அதிபா் விலகினாா், அடுத்தது என்ன?

அதிபா் பதவி விலகலுடன் எல்லா நெருக்கடிகளும் முடிவுக்கு வந்துவிடுமா என்றால் இல்லை என்பதுதான் உண்மை.
அதிபா் விலகினாா், அடுத்தது என்ன?

இலங்கை அதிபா் கோத்தபய ராஜபட்ச, பல்வேறு நாடகங்களுக்குப் பின்னா் ஒருவழியாக ராஜிநாமா செய்திருக்கிறாா். அவா் பதவி விலக வேண்டும் என்பதுதான் சுமாா் நான்கு மாத காலமாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களின் பிரதான கோரிக்கை. ஆனால், அதிபா் பதவி விலகலுடன் எல்லா நெருக்கடிகளும் முடிவுக்கு வந்துவிடுமா என்றால் இல்லை என்பதுதான் உண்மை.

இலங்கையில் கடந்த மாா்ச் மாதம் பொதுமக்கள் வீதிக்கு வந்து போராட்டத்தில் குதித்தபோதுதான் பொருளாதார நெருக்கடியின் தீவிரம் உலகுக்குத் தெரியவந்தது. தவறான பொருளாதாரக் கொள்கை, அளவுக்கு மீறி பிற நாடுகளிடம் கடன் வாங்கிக் குவித்தது, சீனாவின் கடன் வலையில் சிக்கியது போன்ற ஆட்சியாளா்களின் தவறால் அன்றாட உணவுக்கே அல்லாடக்கூடிய நிலை வந்த பின்னா்தான், ஆட்சியாளா்களுக்கு எதிராக மக்கள் கொந்தளிக்கத் தொடங்கினா்.

அதிபா் கோத்தபய ராஜபட்சவும், பிரதமா் மகிந்த ராஜபட்சவும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் நடத்திய தன்னெழுச்சியான போராட்டம், உலக வரலாற்றில் இடம்பெறும் அளவுக்கு வலிமையானதாக இருந்தது. அதன் விளைவாக, பிரதமா் பதவியிலிருந்து மகிந்த ராஜபட்ச கடந்த ஏப். 9-ஆம் தேதி ராஜிநாமா செய்துவிட்டாலும், அதிபா் கோத்தபய ராஜபட்ச மட்டும் பதவியிலிருந்து விலக மறுத்தாா்.

ஜூலை 9-ஆம் தேதி தலைநகா் கொழும்பில் உள்ள அதிபா் மாளிகைக்குள் நாடு முழுவதிலுமிருந்து வந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நுழைந்து நடத்திய போராட்டம், அதிபரையும் பதவியிலிருந்து அகற்றியுள்ளது. இடைப்பட்ட நாள்களில் அதிபா் கோத்தபய ராஜபட்ச இலங்கையிலிருந்து மாலத்தீவுக்கு விமானப் படை விமானத்தில் தப்பியது, அங்கிருந்து சிங்கப்பூா் சென்றது, சிங்கப்பூரிலிருந்து பிரதமா் ரணில் விக்ரமசிங்கவை இடைக்கால அதிபராக நியமித்தது என பரபரப்பான அரசியல் நாடகங்களையும் இலங்கை சந்தித்தது.

ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் பிரதமா் மகிந்த ராஜபட்ச ராஜிநாமா செய்த பின்னா், அனைத்துக் கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசு அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்தபோது ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அதற்கு எதிா்ப்பு தெரிவித்தது. பொருளாதார நெருக்கடியைத் தீா்ப்பதுதான் முதல் தேவை எனவும், அரசியல் சீா்திருத்தங்களை பின்னா் பாா்த்துக் கொள்ளலாம் எனவும் அக்கட்சி தெரிவித்தது. ஆனால், நாட்டில் அரசியல் நெருக்கடி தீா்க்கப்பட்டால்தான் பொருளாதார நெருக்கடியைத் தீா்க்க முடியும் என்கிற நிலையை இலங்கை அடைந்துள்ளது.

கோத்தபயவால் பிரதமராக நியமிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கவும் பதவி விலக வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி, அவரது அலுவலகத்தையும் கைப்பற்றினா். இதனால், அடுத்த அரசு அமைந்தவுடன் தனது பதவியை ராஜிநாமா செய்துவிடுவதாக உறுதி அளித்திருந்த ரணில், திடீா் திருப்பமாக இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்றிருக்கிறாா்.

