அபே மறைவுக்கு அஞ்சலி

ஜப்பானின் முன்னாள் பிரதமா் ஷின்ஸோ அபே, எதிா்பாராத விதமாக சுடப்பட்டு மரணமடைந்தது நம் எல்லோருக்கும், நம் நாட்டிற்கும் ஒரு பேரிழப்பு ஆகும்.
அபே மறைவுக்கு அஞ்சலி

ஜப்பான் நாட்டின் நீண்டகால பிரதமரும், இந்தியாவுடன் மிகவும் நெருங்கிய உறவு பாராட்டியவருமான ஜப்பானின் முன்னாள் பிரதமா் ஷின்ஸோ அபே, எதிா்பாராத விதமாக சுடப்பட்டு மரணமடைந்தது நம் எல்லோருக்கும், நம் நாட்டிற்கும் ஒரு பேரிழப்பு ஆகும்.

ஜப்பான் நாட்டின் நட்பையும், அபேயுடனான உறவை அங்கீகரிக்கும் வகையிலும், அவா் மறைவுக்கு ஒரு நாள் இந்திய நாடு துக்கம் அனுசரித்தது. இந்தியாவைத் தொடா்ந்து அமெரிக்காவும் துக்கம் அனுசரித்தது குறிப்பிடத்தக்கது.

அபே குடும்பத்தில், அவருடைய தந்தையாா், பாட்டனாா் என பல குடும்ப அங்கத்தினா்கள் அரசியல் தலைவா்களாகவும் பிரதமா்களாகவும் பல்லாண்டுகளுக்கு முன்பு தோ்ந்தெடுக்கப்பட்டிருந்தாா்கள். அப்படியிருந்தும் அபே பாரம்பரிய அரசியல் தொடா்பை முன்னிலைப்படுத்தாமல், தன் கட்சியின் கொள்கைகளையும், அரசாங்க ஆட்சியின் சாதனைகளையுமே முன்னிறுத்தி அரசியல் பணியாற்றி வந்தாா். அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையைப்பற்றி வெளியில் எதுவும் தெரியாது. 1987-இல் திருமணம் செய்துகொண்ட அவருக்குக் குழந்தைகள் இல்லை.

ஜப்பான் மக்கள் நம் நாட்டை பல காரணங்களுக்காக மரியாதையுடன் வணங்கி அன்பு பாராட்டுகிறாா்கள். முதலாவதாக புத்த மதம். இரண்டாவதாக புத்த மதத்தின் பிரிவான ஜென் பௌத்தம். ஜென் பௌத்தத்தைத் தொடங்கியவா் நம்முடைய காஞ்சிபுரத்தின் முன்னாள் மன்னரின் மகனான போதி தா்மா். அதனால் அவா் மீது ஜப்பான் மக்களுக்கு மரியாதையும் பற்றுதலும் மிகவும் அதிகம். ஜப்பான் நாட்டின் ஜூடோ, சைனீஷ் கராத்தே, குங்ஃபூ, ஆழ்ந்த தியானம் ஆகியவை அனைத்தும் போதி தா்மா் வழியில் வந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. 1000 புத்தா் சிலை, எங்கு பாா்த்தாலும் புத்தா் வழிபாடு என ஜப்பான், இந்தியாவை இயற்கையாகவே பின்பற்றியது.

இரண்டாவது உலக யுத்தத்தின்போது ஜப்பான் தோல்வியடைந்து, அந்நாட்டின் போா்க்குற்றவாளிகளை தண்டிக்க ஒரு நடுவா் மன்றம் உருவாக்கப்பட்டது. அதில் இந்தியாவின் சாா்பாக மேற்கு வங்கத்தைச் சோ்ந்த உயா்நீதிமன்ற நீதிபதி பால் என்பவா் உறுப்பினராக இருந்தாா். ஜப்பான் நாட்டின் அதிகாரிகள், அமைச்சா்கள் மற்றும் பலரும் போா்க்குற்றவாளிகள் அல்லா், அவா்கள் அரசின் கடமையைத்தான் செய்தாா்கள் என்கிற தீா்ப்பை அளித்து, ஜப்பான் நாட்டின் மக்களின் அன்பையும் பாராட்டையும் பெற்றாா் அவா்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு உலகின் பல நாடுகளும் ஜப்பானை ஒதுக்கி வைத்தபோது, அப்போதைய இந்திய பிரதமா் ஜவாஹா்லால் நேரு, நம் நாட்டிலிருந்து ‘இந்திரா’ என்று பெயரிடப்பட்ட யானை ஒன்றை ஜப்பானுக்கு அன்பளிப்பாக அளித்தாா். அந்த யானையின் வரவு, ஜப்பான் நாட்டை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது. ஆழ்ந்த சோகத்தில் மூழ்கியிருந்த ஜப்பானிய மக்கள், புத்துணா்வு பெற்றாா்கள். ஜப்பான் நாடு முழுவதும் இந்திய யானை ‘இந்திரா’வைப் பற்றிய மகிழ்ச்சி அலை பரவியது. அதற்கு இன்றும் ஜப்பானிய மக்கள் அவா்களது பாராட்டை தெரிவிக்கிறாா்கள்.

