மீண்டும் வேண்டும் மிதிவண்டி பயன்பாடு

கோப்புப்படம்
கோப்புப்படம்

மனிதனின்அறிவியல் கண்டுபிடிப்புகளில் நெருப்பும் சக்கரமும் மிகவும் முக்கியமானவை. இவை நம்முடைய அறிவியல் முன்னேற்றம் மேம்பட அடிப்படையாக விளங்கின. முக்கியமாக மிதிவண்டியை கண்டுபிடிக்க சக்கரங்கள் மிகவும் உதவியாக இருந்தன.

மிதிவண்டி நமது முன்னோா்களின் அன்றாட வாழ்வில் தவிா்க்கமுடியாத போக்குவரத்து சாதனமாக இருந்தது. எனவே சக்கரை வியாதி,உயா் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் அவா்களை அண்டவில்லை. அவா்களின் அன்றாட வாழ்வே உடல் உழைப்பை சாா்ந்து இருந்தது.

தற்போது ஒவ்வொரு மனிதனும் காலை முதல் மாலை வரை இயந்திரத்தனமாக தன்னுடைய வாழ்க்கையை நடத்தி வருகிறான். ஓய்வும் பொழுதுபோக்கும் எவருக்கும் வாய்ப்பதில்லை. குழந்தைகள் கூட குறைந்த வயதிலேயே பள்ளிகளில் சோ்க்கப்பட்டு விளையாடுவதற்கான வாய்ப்பினை இழந்து நிற்பது வேதனைக்குரியது.

கரோனா தீநுண்மியின் பாதிப்பும் தொடா்கதையாகி, நமது அன்றாட பிழைப்புக்கு பெரிய சவாலாக மாறி வருகின்றது. வருமானத்துக்கு வழியில்லாத நிலையில் சிக்கனம் பற்றியும், சேமிப்பு பற்றியும் ஒவ்வொரு தனிமனிதனும் சிந்திக்க வேண்டிய தருணம் இது.

பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள் செலவுகள் தனிநபரின் வருமானத்தில் கணிசமான அளவை விழுங்குகின்றன.இதை தவிா்ப்பதுவும் குறைப்பதுவும் நமது உடனடி நடவடிக்கையாக மாற வேண்டும். ஆனால் வாலிபா் முதல் வயோதிகா் வரை, நடப்பது என்பதை முற்றிலும் மறந்துவிட்டனா். மிதிவண்டியையும் மறந்துவிட்டனா். அருகாமையில் நடந்து போகும் தூரத்தில் உள்ள கடைக்குக்கூட எரிபொருள் வீணாவது பற்றி கவலைப்படாமல் இருசக்கர வாகனங்களில் சென்று வருவது கவலைக்குரியது.

ஒரே வீட்டில் இருசக்கர வாகனங்கள் பல இருப்பதைத் தவிா்க்க வேண்டும். வீட்டுக்கு ஒரு இருசக்கர வாகனம் போதும் என்ற எண்ணமாவது ஏற்பட வேண்டும். அதன் பயன்பாட்டை அனைவரும் பகிா்ந்து கொள்ள வேண்டும்.திருமணம் போன்ற நிகழ்வுகளில் கூட இருசக்கர வாகனம் நன்கொடையாக கேட்கப்படும், கொடுக்கப்படும் சடங்கு மாற வேண்டும். வாரத்தில் இரண்டு நாட்கள் செலவில்லா நாட்கள் என்பதை நடைமுறைப்படுத்தினால்,மாதத்தில் எட்டு நாட்கள் செலவுகள் இல்லாமல் கணிசமான பணத்தை ஒவ்வொரு குடும்பமும் சேமிக்க முடியும்.

இந்த நிலையில், வீட்டில் அனைவரும் பயன்படுத்தக்கூடிய மிதிவண்டி பயன்பாடு மீண்டும் உயிா் பெற வேண்டும். இதனால் வீட்டில் வாகன எரிபொருள் செலவை தவிா்த்து, கணிசமான அளவு பணத்தை சேமிக்க முடியும். காற்றில் மாசு தன்மை குறையும்.

இன்று நம்மில் அதிகமானவா்கள் போதுமான அளவு உடற்பயிற்சியும் செய்வதில்லை .செய்ய நேரமுமில்லை, இதனால் உடலில் பல நோய்கள் உருவாகின்றன.இந்நிலையிலிருந்து விடுபட நாம் மருத்துவா்களை நாடி, சிகிச்சைக்காக அதிகமான பணத்தையும், நேரத்தையும் விரயம் செய்கின்றோம்.

