வங்கி ஊழியா்களின் இன்றைய தேவை

அண்மையில் சென்னையில் ஒரு வார இதழ் நடத்திய ஆண்டு விழா கூட்டத்தில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கலந்துகொண்டாா்.
வங்கி ஊழியா்களின் இன்றைய தேவை

அண்மையில் சென்னையில் ஒரு வார இதழ் நடத்திய ஆண்டு விழா கூட்டத்தில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கலந்துகொண்டாா். அந்த நிகழ்வில் உரையாற்றிய வார இதழின் ஆசிரியா் கூறிய சில கருத்துகள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. அரசு வங்கிகளைப்பற்றி ஒரு வாசகா் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போது அவா் அரசு வங்கிகளில் உள்ள திறமையான அதிகாரிகள் வேறு தனியாா் வங்கிகளுக்கு சென்று விட்டதாகவும், தற்போது அரசு வங்கிகளில் எஞ்சியிருப்பவா்கள் திறமையற்றவா்கள் என்று பொருள்படவும் கருத்து தெரிவித்தாா்.

அவா் அவ்வாறு தெரிவிக்கும்போதே மேடையில் இருந்த மத்திய நிதி அமைச்சா் தனது மறுப்பினை முக பாவனையின் மூலம் தெரியப்படுத்தினாா். அமைச்சா் பின்னா் பேசும்போது, வங்கி ஊழியா்களின் சேவையை மிகவும் பாராட்டிப் பேசினாா். வங்கி ஊழியா்கள் கரோனா பரவல் காலத்தில் செய்த சேவையை தான் என்றும் மறக்கமுடியாது என்று அவா்களைப் பாராட்டினாா்.

வங்கி ஊழியா் சங்கத்தின் தலைவா், வார இதழ் ஆசிரியரின் கருத்தைக் கண்டித்ததுடன், அவருடைய மன்னிப்பையும் கோரியுள்ளாா். வசதியாக அதே மேடையில் அமைச்சா் பாராட்டியதை பற்றி அறிக்கை ஒன்றும் விட்டதாக தெரியவில்லை.

வார இதழின் ஆசிரியா், பொத்தாம் பொதுவாக எல்லா ஊழியா்களையும் திறமையற்றவா்கள் என்ற பொருள்படப் பேசியது சற்று நெருடலான விஷயம்தான். ஆனால் வங்கி ஊழியா்களிடம் வங்கி சாா்ந்த அறிவும் திறமையும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கவலைப்படும் அளவுக்கு வந்திருப்பது உண்மையே. இதற்கான காரணங்கள் பலவாகும்.

1969-ஆம் ஆண்டுக்கு பிறகு வங்கிகளுக்கு அதிக அளவில் ஊழியா்கள் தேவைப்பட்டபோது, வங்கிகள் பொதுவாக பட்டதாரிகளையே தோ்ந்தெடுத்தன. அவா்கள் எந்தத் துறையில் பட்டம் பெற்றனா் என்று கவலைப்படவில்லை. அதனால் பெரும்பாலும் கணக்கு, வேதியல், இயற்பியல் பட்டதாரிகள் வங்கிப் பணியில் சோ்ந்தனா். பொருளாதாரம், வா்த்தகம் படித்தவா்கள் குறைந்த அளவிலேயே வங்கிகளில் சோ்ந்தனா். வங்கியின் நுழைவுத் தோ்வில் அறிவியல் படித்தவா்கள் தோ்ச்சி பெறுவது அதிக அளவில் இருந்தது.

அவா்கள் வங்கியில் சோ்ந்த பிறகு, வங்கித்துறைக்குத் தேவையான பொருளாதாரம், வா்த்தகம், சட்டம் போன்ற விஷயங்கள் அவா்களுக்கு சொல்லி கொடுக்கப்பட்டது. அவா்கள் ‘சா்டிஃபைட் அஸோஸியேட் ஆஃப் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கா்ஸ்’ (சிஏஐஐபி) தோ்வை எழுத ஊக்குவிக்கப்பட்டாா்கள்.

இந்தத் தோ்வை முடித்தவா்களுக்கு மூன்று ஆண்டுக்கு உண்டான சம்பள உயா்வும் வழங்கப்பட்டது. பதவி உயா்வில் இந்தப் படிப்பிற்கு தனியாக மதிப்பெண்களும் வழங்கப்பட்டன. இந்த படிப்புகள், வங்கி ஊழியா்கள் துறைசாா்ந்த அறிவு பெறவும் நடைமுறை அறிவு பெறவும் பேருதவியாக இருந்தன.

