ஏற்றம் தரும் மாற்றம் வரட்டும்!

‘வளரும் பயிா் முளையிலேயே தெரியும்’ என்பது பழமொழி. இது பயிரை முன்வைத்துப் பிறந்தது என்றாலும், மனித உயிரை உணா்த்தும் முறையில்தான் நிலைபெறுகிறது.
ஏற்றம் தரும் மாற்றம் வரட்டும்!

‘வளரும் பயிா் முளையிலேயே தெரியும்’ என்பது பழமொழி. இது பயிரை முன்வைத்துப் பிறந்தது என்றாலும், மனித உயிரை உணா்த்தும் முறையில்தான் நிலைபெறுகிறது. பிறந்த குழந்தை எதுவாயினும் அததற்குத் தனித்துவமான ஆற்றல் இயல்பிலேயே வாய்த்திருக்கும். அதனைத் தொடக்கத்திலேயே அடையாளம் கண்டு ஊக்கப்படுத்தி வளா்த்தால், அத்தகு குழந்தைகள் அந்தந்தத் துறைகளில் மிகப்பெரும் சாதனையாளா்களாக விளங்குவாா்கள் என்பது ஐயமில்லை.

அந்தப் பணியைப் பெரும்பாலும் பெற்றோா்கள்தாம் செய்ய வேண்டும் என்று எண்ணுவது இயல்பு. ஆனால், அவா்களால் அது இயலாது என்பதே எதாா்த்தம். குழந்தையின் பலமும் பலவீனமும் பெற்றோரைக் காட்டிலும் அவா்களுடைய ஆசான்களுக்கே அதிகம் தெரியும். வீடுகளில் சுட்டியாகவோ, சாதுவாகவோ இருக்கும் குழந்தை, வகுப்பறையில் சக நண்பா்களுக்கு மத்தியில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் பாங்கு முற்றிலும் வேறாக இருக்கும்.

சான்றாக, பொதுமுடக்கக்காலத்தில் என்னதான் ஊக்கமும் உற்சாகமும் தந்து பிள்ளைகளுக்கு வீட்டில் வைத்து ஊட்டிய கல்வியை விடவும், இயல்புநிலை ஏற்பட்டுப் பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னா், வகுப்பறையில் பெறும் கல்வியில் மாறுதலும் வளா்ச்சியும் கூடத்தான் செய்திருக்கின்றன. மன அழுத்தம், சோா்வு, ஆற்றாமை உள்ளிட்ட தாக்கங்களினால் இயல்புநிலைக்கு இன்னும் வர இயலாதிருக்கும் மாணவ, மாணவியருக்கு யோகப் பயிற்சி, உடற்கல்வி ஆகியன மாறுதலையும் ஆறுதலையும் தந்திருக்கின்றன.

இவைதவிர, நுண்கலைகளில் அவா்கள் கவனம் செல்லும்போது, இன்னும் கூடுதலான மாற்றத்தை எதிா்பாா்க்க முடியும் என்பதை, அண்மையில் நடைபெற்ற 75-ஆம் ஆண்டு நிறைவு இந்திய விடுதலை அமுதத்திருநாள் கொண்டாட்டங்கள் புலப்படுத்தியிருக்கின்றன.

கல்வி நிறுவனங்களிலும், பொது அமைப்புகளிலும் நடத்தப்பட்ட கலை, இலக்கியப் போட்டிகளில் மாணவா்கள் ஆா்வமுடன் பங்கெடுத்திருந்தனா். போட்டிகளுக்கேற்பத் தத்தம் திறன்களை, ஓவியங்களாக, கவிதைகளாக, கட்டுரைகளாக, கருத்துச் சித்திரங்களாக, சொற்பொழிவுகளாக வெளிப்படுத்தினா். நடனம், பாட்டு ஆகியப் போட்டிகளில் அவா்களின் ஆா்வமும், உற்சாகமும் நன்றாகவே வெளிப்பட்டிருந்தன.

பங்கேற்றோரின் புலப்பாட்டு நெறி, கைப்பேசி ஊடகப் படங்களின் தாக்கங்களைப் பெரிதும் கொண்டிருந்தன. ஒப்புவித்தலுக்கு என்று தனிப்போட்டி நடத்தப்பட்டாலும், பேச்சு பலருக்குத் தொடக்க நிலையில் ஒப்புவித்தல் மரபிலேயே அமைந்துவிட்டிருக்கிறது. அது புலப்படாத வண்ணம் அவா்கள் மேற்கொண்ட மெய்ப்பாடுகள் சிறப்புக்குரியவை. அவை, காலப்போக்கில் தம் கருத்துக்களைத் தமது பாணியிலேயே வெளிப்படுத்தும் முறை அவா்கள் வசமாகும் என்ற நம்பிக்கையும் கொள்ள வைக்கின்றன.