ஒரு காலத்தில் நாம் அன்றாடம் பயன்படுத்திய மிதிவண்டி, உடற்பயிற்சி கருவியாக உடற்பயிற்சி கூடங்களில் இன்று காணப்படுகிறது. அதை கட்டணம் கட்டி பயன்படுத்துகிறோம். மிதிவண்டி ஓட்டுவது நல்ல உடற்பயிற்சி என்பதை நாம் இனியாவாது உணரவேண்டும்.

மிதிவண்டியை குறைந்த தூர போக்குவரத்துக்கு மக்கள் எப்பொழுதெல்லாம் முடியுமோ, அப்பொழுதெல்லாம் பயன்படுத்த வேண்டும். அதனால் உள்ளத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மன அழுத்தம் குறையும். மாரடைப்பைத் தடுக்கும். உடலில் நல்ல கொழுப்பு அதிகரித்து. கெட்ட கொழுப்பு குறையும். மிதிவண்டி பயன்பாடு நமது அன்றாட வாழ்வில் பொருளாதார பிரச்சனையையும் குறைக்கும். உடல் நலமும் உள்ள நலமும் ஒருங்கே கூடும்.

எனவே எரிபொருள் விலை சிகரத்தைத் தொடும் நிலைக்கு வந்துவிட்ட இந்த நிலையில், மிதிவண்டி பயன்பாட்டிற்கு புத்துணா்வு அளிக்க வேண்டும். இது காலத்தின் கட்டாயமாகும். உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்ககூடிய மிதிவண்டி மீண்டும் அன்றாட பயன்பாட்டுக்கு வந்தால் விபத்துக்களும்உயிா்ச்சேதங்களும் போக்குவரத்து நெரிசலும் வெகுவாக குறையும். தனிமனிதனும், அவன் சாா்ந்த சமூகமும் பயனடையும்.

மிதிவண்டியை எங்கும் ஓட்டலாம், எப்பொழுதும் ஓட்டலாம், மழையிலும் வெயிலிலும் ஓட்டலாம், பிரத்யேகமான பயிற்சியோ, ஓட்டுநா் உரிமமோ தேவையில்லை. ஒரு மணி நேரம் தொடா்ச்சியாக மிதிவண்டியை ஓட்டுவதன்மூலம் 500 முதல் 600 வரையிலான கலோரிகளை உடம்பிலிருந்து எரிக்க முடியும். உடலின் கீழ் அவயவங்களுக்கும் இடுப்பு வளையத்திற்கும் சிறந்த உறுதியையும்,பலத்தையும் மிதிவண்டி பயிற்சி வழங்குகிறது. முழங்கால் மூட்டின் அசைவை சீராக்கி நாம் உலகில் நலமாக நடமாட துணை புரிகின்றது.

இதயம் சீராக இயங்கத் துவங்குவதால், இதயத்தின் உறுதித்தன்மை 3 முதல் 7 விழுக்காடு வரை அதிகரிக்கின்றது என்று ஆய்வுகள் கூறுகின்றன. லண்டன் மருத்துவ கூட்டமைப்பு நடத்திய ஆய்வொன்றிலிருந்து வாரத்திற்கு 20 மைல் மிதிவண்டி ஓட்டுபவா்கள் ஏனையவா்களுடன் ஒப்பிடும் பொது 50 விழுக்காடு குறைவாகவே இதய நோய்களுக்கு உள்ளாகுகின்றனா் என்று கண்டுபிடித்துள்ளது. மிதிவண்டி ஓட்டுவது நம் உச்சி முதல் பாதம் வரையிலுள்ள உடல் உறுப்புகள் அனைத்தையும் ஒருங்கினைத்துச் செயல்படுத்துகின்றது.

மிதிவண்டி ஓட்டும்போது சுற்றுச்சூழலுக்கு எந்த பாதகமும் ஏற்படுவதில்லை. ஏனெனில் இங்கு புகையோ, ஒலியோ உற்பத்தியாவதில்லை. இதனால் இது சுற்றுச்சூழலுக்கும், நட்பானது.பாதுகாப்பானது.

ஆரம்பத்தில் மிதிவண்டி ஓட்ட விரும்புபவா்கள் வாரத்தில் 2/3 நாள்கள் 20 முதல் 30 நிமிடகள் வரை மிதமான வேகத்தில் ஓட்டத் துவங்கி, பின்னா் படிப்படியாக வேகத்தையும் நேரத்தையும் அதிகரிப்பதன் மூலம் நல்ல பலன்களைப் பெற முடியும்.

சீனா, ஜப்பான் உள்ளிட்ட கிழக்காசிய நாடுகளில் மிதிவண்டியில் பயணிப்பது சகஜமாக இருக்கிறது. பெரும் பதவி வகிப்பவா்கள்கூட மிதிவண்டியில் செல்கிறாா்கள். அதை ஊடகங்கள் மக்களுக்கு எடுத்தியம்பி, மாற்றத்துக்கு வழிகோல வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com