அனைத்து மதங்களுக்குமான ஆன்மிகம்

பாரத தேசத்திற்கு 1947 ஆகஸ்ட் பதினைந்து அன்று சுதந்திரம் கிடைத்தது.  அந்தத் தேதியில் சுதந்திரம் கிட்டியபோது அரவிந்த அன்பர்கள் வியப்பும் மகிழ்ச்சியும் இணைந்த கலவையான உணர்வில் ஆழ்ந்தார்கள்.
அனைத்து மதங்களுக்குமான ஆன்மிகம்

பாரத தேசத்திற்கு 1947 ஆகஸ்ட் பதினைந்து அன்று சுதந்திரம் கிடைத்தது.  அந்தத் தேதியில் சுதந்திரம் கிட்டியபோது அரவிந்த அன்பர்கள் வியப்பும் மகிழ்ச்சியும் இணைந்த கலவையான உணர்வில் ஆழ்ந்தார்கள்.

அதற்குக் காரணம், அந்தத் தேதி குறித்து பல ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்ரீஅரவிந்தர் பூடகமாகச் சொன்ன ஒரு செய்தி.  அந்தச் செய்திதான் என்ன? 
ஓராண்டு சிறையிலிருந்தபோதே தம்மை முழுமையாக ஆன்மிக சோதனைகளுக்கு ஆட்படுத்திக் கொள்ளத் தொடங்கிவிட்டார் அரவிந்தர். அவரது கடும் சிறைத் தவத்தின் காரணமாக கண்ணனை நேரில் தரிசிக்கும் பாக்கியத்தையும்  பெற்றார்.

சிறையிலிருந்து விடுதலையான பின், தாம் கண்ணனை நேரில் தரிசித்த அனுபவத்தை அவர் வெளிப்படையாக அறிவிக்கவும் செய்தார். பின்னர் முற்றிலும் ஆன்மிக வாழ்வில் ஈடுபடும் பொருட்டு அவர் கொல்கத்தாவிலிருந்து பாண்டிச்சேரிக்கு சென்றுவிட்டார்.

அதையறிந்த மகாத்மா காந்தியின் மனம் சிந்தனையில் ஆழ்ந்தது. காந்தியும் ஆன்மிகவாதிதான். ஆனால், பாரதம் சுதந்திரம் பெறுவதும் அதற்கான போராட்டமும் மிக முக்கியமானவை என்றும் பாரதம் சுதந்திரம் பெறுவதற்காக உழைப்பதும் கூட ஆன்மிகத்தின் ஒரு பகுதியே என்றும்  கருதினார் காந்தி.

அரவிந்தரின் உயர்தரப் பேச்சாற்றலை சுதந்திரப் போராட்டத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளாமல் எப்படி விட்டுவிட முடியும்? முதலில் அவர்  இந்திய சுதந்திரத்திற்காக உழைக்கட்டும், அதன்பின் அவர் முழுமையாக ஆன்மிகத்தில் ஈடுபடட்டுமே என்று கருதிய காந்தி அதை அரவிந்தரிடம் தெரிவிக்கவும் விரும்பினார்.

தன்னுடைய வேண்டுகோளை அரவிந்தரிடம் கூறுமாறு அவர் தனது புதல்வர் தேவதாஸ் காந்தியை ஒருமுறையும் லாலா லஜபதி ராயை மற்றொரு முறையும் அரவிந்தரிடம் நேரில் அனுப்பி வைத்தார்.

பாண்டிச்சேரிக்கு வந்து தன்னை அவர்கள் சந்தித்த அந்த இருமுறையும் அரவிந்தர் கூறியது ஒரே பதில்தான்: "முழுமையாக ஆன்மிகத்தில் ஈடுபட்டிருக்கும் நான் பாரத சுதந்திரத்திற்காக இப்போது உழைக்கவில்லை என்று யார் சொன்னது? இப்போதும் நான் எனக்கென்றே உரிய ஆன்மிக வழியில் இந்திய சுதந்திரத்திற்காக உழைத்துத்தான் வருகிறேன். இது உண்மை. நான் வழிபடும் கண்ணன், சுதந்திரப் போராட்டத்தில் எனக்குப் பெரும் பங்கு உண்டு என்பதை எவ்விதமேனும் சுதந்திர வரலாற்றில் முத்திரையிட்டுத் தெரிவிப்பான்.'

என்ன ஆச்சரியம்! அரவிந்தர் சொன்னது பின்னாளில் உண்மை ஆயிற்று. ஸ்ரீஅரவிந்தரின் பிறந்த நாள் ஆகஸ்ட் பதினைந்து. அன்றுதான் நமக்கு சுதந்திரம் கிட்டியது. 

அரவிந்தர், அன்னை போன்றோர் மதத்திற்கு எதிரானவர்கள் அல்லர்; மதத்தைக் கடந்தவர்கள். மதம் என்பது பரம்பொருளை அடைவதற்கான மார்க்கம் மட்டுமே என்பதையும் மார்க்கங்கள் பல உண்டு என்பதையும் உணர்ந்தவர்கள்.

