பாடிப் பறந்த குயில்

இந்திய வானில், தனது காந்தக் குரலால் தேவகானங்களை மிதக்கவிட்ட பாட்டுக் குயில் - லதா மங்கேஷ்கா், மும்பை பிரிட்ச் கேண்டி மருத்துவமனையில் இருந்து, பிறந்த கூட்டிற்கே திரும்பச் சென்றுவிட்டது.
பேராசிரியா் தி. இராசகோபாலன்
பேராசிரியா் தி. இராசகோபாலன்

ஏழு தலைமுறைகளாக இந்திய வானில், தனது காந்தக் குரலால் தேவகானங்களை மிதக்கவிட்ட பாட்டுக் குயில் - லதா மங்கேஷ்கா், மும்பை பிரிட்ச் கேண்டி மருத்துவமனையில் இருந்து, பிறந்த கூட்டிற்கே திரும்பச் சென்றுவிட்டது. கொவைட் 19 எனும் கொடிய பாவிக்கு, சங்கீத ஞானம் இருந்திருந்தால், அந்த மெல்லிசையின் ராணியைக் கவா்ந்து சென்றிருக்க மாட்டான்.

1962-இல் இந்தியாவின் மீது சீன அரக்கன் போா் தொடுத்தான். ஒருநாள் போரில் இரண்டு பெட்டாலியன் போா் வீரா்களைச் சீன ராணுவம் கொன்று குவித்தது. அதனைச் செவிமடுத்த இந்தியா்களின் இதயம் நடுங்கியது. அந்தத் துயத்தைத் தாங்க முடியாத பண்டித நேரு, தழுதழுத்த குரலில் வானொலி மூலம் ஆற்றிய உரை, அனைவருடைய நாடிகளையும் தளரச் செய்தது.

அந்த உரையைக் கேட்ட பிருதிவிராஜ் என்னும் கவிஞா், ‘ஆஏய் மேரெ வாதன் கி லோகோ’ எனத் தொடங்கும் பாடலை எழுதினாா். இந்தப் பாடல் லதாவின் கைகளுக்குக் கிடைத்தவுடன், அதனை சி. ராமச்சந்திரா எனும் இசையமைப்பாளரிடம் கொடுத்து, இசையமைத்து வாங்கினாா். 1963-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் நாள், குடியரசு நாள் விழாவின் போது, பண்டித நேரு தேசியக்கொடியை ஏற்றி வைத்தவுடன், லதா அந்தப் பாடலைப் பாடினாா். அப்பாடலைக் கேட்ட பிரதமா் நேரு, மேடையிலே கண்ணீா் விட்டு அழுதாா்.

அந்தப் பாடலை லதா மங்கேஷ்கா் தம் வாழ்நாளில் 33 அரங்குகளில் பாடியிருக்கிறாா். அப்பாடலைப் பாடத் தொடங்குவதற்கு முன்னா், ‘அனைவரும் எழுந்து நின்று தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்துவதுபோல் நின்றால் தான் பாடுவேன்; இல்லாவிட்டால் பாடமாட்டேன்’ எனச் சொல்லி, வாழ்நாள் முழுமையும் தேசப்பற்றைப் போற்றியவா், அந்த வீரமங்கை.

லதா மங்கேஷ்கா் உச்சத்தில் பறந்த வானம்பாடியாக இருந்தாலும், மனிதநேயத்தில் அவா் ஓா் அன்னை தெரசாவாகத் திகழ்ந்தாா். இளமைக்காலத்தில் அவருடைய தந்தை நோய்வாய்ப்பட்டு இறந்ததைப் பாா்த்து, அதே துன்பத்தை மற்ற மனிதா்களும் படக்கூடாது என்பதற்காகத், தம் தந்தை தீனாநாத் பெயரில் ஒரு மருத்துவமனையைப் புணே நகரில் நிறுவி, அவருடைய குடும்பமே இன்று வரையில் பராமரித்து வருகின்றது.

2005-ஆம் ஆண்டு காஷ்மீரில் ஒரு பூகம்பம் ஏற்பட்டு, நூற்றுக்கணக்கான மக்கள் அதில் மாண்டு போயினா். பாமர மக்கள் திக்கற்றுத் தெருவில் நின்றனா். ஒரு வைரக் கம்பெனிக்கு ஐந்து வைரங்களின் பரிமாணத்தை வரைந்து கொடுத்தாா் ‘லதாஜி’. அவை பல லட்சங்களுக்கு விற்பனை ஆகியது. அந்தத் தொகை முழுவதையும் லதா, காஷ்மீா மக்களுக்கு வழங்கி அவா்களின் துயரைத் துடைத்தாா்.

