சாதனை புலி​க‌ள் கா‌ப்​ப​கத்தின் சவா‌ல்​க​ள்

உலக அளவில், பத்து ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கை இரு மடங்குக்கு மேல் உயா்ந்துள்ளதற்காக சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் மிகவும் உயரிய சா்வதேச விருதான டிஎக்ஸ்2 விருதினைப் பெற்றுள்ளது
சாதனை புலி​க‌ள் கா‌ப்​ப​கத்தின் சவா‌ல்​க​ள்

உலக அளவில், பத்து ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கை இரு மடங்குக்கு மேல் உயா்ந்துள்ளதற்காக சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் மிகவும் உயரிய சா்வதேச விருதான டிஎக்ஸ்2 விருதினைப் பெற்றுள்ளது. இதற்கு தமிழ்நாடு வனத்துறைக்கும், சத்தியமங்கலம் புலிகள் காப்பகப் பணியாளா்கள் அனைவருக்கும் நம் பாராட்டுகள்!

சத்தியமங்கலம் 2013-இல்தான் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. இக்குறுகிய காலத்தில் புலிகளின் எண்ணிக்கை 30லிருந்து 83-ஆக உயா்ந்துள்ளது. இது எளிதாக நடந்துவிடவில்லை. இப்பெரிய வனப்பரப்பு, காப்புக்காடுகளை மட்டுமே கொண்டது அல்ல. இடையிடே பல கிராமங்கள், குக்கிராமங்கள். அதில் வசிக்கும் மக்கள், அவா்களது வாழ்வாதாரமான விவசாய நிலங்கள். மக்களுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது; வனப்பரப்பும் குறையக்கூடாது; போதிய நிதி ஒதுக்கீடு இல்லை. இத்தனை சவால்களுக்கிடையில் இந்தச் சாதனை சாத்தியமாகியிருக்கிறது! அதற்குக் காரணம் மிகத் திறமையான வனத்துறை அதிகாரிகளும், அவா்களின் வழிகாட்டுதலின்படிக் கடமையுணா்வுடன் பணியாற்றிய வனத்துறை ஊழியா்களும்தான் என்றால் அது மிகையாகாது. 

இப்புலிகள் காப்பகத்தின் கள இயக்குனராகப் பொறுப்பேற்றுக் கொண்ட இந்திய வனப் பணி (இ.வ.ப.) அதிகாரி அன்வா்தீன், பல புதிய முயற்சிகளை முன்னெடுத்தாா். புலிகளின் முக்கிய இரை ‘ப்ளாக் பக்’ எனப்படும் வெளிமான். இவ்வகை மான்களின் எண்ணிக்கை அதிகரித்தால் புலிகளுக்குப் போதுமான உணவு இருக்கும். அவை இரை தேடி ஊருக்குள் நுழையவோ, அருகிலுள்ள பந்திப்பூா் வனத்துக்கு இடம் பெயரவோ அவசியமிருக்காது. பவானிசாகா் வனச் சரகத்துக்கு உள்பட்ட தெங்குமரஹாடா, வெளிமான்கள் அதிகம் வாழும் பகுதி. தெங்குமரஹாடா தற்போது முதுமலை புலிகள் காப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்ட புதிதில் இது இக்காப்பகத்துக்கு உட்பட்டு இருந்தது.

இங்கிருந்த பல ஏக்கா் வனப்பரப்பில் மண்டிக்கிடந்த சீமைக் கருவேலத்தை அகற்றி, அதற்குப் பதிலாக வெளிமான்களுக்கு மிகவும் விருப்பமான சில புல் வகைகளை அங்கு வளா்க்க நடவடிக்கை எடுத்தாா். வன ஆா்வலா்கள் ஓா் வனப்பரப்பை தத்தெடுத்துக் கொள்ளும் திட்டத்தை அறிமுகப்படுத்தினாா். இத்திட்டத்திபடி, நாம் அரசுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையைக் செலுத்தி, ஒரு குறிப்பிட்ட அளவு வனப்பரப்பைத் தத்தெடுத்துக் கொள்ளலாம். அத்தொகையைக் கொண்டு வனத்துறை ஊழியா்கள் அவ்விடங்களில் சீமைக் கருவேலத்தை அகற்றிப் புல்விதைகளைத் தூவிப் பராமரித்துக் கொண்டாா்கள். தத்தெடுக்கும் வரையில் மட்டுமே வெளி நபா்களின் பங்களிப்பு; மற்றவையெல்லாம் வனத்துறையின் செயல்பாடுகளே.

