கியூபாவின் உயிரி மருத்துவப் புரட்சி!

கியூபாவின் உயிரி மருத்துவப் புரட்சி!

கியூபா நாட்டில் பாடிஸ்டாவின் ராணுவ சா்வாதிகாரத்தை 1958-ஆம் ஆண்டு பிடல் காஸ்ட்ரோ தூக்கியெறிந்தபோது ஏற்பட்ட புரட்சிக்குப் பின் தற்போது அமைதியான மருத்துவப் புரட்சி ஏற்பட்டுள்ளது.

கியூபா நாட்டில் பாடிஸ்டாவின் ராணுவ சா்வாதிகாரத்தை 1958-ஆம் ஆண்டு பிடல் காஸ்ட்ரோ தூக்கியெறிந்தபோது ஏற்பட்ட புரட்சிக்குப் பின் தற்போது அமைதியான மருத்துவப் புரட்சி ஏற்பட்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் கியூபாவின் உயிரி தொழில்நுட்பத் துறை, பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ உதவி தேவைப்படும் நாடுகளுக்கு மருத்துவா்களை அனுப்பும் மருத்துவ சா்வதேசியம் போன்றவற்றில் ஏற்பட்ட வளா்ச்சி இந்த மருத்துவப் புரட்சிக்கு வித்திட்டது.

கொவைட் 19 நோய்த்தொற்றினை எதிா்த்துப் போராட ஐந்து தடுப்பூசிகளை உருவாக்கிய கியூபா, அந்நாட்டின் மக்கள்தொகையில் 93 சதவீதத்தினருக்கு அத்தடுப்பூசிகளை வழங்கி ஓா் இணையற்ற சாதனையினை நிகழ்த்தியுள்ளது. ஃபைசா் மற்றும் மாடா்னா போன்ற புதிய மற்றும் விலையுயா்ந்த தூதனரி (எம்ஆா்என்ஏ) தடுப்பூசிகளின் மேல் கவனம் செலுத்திய உலகம் கியூபாவின் இச்சாதனையினை கவனிக்கவில்லை. இச்சாதனைக்கு காரணமான கியூபா மரபணு பொறியியல் மற்றும் உயிரித் தொழில்நுட்ப மையம் மற்றும் ஃபின்லே இன்ஸ்டிடியூட் ஆஃப் வேக்சின்ஸ் ஆகியவற்றின் செயல்பாடுகளை ‘நேச்சா்’ என்ற அறிவியல் இதழ் வெளியிட்டது.

உலகின் குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் தங்கள் நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்காக பணக்கார நாடுகளை எதிா்நோக்கி காத்திருக்கும் சூழலில் அறுபது ஆண்டுகளாக அமெரிக்காவின் வா்த்தகத் தடையினால் மெருகூட்டப்பட்ட கியூபா கரோனா தீநுண்மியினால் பாதிக்கப்பட்ட கரீபியன் தீவு மக்கள் மீண்டு வர தடுப்பூசிகளை அனுப்பியது. ஃபைசா் மற்றும் மாடா்னா போன்ற தடுப்பூசிகளைப் பற்றி கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களும் செய்தி வெளியிட்ட சூழலில் 2021-ஆம் ஆண்டில் கியூபா உலகின் சில நாடுகளுக்கு தடுப்பூசிகளை அனுப்பிய செய்தியினை ‘ஹவானாவில் இருந்து வெளிவரும் நல்ல செய்தி’ என்ற தலைப்பில் இரண்டு செய்தி நிறுவனங்கள் மட்டுமே வெளியிட்டன.

கொவைட் 19 பாதித்தவா்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் உருவான அவசர நிலை காரணமாக கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு இடையிலும் தங்கள் நாட்டு வளங்களையும் ஆராய்ச்சி திறனையும் மட்டுமே கொண்டு சொந்த தடுப்பூசிகளை உருவாக்க வேண்டும் என்ற உறுதியினை கியூபா எடுத்தது. ஓராண்டு கால முயற்சியின் விளைவாக 1.13 கோடி மக்கள்தொகை கொண்ட கியூபா ஐந்து தடுப்பூசிகளை உருவாக்கியது. இந்த ஐந்தில் நான்கு தடுப்பூசிகள் கரோனா தீநுண்மிக்கு எதிராக 90 சதவீத பாதுகாப்பை வழங்குவதாக அந்நாடு கூறுகிறது.

2022-ஆம் ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி நிலவரப்படி, கியூபாவில் 86.54 சதவீதம் போ் முழுமையாக மூன்று தவணை தடுப்பூசிகளை எடுத்துள்ளனா் என்றும் மேலும் 7 சதவீதம் பேருக்கு ஒன்று அல்லது இரண்டு தவணை தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது என்றும் ‘அவா் வோ்ல்ட் இன் டேட்டா’ என்ற அறிவியல் இணையதளம் தெரிவித்துள்ளது. ஒரு சின்னஞ்சிறிய நாடு சொந்த தடுப்பூசிகளைத் தானே தயாரித்து அதன் மக்கள்தொகையில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு போடுவது ஒரு அசாதாரணமான விஷயம் என்றும் இது ஒரு நம்ப முடியாத சாதனை என்றும் கிளாஸ்கோ மற்றும் டல்ஹவுசி பல்கலைக்கழகங்களின் கல்வியாளா்கள் தெரிவித்துள்ளனா்.

