
மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு பொது நுழைவுத் தேர்வு (கியூட்) நடத்தப்படுவதை கண்டித்து, ஏப்ரல் 11-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், "மாநிலத்தின் கல்வி உரிமை மீது மத்திய அரசின் தாக்குதல் தொடர்கிறது' என்று கூறினார்.
அப்போது சட்டப்பேரவையில் நானும் இருந்தேன். இது மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் ஆபத்தான அரசியல் விளையாட்டு என்பதால் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் நான்கு பேரும் வெளிநடப்பு செய்தோம்.
இதில் வேடிக்கை என்னவென்றால், நீட் தேர்வைப் போலவே, கியூட் தேர்வும், மத்தியில் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில்தான் கொண்டு வரப்பட்டது. தங்களால் கொண்டு வரப்பட்ட, ஒரு நுழைவுத் தேர்வை எதிர்த்துதான் திமுக சட்டப்பேரவையில் தற்போது தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது.
இந்தியாவில் சுமார் 50 மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளன. தமிழகத்தில் திருவாரூரிலும், புதுச்சேரியிலும் மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளன. இந்த மத்திய பல்கலைக்கழகங்களில் சேர ஏற்கெனவே பல்வேறு நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன. அவற்றில் 12 மத்திய பல்கலைக்கழகங்களுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது.
இந்தச் சூழ்நிலையில்தான், கடந்த 2010-ஆம் ஆண்டு திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி அரசு, கியூட் நுழைவுத் தேர்வைக் கொண்டு வந்தது. 22 மத்திய பல்கலைக்கழகங்களில், 2010 முதல் 2021 வரை கியூட் நுழைவுத்தேர்வு மூலமாகவே மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தில் உள்ள திருவாரூர் மத்திய பல்கலைக்கழகமும் ஒன்று.
மருத்துவம், பொறியியல் போன்ற தொழில் படிப்புகள் தவிர, கலை, இலக்கியம், பொருளாதாரம், தத்துவம், வணிகவியல் போன்ற படிப்புகளுக்கு உலகிலேயே மிகச்சிறந்த கல்வி நிறுவனமாக மத்திய பல்கலைக்கழகங்கள் திகழ்கின்றன. மத்திய அரசின் மானியம் வழங்கப்படுவதால், இங்கு கட்டணமும் மிகக் குறைவு. பல நூறு ஏக்கர் வளாகம், அனைத்து அடிப்படை வசதிகள், திறமையும் அனுபவமும் வாய்ந்த பேராசியர்கள், ஆராய்ச்சிக்கான வாய்ப்புகள், வசதிகள், நவீன தொழில்நுட்பக் கட்டமைப்புகள் இவை இருப்பதால், மத்திய பல்கலைக்கழகங்களில் சேர மாணவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.
உலக அளவில் புகழ் பெற்ற பொருளாதார நிபுணர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், ஐபிஎஸ் அதிகாரிகள், மத்திய - மாநில அரசு உயர் அதிகாரிகளில் பலர் மத்திய பல்கலைக்கழகங்களில் படித்தவர்கள்.
இப்படி உலகத்தரம் வாய்ந்த மத்திய பல்கலைக்கழகம் மேலும் சிறந்து விளங்க வேண்டும், அங்கு படிக்கும் நம் மாணவர்கள் இந்தியாவில் மட்டுமல்ல, உலக நாடுகளிலும் சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான், மத்திய பல்கலைக்கழகங்களை மேம்படுத்தும் நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
அதன் ஒரு பகுதியாகவே அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் கியூட் நுழைவுத் தேர்வு மூலமாகவே மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி இறுதிப் படிப்பை முடிக்கும் மாணவர்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்குத் தனித்தனியாக நுழைவுத் தேர்வு எழுத வேண்டியிருந்தது. இது மாணவர்களுக்கு பெரும் சுமையையும், மனஉளைச்சலை ஏற்படுத்தி வந்தது.
மாணவர்களின் சுமையைக் குறைக்கவே, பொது நுழைவுத் தேர்வு முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இனி ஒரே நுழைவுத் தேர்வு மூலம், எந்த மத்திய பல்கலைக்கழகத்தில் வேண்டுமானாலும் சேரலாம். மாணவர்கள் நலனில் அக்கறை கொண்ட யாராக இருந்தாலும், பொது நுழைவுத் தேர்வை வரவேற்கவே செய்வார்கள்.