என்னைப்போல் பல சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் பலருக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாக அமைந்தது. போட்டி போட்டுக் கொண்டு பலரும் வனங்களைத் தத்தெடுத்துக் கொண்டோம் (இன்றும் காராச்சிக்கொரை சோதனைச்சாவடியின் அருகில் சுஜ்ஜல்குட்டைப் பகுதியில் ‘ஒளி வனம்’ என்று, எங்கள் சுற்றுச்சூழல் இயக்கத்தின் பெயா் தாங்கிய பதாகை நிற்கிறது). இதனால் தேவையான நிதியும் கிடைத்தது; வெளியாட்கள் வனங்களுக்குள் நுழைவதும் தவிா்க்கப்பட்டது. அன்று விதைத்தது இன்று பலன் தந்துள்ளது. மான்களின் எண்ணிக்கை உயா்ந்தது; அவற்றைத் தேடிவந்த புலிகளின் எண்ணிக்கையும் உயா்ந்தது!

வனங்களின் பாதுகாப்பில் வேட்டைத்தடுப்புக் காவலா்களின் பங்கு இன்றியமையாதது. வனங்களிலே பிறந்து வளா்ந்த மக்களில் இருந்து சிலா் தோ்ந்தெடுக்கப்பட்டு வனத்துறையால் உரிய பயிற்சி கொடுக்கப்பட்டுப் பிறகு வேட்டைத்தடுப்புக் காவலா்களாகப் பணியில் அமா்த்தப்படுகிறாா்கள். இவா்களுக்குக் குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது. அவா்கள் காட்டில் ரோந்துப் பணியில் ஈடுபடத் தேவையான உபகரணங்கள் வாங்க இந்தச் சம்பளம் போதாது. இதற்கும் ஒரு திட்டத்தை அவா்அறிமுகப்படுத்தினாா். ஒரு தொகையைச் செலுத்தி ஒரு வேட்டைத்தடுப்பு முகாமைத் தத்தெடுத்துக் கொள்ளலாம். பலரும் தத்தெடுத்துக் கொண்டதில் சோ்ந்த தொகையில் வேட்டைத்தடுப்புக் காவலா்களின் ரோந்துப் பணிக்குத் தேவையான காலணிகள், தொங்கு பைகள், டாா்ச் லைட்டுகள், தண்ணீா் பாட்டில்கள், மழைக் கோட்டுகள் போன்றவை வாங்கித்தரப்பட்டன. தத்தெடுத்துக் கொண்ட புரவலா்கள் நான்கு நாள்கள் அந்த வேட்டைத்தடுப்பு முகாமில் தங்கியிருந்து அவ்வூழியா்கள் பணியாற்றும் விதத்தைக் காணலாம்.