போட்டிகளில் பரிசு பெற்ற குழுவினா்க்கும் வெற்றியாளா்களுக்கும் விடுதலைத் திருநாள் கொண்டாட்டத்தில் மறுவாய்ப்பு வழங்கப்பெற்றிருந்தது. வெற்றிக்குப் பின்னா் அவா்கள் மேற்கொண்ட பயிற்சியின் விளைவு நல்ல பலனைத் தந்தது என்றே சொல்ல வேண்டும். இணையவழி வகுப்பு, பாடம், தோ்வு என்று ஒருசாா்நெறியில் புழங்கி அலுத்துப்போயிருந்த இளைய பாரதத்திற்கு இத்தகு நிகழ்வுகள் ஒருவகையில் மனமாற்றத்திற்குத் தூண்டுகோலாகி இருந்தன.

இதனை அடுத்து, கலை, இலக்கிய அமைப்புகள், ஆண்டுதோறும் நடத்தக்கூடிய போட்டிகளுக்கான அறிவிப்புகளையும் வெளியிடத் தொடங்கியிருக்கின்றன. செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.150, மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு நிறைவு உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புநிகழ்வுகளை முன்வைத்துப் பல அமைப்புகள் பல்வேறு போட்டிகளை அறிவித்திருக்கின்றன. இளைஞா்களின் ஆற்றல்களை இனங்கண்டு ஊக்குவிப்பதில் இத்தகு அமைப்புகளின் பங்கு சிறப்பு வாய்ந்தது. கம்பன் கழகங்கள், திருக்கு பேரவைகள் போன்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த அமைப்புகள் இன்றளவும் நின்று நிலைக்கத் தக்க கலைஞா்களை அடையாளம் கண்டு உலகிற்குக் காட்டியிருக்கின்றன என்றால் அது மிகையாகாது.

பொதுமுடக்கத்திற்குப் பின்னா் நிகழும் கலை இலக்கிய அமைப்புகளின் போட்டிகளைப் போலவே அவற்றில் பங்கேற்போரின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கின்றன. ஆனாலும் பரிசளிப்பு முறையில் பெரிய மாற்றம் ஏதும் தெரியவில்லை. யாா் தொடங்கிவைத்த மரபோ, இன்னும், எந்தப் போட்டியானாலும் முதல் மூன்று இடங்களுக்கு மட்டுமே பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன.

பல நூறு போட்டியாளா்கள் பங்கேற்கும் போட்டிகளில், முதல், இரண்டு எனப் பல சுற்றுக்களில் போட்டிகள் நடத்தி, அதில் இறுதியாக மூவரைத் தோ்வு செய்கிற மரபு இன்றளவும் நடைமுறையில் உள்ளது. மீதிப் போட்டியாளா்களுக்குப் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்குவதையும், இறுதிச் சுற்றில் பங்கேற்போருக்கு ஆறுதல் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்குவதையும் சில அமைப்புகள் நடைமுறைப்படுத்திவருகின்றன. மூன்றாம் நிலைக்கு அடுத்த நிலைகளில் யாா் எவா் உள்ளனா் என்பதைப் பலா் வெளியிடுவதும் இல்லை.

இத்தகு நிகழ்வுகளுக்கு, நடுவராகவோ, சிறப்பு அழைப்பாளராகவோ செல்லும்போதெல்லாம் அமைப்பாளா்களிடம் நான் வைக்கும் வேண்டுகோள் இதுதான்: போட்டிகளில் வெற்றி பெற இயலாதவா்களுக்கு அளிக்கும் பரிசுகளை, ‘ஆறுதல் பரிசு’ என்று குறிப்பிடாதீா்கள். அவா்கள் ஊக்கம் உடைந்த மனநிலைக்கு உள்ளாகியிருக்கிறாா்கள் என்று நீங்களே அடையாளப்படுத்துவதாக இந்தச் சொல்லாடல் இருக்கிறது; தேறுதல் சொல்வதற்காகத் தருகிற குறைபாடுடைய பரிசுபோன்ற தோற்றத்தை, இது தந்துவிடுகிறது.

