இலக்கியம் எனும் இனிய மருந்து!

தமிழ் இலக்கியம் நமக்கு வழங்கியிருக்கும் மேன்மைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சென்றால் மட்டுமே தமிழோடு கூட நம் தலைமுறைகளும் வாழும் என்பதை மனத்தில் கொண்டு செயல்பட வேண்டிய பொறுப்பு 
இலக்கியம் எனும் இனிய மருந்து!பள்ளிக் குழந்தைகள் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகள் அண்மைக்காலத்தில் அதிகரித்துள்ளன. இத்தகைய சம்பவங்கள் நிகழ்வதற்கான காரணங்கள் என்னென்ன? ஏன் இத்தகைய முடிவுக்கு பிள்ளைகள் செல்கிறார்கள்? 

சில பத்தாண்டுகளுக்கு முன்னர் வரை இத்தகைய தொடர் மரணங்கள் குறித்து நாம் கேள்விப்பட்டதில்லை. ஏழ்மை, வறுமை என்பதெல்லாம் நமக்கு இருந்தவைதான். தவறு செய்தால் தண்டிக்கத் தயங்காத பெற்றோர்தான் நமக்கு இருந்தார்கள். ஆனாலும் நாம் எந்த சூழலிலும் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று கருதியதில்லை. ஆனால், தற்போதுள்ள குழந்தைகள உடனடியாக தற்கொலை முடிவுக்கு வருகிறார்கள். இதன் பின்னால் இருக்கும் உளவியல், ஆராயப்பட வேண்டியது. 

நம்முடைய காலத்தில் இத்தகைய மனநிலை இளம் பிள்ளைகளிடம் ஏற்படாமல் இருந்ததற்கு என்னென்ன காரணங்கள் என்பதையும் சிந்தித்துப் பார்க்கவேண்டும். நாம் பயின்ற காலங்களில் மாணவர் மன்றங்கள் என்று பள்ளிதோறும் அமைப்புகள் இருந்தன. 

பெரும்பாலும் அரசுப் பள்ளிகள் அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகளில்தான் கல்வி அனைவருக்கும் சாத்தியமாகி இருந்தது. தனியார் பள்ளிகள் இவ்வளவு பெருகி இருக்கவில்லை. மாணவர் மன்றங்களில் மாலை நேரங்களில் இலக்கியம் தொடர்பான நிகழ்ச்சிகள் நடப்பது வாடிக்கையாக இருந்தது. 

ஒவ்வொரு மாணவருக்கும் குறைந்தபட்சம் 50 திருக்குறளாவது தெரிந்திருக்கும். பள்ளிப் பாடத்தைத் தாண்டி பல போட்டிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும். பேச்சுப் போட்டிக்குத் தயார் ஆவது என்பதே உற்சாகமாக இருக்கும். அதிலும் ஆரோக்கியமான போட்டி நிலவும். கம்பராமாயணம், சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களில் இருந்து தலைப்புகளைக் கொடுக்கும்போது, தகவல்களைத் திரட்டுவதற்கு, தமிழாசிரியர்களின் பின்னால் ஓடிக்கொண்டு இருப்போம். இவை நம் மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவின. 

பள்ளிக்கூடங்களில் நடைபெறும் விழாக்களில் பேசுவதற்கு மிகச்சிறந்த பேச்சாளர்கள் வருவதுண்டு. அப்படி வருவோர் இலக்கியங்களில் ஆழங்காற்பட்டவர்களாக இருப்பார்கள். வெற்று மேடைப் பேச்சாக இல்லாமல், ஆழ்ந்த இலக்கியத்தை சுவைபட அதன் அர்த்தத்தையும் ஆழத்தையும் நாம் ரசிக்கும் அளவுக்கு எளிமைப்படுத்திச் சொல்வார்கள். இதையெல்லாம் பல முறை நாம் அனுபவித்து இருக்கிறோம். 

தற்போது அத்தகைய சூழ்நிலை எந்தப் பள்ளியிலும் இருப்பதாகத் தெரியவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில் பள்ளிக்கூடம் என்பதை ஏறத்தாழ மாணவர்கள் மறந்துவிட்டு இருக்கும் சூழ்நிலையில் ஒழுக்கம், பள்ளிக்கூட விதிமுறைகள், கற்றல் முறைகள் எல்லாவற்றையுமே சற்று மாற்றிக் கொண்டிருக்கிறோம், அல்லது மாணவர்கள் மறந்துவிட்டு இருக்கிறார்கள். 