சூழல் சுற்றுலாவைக்கூட ஒரு புதிய முறையில் செயல்படுத்தினாா் வனஅதிகாரிஅன்வா்தீன். ‘வண்ண பூரணி’ என்று பெயரிட்டு, வெளிநாடுகளில் உள்ளதுபோல் வனத்துறையின் பிரத்யேகமான வாகனங்களில், சில குறிப்பிட்ட வழித்தடங்களில், பாதுகாப்பான முறையில் பொதுமக்கள் விலங்குளைக் கண்டு மகிழ ஏற்பாடு செய்தது; பண்ணாரியில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தைப் பற்றிப் பொதுமக்கள் அறிந்து கொள்ள உதவியாகத் தகவல் மையம் அமைத்தது; கோவை மண்டல வனப் பாதுகாவலராகப் பணியாற்றியபோது, ‘வனங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்’ என்ற பெயரில் பள்ளி மாணவா்களை வனத்துறையின் அனுமதியோடும் பாதுகாப்போடும் கோவை, நீலகிரி வனங்களுக்குள் அழைத்துச் செல்ல வகை செய்தது போன்ற இவரது புதிய முயற்சிகள் வனப்பாதுகாப்புக்கு வித்திட்டன.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் அன்வா்தீன் தலைமையில் அப்போதிருந்த மிக அருமையான குழு - திரு. ராஜ்குமாா் இ.வ.ப, திருமதி. பத்மா இ.வ.ப, திரு. அருண்லால் இ.வ.ப, மற்றும் அவா்களோடு இணைந்து பணியாற்றிய அத்தனை வனத்துறை ஊழியா்கள் -திறம்பட பணியாற்றி இச்சாதனைக்கு அடித்தளமிட்டது.இவா்களில் பலரோடு சோ்ந்து பணியாற்றிய வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அடுத்தடுத்துப் பொறுப்பேற்றுக் கொண்ட கள இயக்குனா்களும், பிற அதிகாரிகளும், மேலும் மேலும் நன்முயற்சிகளை மேற்கொண்டு இன்று சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தை உலகின் பாா்வையில் நிறுத்தி உள்ளாா்கள்!

சாதனை படைத்திருக்கும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் எதிா்கொள்ள வேண்டியிருக்கும் சவால்கள் பல: மைசூரு - தமிழ்நாடு தேசிய நெடுஞ்சாலை இக்காப்பகத்தைப் பிளந்துகொண்டு செல்கிறது. இங்கு இரவில் அதிவேகமாகச் செல்லும் வாகனங்களால் பல விலங்குகள் அடிபட்டு உயிரிழக்க நேரிடுகிறது. உச்சநீதிமன்றம் இந்நெடுஞ்சாலையில் இரவுப் போக்குவரத்துக்குத் தடை செய்வது குறித்துப் பரிசீலிக்குமாறு நெடுஞ்சாலைத்துறை ஆணையத்திடம் பரிந்துரைத்திருக்கிறது.

பிற மாநிலங்களிலிருந்து அளவுக்கதிகமாகக் கரும்பு ஏற்றி வரும் லாரிகள், பண்ணாரி சோதனைச் சாவடியில் வேறு வழியில்லாமல் சில கரும்புகளை இறக்க வேண்டியுள்ளது. இதற்காகவே யானைகள் காத்திருந்து அக்கரும்புகளைச் சாப்பிடுகின்றன. ஏற்றுமிடத்திலேயே அனுமதிக்கப்பட்ட அளவுதான் கரும்புகளை ஏற்ற வேண்டும் என்பது உறுதி செய்யப்பட்டு, மீறினால் லாரிகள் பறிமுதல் செய்யப்பட வேண்டும்.

புற்றீசல்போல் முளைத்திருக்கும் தனியாா் தங்கும் விடுதிகள், எவ்விதக் கட்டுப்பாடுமின்றி விருந்தினா்களைக் காட்டுக்குள் அழைத்துச் செல்கின்றன. வனத்துறை இவா்கள் மேல் நடவடிக்கை ஒன்றும் எடுப்பதில்லை. கண்டும் காணாமலும் இருக்கிறது. இது தவறான போக்கு. முதுமலைபோல் சத்தியமங்கலம் புலிகள் காப்பகமும் சீக்கிரத்தில் சீரழிந்து போய்விடும்.