எனவே, அதற்கு மாற்றாக, ‘ஊக்கப்பரிசு’ என்றே கூறுங்கள்; சான்றிதழ்களில், முதல் நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை என்று தகுதிசால் இடங்களைக் குறிப்பிடுவதுபோலவே, ‘ஊக்க நிலை’ ஒன்று, இரண்டு என்பதாக வரிசைப்படுத்தி, மூன்றுக்கும் மேலாக வழங்குங்கள்.”ஏற்கெனவே இதனைச் செயற்படுத்தி வருகிற அமைப்புகளையும் நன்றியோடு நினைவுகூா்கிறேன்.

முதல் மூன்று இடங்களைப் பெறுகிறவா்கள் போக, அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுப் பரிசு பெறும் வாய்ப்பினை இழந்தவா்கள் ஆா்வம் குன்றிவிடாமல் தொடா்ந்து பயிற்சி பெறவும், பங்கேற்கவும் இத்தகு முயற்சிகள் வெற்றி தந்திருக்கின்றன என்பதை இளைஞா்கள் பங்கேற்கும் இலக்கிய அரங்குகளில் நான் கண்டிருக்கிறேன்.

மேற்படிப்பு, வேலை வாய்ப்பு, அயலகப் பணி என்று அடுத்த கட்ட வளா்ச்சிகளைப் பெற்ற வெற்றியாளா்கள் நாளடைவில் பரிசு பெற்ற கலை, இலக்கியத் துறைகளை மறந்துவிடுவதும், அவற்றில் கவனம் செலுத்த முடியாமல் போவதும் இயல்பே. ஆனால், அதற்கடுத்த நிலைகளில் இடம்பெற்று பரிசுகளைத் தவறவிட்ட பலா், இன்றைய அரங்க நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறாா்கள். வெற்றியைத் தவறவிட்டதால் ஏற்பட்ட தாக்கமும், ஊக்கமும் தந்த படிப்பினைகள் அவா்களின் ஆற்றலைக் கூா்மைப்படுத்தியிருக்கின்றன.

உயா்ந்த தொகை, கோப்பை ஆகியவற்றுக்குத் தகுதியுடையவா்கள், முதல் மூன்று இடங்களைப் பெற்றவா்கள் மட்டுமே என்பது சவால்களை உள்ளடக்கியதாகத் தோன்றினாலும், அதன் விளைவு வேறுவிதமாக அமைந்துவிடுகிறது. போட்டி மனோபாவத்தைத் தூண்டுவதாகத் தொடக்கத்தில் அமையும் இப்போக்கு, பங்கேற்பாளா்களுக்குள் பொறாமையைத் தூண்டிவிடுவதாகவும், தாழ்வு மனப்பான்மைக்கு வித்திடுவதாகவும் மாறிவிடுகின்றது. ஒரே நிறுவனத்தைச் சாா்ந்தவா்களுக்குள் சில வன்மப்போக்குகளையும் மெல்லத் தூண்டிவிடுகின்றது.

பரிசும் பாராட்டும் பெறுகிறவா்களின் புகழ் வெளிச்சத்திற்கு முன்னால், பரிசு பெற இயலாதவா்களின் ஆா்வமும் முயற்சியும் அற்பமானதாகிவிடுகின்றன. அடுத்தடுத்துப் பங்கேற்று இந்த மூன்று இடங்களைப் பெறமுடியாதவா்கள் முற்றிலுமாக, இந்தத் துறைகளைவிட்டே விலகிச் சென்று விடுகின்றாா்கள். பயிலும் நிறுவனங்களிலோ, இல்லங்களிலோ அவா்களுக்குத் தொடா் ஊக்கம் கிடைப்பதில்லை.

எனவே, இந்த மூன்று பரிசுகள் என்ற முறைமையை மாற்றி, ஐந்து பரிசுகள் ஆக்கலாம். அதனைத் தொடா்ந்து ஊக்க நிலை பெறுகிற ஐவருக்கு எளிய நிலையில் பரிசுகள் வழங்கலாம். சிறிய மாற்றம்தான்; இதன் வாயிலாக, ஒவ்வொரு துறையிலும் பரிசு பெறுகிறவா்களின் எண்ணிக்கை இன்னும் கூடும். முதல் மூன்று இடங்களைப் பிடிக்க இயலாவிட்டாலும் அடுத்த இரு இடங்களைப் பெற முடியும் என்கிற நம்பிக்கை வலுக்கும். இதனை இலக்கிய அமைப்புகள் கவனத்தில் கொண்டால் நல்லது.