ஜாதி மத உணர்வுகள் மேலோங்கி வரும் இன்றைய சூழ்நிலையில் வருங்கால பாரதத்திற்கு வலிமை சேர்க்கக் கூடியது அனைத்து மதங்களையும் அரவணைக்கும் ஸ்ரீஅரவிந்தரின் ஆன்மிகமே.

மகான்களுக்கு இயற்கை கட்டுப்படுகிறது என்பதை மகான்களின் வரலாறு சொல்கிறது.  அதுபோன்ற  சில சம்பவங்கள் பாண்டிச்சேரியில் அரவிந்தர் தவம் இயற்றி வந்தபோதும் நிகழ்ந்தன.

அரவிந்தர் "சாவித்திரி' காப்பியத்தை எழுதிக் கொண்டிருந்தார். கடும் மழைக் காலம் அது. திடீரெனப் பெருமழை கொட்டத்தொடங்கியது. மனமொன்றி எழுத்துப் பணியில் ஈடுபட்டிருந்த அரவிந்தர் மழையை உணரவில்லை.
எங்கோ  இருந்த ஸ்ரீஅன்னை பரபரப்போடு அரவிந்தர் அறைக்கு வந்தார்.

ஜன்னல் வழியே மழைத் தண்ணீரின் சாரல் அடித்தால் அரவிந்தரின் எழுத்துப் பணி தடைபடுமே என்பதுதான் அன்னையின் கவலை. ஜன்னல் கதவுகளை ஓசைப்படாமல் மூடுவதற்காகத்தான் அவர் வந்தார்.

ஆனால் அரவிந்தர் அறையில் ஒரு வியப்பான காட்சியைக் கண்டார் அன்னை. அந்த  அறையை மட்டும் சிறிதும் தொடாமல் அடுத்துள்ள இடங்களில் எல்லாம் மழை கொட்டோ கொட்டென்று கொட்டிக் கொண்டிருந்தது. ஜன்னல் வழியாக ஒரு துளிச் சாரல் கூட அவர் அறைக்குள் விழவில்லை. அரவிந்தர்  ஒன்றையும் உணராதவராய் "சாவித்திரி' காப்பியத்தை எழுதும் பணியில்  ஈடுபட்டிருந்தார். இயற்கை நிகழ்வான மழை அரவிந்தருக்கு அனுசரணையாக இருந்த சம்பவம் இது.

ஒரு முறை அரவிந்தர் மூன்று சுவர்க் கடிகாரங்கள் மாற்றப்பட்டிருந்த ஒரு கூடத்திற்கு வந்தார். மூன்று கடிகாரங்களும் வெவ்வேறு நேரத்தைக் காட்டிக் கொண்டிருந்தன. "அது எப்படி மூன்று வேறுவேறு நேரங்கள் இருக்க முடியும், இது அபத்தம்' என்று உரக்கச் சொன்னார் அரவிந்தர்.

அடுத்த கணம் மூன்று கடிகாரங்களும் சடாரெனத் தங்களை மாற்றிக் கொண்டு மூன்றும் சரியான நேரத்தைக் காட்டத் தொடங்கின.இயற்கைப் பொருளான மழை அவருக்கு அனுசரணையாக இருந்ததைப் போல் அஃறிணைப் பொருள்களான கடிகாரங்களும் அவர் கட்டளைக்குக் கட்டுப்பட்டன.

ஸ்ரீஅன்னையின் கருத்துப் படி உயிரற்றவை என்று எதுவும் கிடையாது. அஃறிணைப் பொருள்கள் என்று நாம் சொல்லும் எல்லாப் பொருள்களும் கூட உயிர் உள்ளவையே என்பது அன்னை கருத்து.

இயற்கைப் பொருள்கள் அனைத்தோடும் இசைந்து வாழவேண்டும் என்பது ஸ்ரீ அன்னை அரவிந்தரின் கோட்பாடு. "வானகம் இங்கு தென்பட வேண்டும்' என்று பாடுபட்டவர் அரவிந்தர். எங்கும் பரவியுள்ள தெய்வ சக்தியைத் தொடர்ந்த தவத்தின் மூலம் தம் உடலில் இறக்கிக் கொண்டு தெய்வமாகவே மாறியவர்.
அவர் சித்தி அடைந்தபோது நூற்றுப் பதினொரு மணிநேரம் அவர் உடலைச் சுற்றி ஒரு பொன்னொளி பரவியிருந்தது. அது மறைவதற்காகக் காத்துக் கொண்டிருந்தார் ஸ்ரீஅன்னை. அந்த ஒளி விலகிய பின்தான் அவரது  பொன்னுடல் சமாதி செய்விக்கப் பட்டது.

இந்தியா சுதந்திரமடைந்து எழுபத்தைந்தாண்டுகள் நிறைவடைந்துள்ள இத்தருணத்தில், சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட ஸ்ரீஅரவிந்தரை நினைவுகூர்வதும் அவர் காட்டிய வழியில் ஜாதி மத பேதமற்ற ஒற்றுமையைக் கைக்கொண்டு வாழ்வதும்தான் ஸ்ரீஅரவிந்தருக்கு நாம் செலுத்தும் பொருத்தமான அஞ்சலியாக இருக்க முடியும்.

இன்று (ஆக. 15) ஸ்ரீஅரவிந்தர் பிறந்த நாள்.   
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com