கற்றல் தொடர்பை ஏற்படுத்துவது தற்போதைய நிலையில் மிக அவசியமானது என்றாலும், பள்ளிகள் கற்றல் என்பதை மட்டுமே நோக்கி முழு நேரமும் மாணவர்களை அழுத்தத்திற்கு உள்ளாக்குவதும் சரியல்ல. மேலும் ஒரு விஷயத்தையும் பேசி ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இரண்டு ஆண்டுகளில் கல்வி கிடைக்க வேண்டுமே என்பதற்காக அவர்கள் கைகளில் கைப்பேசிகளையும் இணையத்தை முழுமையாக வழங்கி விட்டோம். 

இணையம் முழுமையாக கிடைக்கப் பெற்ற மாணவர்கள் அதை எம்முறையிலும் பயன்படுத்த முடியும். இணையம் இருபுறமும் கூரான ஆயுதம் போன்றது. ஒருபுறம் இதனால் நன்மைகள் ஏராளமாக இருக்கின்றன; கற்றுக்கொள்வதற்கான தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. மறுபுறம் வயதுக்கு மீறிய விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்கும் இது வாய்ப்பாக இருக்கிறது. இதனால் குழந்தைகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 

பதின் பருவத்தில் ஆண் - பெண் உறவு, உறவுச்சிக்கல், இதனால் மனதில் எழும் கேள்விகள் என்று பலவற்றை  அறிந்துகொள்வதற்காக இணையத்தை நாடியிருக்கிறார்கள். அது தந்த தவறான வழிகாட்டுதல் உளவியல் சிக்கல்களுக்குக் காரணமாக இருக்கிறது. அதன் வெளிப்பாடாகவே தற்கொலைகள் அமைகின்றன. இந்த மனநிலையில் இருந்து அவர்களை திசை திருப்புவதும் மடைமாற்றம் செய்வதும் காலத்தின் கட்டாயம் ஆகும். 

இணையத்திற்குள் மூழ்கி அவலத்தை அபரிமிதமாகப் பருகி அந்த நஞ்சினால் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகள் விபரீதமான சிந்தனைகளைக் கொண்டிருக்கிறார்கள். அவற்றில் இருந்து அவர்களை விடுவிப்பதற்கு நம் கையில் என்ன இருக்கிறது?

இலக்கியம் உயர்ந்த இலக்குகளைக் காட்டுவது. "யாதும் ஊரே யாவரும் கேளிர்' போன்ற அறங்களை எடுத்துச் சொல்வதுதான் இலக்கியம் என்று நம் முன்னோர் வகுத்திருக்கிறார்கள். "அறம் பொருள் இன்பம் வீடடைதல் நூல் பயனே' என்கிறது தமிழ். அறத்தின் வழியாகவே பொருளும் புகழும் கிடைக்க வேண்டும் என்றே முன்னோர் வகுத்து வைத்திருக்கிறார்கள். மிக நுட்பமான செய்திகளை எளிதாக ஒüவையார், "உண்பது நாழி உடுப்பது இரண்டே...எண்பது கோடி எண்ணும் மனமே' என்று புரிய வைத்துவிடுகிறார். 

தமிழின் சிறப்பு, மொழியின் ஆழம். மொழியின் கனம் கருத்தை எளிதாக்கிவிடுகிறது. இயற்கை வருணனைகளை கற்பனைகளை மெய்மறந்து ரசிக்கச் செய்கிறது இலக்கியம். நொந்து போன மனங்களுக்கு வீர உணர்வை ஊட்டுவதில் தொடங்கி அறவழிப்பட்ட வாழ்க்கையே மனிதம் வாழ்வதற்கான அடிப்படை என்பதைப் புரிய வைப்பது வரை தன்னம்பிக்கையை, அழகியலை, எதார்த்தத்தை அள்ளிஅள்ளி நமக்கு வழங்குவன இலக்கியங்கள். 

இவற்றில் நம் குழந்தைகளின் மனம் ஒன்றிப்போகுமேயானால் அறவழிப்பட்ட வாழ்க்கை, அதன் வழியாக இன்பம் துய்க்க வேண்டும் என்ற சிந்தனை அவர்களுக்கு உதிக்கும்.  சமய இலக்கியங்கள் இறைவனைத் துதிப்பதற்கானதாக மட்டுமல்லாமல் தன்னம்பிக்கையை, வாழ்வின் எளிய நுட்பங்களை தெளிவான பார்வையைத் தருவதாக இருக்கின்றன.

