பட்டாசுத் தொழிலும் மனித உயிரும்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
2 min read

ஆண்டுக்கு ஒருநாள் மக்கள் தீபாவளிப் பண்டிகை கொண்டாட ஆண்டு முழுவதும் உயிரைக் கையில் பிடித்தபடி பட்டாசுத் தொழிலாளர்கள் வேலை செய்துதான் ஆக வேண்டுமா? பட்டாசு ஆலைகளில் நடக்கும் தொடர் விபத்துகளைப் பார்க்கும் போது இப்படி ஒரு கேள்வி எழுகிறது. விருதுநகர் மாவட்டம் சிவகாசிக்கே உரிய அடையாளங்களாக பட்டாசுத் தயாரிப்பு, தீப்பெட்டித் தயாரிப்பு, அச்சுத்தொழில் ஆகியவை உள்ளன. இதில் அச்சுத்தொழில்,  தீப்பெட்டி தொழில் ஆகியவற்றால் மனித உயிர்களுக்கு ஆபத்து இல்லை. ஆனால், பட்டாசுத் தொழிலில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர்கள் பலியாவது தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
அண்மையில் மதுரை அருகே மேலூரில் பிரதான சாலையோர மண்டபத்தில் நிகழ்ந்த காதணி விழாவை பார்க்க நேரிட்டது. மண்டபத்துக்கு சற்று தொலைவிலிருந்து உறவினர்கள் சீர் வரிசை கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு முன்பு மேள வாத்தியக் குழுவினர் செல்கின்றனர். அதற்கு முன்பாக சிலர் பட்டாசு அதிர்வேட்டுகளை வெடித்துக்கொண்டே செல்கின்றனர். அந்த இடம் பேருந்துகள் செல்லும் பிரதான சாலைப்பகுதியாகும். 
அதைப்பற்றியெல்லாம் பட்டாசு வெடித்தவர்கள் கவலைப்படவில்லை. சரவெடிகளையும் அதிர்வேட்டுகளையும் வெடித்துத் தள்ளி அந்தப் பகுதியையே போர்க்களம்போல் மாற்றிக்கொண்டிருந்தனர். அவ்வழியே சென்ற பேருந்தில் தீ பற்றியிருந்தால் பயணிகளில் பலர் உயிரிழந்திருக்கக்கூடும். அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தால் அதற்கு யார் பொறுப்பு? இப்படி வெடி பொருள்களை பொது இடங்களில் பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது.
எந்த ஒரு பாரம்பரிய கலாசார நிகழ்வாக இருந்தாலும், வீட்டு விஷேசங்களாக இருந்தாலும் மங்கள வாத்திய ஒலி, சடங்கு, சம்பிரதாயங்கள், கலை நிகழ்ச்சிகள்தான் முக்கிய அம்சங்களாக இருக்கும். உறவுகளை அழைத்து விருந்து பரிமாறுவார்கள். இதில் ஒளி, ஒலி அம்சங்கள் காலப்போக்கில் முக்கிய அம்சங்களாக இணைந்துவிட்டன. இன்றைய காலகட்டத்தில் வாண வேடிக்கைகள் இல்லாமல் தீபாவளியோ, திருவிழாவோ, திருமணமோ, ஏன் இறுதி ஊர்வலமோகூட இல்லை என்றாகிவிட்டது. 
இன்றைக்கு நாட்டில் அதிக பட்டாசுகளை உற்பத்தி செய்யும் கேந்திரமாக சிவகாசி மாறிவிட்டது. புது தில்லியில் ஏற்பட்ட காற்று மாசு பிரச்னையால் பசுமைப் பட்டாசுகளை உற்பத்தி செய்யவும், பட்டாசு வெடிக்க நேரத்தை நிர்ணயித்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவால் பட்டாசு உற்பத்தியில் மாற்றங்கள் ஏற்படக்கூடும்; காற்று மாசு குறையக்கூடும். ஆனால், பட்டாசு ஆலை வெடிவிபத்துகளால் உயிர்கள் பலியாவது குறைந்துவிடுமா? வெடிவிபத்து செய்திகள் வரும்போதெல்லாம் பட்டாசுகளே தேவையா என்ற கேள்விதான் எழுகிறது. 
