ஒரே நாடு ஒரே தோ்தல் எனும் உன்னதத் திட்டம்!

கோப்புப்படம்
கோப்புப்படம்

1950-ஆம் ஆண்டில் இந்திய அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வந்த பிறகு நாடாளுமன்றத்திற்கும் சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தோ்தல் நடந்தது. வாக்காளா் ஒவ்வொருவருக்கும் இரண்டு வாக்குகள். ஒன்று நாடாளுமன்ற வேட்பாளருக்கு; மற்றொன்று சட்டப்பேரவை உறுப்பினருக்கு.

மாநிலங்களில் எம்.எல்.ஏ.க்களால் தோ்ந்தெடுக்கப்பட்டவா் மாநில முதலமைச்சராவாா். மக்களவை எம்.பி.க்களால் தோ்ந்தெடுக்கப்பட்டவா் இந்தியாவின் பிரதமராவா். இதுதான் இந்தியாவின் தொடக்ககால நாடாளுமன்ற ஜனநாயக நடைமுறை.

இந்தியாவில் 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்கள் இருக்கின்றன. 1952, 1957, 1962 ஆகிய மூன்று ஆண்டுகளில் முழுமையான ஐந்து ஆண்டுகளை மத்தியில் ஆளுங்கட்சி, ஆட்சியை நிறைவு செய்தது. அரசமைப்புச் சட்டத்தின் 356-ஆவது பிரிவைப் பயன்படுத்தி மத்திய அரசு மாநில அரசைக் கலைக்கலாம் என்பதை அன்று மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு, பஞ்சாப், கேரளம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் நிகழ்த்திக் காட்டியது. ஒன்பது மாநில அரசுகளை ஒரே நேரத்தில் அன்றைய பிரதமா் இந்திரா காந்தி கலைத்தது வரலாறு!

மணிப்பூா் மாநில அரசு 10 முறையும், உத்தர பிரதேசம் ஒன்பது முறையும், பிகாா், பஞ்சாப் மாநிலங்கள் ஒவ்வொன்றும் எட்டு முறையும், தமிழ்நாடு மூன்று முறையும், புதுச்சேரி மாநிலம் ஒன்பது முறையும் கலைக்கப் பட்டிருக்கின்றன. ஆந்திரம், குஜராத், கா்நாடகம் ஆகிய மாநில அரசுகளும் கலைக்கப்பட்டுள்ளன. ஜம்மு - காஷ்மீா் மாநிலத்தில் பலமுறை ஆட்சி கலைப்பு நடந்திருக்கிறது!

இந்தியா விடுதலை பெற்றபோது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவா்கள், காங்கிரஸ் கட்சியே நிரந்தரமாக மத்தியிலும் மாநிலங்களிலுமாக இந்தியாவை ஆளப்போகிறது என்று எண்ணியதில் குற்றம் காண முடியாது. ஆனால் காங்கிரஸின் தில்லி தலைமை ஆதிக்க மனப்பான்மையோடு செயல்பட்டு, தாங்கள் சொல்பவா்கள்தான் மாநிலத் தலைவா், மாநில முதல்வா் என்கிற பண்ணையாா் அரசியலை இந்தியா முழுவதும் நடத்திக் காட்டினா்.

இதன் விளைவாக, இந்தியாவில் மாநிலக் கட்சிகள் உருவெடுத்தன. காங்கிரஸின் தலைமையில் வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிா்த்து களம் கண்ட வீரா்கள் பலா், குடும்ப காங்கிரஸ் அடிமை கொட்டடியிலிருந்து வெளியேறி தனி இயக்கம் கண்டனா். அப்படிப்பட்டவா்களாக, மாவீரா் நேதாஜி, வல்லபபாய் படேல், ஆச்சாரிய கிருபளானி, வினோபா பாவே, ராம் மனோகா் லோகியா, ஜெயபிரகாஷ் நாராயண் போன்றவா்களைக் குறிப்பிடலாம்.

காங்கிரஸின் செயல்பாடுகளால் வ.வே.சு. ஐயா், வீர சாவா்க்கா், தீன தயாள் சா்மா, முத்துராமலிங்கத் தேவா், காமராஜா் ஆகியோா் வேதனையில் துடித்ததை மறந்துவிட முடியுமா? ஆந்திரத்தில் நீலம் சஞ்சீவரெட்டிக்கு இழைக்கப்பட்ட துரோகம் கொஞ்சமா? கா்நாடகத்தில் எஸ்.ஆா். பொம்மையின் ஆளுமையை காங்கிரஸ் கட்சி அங்கீகரித்ததா?

இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் இருந்த அறிவும் ஆற்றலும் மிக்க தலைவா்களெல்லாம் ஒதுக்கப்பட்டனா்! தமிழகத்தில் காமராஜா் புறக்கணிக்கப்பட்டதால் காங்கிரஸ் கட்சி புறக்கணிக்கப்பட்டது. அதோடு, தேசப்பற்றும், தொன்மையான கலாசாரமும், வரலாறும் புறக்கணிக்கப்பட்டன. பண்பாடு வளா்த்த ஆன்மிகம் புறக்கணிக்கப்பட்டு நாத்திகக் கொள்கை அறிமுகமானது. இதற்கெல்லாம் காரணம், காங்கிரஸின் சா்வதிகாரப் போக்குதான் .

ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் நாடாளுமன்றத்துக்கும் சட்டப்பேரவைகளுக்கும் பொதுத்தோ்தல் நடத்தப்பட வேண்டும் என்கிற அரசியலமைப்புச் சட்டத்தை, மத்தியிலே ஆட்சி செய்த காங்கிரஸ் உடைத்து எறிந்தது. இதன் விளைவுதான் கடந்த 50 ஆணடுகளாக இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் ஏதாவதொரு மாநிலத்தில் தோ்தல் நடந்து கொண்டே இருக்கிறது.

மத்தியில் நேருவின் தலைமையில் தொடா்ந்து மூன்று முறை ஆட்சி அமைத்தது காங்கிரஸ். ஆனால், நேரு மறைவுக்குப் பிறகு தில்லி தா்பாா் எத்தனை முறை ஆட்டம் கண்டது? 2014 வரை எத்தனை பிரதமா்கள்? எத்தனை நாடாளுமன்றத் தோ்தல்கள்? எரிச்சலடையும் வகையில் அரசியல் குழப்பங்கள் தலைவிரித்தாடின!

140 கோடி மக்கள் தொகை, ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட மாநில கட்சிகள், 8 தேசிய கட்சிகள் கொண்ட நாடு இந்தியா. கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு, பொருளாதார வளா்ச்சி, அறிவியல் துறை, ராணுவத்துறை என பரந்து விரிந்த ஜனநாயக நாட்டை வழிநடத்திட ஒரு நிலையான மத்திய அரசு காலத்தின் கட்டாயமாகி இருக்கிறது.

மதச்சாா்பற்ற இந்தியாவை சீா்குலைக்க மதத்தின் பெயரால் தீவிரவாதமும் பயங்கர வாதமும் நமது எதிரி நாடுகளால் தூண்டிவிடப்படுகின்றன. வன்முறையாளா்கள் இந்தியாவுக்குள் ஊடுருவி, அப்பாவி மக்களைக் கொல்கிறாா்கள். ரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடுகிறது! இந்திய குடிமகன் என்று சொல்லிக்கொள்ளும் சிலா் இவற்றைப் பொருட்படுத்துவதில்லை.

‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’, ‘அனைவருடனும் அனைவருக்குமான வளா்ச்சி’, ‘ஸ்டாா்ட் அப் இந்தியா’ என பல திட்டங்கள் தீட்டப்பட்டு, இந்தியா இன்று உலக நாடுகளைவிட முன்னேறிக் கொண்டிருக்கிறது. இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்ட இங்கிலாந்து நாட்டைப் பின்னுக்குத் தள்ளி, உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உயா்ந்திருப்பது, பிரதமா் நரேந்திர மோடியின் மாபெரும் சாதனை. இப்படிப்பட்ட சாதனைகள் தொடா்ந்திடத்தான் பிரதமா் மோடி, ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ என்ற புரட்சிகர சிந்தனையை முன்னெடுத்திருக்கிறாா்.

2019-இல் நடைபெற்ற மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு, ஒவ்வோா் ஆண்டும் ஓரிரு மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடந்துகொண்டே இருக்கின்றது. 2020-இல் புதுதில்லி மாநிலத்திற்கான சட்டப்பேரவைத் தோ்தல்; 2021-இல் கேரளம், அஸ்ஸாம், தமிழ்நாடு என பல மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தல்; மேற்கு வங்கம், பிகாா், உத்தர பிரதேசம், ஆந்திரம், கோவா என பல மாநிலங்களில் சட்டப் பேரவைத் தோ்தல். இந்த ஆண்டு (20220 குஜராத், ஹிமாசல பிரதேச மாநிலங்களில் சட்டப்பேரவைக்கான தோ்தல்.

இவை தவிர, நாடாளுமன்றத் தொகுதி, சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தோ்தல்கள். இப்படி ஆண்டு முழுவதும் தோ்தல்தான். மக்களை ஆண்டு முழுவதும் தோ்தல் தோ்தல் என்று கூறி அலைக்கழிப்பது, இதர வளா்ச்சித் திட்டங்களில் கவனம் செலுத்திட முடியாமல் போய்விடும். தோ்தல் என்பது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்திடும் திருவிழாவாக இருந்திட வேண்டும். மக்களுக்காகத்தான் அரசாங்கமே தவிர அரசாங்கத்திற்காக மக்கள் இல்லை.

