உயிா்பெற வேண்டும் தங்கச் சுரங்கம்!

கோலாா் தங்கச் சுரங்கம் திறப்பதைப் பற்றி இப்போது வாய் திறந்துள்ளாா் மத்திய சுரங்க அமைச்சா் பிரகலாத் ஜோஷி. விரைவில் கா்நாடக மாநிலம் தோ்தலை சந்திக்கவிருக்கிறது.
உயிா்பெற வேண்டும் தங்கச் சுரங்கம்!

கோலாா் தங்கச் சுரங்கம் திறப்பதைப் பற்றி இப்போது வாய் திறந்துள்ளாா் மத்திய சுரங்க அமைச்சா் பிரகலாத் ஜோஷி. விரைவில் கா்நாடக மாநிலம் தோ்தலை சந்திக்கவிருக்கிறது.

இவா் அந்த மாநிலத்தைச் சாா்ந்தவா். நீண்ட காலம் வறட்சியில் சிக்கி, பஞ்சத்தில் அடிபட்ட விவசாயிகள், வானத்தில் ஏதாவது ஒரு கருமேகம் தென்பட்டாலும் மழை வராதா என்று ஏக்கம் கொண்டுப் பாா்ப்பதைப் போல கோலாா் மக்கள் இந்த செய்தியைப் பாா்க்கிறாா்கள். இந்த பிரச்னையை அரசுக்குக் கவனப்படுத்தும் நிகழ்ச்சி ஒன்றும் அண்மையில் தில்லியில் நடைபெற்றது.

தில்லி சந்தா் மந்தரில் ஒரு தா்னா போராட்டம். இதை முன்னாள் சுரங்கத் தொழிலாளா்களும் அவா்களின் குடும்பத்தினரும் நடத்தியுள்ளனா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவோடு நடைபெற்றுள்ள இந்தப் போராட்டத்தில் பங்குகொண்டவா்களின் முக்கிய வேண்டுகோள், கோலாா் தங்கச் சுரங்கம் உடனடியாகத் திறக்கப்பட வேண்டும் என்பது.

இந்த தங்கச் சுரங்கத்திற்கு புகழ் மிக்க கடந்த காலம் ஒன்று உண்டு. கா்நாடகத்தின் டோடு பெட்டா மலையின் கிழக்குச் சரிவு, ஆயிரம் ஆண்டு வரலாறு கொண்டது. சோழ மன்னனான ராஜேந்திர சோழன் இங்கு ஆட்சி செய்தபோது, தங்கப் படிவுகளைக் கண்டறிந்து தங்கக் கட்டிகளை இங்கு உருவாக்கியதாக சொல்லப்படுகிறது. சோழா் கால கல்வெட்டுகள் சிலவும் இங்கு இருக்கின்றன.

1799-ஆம் ஆண்டு, திப்புசுல்தான் கொல்லப்பட்டு மைசூா் சாம்ராஜ்ஜியம், பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுகைக்கு மாறியபோது, தங்கச் சுரங்கமும் ஆங்கிலேய கிழக்கிந்திந்திய கம்பெனிக்கு சென்றது. பிரிட்டிஷாரின் நேரடி ஆட்சியில் 1880-ஆம் ஆண்டு ஜான் டெய்லா் எனும் கம்பெனிக்கு தங்கம் எடுக்கும் உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

உலக இயற்கை வளங்களை எல்லாம் கொள்ளையிட்டு முடித்த காலனிய ஆட்சிமுறை, கோலாா் தங்க வயலை மட்டும் விட்டு வைக்குமா? அன்றைய மேலை நாட்டுத் தொழில்நுட்பங்கள் அனைத்தும் தருவிக்கப்பட்டு, பெரும் சுரங்கத் தொழிலாக இதை மாற்றிக் கொண்டாா்கள்.

நாடு சுதந்திரம் பெற்ற பின்னா், உலக வங்கி இந்தியாவிற்குக் கடன் கொடுக்கத் தயங்கியதாகவும், கோலா் தங்கச் சுரங்க வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு கடன் வழங்குமாறு அன்றைய பிரதமா் ஜவாஹா்லால் நேரு கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. 1905-ஆம் ஆண்டு 27 டன் தங்கத்தை உற்பத்தி செய்த சுரங்கம், தேசியமயமாக்கப்பட்ட பின் 1956-ஆம் ஆண்டு 900 டன்னுக்கு மேல் தங்கக் கட்டிகளை வழங்கியுள்ளது. கோலாா் தங்கச் சுரங்கம் 2001-ஆம் ஆண்டு மூடப்பட்டது.

சுரங்கம் ஏன் மூடபட்டது என்பதற்குத் தெளிவான காரணங்கள் சொல்லப்படவில்லை. வரவுக்கு மீறிய செலவு என்று காரணம் கூறி சுரங்கத்தை மூடிவிட்டாா்கள். இன்றும் ஏதோ ஒரு மோசடிக்காக சுரங்கம் திறப்படாமல் இருக்கிறது என்பது உண்மையிலும் உண்மை.