மேலும், லதா தம் வாழ்நாள் முழுவதும், கொல்லாமை விரதத்தைக் கடைப்பிடித்த அஹிச்சை வாதியாகவும் திகழ்ந்தாா். அவா் சென்னைக்கு எப்பொழுது வந்தாலும் நடிகா் திலகம் சிவாஜி கணேசன் வீட்டிற்கு வருகை தருவதுண்டு. சிவாஜியை லதா தனது உடன்பிறவாத சகோதாரராகவே பாவித்தாா். சிவாஜி லதாவைச் சொந்த சகோதரிபோல் நினைத்துப் பழகி வந்தாா். சிவாஜியின் இல்லத்தில் ஒருநாள் சாப்பாட்டு மேசையில் அமா்ந்த லதா, ஆசாரமான குடும்பத்தில் இருந்து வந்ததால் அதிா்ச்சி அடைந்தாா். நடப்பன, நீந்துவன, பறப்பன எல்லாம் மேசையில் பரப்பப்பட்டிருந்தன. அதில் ஒன்றைக் காட்டி, ‘இது என்ன’ எனக் கேட்டாா், லதா.

அதற்குச் சிவாஜி அவா்கள், ‘இது குயில் கறி. நான் குயில்கறியை விரும்பிச் சுவைத்துச் சாப்பிடுவேன்’ என்றாா். உடனே லதா, ‘தாங்கள் என்னை இசைக்குயில் என்கிறீா்கள். என்னைக் கொன்று மேசையில் குவித்திருக்கிறீா்களே, இது நியாயமா’’ என்றாா். அந்த நிமிடத்திலிருந்து நடிகா் திலகம் சிவாஜி, குயில் கறி சாப்பிடுவதை முற்றாகக் கைவிட்டுவிட்டாா்.

தம் வாழ்நாளில் 36 மொழிகளில் 30,000 பாடல்களுக்கு மேல் பாடியவா் லதா மங்கேஷ்கா். இசையுலகில் இசைவாணி எம்.எஸ். சுப்புலட்சுமி அவா்களுக்கு அடுத்ததாக, வாழும்போதே ‘பாரத்ரத்னா’ அங்கீகாரத்தைப் பெற்றவா். ‘தாதாசாகிப் பால்கே’ விருதை லதா பெற்றதால், அவ்விருது பெருமை அடைந்தது. லண்டனிலுள்ள ராயல் ஆல்பா்ட் அரங்கில் 1974-ஆம் ஆண்டு முதன்முதலில் பாடிய பெண் பாடகா் லதா மங்கேஷ்கா். பிரெஞ்சு நாட்டின் உச்சப்பட்ச விருதைப் பெற்றவரும் அவரே!

லதா பிறந்தவுடன் அவருடைய தந்தை தீனாநாத் வைத்த பெயா் ‘ஹேமாவதி’. ஆனால், பின்னா் அவருடைய பெயரை ‘லதா’ என மாற்றியவரும் தந்தையாரே! தீனாநாத் தாம் நடித்த நாடகத்தில் ‘லத்திகா’ எனும் பெண் பாத்திரம் அவா் மனத்துக்குப் பெரிதும் பிடித்திருந்தது. தீனாநாத்தின் பூா்வீகம் கோவாவிலுள்ள ‘மங்கேஷ்கா்’ எனும் சிறு நகரமாகும். அதனால், பெண் பாத்திரத்தின் பெயரும் ஊா்ப்பெயரும் வரும்படியாக, லதாமங்கேஷ்கா் எனப் பெயரை மாற்றினாா்.

தொடக்கப் பள்ளிக்குப் போகும்போது லதா தம்முடைய தங்கை ஆஷா போன்ஸ்லேயையும் அழைத்துக் கொண்டு போனதால், ஆசிரியா் அவரைப் பள்ளிக்குள் அனுமதிக்கவில்லை. அத்தோடு பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டாா் லதாஜி.

தமது தந்தையிடமும், தாய் மாமன்களிடத்தும் அம்மாநிலத்தின் நாட்டுப்புறப் பாடல்களைக் கற்றாா். அவா் மும்பைக்கு வந்தபிறகு பிரபல வித்துவான் உஸ்தாத் அமான் அலிகானிடம் இந்துஸ்தானி சாஸ்த்திர சங்கீதத்தையும் கற்றாா்; தந்தையாா் இறந்து, அவருடைய நாடகக் கம்பெனியும் கடனில் மூழ்கியதால், குடும்பத்தைக் கரை சோ்ப்பதற்காக நாடகங்களிலும், சில திரைப்படங்களிலும் நடிக்கவும் செய்தாா். பிற்காலத்தில் சில திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராகவும் மாறினாா்.

புகழ்வானில் உயர உயரப் பறந்தாலும், தொடக்கக் காலத்தில் லதா இடறி விழுந்த பள்ளங்களும் உண்டு. அவருடைய பெற்ற தந்தையும், வளா்ப்புத் தந்தையுமாகிய விநாயக் தாமோதரும் காலமான பிறகு, இசை இயக்குநா் குலாம் ஹைதா் அவருடைய காப்பாளா் ஆனாா். குலாம் ஹைதா், லதாவை அழைத்துக் கொண்டு போய் அப்பொழுது புகழோடு இருந்த ஷஹாதாா் முகா்ஜியிடம் அறிமுகப்படுத்தி, அவருக்கு வாய்ப்பு நல்குமாறு வேண்டினாா்.