நாவுக்கரசரின் தேவாரம், "இன்பமே எந்நாளும் துன்பமில்லை' என்று தன்னம்பிக்கையையும் இறைநம்பிக்கையோடு ஊட்டி விடுகிறது. "யாவர்க்குமாம் உண்ணும் போது ஒரு கைப்பிடி' என்ற திருமூலரின் திருமந்திரம் ஈகைப் பண்பை எளிதாகச் சொல்லி விடுகிறது. 

"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்'” என்று கூறும் வள்ளலார் கருணையும் இரக்கமும் மனிதப் பண்புகள் என்பதை வலியுறுத்துகிறார். "எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே' என்ற தாயுமானவரின் சொல், அன்பை நிறைத்து மனத்தை ஆரோக்கியமாக்கி விடுகிறது. 

இளங்கோவடிகளின் சொல் வளத்திலும் நேர்மைத் திறத்திலும் மனத்தைப் பறிகொடுக்கக் கற்றுக்கொண்டுவிட்டால் வாழ்நாள் முழுமையும் செம்மையாக வாழ்ந்து விடுவதற்கான வழி புலப்பட்டு விடும். கம்பன் கவிதைகளில் இன்பம் துய்க்கத் தெரிந்து விட்டால் இவற்றையெல்லாம் அனுபவித்து மகிழ்வதற்கு இந்தப் பிறவி போதாது என்ற எண்ணம் தோன்றிவிடும். 

இலக்கியங்கள் மனத்தை இலகுவாக்கி நேர்பாதையில் நடத்தி விடுவதால் நம் முன்னோர் அவற்றைப் பாதுகாத்துத் தந்திருக்கிறார்கள். குழந்தைகளின் மன ஆரோக்கியத்தை சீர் செய்வதும்  வளப்படுத்துவதும் இன்றைய அத்தியாவசியத் தேவை. மருந்து கசப்பாக இருப்பது வழக்கம்தான் என்றாலும் நம் குழந்தைகளின் மனத்தை செம்மைப்படுத்துவதற்கான தன்னம்பிக்கையை ஏற்படுத்துவதற்கான மருந்து இனிய இலக்கியமாக நம்மிடம் நிறைய இருக்கின்றன.

இன்றைய தேவை இந்த இனிய மருந்தினை எப்படி நம் குழந்தைகள் கைகளிலே கொண்டு சேர்ப்பது என்பதுதான். இலக்கியத்தில் ஆழங்காற்பட்ட சான்றோர், வாழ்வின் உண்மைகளைப் புரிந்து கொண்டு விட்ட பெரியோர் குழந்தைகளை நாடிச் செல்ல வேண்டும். ஒவ்வொரு பள்ளியும் இலக்கியம் பேசும் கலைக்கூடமாக பரிணமிக்க வேண்டும். 

அதற்கான களத்தை அரசு அமைத்து தரவேண்டும். தமிழ் இலக்கியம் நமக்கு வழங்கியிருக்கும் மேன்மைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சென்றால் மட்டுமே தமிழோடு கூட நம் தலைமுறைகளும் வாழும் என்பதை மனத்தில் கொண்டு செயல்பட வேண்டிய பொறுப்பு பெரியவர்களுக்கு இருக்கிறது. 

எத்தனையோ கம்பன் கழகங்களும் திருவள்ளுவர் மன்றங்களும் இன்ன பிற இலக்கிய அமைப்புகளும் எளிதாக ஆர்வத்தைத் தூண்டும் வகையில் மாணவர்களிடம் இலக்கியத்தைக் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு உடையவையாக இருக்கின்றன. 

இன்றைய அறிவியலோடு நம் இலக்கியம் கைகோக்க வேண்டும். இணையத்தை இலக்கியம் ஆட்கொள்ள வேண்டும். அறிவியல் புலமாயினும் தமிழ் இலக்கியப் புலமாயினும் சான்றோர் தமிழ்ச் சமூகம் வாழ, தங்கள் சேவையை வழங்க வேண்டும். தமிழ் வாழும் வரையே தமிழரும் வாழ முடியும். தமிழர் மனங்களில் தமிழ் இருக்கும் வரை அவர்தம் மேன்மையை எவராலும் தடுத்திட இயலாது. 

குழந்தைகளின் மனங்களைப் பக்குவப்படுத்தி அறம் சார்ந்த நல்ல விதைகளைத் தூவும் பொறுப்பு இலக்கியவாதிகளுக்கு இருக்கிறது. இனிய மருந்தாக இலக்கியம் கையில் இருக்க எதற்காக வருந்த வேண்டும்? நம் குழந்தைகள் இலக்கியங்களின் வசம் வந்துவிட்டால் நாளை நமதாகும்.

கட்டுரையாளர்: ஊடகவியலாளர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X