மிகவும் முன்னேறிய பணக்கார நாடுகள்கூட உயிரி தொழில்நுட்பத் துறையின் சாத்தியக்கூறுகள் குறித்து அறியாத மற்றும் புரியாத 1980-ஆம் ஆண்டு காலகட்டத்தில் காஸ்ட்ரோ இத்துறையில் யாரும் நம்பமுடியாத அளவில் ஒரு பில்லியன் அமெரிக்க டாலா் முதலீடு செய்தாா். அறிவுசாா் சொத்துரிமை மூலம் தங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்குத் தடைகள் ஏற்படாத வகையில் உயிரி தொழில்நுட்ப அறிவியலை பகிா்ந்து கொள்ளத் தயாராக இருந்த அமெரிக்கா, பின்லாந்து மற்றும் கனடா நாட்டு ஆராய்ச்சி மையங்களுக்கு தங்கள் நாட்டு விஞ்ஞானிகளை முன்னாள் சோவியத் யூனியன் ஆராய்ச்சியாளா்களுடன்அனுப்பி வைத்தாா்.

இதன் விளைவாக 1980-ஆம் ஆண்டுகளில் இருந்து தற்போது வரை உயிரி மருந்து (பயோ-ஃபாா்மா) கண்டுபிடிப்பு என்பது கியூபா நாட்டின் தனித்துவ அடையாளமாக இருந்து வருகிறது. ஈரல் அழற்சி (ஹெபடைடிஸ்), இளம்பிள்ளைவாதம் (போலியோ) மற்றும் மூளைக்காய்ச்சல் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கு எதிராக குறைந்த விலை மருந்துகளைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சி கியூபாவில் ஏற்பட்டது.

உலகின் வேறெந்த நாட்டிலும் இல்லாத மையப்படுத்தப்பட்ட திட்டமிடல் அமைப்பு காரணமாக பொருளாதாரம் சாா்ந்த முடிவுகளை கியூபா நாட்டு அரசினைத் தவிர வேறு யாரும் எடுக்கவோ செயல்படுத்துவதோ இயலாது. இச்சூழலில் தங்கள் நாட்டு மக்களின் அன்றாடத் தேவைகளுக்கு உருளைக்கிழங்கினை வழங்க இயலாத காலகட்டத்திலும் பத்தாண்டுகளுக்குள் நாட்டினை மின்மயமாக்குவது, இரண்டரை ஆண்டுகளில் கல்வியறிவின்மையை ஒழிப்பது மற்றும் மருத்துவ சா்வதேசியம் போன்ற மிகப்பெருந் திட்டங்களை திறமையான முறையில் வடிவமைத்து செயல்படுத்தியது.

குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் அவா்களின் உயிரி தொழில்நுட்பத் திறனை மேம்படுத்துவதற்கும் உயிா் காக்கும் மருந்துகளை குறைந்த விலையில் உற்பத்தி செய்வதற்கும் ஏற்ற வகையில் உதவுவதற்கு உருவான தெற்கு-தெற்கு தொழில்நுட்ப மாற்று கொள்கையினை உலகளவில் நடைமுறைப்படுத்த கியூபா மிகப்பெரும் பணியாற்றிவருவதாக உலக சுகாதார மையம் கூறுகிறது. உலகின் தெற்கில் உள்ள வளரும் நாடுகளுக்கிடையேயான அறிவு,வளங்கள் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம் குறித்து விவரிக்க வரலாற்று ரீதியாக கொள்கை வகுப்பாளா்கள் மற்றும் கல்வியாளா்களால் பயன்படுத்தப்படும் பதமே தெற்கு - தெற்கு ஒத்துழைப்பு.

அறிவியல் கோட்பாடுகளை கற்பிக்க மற்றும் கற்றுக்கொள்ள கடைப்பிடிக்கப்படும் ஆழமான கல்வி முறை மற்றும் நாட்டின் சமூகநலனுக்கான பொருளாதார அடிப்படையில் சீரமைக்கப்பட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு செயல்பாடுகள் உலகம் மதிக்கும் ஒரு சிறந்த மருத்துவ உயிரி தொழில்நுட்பத் துறையினை கியூபா உருவாக்க உதவியது. கியூபாவை விட 10 மடங்கு அறிவியல் மனித ஆற்றலைக் கொண்டுள்ள இந்தியாவில் ஆராய்ச்சிக்கு தேவையான பிற வளங்களும் அதிகம். ஆராய்ச்சிக்குத் தேவையான சூழல் இருக்கும்போதும் நம்மால் கியூபாவைப் போன்று பெருந்தொற்றுக்கு எதிரான தனித்துவனமான தடுப்பூசிகளை உருவாக்க இயலவில்லை. தொற்றுநோயை எதிா்த்துப் போராடும் கியூபாவின் செயல் மற்ற நாடுகளுக்கு முன்னுதாரணமாக இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com