தொழில் நேர்மை என்பதே இல்லாமல் குறுகிய கால இடைவெளியில் அதிக பட்டாசுகளை உற்பத்தி செய்ய முயல்வது, குறைந்த தொழிலாளர்களைக் கொண்டு வேலை செய்வது, அனுமதி பெறாமல் ஆலைகளை நடத்துவது போன்ற விதிமீறல்களால் ஆலைகளில் வெடி விபத்துகள் ஏற்படுகின்றன என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. ஆலை உரிமையாளர்கள், தொழிலாளர்கள், அரசு அதிகாரிகள் ஆகிய மூன்று தரப்பினருமே வெடி விபத்துகளைத் தடுக்க முயற்சி செய்யவில்லை என்பதே வருத்தமளிக்கும் உண்மை.  
உரிமையாளர்கள் தரப்புக்கு வருமானம் மட்டுமே பிரதானம்; தொழிலாளர் தரப்புக்கு அன்றாட வருமானமே பிழைப்புக்கு ஆதாரம்; இவர்களுக்கு தொழில்தான் முக்கியம். ஆனால் அரசு அதிகாரிகளின் பங்கு என்னவென்று பார்த்தால் பெரிய குறைபாடு இருப்பதாகவே தெரிகிறது. இதனால் வெடிக்கக் காத்திருக்கும் எரிமலைகள் போன்று தான் பட்டாசு ஆலைகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. 
பட்டாசுகள் விண்ணில் வெடித்துச் சிதறி நட்சத்திரங்களாக மின்னுவது நம்மைப் பரவசமடைய வைக்கிறது. அந்த கண நேரத்தில், பட்டாசுகள் வெளிப்படுத்தும் நைட்ரஸ், சல்பர் ஆக்ûஸடுகள், கார்பன் மோனாக்ûஸடு வேதிப்பொருள்கள் காற்றில் கலந்து மாசு ஏற்படுத்துகின்றன; மனிதர்களின் உடலிலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அதை உற்பத்திசெய்யும் தொழிலாளர்களும் பட்டாசுகளுக்கே இரையாகின்றனர் என்பதை மறந்துவிடுகிறோம். அதிர்வேட்டு சப்தம் முதியவர்களையும் இருதய நோயாளிகளையும், ஏன், வீட்டு விலங்குகளையும் பறவைகளையும்கூட பாதிக்கின்றன என்பது தெரிந்தும் தெரியாததுபோல் இருந்துவிடுகிறோம்.
சிவகாசி மற்றும் சாத்தூர் பகுதிகளில் கடந்த ஜனவரி முதல் வாரத்தில் இரு இடங்களில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்து ஏற்பட்டு 10 தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கின்றனர். கடந்த 2018 முதல் 2021 வரையிலான மூன்று ஆண்டுகளில் மட்டும் விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளில் மொத்தம் 32 வெடி விபத்துகள் நேரிட்டுள்ளன. அதில் 54 பேர் பலியாகியுள்ளனர்; 70 பேர் காயமடைந்துள்ளனர். 
ஒவ்வொரு முறை விபத்து நேரிடும்போது அரசு சார்பிலும், ஆலை சார்பிலும் இழப்பீடும், நிவாரணமும் வழங்குகின்றனர். ஆனால் வெடிவிபத்துகள் நிகழாமல் தடுக்க நிரந்தரத் திட்டம் எதையும் அரசு  உருவாக்கவில்லை. மீண்டும் மீண்டும் வெடி விபத்து, உயிரிழப்பு, நிவாரணம் இவைதான் நடந்துகொண்டிருக்கின்றன. 
விருதுநகர் மாவட்டம் கரிசல் மண் நிறைந்த பகுதியாக இருப்பதால் அதன் தட்பவெப்பச் சூழல் பட்டாசுத் தொழிலுக்கு ஏற்றதாக இருக்கலாம். அதற்காக தொழிலாளர்களுக்கு பாதுகாப்பற்ற தொழிலை அவர்கள் செய்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் இல்லையே. பட்டாசுத் தொழிலில் கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெற்றாலும் அதைவிட பெரிது மனித உயிர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 
வேடந்தாங்கல் போன்ற பறவைகள் சரணாலயங்களைச் சுற்றியுள்ள கிராமங்களில் பட்டாசுகளை வெடிப்பதில்லை. பறவைகள் அங்கு மட்டுமல்ல, ஒவ்வொரு வீட்டைச் சுற்றிலும் உள்ளன. ஏன், வீடுகளிலேயே கூடுகட்டியும் வாழ்கின்றன. பறவைகள் இல்லாத இடம் என்பதே இல்லை எனும்போது எல்லா இடமும் வேடந்தாங்கல் என ஏன் நினைக்கக்கூடாது? அப்படி நினைக்கும் நாள் வந்தால்தான் பட்டாசுத் தொழிற்சாலை விபத்துகளும், உயிர்ப் பலிகளும் முடிவுக்கு வரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com