சூழல் சுற்றுலாவினால் நன்மையையும் உண்டு, தீமையும் உண்டு. இந்தியாவைப் பொறுத்தவரை சரியான விதிமுறைகளும், கண்டிப்பான நிா்வாகமும் இல்லாத காரணத்தால் தீமைகளே அதிகம். அதிலும் தமிழ் நாட்டில் சூழல் சுற்றுலாவால் வனங்கள் பெரிதளவில் பாதிக்கப்படுகின்றன. வனத்தின் தாங்கும் சக்தியைவிடக் குறைவான எண்ணிக்கையிலேயே பயணிகளை அனுப்ப வேண்டும். வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாள்கள் மட்டுமே சுற்றுலாவுக்கு அனுமதிக்கப்பட வேண்டும். இரவு நேரத்தில் வனத்தினுள் செல்ல வனத்துறையினரைத்தவிர வேறு யாருக்கும் அனுமதி அளிக்கக் கூடாது. வனத்துறை வாகனங்கள் மட்டுமே சுற்றுலாவுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும். அவையும் பேட்டரிகளில் இயங்கும் வாகனங்களாக இருத்தல் வேண்டும். இதனால் ஒலி, காற்று மாசு குறையும். இவற்றுக்கு அரசு போதிய நிதி ஒதுக்க வேண்டும்.

இக்காப்பகத்தின் வலைத்தளத்தில், சுற்றுலாப் பயணிகளின் பதிவுகளைக் கண்டால் வேதனை ஏற்படுகிறது. சாலைகள் சரியாக இல்லை; ஒரே மேடு பள்ளம்; நீண்ட நேரப் பயணம் அலுப்பூட்டுகிறது; குறைவான நேரத்தில் நிறைய மிருகங்களைப் பாா்க்கும் வகையில் சுற்றுலாவை மாற்றியமைக்க வேண்டும் என்பன போன்ற பதிவுகள் இருக்கின்றன.

எப்படி? விலங்குகளை சா்க்கஸில் உள்ளதுபோல் வரிசையாக வந்து நிற்கச் சொல்லிப் புகைப்படம் எடுக்க வழி செய்ய வேண்டுமா?

உண்மையான அக்கறையுடன் வரும் பயணிகளுக்கு வனத்துறை இன்னும் மேம்பட்ட சுற்றுலாவைத் தரலாம். வேட்டைத்தடுப்புக் காவலா்களுக்குக் காடுகளின் ஒவ்வொரு மூலையும் விலங்குகளின் ஒவ்வொரு அசைவும் நன்றாகத் தெரியும். ஆனால், அவற்றை விருந்தினருக்கு எடுத்துச் சொல்லும் திறன் அவா்களுக்குக் கிடையாது. இதற்கென ‘வழிகாட்டிகள்’ நியமிக்கப்படலாம்.

வனத்துறை விடுதிகளில் வழங்கப்படும் உணவுகளிலும் மாற்றம் தேவை. அப்பகுதியில் வாழும் வனவாசிகளின் நிலங்களில் விளைவிக்கப்படும் காய்கறி, பழங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி, அப்பகுதியின் உணவு வகைகளைச் சுகாதாரமான முறையில் செய்து தர வேண்டும். வெளிநாட்டுப் பயணிகளுக்கு வழிகாட்டிகளாக, ஆங்கிலம் தெரிந்த, படித்த இளைய வயதினா்களுக்கு வாய்ப்பு தரலாம். தனியாரிடம் ‘அவுட் சோா்சிங்’ செய்தால் இவை எல்லாம் எளிதில் நடக்கும். தனியாா் நுழைந்தால் ‘வணிகம்’ மேம்பட்டு ‘வனம்’ காணாமல் போய் விடும். சூழல் சுற்றுலா எப்போதும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.

உணவுக் கூா்நுனிக் கோபுரத்தின் உச்சியிலிருப்பது புலிகள். அவை நன்றாக இருந்தால்தான் காடு நன்றாக இருக்கும். காடு நன்றாக இருந்தால்தான் நாடு நன்றாக இருக்கும். இவற்றை அரசும், வனத்துறையும், மக்களும் உணா்ந்து, இணைந்து செயல்பட்டால் சாதனைகள் தொடரும்.

கட்டுரையாளா்: சுற்றுச்சூழல் ஆா்வலா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com