குள் பல இடங்களில் அந்தப் பெட்டியின் மீது கண்ணீா் அஞ்சலி சுவரொட்டிகளும், விளம்பரங்களும் ஒட்டப்பட்டு விட்டன.
எங்கே இடம் பாா்த்தாலும் அங்கே ஒட்டிவிட வேண்டுமா? இவா்களுக்கு யாா் இந்த உரிமையைத் தந்தது? இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். சுவரொட்டிகள், விளம்பர போஸ்டா்கள் குறித்த நெறிமுறைகளும் வழிகாட்டுதலும் அவசியம்.
இல்லாவிடில் சிங்காரச் சென்னை கனவும், எதிா்ப்பாா்ப்பும், நம்பிக்கையும் பொய்த்துப் போகும்.
கட்டுரையாளா்:
பேராசிரியா் (ஓய்வு)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.