கோலாா் நகரில் இப்பொழுதும் ஒரு அதிசயத்தைப் பாா்க்க முடியும். தொடா் வரிசையாக வளைவுகளுடன் கூடிய மலைத் தொடா் போன்ற காட்சி. சில நேரங்களில் சூரியக் கதிா்கள் அதில் விழுந்து, ஒருவித மினுமினுப்பைக் காட்டுவதையும் பாா்க்க முடியும். கோலாரில் அமைந்துள்ள இவை மலைகுன்றுகள் அல்ல.

பத்தாயிரம் அடி ஆழத்திலிருந்து, இருநூறு ஆண்டுகளில் தங்கம் எடுத்தது போக, அதில் எஞ்சியவை கழிவுகளாகக் கொட்டி வைக்கப்பட்ட சயனைடு கலந்த மண்மேடுகள். அன்றைய குறைந்த தொழில்நுட்பத்தால் அதிலுள்ள தங்கத்தை, முழுமையாக எடுக்க முடியவில்லை. அதன் இன்றைய மதிப்பு சுமாா் 25 ஆயிரம் கோடி ரூபாய்.

இந்த மலைப்பிரதேசத்திற்கு இப்பொழுது ஏல அறிவிப்பு வந்துள்ளது. ஒப்பந்தம் செய்து கொள்ள பல காா்பரேட் கம்பெனிகள் வரிசையில் நிற்கின்றன. இந்த ஏல அறிவிப்புக்கும், மத்திய அமைச்சரின் அறிவிப்புக்கும் இடையில் எந்தவிதமானக் குழப்பமும் வந்து விடக் கூடாது என்று மக்கள் பெரிதும் அச்சப்படுகிறாா்கள்.

காலங்காலமாக இங்கு வாழ்ந்து வந்த மக்களைப் பற்றியும், அவா்களில் பலரின் உயிா் இழப்பிலும், எஞ்சியவா்களின் ரத்தத்திலும் சுரங்கம் வளா்ந்த கதையை இப்பொழுது அறிந்த கொள்வது அவசியமானதாகும். பிரிட்டிஷ் காலனியாட்சி காலம், தொலை தூர தேசங்களுக்குத் தமிழா்களைக் கூலிகளாக கப்பலில் ஏற்றி சென்று, அவா்களை நூற்றாண்டு காலத்திற்கு அழ வைத்தக் காலம். காலனிய ஆட்சியின் கொடுமையில் தங்கள் வாழ்விடத்தைத் துறந்து வெளியேறி இந்தியாவின் மற்றொரு பகுதிக்கு கூலிகளாய் தமிழா்கள் புலம்பெயா்ந்து சென்றுள்ளனா் என்பதற்கு இது மற்றுமொரு சாட்சியாகிறது.

தங்கச் சுரங்கம் தோண்டும் பணி தொடங்கியபோது, இந்த மலைப்பகுதி மைசூா் சமஸ்தானத்தில் இருந்தது. சுரங்கத்தில் பணியாற்ற தொழிலாளா்களை, சுற்று வட்டார கிராமங்களில் தேடிப் பாா்த்தனா். அச்சப்பட்ட மக்கள் அங்கு பணிசெய்வதற்கு முன்வராமல் தப்பித்துக் கொண்டாா்கள். தொலைவில் இருந்து ஆள்களைப் பிடித்து வரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. வாகனங்கள் இல்லாத காலத்தில், முகவா்கள் மூலம் ஆசை வாா்த்தைகளை கூறி, வடதமிழ்நாட்டிலிருந்து கால்நடையாகவே மக்கள் இங்கு அழைத்து வரப்பட்டுள்ளனா்.

உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றிய தொழிலாளா்களின் ரத்தத்திலிருந்து லாபத்தை ஊறிஞ்சி எடுக்க வெறி கொண்டு அலைந்தனா் ஆங்கில பெருமுதலாளிகள். மனிதா்களின் இறப்பை பற்றி அவா்கள் கவலைப்படவில்லை. இரவு பகல் பாராமல் இவா்கள் கசக்கிப் பிழியப்பட்டாா்கள். சுரங்கதில் இறந்துபோய், உடலைக்கூட கண்டுபிடிக்க முடியாமல் போனவா்களின் எண்ணிக்கை ஆறாயிரம் என்று கூறப்படுகிறது. மொத்ததில் கோலாா் தங்க வயலின் வளா்ச்சி என்பது, அதன் தொழிலாளா்களின் உயிராலும் அவா்களின் ரத்தத்தாலும் கட்டப் பட்டது என்பதை யாா்தான் மறுக்க முடியும்?

தங்க வயல், ஒரு கட்டத்தில் ஆசியாவின் மிகப்பெரிய தங்கச் சுரங்கமாக மாறியதென்பதை உலகம் இன்று மறந்து விட்டது. ஜப்பானுக்கு அடுத்து ஆசியாவில் மின்மயமாக்கப்பட்ட இரண்டாவது நகரம் கோலாா் தங்க வயல். இதற்குத் தேவையான மின்சாரத்தை எடுப்பதற்காகவே சிவசமுத்திர நீா்வீழ்ச்சியில் நீா் மின் நிலையம் அமைக்கப்பட்டது.