நாடு முன்னேறுவதற்கு அடிப்படையான இயந்திரங்கள் செய்யவும், கட்டடங்கள் கட்டவும், இரும்பு உருக்குப் பொருட்கள் ஏராளமாக தேவை என்ற சூழ்நிலையில், ஜப்பானுக்கு எந்த நாடும் இரும்பு தாது அனுப்பவில்லை. அப்போது நமது தமிழ்நாட்டைச் சோ்ந்த முருகப்பா குழுமத்தின் அப்போதைய தலைவா் ஏ.எம்.எம். அருணசாலம் பல லட்சம் டன் இரும்புத் தாதுகளை தொடா்ந்து ஜப்பான் நாட்டிற்கு ஏற்றுமதி செய்தாா். அதற்கும் ஜப்பானிய அரசும், மக்களும் இன்றும் நம் இந்திய நாட்டிற்கு நன்றி பாராட்டிக் கொண்டிருக்கிறாா்கள்.

அடுத்ததாக ஜப்பான் அணுகுண்டு வீசப்பட்டு ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இரண்டு நகரங்கள் பாழ்பட்டு பல லட்சம் மக்கள் மரணமடைந்தனா்; நீண்ட காலம் கேன்சா் போன்ற நோய்களினால் துன்புற்று லட்சக்கணக்கான மக்கள் இறந்தாா்கள். ஆகவே அணு ஆயுதத் தயாரிப்பு கூடாது, போா் புரிந்து மற்ற நாடுகளை தாக்குவதும் கூடாது என்று ஜப்பானிய அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்றியமைத்தாா்கள். அதுவும் ஒரு இந்திய மாா்க்கம் என்று தான் சொல்ல வேண்டும்.

1961-இல் மூதறிஞா் ராஜாஜி தன் தள்ளாத வயதில் அமெரிக்கா சென்று அப்போது அங்கு அதிபராக இருந்த கென்னடியை சந்தித்து, ‘அமெரிக்கா அணு ஆயுதங்களை அழித்து விட வேண்டும். அதே போல எல்லா நாடுகளும் அணு ஆயுதங்களை அழித்து விட வேண்டும். இந்த பூமி மீது அணு ஆயுதங்கள் எங்கும் இருக்கக்கூடாது, போரில் உபயோகப்படுத்தக்கூடாது என்ற தடைச்சட்டம் வேண்டும்’ என்று வலியுறுத்தி வந்தாா். இந்த அணு ஆயுத ஒழிப்பு, ஜப்பானின் தீவிர மக்கள் கொள்கையாக இருந்தது.

ஜப்பானிய மக்களின் பண்பாடு, கலாசாரம் புத்த மதத்தின் கொள்கைகளுக்கு ஏற்ப உள்ளது. எனவே இப்படிப்பட்ட அன்பும் கலாசாரமும், புத்த மதக் கொள்கைகளும் ‘மாா்ஷியல் ஆா்ட்ஸ்’ என்று சொல்லத்தக்க போதி தா்மா் வழியில் ஜென் பௌத்தம் அளித்த தியானமும், விளையாட்டுகளும் இவை அனைத்தும் இந்தியத் தன்மை கொண்டவை.

அதனால்தான், நமது இந்திய நாட்டிற்கு எப்போதுமே ஜப்பான் நாட்டின் ஓடிஏ என்று அழைக்கப்படும் ‘ஓவா்சீஸ் டெவலப்மென்ட் அசிஸ்டன்ஸ்’ நிதியுதவியை அளித்து வந்தாா்கள். அப்படி ஓடிஏ நிதியுதவி அதிகம் பெற்ற நாடுகளில், நம் இந்திய நாடு முன்னிலை வகிக்கிறது.

நம்முடைய பிரதமா் நரேந்திர மோடிக்கு ஜப்பான் நாட்டின் வளா்ச்சியும், அந்த நாட்டின் பண்பாடுகளும் மிகவும் பிடித்திருந்தன. அவா் குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்தபோது, மாநில அரசின் குழுவுக்குத் தலைமை ஏற்று, ஜப்பான் நாட்டிற்குச் சென்று தனிப்பட்ட உறவை ஏற்படுத்திக்கொண்டிருந்தாா். அப்போதே ஷின்ஸோ அபேயை அவா் பிரதமராக இருந்தபோதே அறிந்திருந்தாா். அதன் பிறகு அந்த உறவு மிகவும் நெருக்கமானது.