"நுழைவுத் தேர்வு எதிர்ப்பு' என்பதை ஓர் அரசியல் ஆயுதமாக மாற்றியுள்ள திமுக, பொது நுழைவுத் தேர்வை எதிர்க்கிறது. திமுக-வின் இந்த ஆபத்தான அரசியல் விளையாட்டால், தமிழக மாணவர்களின் எதிர்காலம் பலியாகப் போகிறதே என்ற கவலைதான் எங்களைப் போன்றவர்களை வாட்டி வதைக்கிறது.
மருத்துவப் படிப்பில் சேருவதற்கான "நீட்' தேர்வாக இருந்தாலும், மத்திய பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான "கியூட்' தேர்வாக இருந்தாலும், அதில் எப்போதும் போல இட ஒதுக்கீடு முறை இருக்கிறது. அதனால், சமூக நீதிக்கு எந்த பாதிப்பும் இல்லை.
நீட் தேர்வு வருவதற்கு முன்பு 2006 முதல் 2016 வரையிலான 11 ஆண்டுகளில், தமிழகத்தில் மொத்தமுள்ள 29,925 அரசு கல்லூரி எம்பிபிஎஸ் இடங்களில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கிடைத்தது வெறும் 213 இடங்கள் மட்டுமே. இது சராசரியாக ஆண்டிற்கு 19 இடங்கள். அதாவது 0.7 சதவீதம்.
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு, மத்திய பாஜக அரசு அளித்த 11 புதிய மருத்துவ கல்லூரிகள் ஆகியவற்றின் மூலம்தான் எம்பிபிஎஸ் படிப்பில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 500-ஐ தாண்டி இருக்கிறது.
அரசுப் பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாதது, ஆசிரியர்களை ஊக்கப்படுத்தும் திட்டங்கள் இல்லாதது, பாடத்திட்டங்களை சரியான நேரத்தில் மாற்றி அமைக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அரசு பள்ளிகள் மீது பெற்றோருக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது.
இதனை சரி செய்து, அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டிய திமுக அரசு, நுழைவுத் தேர்வுகளை எதிர்ப்பதன் மூலம் தமிழகத்தின் கல்வித் தரம் உயர்ந்துவிடாமல் தடுக்கிறது.
ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்கும் இளைஞர்களுக்கு அவர்கள் அதில் வெற்றி பெறத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதுதான் சரியான தீர்வாக இருக்க முடியும். அதற்கு மாறாக, 100 மீட்டர் ஓடுவதற்கு பதிலாக 80 மீட்டர் ஓடினால் போதும் அல்லது 50 மீட்டர் ஓடினால் போதும் என்று சொன்னால் அது உண்மையான வெற்றியாக இருக்காது. இனி நம்மால் 100 மீட்டர் ஓடவே முடியாது என்ற எண்ணத்தை, அந்த வீரரின் மனதில் அது ஏற்படுத்தி விடும்.
அதுபோலதான் திமுக அரசின் நுழைவுத் தேர்வு எதிர்ப்பு என்பதும். நுழைவுத் தேர்வு இருந்தால், போட்டிகள் நிறைந்த, உயர்தரமான மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் சேர முடியாது என்ற எண்ணத்தை மாணவர்கள் மனதில் விதைக்கிறது. இரண்டாவது, நுழைவுத் தேர்வு இருக்காது என கடைசி நேரம் வரை மாணவர்களை நம்ப வைத்து ஏமாற்றுவது. இதுதான் கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் நடந்து வரும் "திராவிட மாடல்' ஏமாற்று அரசியல்.
திமுக-வைப் போல, அதிமுக-வும் நீட் தேர்வை எதிர்த்தது. ஆனாலும், அதிமுக ஆட்சியில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. இது தவிர, பல பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும் தங்கள் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர வேண்டும் என்பதற்காக சிறப்பு கவனம் எடுத்து பயிற்சி அளித்து வந்தனர். அதற்காக தங்கள் சொந்தப் பணத்தைகூட செலவழித்த ஆசிரியர்கள் பற்றிய செய்திகள் ஊடகங்களில் வெளிவந்தன.