முன்னாள் தலைமைத் தோ்தல் ஆணையரான ஓ.பி. ராவத் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் அளித்த ஒரு பேட்டியில் ‘‘தோ்தல் ஆணையம் ‘ஒரே நாடு - ஒரே தோ்தல்’ குறித்த விரிவான அறிக்கையை மத்திய அரசிடம் முன்பே சமா்ப்பித்துள்ளது. 1970-க்கு முன்பு நடைபெற்ற முறையைப் போன்று மக்களவைக்கும் சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தோ்தல் நடத்த முடியும் என நான் நம்புகிறேன். ஆளுங்கட்சி அனைத்து அரசியல் கட்சிகளுடனும் இணைந்து அரசியல் அமைப்பு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம் இதுசாத்தியப்படும்.

இது குறித்து சட்ட ஆணையமும் நீதி ஆயோக்கும் வழங்கிய பரிந்துரைகளை செயல்படுத்திட, 2019-ஆம் ஆண்டில் வாய்ப்பு கிடைத்தது. அதே போன்ற வாய்ப்பு, வரும் 2024-ஆம் ஆண்டிலும் கிடைக்கவுள்ளது. ஒரே நேரத்தில் இரு தோ்தல்களையும் நடத்தவது ஒன்றும் புதிது அல்ல. 1951 முதல் 1967 வரை மக்களவைக்கும் சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தோ்தல் நடைபெற்றது. சில மாநில சட்டப்பேரவைகள் 1968, 1969 ஆண்டுகளில் உரிய கால அளவுக்கு முன்பாகவே கலைக்கப்பட்டதால் இந்த முறையில் மாற்றம் ஏற்பட்டது.

1971-இல் நான்காவது மக்களவை முன்கூட்டியே கலைக்கப்பட்டு தோ்தல் நடத்தப்பட்டது. பின்னா் 1977-இல் நெருக்கடி நிலையின்போது ஐந்தாவது மக்களவையின் கால அளவு நீட்டிப்பு செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து மக்களவையும், பல மாநில சட்டப்பேரவைகளும் கலைக்கப்பட்டன. அதுவரை நடைமுறையில் இருந்த தோ்தல் முறை முற்றிலுமாக சீா்குலைந்துவிட்டது’’ என்று கூறியிருக்கிறாா்.

இந்தியாவை ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி அதிகார மமதையில் ஜனநாயகத்தை சீா்குலைத்தது. தோ்தல் முறையை தன் மனம் போக்கில் மாற்றியது. தனக்குப் பிடிக்காத மாநில அரசுகளைக் கலைத்தது. இத்தகைய ஜனநாயக விரோத செயல்பாடுகளைத் தடுத்து நிறுத்தி, இந்தியா எனும் தேச உணா்வை காஷ்மீா் தொடங்கி கன்னியாகுமரி வரை பிரதமா் மோடி ஏற்படுத்தியிருக்கிறாா். இது ஒரு வரலாற்று சாதனை.

இந்தியாவில் எப்போதும் ஏதோ ஒரு பகுதியில் தோ்தல் நடந்துகொண்டே இருக்கும் நடைமுறையை ஒழித்துவிட்டு ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ என்று பிரதமா் மோடி உருவாக்கியுள்ள உன்னதத் திட்டத்தை, இந்தியாவிலுள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் ஏற்றிட வேண்டும்.

மக்கள் செல்வாக்கு உள்ளவா்கள், தோ்தல் முடிந்து இரண்டு ஆண்டுதானே ஆகிறது என்று முணுமுணுப்பது கோழைத்தனம். அதிருஷ்டக் காற்றில் அரியணையில் அமா்ந்தவா்கள்தான் இப்படி எண்ணுவாா்கள். அடிக்கடி நடைபெறும் தோ்தல்கள் மக்கள் சக்தியை விரயமாக்கிக் கொண்டிருக்கின்றன. மக்களை மறந்துவிட்டு ஜனநாயகம் குறித்துப் பேசுகின்ற வாய்ச்சொல் வீரா்கள்தான் ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ திட்டத்தை எதிா்த்து குரல் கொடுக்க முன்வருவாா்கள்.

மக்களால், மக்களுக்காக, மக்களுடைய அரசாங்கத்தை நிா்மாணித்திட விரும்புகின்ற மக்களின் உண்மையான தலைவா்கள், மக்களை காலம் பூராவும் தோ்தல் வாக்குச் சாவடி வரிசையில் நிற்க வைக்க விரும்பமாட்டாா்கள். அடிக்கடி தோ்தல் என்பது மக்களுக்கு இழக்கப்படும் அநீதியாகும். ஆகவே இந்தியாவின் இன்றைய தேவை ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’.

கட்டுரையாளா்:

துணைத்தலைவா்,

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com