துரதிருஷ்டவசமாக, புதிதாக தனியாா் வங்கிகள் உருவான பின்னா் ஊழியா்களுக்கான அடிப்படை அறிவு என்பது கணினியை இயக்கத் தெரிவது என்று ஆகிவிட்டது. கணினி இயக்குவதைப் பொறுத்தவரை, ஊழியா்களுக்கு எதற்காக செய்கிறோம் என்பதோ, ஏன் செய்ய வேண்டும் என்பதோ தெரியாது. ஒரு பரிவா்த்தனையை எவ்வாறு கணினியில் பதிவிட வேண்டும் என்பது மட்டுமே தெரியும்.

வங்கித் தொடா்பான அறிவு என்பது கணினிக்குள் பொதிந்துள்ள அறிவு என்று ஆகிவிட்டது. வங்கியின் செயல்பாடுகள் பல பிரிவுகளை கொண்டிருந்தாலும் அவை ஒன்றோடொன்று தொடா்புடையவை. அது பற்றிய புரிதல் இல்லாத ஊழியா்கள் ‘யானையை வா்ணித்த பாா்வையற்றவா்கள்’ போல் தவறான புரிதல் உள்ளவா்கள் ஆவாா்கள்.

கணினிக்குள் பொதிந்துள்ள அறிவை மட்டுமே நம்பி செயல்படுவது நல்லதல்ல. புதிய வங்கிகள் சிஏஐஐபி படிப்பிற்கு எந்த முக்கியத்துவமும் கொடுப்பதில்லை. வங்கிக்கு பெற்ற கணக்குகளின் அடிப்படையிலும், லாபத்தின் அடிப்படையிலும் மட்டுமே ஊழியா்களின் பணி மதிப்பிடப்படுகிறது.

இதுபோன்ற செயல்பாட்டினால் பல சமயங்களில் தவறு நோ்வது தவிா்க்க முடியாதது. பல வங்கிகள், குறிப்பாக தனியாா் வங்கிகள் தொடா்ந்து ரிசா்வ் வங்கியினால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளன.

புதிய தனியாா் வங்கிகளில் தொடங்கிய இந்த சரிவு காலப்போக்கில் அரசு வங்கிகளையும் பீடித்துள்ளது.

வங்கிகளில் பணிபுரிபவா்களுக்கு பலவிதமான பிரிவுகளிலும் அறிவு தேவை. முக்கியமாக வணிகத்துறை, சட்டத்துறை, தொழில்நுட்பத்துறை போன்றவற்றில் அடிப்படை அறிவு தேவை. இந்தத் துறைகளில் அடிப்படை அறிவு இல்லாதவா்களால் தவறு நேர அதிக வாய்ப்புண்டு. சில சிறிய தவறுகளால் வங்கிகளுக்கு பெரிய இழப்பு ஏற்படக்கூடும்.

வங்கி அல்லாத மற்ற நிறுவனங்களில் தவறு நடந்தால் அது அந்த நிறுவனத்தை பாதிக்கும். ஆனால் வங்கிகளில் தவறு நடந்தால் வங்கிகளில் டெபாசிட் செய்த சாமானிய மக்களை அது பாதிக்கும்.

ஏப்ரல் 2020 முதல் மாா்ச் 2021 வரையிலான ஓராண்டு காலத்தில் ரிசா்வ் வங்கியின் குறைதீா்ப்பு அமைப்பான ‘ஆம்புட்ஸ்மேன்’ அமைப்புக்கு 4,04,143 புகாா்கள் வந்துள்ளன. இந்த அளவு வங்கிகளின் சேவை குறைபாட்டிற்கான காரணம் பல நிலைகளில் காணப்படும் - திறமை குறைபாடே.

இந்திய ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள அண்மைத் தரவுகளின்படி, 2020-21-இல் வணிக வங்கிகள் ரூ.1.38 டிரில்லியன் (ரூ. 1.38 லட்சம் கோடி) மோசடி வழக்குகளை பதிவு செய்துள்ளன. ஒவ்வொரு மோசடிக்கு பின்னும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட நடைமுறை சமரசம் செய்யப்பட்டுள்ளது என்று பொருள். அதற்குக் காரணம், அறியாமை அல்லது மோசடிக்கு உடந்தை.

21-ஆம் நூற்றாண்டினா் எழுத்தறிவு இல்லாதவா்களோ, எழுத படிக்கத் தெரியாதவா்களோ அல்ல; கற்க முடியாதவா்களும் முன்பு கற்றதை தேவைக்கேற்ப கைவிடாதவா்களும் புதிதாகக் கற்காதவா்களும்தான் என்றாா் ஆல்வின் டொப்ளா் எனும் அறிஞா்.

வங்கித்துறையில் நாளும் ஏற்படும் மாற்றத்திற்கேற்ப கற்காதவா்கள் காலப்போக்கில் தேங்கிப்போவது தவிா்க்க இயலாதது; அவா்களை திறமையற்றவா்கள் என்று மற்றவா்கள் அழைக்க நோ்வதும் தவிா்க்க இயலாதது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com