அரசுப் பள்ளி மாணவர்கள், அதிக அளவில் மருத்துவம் படிக்க வேண்டும் என்பதற்காக, 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டையும் அதிமுக அரசு கொண்டு வந்தது. அதற்கு பெரும் பலன் கிடைத்ததையும் நாம் கண்கூடாகப் பார்த்தோம்.
திமுக அரசின் இன்னுமோர் ஆபத்தான அரசியல் விளையாட்டு குறித்து அரசுப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மூலம் கேள்விப்படும்போது அதிர்ச்சியாக இருக்கிறது.
திமுக ஆட்சிக்கு வந்ததும், அரசு பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வந்த இலவச நீட் பயிற்சி வகுப்புகள் நிறுத்தப்பட்டு விட்டன. நீட் தேர்வால், தமிழக மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் சேர முடியவில்லை என்று காட்டுவதற்காக, நீட் பயிற்சி வகுப்புகளையே நிறுத்தி வைத்துள்ளது திமுக அரசு.
அதுமட்டுமல்ல, பல மாவட்டங்களில், தனிப்பட்ட முறையில் நீட் பயிற்சி வகுப்புகள் நடத்த ஏற்பாடுகள் செய்த தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும், ஆளும் தரப்பின் நெருக்கடியால், நீட் பயிற்சியை கைவிட நேர்ந்துள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக, தமிழக மாணவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்க திமுக அரசு தயாராகி விட்டது.
எதிர்க்கட்சியாக இருந்தபோது, பயன்படுத்திய அதே ஆயுதத்தை, ஆட்சிக்கு வந்த பிறகும் திமுக பயன்படுத்துவது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும்.
இனியும் இந்த ஆபத்தான விளையாட்டை விளையாடாமல், தமிழக மாணவர்கள் அதிக அளவில், மருத்துவப் படிப்புகளிலும், மத்திய பல்கலைக்கழகங்களிலும் சேர்வதற்கான வசதிகளையும், வாய்ப்புகளையும் தமிழக அரசு உருவாக்கித் தர வேண்டும்.
அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி, ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்து, எந்த நுழைவுத் தேர்வையும் எழுதும் அளவுக்கு அனைத்து மாணவர்களையும் தயார்ப்படுத்த வேண்டும். தமிழக மாணவர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. வாய்ப்பு கிடைக்கும்போது, எதையும் சாதிக்க அவர்களால் முடியும். கடந்த காலங்களில் அவர்கள் அதனை நிரூபித்துள்ளனர்.
தமிழகத்தில் திமுக-வினரும், அவர்களது ஆதரவாளர்களும்தான் அதிகமான சிபிஎஸ்இ பள்ளிகளை நடத்தி வருகின்றனர். ஆனால், அரசியலுக்காக சிபிஎஸ்இ முறையை விமர்சிக்கின்றனர்.
திமுக-வினர் தாங்கள் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளின் தரத்திற்கு, அரசுப் பள்ளிகளையும் மாற்ற வேண்டும். திமுக-வினர் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளில் மாணவர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும்.
அதனை செய்துவிட்டால், நுழைவுத் தேர்வு பற்றி யாரும் கவலைப்பட வேண்டிய தேவையே இருக்காது. ஆனால், தாங்கள் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு வரவேற்புக் குறைந்துவிடும் என்பதுதான்
திமுக-வினரின் கவலை.
நுழைவுத் தேர்வு எதிர்ப்பு எனும் ஆபத்தான அரசியல் விளையாட்டை கைவிட்டு, ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் திமுக அரசு கவனம் செலுத்த வேண்டும். தமிழக மாணவர்கள் நாடு முழுவதும் மத்திய அரசு நடத்தும் ஐஐடி, ஐஐஎம், என்ஐடி, ஐஐஎஸ், மத்திய பல்கலைக்கழகங்கள் போன்ற உயர்தரமான கல்வி நிறுவனங்களில் அதிக அளவில் சேர வேண்டும். அது மட்டுமே, பொதுவாழ்வில் இருப்பவர்களின் இலக்காக இருக்க வேண்டும். இல்லையெனில் இவர்களை வரலாறு மன்னிக்காது.
கட்டுரையாளர்:
சட்டப்பேரவை உறுப்பினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.