கோப்புப் படம்.
கோப்புப் படம்.

மூடப்பட வேண்டிய போலி ஆலைகள்

 அண்மையில் கடலூரில் பட்டாசு தயாரிப்பு ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கிய மூன்று பேர் உடல் கருகி உயிரிழந்திருக்கின்றனர். சிவகாசி பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து நிகழ்வது தொடர்கதையாகவே உள்ளது. பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து நிகழும் செய்திகளை அவ்வப்போது நாளேடுகளில் நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.
 தென் மாவட்டங்களில் விவசாயம் சார்ந்த தொழில் வாய்ப்பும், ஏனைய தொழில் வாய்ப்புகளும் அரிதாகிக் கொண்டிருக்கிற சூழலில் ஆயிரக்கணக்கான ஏழை எளிய மக்கள் தீப்பெட்டித் தயாரிப்பு, பட்டாசு தொழிற்சாலை இவற்றைச் சார்ந்தே தங்களது வாழ்வாதாரத்தை அமைத்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர்.
 பட்டாசு தயாரிப்பு ஆலைகளில் பாதுகாப்பு விதிமுறைகள், உடைகள், கவசங்கள், கட்டட அளவுகள் மற்றும் கட்டடங்களுக்கிடையேயான இடைவெளிகள் எல்லாமே சரியாக கடைப்பிடிக்கப்படுகிறதா என்கிற கேள்விக்கு நம்மிடம் ஆம் என்கிற பதில் இல்லை. ஆனால், இதையெல்லாம் விட நம்மை அதிர்ச்சியடைய வைக்கும் செய்தி என்னவென்றால், இப்படி விபத்து நடக்கும் பெரும்பாலான பட்டாசு ஆலைகள் போலியானவை என்பதுதான்.
 அதாவது, எந்தவிதமான ஆவணங்களோ, முறையான உரிமமோ பெறாமலே சட்ட விரோதமாக நடத்தப்படுபவை. சமீபத்தில் விபத்துக்குள்ளான கடலூர் பட்டாசு ஆலையின் உரிமம் காலாவதியாகி ஓராண்டுக்கு மேல் ஆகிறது என்கிற செய்தி நம்மை கவலைகொள்ள வைக்கிறது.
 குடிநீரில் ஆரம்பித்து உணவு, மருந்து, மாத்திரை என்று அனைத்திலும் போலிகள் கலந்துவிட்ட இன்றைய காலகட்டத்தில், தீப்பெட்டி தொழிற்சாலைகளும் பட்டாசு தயாரிப்பு ஆலைகளும் சட்ட விரோதமாக செயல்பட்டு வருவது யாருக்கும் நல்லதல்ல.
 புற்றீசல்போல இயங்கும் உரிமம் பெறாத ஆலைகளும் போலி ஆலைகளும் பாராமுகமாக செயல்படும் ஊழல் அரசு அதிகாரிகள் துணையோடு பொதுமக்களுக்கும், சாமானியத் தொழிலாளர்களுக்கும் உருவாக்கப்படும் இடுகாட்டிற்கு ஒப்பானவை. போலிகளால் கிடைக்கும் பொருளாதாரமும் செழிப்பான வாழ்க்கையும் மானுட சமூகத்தை சீரழிக்க வந்த பெருந்தொற்றைவிட கொடுமையானவை.
 விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பட்டாசு உற்பத்தி ஆலைகளில் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, பேரியம் உப்பு கலந்து தயார் செய்யப்பட்ட பட்டாசுகளை தயாரித்தல், சேமித்து வைத்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகத்தால் பட்டாசு உற்பத்தி ஆலைகளை தொடர் ஆய்வு செய்ய வருவாய்த்துறை, காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மற்றும் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் ஆகிய துறைகளை உள்ளடக்கிய ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டன.
 இக்குழுவினரின் தொடர் ஆய்வுகளில் 405 பட்டாசு ஆலைகளுக்கு விளக்கம் கேட்டு குறிப்பாணைகள் வழங்கப்பட்டன. அதிக அளவிலான விதிமீறல்கள் நிகழ்ந்ததாகக் கண்டறியப்பட்ட 174 பட்டாசு ஆலைகளின் உரிமத்தினை இடைக்காலமாக ரத்து செய்தும் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டிருக்கிறது.
 2011 முதல் 2021 வரையிலான பத்து ஆண்டுகளில் பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட வெடி விபத்துகளில் இறந்த அப்பாவித் தொழிலாளர்களின் எண்ணிக்கை முந்நூறுக்கும் மேல். அதே போல, பட்டாசு ஆலை வெடி விபத்துகளில் படுகாயமடைந்தோரின் எண்ணிக்கையும் முந்நூறைத் தாண்டும் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
 இத்தகைய சூழ்நிலையில் உரிமம் பெறாமல் செயல்படும் சட்டவிரோத, போலி பட்டாசு ஆலைகளை சோதனைகளின் அடிப்படையில் களைந்தெடுக்க தெற்கு மண்டல காவல்துறையினர் எடுத்துவரும் நடவடிக்கைகளால், போலிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைத்திருக்கிறது. இதனை பொதுமக்கள் மனதார வரவேற்கின்றனர்.
 இது போலவே கஞ்சா விற்பனைத் தடுப்பில் எவ்வித சமரசமும் செய்யாமல் பாரபட்சமின்றி காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதால் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களை உள்ளடக்கிய தென்மண்டலத்தில் கஞ்சா விற்பனை மற்றும் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு சிக்கிய சுமார் 90-க்கும் மேற்பட்டோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதோடு கஞ்சா வியாபார வருவாயில் வாங்கப்பட்ட குற்றவாளிகளின் சொத்துகள் மட்டுமல்லாது அவர்களது உறவினர்களின் பெயரில் வாங்கப்பட்ட சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன.
 கஞ்சா விற்பனை, கஞ்சா கடத்தலில் ஈடுபடுவோரின் உறவினர்களின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள செய்திகள் போதைகளுக்கும், போலிகளுக்கும் எதிரான காவல்துறையின் நடவடிக்கையை நம்பிக்கையுடனேயே பார்க்கச் செய்கிறது.
 தென்மண்டலத்தில் இருக்கும் 10 மாவட்டங்களில் மொத்தமாக, இதுவரை 494 குற்ற வழக்குகளில் தொடர்புடைய 813 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதால், இப்பகுதிகளில் கஞ்சா விற்பனை சற்றே மட்டுப்பட்டிருப்பது கண்கூடு. மேலும், இது கஞ்சா கடத்தல்காரர்கள், கஞ்சா வியாபாரிகளிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியிருப்பதாக சொல்லப்படுகிறது.
 "கஞ்சா விற்று கோடீஸ்வரர்களான கணவன் - மனைவி' "சோதனையில் சிக்கிய 170 கிலோ போதைப் பொருள்' "கோடிக்கணக்கான ரூபாய் சொத்துகளை முடக்கியது காவல்துறை' என்றெல்லாம் வரும் செய்திகள் இன்றைய இளைஞர்களை, மாணவர்களை போதை பழக்கத்திலிருந்து மீட்டெடுப்பதற்கான அறிகுறிகளாகவே நாம் கருதலாம்.
 அதே நேரத்தில், "டாஸ்மாக்' மதுபானமும் போதை பொருள்தான் என்பதை உணர்ந்து, மதுக்கடைகளை படிப்படியாகவாவது மூடுவதற்கு அரசு உடனடியாக முனைப்பு காட்ட வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com