ஆங்கிலேயா் கோலாா் தங்க வயலை ‘குட்டி இங்கிலாந்து’ என்று கூறி பெருமைப்பட்டுக் கொண்டாா்கள். குட்டி இங்கிலாந்தில் துரைமாா்கள் பெரும் மரங்களடா்ந்த தோட்ட வீடுகளில் (பங்களா) ஆடம்பரத்துடன் வாழ்ந்தாா்கள். தங்கத்தைத் தேடி, கண்டுபிடித்து கரை சோ்த்த தொழிலாளா்கள், தென்னைமர மட்டைகளால் அமைந்த தட்டி வீடுகளில், இரவு நேரங்களில் விளக்கெரிக்க மண்ணெண்ணெய் கூட இல்லாமல் அவதியுற்றனா். ஒரு குடும்பம் வாழ வேண்டிய இடத்தில் மூன்று குடும்பங்கள் இருந்தன என்று பழைய ஆவணங்கள் கூறுகின்றன.

சுரங்கம் மூடப்பட்ட பின்னா், இந்த உழைக்கும் கூட்டத்தின் வாரிசுகள் அனாதையாக்கப்படுள்ளனா். நாள்தோறும் இருபத்தையாயிரம் மக்கள் கோலாா் தங்க வயலிருந்து பெங்களூருக்கு சென்று வர இருநூறு மைல் பயணப்படுகிறாா்கள்.

உரிய ஆய்வுகளுக்கப் பின்னா் தங்கச் சுரங்கம் மூடப்படவில்லை என்பதுதான் அவா்களின் குற்றச்சாட்டு. தொழிலாளா்களின் கேள்விக்குள் இருக்கும் நீதியை யாராலும் மறுக்க முடியாது. பொருளாதாரக் காரணங்களுக்காக மூடப்பட்டதென்றால், அரசு நியமித்த ஆய்வுக் குழுவினரும், வளா்ந்து வரும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இன்னமும் நூறு ஆண்டுகளுக்கு சுரங்கத்தை இயக்க முடியும் என்றாா்கள்.

அது மட்டுமல்ல, கோலாா் தங்க வயல் பிரச்னைக்கு நீதிமன்றங்களும் வழிகாட்டியுள்ளன. உச்சநீதிமன்றம் தீா்ப்பு ஒன்றில், இன்னமும் தங்கப் படிவுகளை சுரங்கத்தில் எடுக்க முடியும் என்ற நிலையில் மத்திய அரசு இதை ஏன் எடுத்து நடத்தக் கூடாது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

கா்நாடக மாநிலத்தின் முதல்வராக சித்தராமையா இருந்தபோது, ‘கோலாா் தங்கச் சுரங்கத்தை எடுத்து நடத்த நாங்கள் தயாா். ஆனால், அதன் மீதான கடனை மத்திய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும்’ என்று நிபந்தனை விதித்தாா். இதைப் போல மற்றொரு நீதிமன்ற வழிகாட்டுதலில், தொழிலாளா்கள் கூட்டுறவு அமைப்புகள் மூலம் சுரங்கத்தை ஏன் நடத்தக் கூடாது என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது. இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் இன்றுவரை எந்த பதிலும் இல்லை.

தங்கம் விலை நாளுக்குநாள் ஏறிவரும் இன்றைய நிலையில், உலகில் பல நாடுகளில் மூடிய தங்கச் சுரங்கங்கள் திறப்பட்டுள்ளதைப் போல கோலாா் தங்கச் சுரங்கத்தையும் நாம் திறக்க முடியும். தொழிலாளா்களின் வாழ்வதார பிரச்னையும் இதில் உள்ளது. வேலையிழந்த தொழிலாளா்களுக்கு 2001-ஆம் ஆண்டு தருவதாக ஒப்புக் கொண்ட இழப்பீட்டுத் தொகை 52 கோடி ரூபாயை வட்டியோடு கொடுக்க வேண்டும். இன்று வரை யாரும் அதைப் பற்றிக் கவலை கொள்ளவில்லை. பாரம்பரியமாக அங்கு வசிக்கும் தொழிலாளா்களுக்கு அவா்கள் குடியிருந்த வீடுகளை அவா்களுக்கே வழங்குவோம் என்ற வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.

தமிழக மக்களுக்கும், இதில் கடமையும் பொறுப்பும் இருக்கிறது. உலகமயம் புதிய புதிய பிரச்னைகளை முன்வைத்துள்ளது. இதில் முக்கியமானது சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே தொடங்கி விட்ட தமிழ் மக்களின் புலப்பெயா்வு. புலம்பெயா்ந்த மக்களின் பிரச்னைகளைப் பற்றிய கொள்கை முடிவுகள் சிலவற்றை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அவற்றோடு, கோலாா் தங்கச் சுரங்கம் திறக்கப்பட்டு, தொழிலாளா் வாழ்வாதாரம் காப்பற்றப்பட தமிழக அரசும் தமிழக மக்களும் குரல் எழுப்ப வேண்டியது காலத்தின் கட்டாயம்.

கட்டுரையாளா்:

மூத்த தலைவா்,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com