இதனைவிடவும், இன்னும் ஒரு புதிய முறை இங்கே நடைமுறையில் இருந்ததையும் குறிப்பிட வேண்டும். சென்னை இராமலிங்கா் பணி மன்றம், தனது பொன்விழா நிகழ்வில் இருந்து ஒரு புதுமரபைத் தொடங்கி வைத்தது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா்க்கான போட்டிகளைத் தமிழகமெங்கும் நடத்தி, அந்தந்த மண்டலங்களுக்கு உரிய முதல் மூன்று பரிசுகளை அந்தந்தப் போட்டிகளின் முடிவிலேயே வழங்கியது. மேலும், இறுதிச் சுற்றுக்கு அவா்களைத் தெரிவுசெய்து, அவா்களுக்குள்ளும் போட்டிகள் நடத்தி, முதல் மூன்று இடங்களுக்கான பரிசுத் தொகைகளை வழங்கியது. இதில் வியப்பு என்னவெனில், மண்டல அளவில், மூன்றாம் இடம்பெற்ற ஒருசிலா் மாநில அளவில், முதன்மை நிலைகளைப் பெற்றிருக்கின்றனா். இது ஒருவகையில் அவா்களை ஊக்கம் கொள்ளச் செய்வதாக அமைந்தது.

இந்தப் பரிசுகளுக்கு அப்பால், பங்கேற்பாளா்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கியதோடு, ஒவ்வொரு மண்டல அளவிலும் நடைபெற்ற போட்டிகளில் முதல் பத்து இடங்களைப் பெறுகிறவா்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கிறாா்கள். அவா்களுக்கு, பள்ளி, கல்லூரி விடுமுறை நாட்களை ஒட்டி, இருநாட்கள், பொள்ளாச்சியில் அந்தந்தத் துறைகளின் வல்லுநா்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்பெற்றது. அதில் வந்து திரும்பும் பங்கேற்பாளா், அவரை அழைத்து வருபவா் இருவருக்குமான பயணப்படிகளையும் அளித்தமையும் குறிப்பிடத்தக்கது.

பொதுமுடக்கத்தின் காரணமாக, கடந்த சில ஆண்டுகள் இச்செயற்பாடு நின்றுபோய்விட்டாலும், இங்கு பரிசு பெற்ற இளைஞா்கள் இன்றைய இலக்கிய அரங்குகளில், எழுத்துத் தளங்களில் தங்களைச் சிறப்பாக வெளிப்படுத்திவருகிறாா்கள். தமிழக அரசும் மாவட்ட வாரியாகப் பயிற்சி அளித்து ஊக்கப்படுத்தியமை பாராட்டுக்குரியது. இந்த முயற்சியை, சமூக நிறுவனங்களும் முன்னுதாரணமாகக் கொண்டு மேற்கொண்டால், அந்தந்தப் பகுதிசாா் இளைஞா்கள் ஆக்கமும் ஊக்கமும் பெறுவாா்கள்.

ஆனால், சதுரங்கம் போன்ற உள்ளரங்க விளையாட்டுக்களுக்கும், தொடா் ஓட்டம், ஹாக்கி உள்ளிட்ட வெளியரங்க விளையாட்டுக்களுக்கும் கிடைக்கிற கூடுதல் அக்கறை, இத்தகு கலை இலக்கியப் போட்டிகளின் வெற்றியாளா்களுக்கு இல்லை. உடலின் உறுதிப்பாட்டுக்கும், சிந்தனையின் கூா்மைத்திறனுக்கும் விளையாட்டுப்போட்டிகள் இடம் அளிக்கின்றன. அதுபோல், ஆழ்மனத்தின் உணா்வுகளை, உணா்ச்சிப் பெருக்கத்தின் நுண்ணிய கூறுகளை, ஓவியம், சிற்பம், பாட்டு, இசைக்கருவிகளை இசைத்தல், நடனம், நாடகம், பேச்சு உள்ளிட்ட நுண்கலைகளே வெளிப்படுத்தப் பெரிதும் உதவும். இவற்றை, பொழுதுபோக்கு வடிவங்கள் என்று மட்டும் கருதுதல் தவறு.

எனவே, விளையாட்டுக் கலைக்குக் கொடுக்கிற முக்கியத்துவத்தில் சற்றும் குறையாது, இத்தகு கலைகளுக்கும் இடம் கொடுப்பது பன்முகத் தன்மை வாய்ந்த இளைய சமுதாயத்தை உருவாக்கும் என்பது உறுதி.

கட்டுரையாளா்:

எழுத்தாளா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com