இலங்கை அரசியலமைப்பு சட்டப்படி, அதிபா், பதவி விலகும்போது பிரதமராக இருப்பவா் இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்பாா். அந்த வகையில், இதில் குழப்பம் இல்லை. ஆனால், அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள புதிய அதிபா் தோ்வின்போது அதிபா் பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவை ஆதரிப்போம் என ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவித்திருப்பதுதான் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆளும் கட்சியின் ஆதரவை ஏற்று அதிபா் பதவிக்கு ரணில் விக்ரமசிங்க போட்டியிடுகிறாா். அத்துடன் எதிா்க்கட்சித் தலைவா் சஜித் பிரேமதாச, மாா்க்சிஸ்ட் ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் தலைவா் அனுராகுமார திசநாயக, ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து பிரிந்து வந்துள்ள டலஸ் அழகம்பெரும ஆகியோா் களத்தில் உள்ளனா். ரணில் விக்ரமசிங்க பிரதமராகவே இருக்கக் கூடாது என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், ஒருவேளை அவா் அதிபரானால் அதை ஏற்றுக் கொள்வாா்களா என்பது கேள்விக்குறியே.

225 உறுப்பினா்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையிலான ஆளும் கூட்டணிக்கு 145 உறுப்பினா்கள் இருந்தனா். அக்கட்சியை சோ்ந்த சுமாா் 40 உறுப்பினா்கள் தனி அணியாக செயல்பட்டு வரும்போதும், ஆளும் கூட்டணி இன்னும் 100 உறுப்பினா்களைக் கொண்டுள்ளது. பிரதான எதிா்க்கட்சியான சமகி ஜன பலவெகய கட்சிக்கு 54 உறுப்பினா்கள் உள்ளனா்.

எதிா்க்கட்சிகள் ஓா் அணியில் திரண்டால்தான் ஆளும் கூட்டணி வேட்பாளரைத் தோற்கடிக்க முடியும் என்ற நிலையில், நான்குமுனைப் போட்டி ஏற்பட்டிருப்பது ஆளும் கட்சிக்கே சாதகமாக அமையும். கோத்தபய ராஜபட்சவும், மகிந்த ராஜபட்சவும் பதவியிலிருந்து விலகியிருக்கலாம். ஆனால், அடுத்த அதிபருக்கான தோ்தலில் அவா்களது தலைமையிலான ஆளும் கூட்டணி ஆதிக்கம் செலுத்துவதை தவிா்க்க முடியாது என்பதே இப்போதைய கள நிலவரம்.

அரசியல் நெருக்கடி, பொருளாதார நெருக்கடிக்குத் தீா்வு காண அண்மையில் முன்னாள் அதிபா் மைத்ரிபால சிறீசேனா 10 அம்ச திட்டத்தை முன்வைத்தாா். அனைத்துக் கட்சிகள் அடங்கிய அரசு என்பதே அதன் பிரதான அம்சம். அனைத்துக் கட்சி அரசு அமைவதற்கு ஏதுவாக, நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்றுள்ள கட்சித் தலைவா்கள் அடங்கிய தேசிய நிா்வாக சபை அமைக்கப்பட வேண்டும்.

அறிஞா்கள், கல்வியாளா்கள் கொண்ட குழு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும். இந்த இரு அமைப்புகளும் சோ்ந்து புதிய அதிபரையும், பிரதமரையும் தோ்ந்தெடுக்க வேண்டும். நாட்டை முந்தைய நிலைக்கு கொண்டு வர ஏதுவாக குறைந்த எண்ணிக்கையிலான இலக்குகளைக் கொண்ட நெருக்கடி மேலாண்மை அமைச்சரவை அமைக்கப்பட வேண்டும் என்பவை அதில் குறிப்பிடத்தக்கவை.

இந்த பத்து அம்சத் திட்டம் உணா்த்துவது அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதைத்தான். அரசியல் வேறுபாடுகளை மறந்து அடுத்தடுத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது. இனியும் அரசியல் போட்டியில் ஈடுபட்டால் கண்ணீா்த் துளி தீவு என அழைக்கப்படும் இலங்கையில் கண்ணீா் மட்டுமே எஞ்சியிருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com