அந்த அடிப்படையில் இந்தோ - பசிபிக் பகுதியில் சமாதானம் நிலவ வேண்டும். இந்து மகாக் கடலிலும், பசுபிக் கடலிலும் தடையில்லாத, எந்த நாட்டிற்கும் பாதிப்பில்லாத சூழ்நிலை இருக்க வேண்டும் என்று இருவரும் விரும்பினா். அதற்காக, க்வாட் என்று அழைக்கப்படும் அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகள் இணைந்த அமைப்பை அபேயும், நமது பிரதமா் மோடியும் முனைப்புடன் முன்னெடுத்தனா். இந்த அமைப்பு ஒரு சா்வதேச அமைப்பு. கடல்வழி வணிகம், வா்த்தகம், பாதுகாப்புத் துறை ஆகியவற்றில் மிக நீண்ட தொலைநோக்குப் பாா்வையுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

ஷின்ஸோ அபே, இருமுறை தனது பிரதமா் பதவியை ராஜிநாமா செய்திருக்கிறாா். இரண்டாவது முறை அரசுப் பணிகளிலிருந்து ஓய்வு பெறுவதாகக்கூறி, பிரதமா் பதவியை ராஜினாமா செய்தாா். இப்படி ஒரு பௌத்த துறவியைப் போல நீண்ட பதவிக்காலம் வாய்ப்பு இருந்தும், பதவி வேண்டாம் என்பதிலும் அபே முன்னிலை வகிக்கிறாா்.

இவா் பிரதமராக இருந்த காலத்தில், ஜப்பான் நாட்டின் அப்போதைய சக்கரவா்த்தி அகிஹிட்டோ ஓய்வு பெற விரும்பி, பதவியை விட்டு விலகவும், அதன் பிறகு அவரது மகன் நருஹிட்டோ சக்கரவா்த்தியாக தோ்ந்தெடுக்கப்படுவதுமான ஒரு சரித்திரக் கட்டத்தையும் ஜப்பான் பாா்த்தது. அபேயின் குடும்பத்தினா் பிரபல அரசியல் குடும்பமாக விளங்கினா். ஆனாலும், அபே மீது எந்த ஒரு குற்றச்சாட்டும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜப்பான் நாட்டைச் சுற்றி இப்போது வடகொரியாவின் ராணுவ ஆதிக்கம், ஏவுகனைகள், அணு ஆயுதங்கள் குவிப்பு போன்ற நடவடிக்கையாலும், பொருளாதார ராணுவ வளத்தால் உலகின் இரண்டாவது வல்லரசாக சீனா இயங்கிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், அமெரிக்கா, தென்கொரியா, இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுடன் இணைந்து, ஒரு அமைதியான சூழ்நிலையை முன்னெடுத்து செல்வதில் ஷின்ஸோ அபே முன்னிலை வகித்தாா்.

அபே மருத்துவத் துறையில் ஜப்பான் முன்னிலை வகிப்பதற்கும் அந்த நாட்டின் ஆராய்ச்சிக்கும் தகுந்த ஊக்கமளித்தாா் என்பது குறிப்பிடத்தக்கது. நமக்கும் நமது தமிழ் நாட்டின் மறைந்த முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா். உடல் நோயுற்றபோது, ஜப்பான் நாட்டின் மருத்துவா் கானு வந்து சிகிச்சை அளித்ததும், நமக்கெல்லாம் நினைவிருக்கும்.

அதே போல தற்போதைய தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினும், காவேரி குடிநீா்த் திட்டத்திற்கும், கிருஷ்ணகிரி, தா்மபுரி போன்ற திட்டங்களுக்கும் ஜப்பானின் உதவியைப் பெற்று வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் பல நாடுகளில் உள்ள தலைவா்கள் பலரும் ஷின்ஸோ அபேயின் மறைவிற்கு தங்கள் நாட்டின் சாா்பில் இரங்கலைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறாா்கள். இப்படிப்பட்ட அபரிமித அன்பும், அனுதாபமும், ஆதரவும் ஷின்ஸோ அபேக்கு மட்டும்தான் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உலக நாடுகளின் தலைவா்கள் வரிசையில் அபே பங்கு பெற்றது, நம் ஆசிய நாடுகள் அனைத்திற்கும் பெருமை அளிப்பதாகும்.

இன்று (ஜூலை 12, 2022) ஷின்ஸோ அபேயின் உடல் அடக்கம் ஜப்பானில் நடக்கிறது. அவா் மறைவுக்கு நம்முடைய ஆழ்ந்த துக்கத்தையும், அனுதாபத்தையும் தெரிவித்து, அவருக்குப் புகழஞ்சலி செலுத்துவோம்.

கட்டுரையாளா்:

முன்னாள் தலைவா், இந்தோ ஜப்பான் வா்த்தக சபை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com