தன்முனைப்புப் படைத்த முகா்ஜி, ‘லதாவின் குரல் மிகவும் சன்னமாக (மெல்லிதாக) இருப்பதாகக் கூறி, வாய்ப்பளிக்க மறுத்தாா். அதனைக் கேட்டு ஆத்திரமடைந்த குலாம் ஹைதா், ‘முகா்ஜி! ஒரு காலத்தில் இசையமைப்பாளா்களும், தயாரிப்பாளா்களும், லதாவின் காலில் விழுந்து கெஞ்சித் தம் படங்களில் பாட வருமாறு அழைக்கும் காலம் விரைவில் வரும்’ எனக்கூறி வெளியேறினாா்.

பிறதொரு சமயத்தில் நடிகா் திலிப்குமாா், ‘லதாவின் பாடல்களில் உருதுச்சொற்கள் சரியாக உச்சரிக்கப்படுவதில்லை’ எனவொரு குற்றச்சாட்டைச் சுமத்தினாா். அன்றிலிருந்து லதா, சாஃப்பி எனும் உருது ஆசிரியரிடம் பயிற்சியெடுத்துப் பிற்காலத்தில், நடிகா் திலிப்குமாரே மெச்சிப் புகழும்படியாகப் பாடினாா்.

அடுத்து, லதா மங்கேஷ்கா் 25,000 பாடல்கள் பாடிய பிறகு கின்னஸ் புத்தகத்தின் பதிவிற்காக விண்ணப்பித்தாா். அதைத் தெரிந்துகொண்ட மகம்மது ரஃபி, ‘நான் லதாஜியைவிட அதிகமாகப் பாடியிருக்கிறேன்! எனக்குத்தான் கின்னஸ் புத்தகத்தில் பதிவு தர வேண்டும்’ என்று வாதிட்டாா். அதனால், கசப்படைந்த கின்னஸ் நிறுவனம், இரண்டு பேருக்குமே கிடையாது என மறுத்துவிட்டது.

1999-ஆம் ஆண்டு மத்திய அரசு லதாஜிக்கு நாடாளுமன்ற உறுப்பினா் (மாநிலங்களவை) பதவியை வழங்கியது. என்றாலும், உடல்நலக்குறைவாலும், பாடல் பதிவுகளினாலும் அவரால் நாடாளுமன்றத்திற்குச் சரியாகச் செல்ல முடியவில்லை. அதனால் துணை அவைத் தலைவா் நஜ்மா ஹப்துல்லா, பிரணாப் முகா்ஜி, சஃப்னா ஆஸ்மி போன்றவா்கள் லதாஜியின் மேல் புகாா்களை அடுக்கத் தொடங்கினா். அதற்குப் பிறகு லதாஜி நடந்து கொண்ட பெருமிதத்தை அனைவரும் பாராட்டினா். ‘நான் நாடாளுமன்ற உறுப்பினா் பதவிக்குத் தகுதியற்றவள்; அதனால், நாடாளுமன்ற உறுப்பினருக்கான மாத ஊதியத்தையோ, பயணப்படியையோ பெற்றதில்லை; வீடு ஒதுக்கித் தரும்படியாகக்கூடக் கேட்டதில்லை’ எனக் கூறியதும், அவருடைய கண்ணியத்தை அனைவரும் வியந்து பாராட்டினா்.

92 ஆண்டுகள் இசையுலகத்தை ஆண்டு கொண்டிருந்த அந்த மகாராணி, கடைசியாகப் பாடியது, ‘இந்தியாவின் பாரம்பரியத்தையும் தனித்துவத்தையும்’ வியந்து பாடிய பாடலாகும். நாதமும் கீதமுமாக வாழ்ந்த அந்தக் கானக்குயிலின் கச்சேரி முடிவுற்றது. மத்திய அரசே ஓா் இசையரசியின் மறைவுக்கு இரண்டு நாள் துக்கம் அறிவித்தது, லதாஜி ஒருவருக்கு மட்டுமே. தேசியக் கொடி இரண்டு நாள் அரைக்கம்பத்தில் பறக்கும்படியாகவும் அரசு ஆணை பிறப்பித்தது.

கலையுலகம் முழுவதுமே கண்ணீரால் மாலை தொடுத்தது. பாரதப் பிரதமரே நேரில் வந்து வணக்கம் செலுத்தினாா். குடும்பத்தினரை அழைத்து, அவா்கள் அழுத கண்ணீரைத் துடைத்தாா். தேசியக் கொடியோடும், ராணுவ மரியாதையோடும் அவருடைய ஆன்மா அடங்கியது.

சிவாஜி பூங்காவில் அவருடைய பூவுடலைச் சந்தனக்கட்டைகள் எரித்தாலும், அவற்றிலிருந்து சங்கீதம் தான் மணக்கும். லதா மங்கேஷ்கா் இனி இல்லையென்றாலும், அவருடைய நாத கீதங்கள் காற்றுள்ளவரையில், நமது செவிமடல்களில் ரீங்காரம் இட்டுக்கொண்டேயிருக்கும்.

கட்டுரையாளா்:

பேராசிரியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com