முதல் பிரஜையும் முதன்மை பிரஜையும் அவரே!

முதல் பிரஜையும் முதன்மை பிரஜையும் அவரே!

 இந்திய தேசத்தின் 15-ஆவது குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தில்லி நாடாளுமன்ற வளாகத்திலும், மாநில சட்டப்பேரவைகளிலும் ஜூலை 18 அன்று நடந்து முடிந்துள்ளது. ஜூலை 21 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது. புதிய குடியரசுத் தலைவர் ஜூலை 25 அன்று பதவியேற்பார்.
 இந்த நேரத்தில் கடந்த காலத்தில் குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர்கள் தொடர்பான சில நிகழ்வுகளை நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும்.
 இந்தியாவின் ஏழாவது குடியரசுத் தலைவராகப் பதவி வகித்தவர் கியானி ஜெயில் சிங். அந்த காலகட்டத்தில் பாகிஸ்தானின் அதிபராக இருந்தவர் ராணுவத் தளபதி ஜெனரல் ஜியா உல் ஹக். இருவரும் வெளிநாட்டில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள். பின்னர் தனியே சந்தித்து உரையாடினார்கள்.
 ஜியா உல் ஹக் அகந்தையும் குறும்புத்தனமும் கொண்டவர். அவர் நம் நாட்டு குடியரசுத் தலைவரை நோக்கி "ஜெயில் சிங்ஜி உங்களைப் போல் எந்த அதிகாரமும் இல்லாத ஒருவர் எங்கள் தேசத்தில் உள்ளார்'என்றார். ஜெயில் சிங், "அப்படியா, யார் அவர்' என்று வினவினார். அதற்கு பாகிஸ்தான் அதிபர் "எங்கள் நாட்டு பிரதமர்' என்றார்.
 அது கேட்டு அதிர்ந்து போன ஜெயில் சிங், "ஹக் அவர்களே! இந்திய குடியரசுத் தலைவரான நான் என்று வரை பதவியில் இருப்பேன் என்பது எனக்குத் தெரியும். ஆனால் உங்கள் பிரதமரோ என்று பதவியிலிருந்து இறக்கப்படுவார் அல்லது தண்டனைக்கு உள்ளாவார் என்பது அவருக்கே தெரியாதே!
 பொதுத் தேர்தலுக்குப் பின் யாரை பிரதமர் பொறுப்பு ஏற்க அழைக்கலாம் என முடிவு செய்யும் அதிகாரம் என்னிடம் உள்ளது. அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பவனும் நானே! நாடாளுமன்றம் நிறைவேற்றும் மசோதாக்களை நான் ஒப்புதல் தந்தால் மட்டுமே, அவை சட்ட வடிவம் பெறும்.
 அமைச்சரவையின் தீர்மானங்களை திருப்பி அனுப்பும் அதிகாரமும் எனக்கு உண்டு. விளக்கம் கேட்கும் உரிமையும் எனக்கு உண்டு. ஒரு அமைச்சரின் செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை என்றால், அவரைப் பதவி நீக்கம் செய்யும் உரிமை எனக்கு உண்டு. ஆளும் அரசை பதவி விலகச் சொல்லும் அதிகாரமும் எனக்கு உண்டு.
 இவற்றுக்கெல்லாம் மேலாக, அரசுக்கும் அமைச்சர்களுக்கும் ஆலோசனை கூறுவதற்கும், நல்ல முடிவுகள் எடுக்க ஊக்கப்படுத்துவதற்கும், தவறான முடிவு எடுப்பதாகத் தெரிந்தால் எச்சரிக்கை செய்வதற்கும் எனக்கு அதிகாரம் உள்ளது. அவசரநிலை அறிவிக்கும் அதிகாரமும் உண்டு' என்றார். இந்த நீண்ட விளக்கத்தைக் கேட்டு வாயடைத்துப் போனார் ஜியா உல் ஹக் என்பதைக் குறிப்பிடத் தேவையில்லை.
 உண்மையில் இந்திய தேசத்தின் நிர்வாகத் தலைவர் குடியரசுத் தலைவரே. அவர் தேசத்திற்கு ஒரு கலங்கரை விளக்கம் போன்றவர். குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள் பற்றி தொடக்க காலத்திலேயே சர்ச்சைகள் எழுந்தன. அது தொடர்பான விவாதங்கள் இன்றும் தொடர்கின்றன.
 அரசியலமைப்புச் சட்ட வரைவு தயாரிக்கப்பட்டபோது, பேராசிரியர் கே.டி. ஷா, "அதிபர் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். பிரதமரின் குரலை அப்படியே பிரதிபலிக்கும் கிராமபோன் தட்டாக, நீட்டிய இடத்தில் கையொப்பம் இடுபவராக இருக்கக் கூடாது' என்று கூறினார்.
 அதற்கு சட்டமேதை பி.ஆர். அம்பேத்கர் "பிரதமர், குடியரசுத் தலைவர் என்று இரண்டு அதிகார மையங்களை உருவாக்குவது சீரான ஆட்சிமுறைக்கு உகந்ததல்ல. அது சிக்கலுக்கு வழிவகுக்கும். குடியரசுத் தலைவர் என்பவர் பெயரளவில்தான் நிர்வாகத் தலைவர். முடிவு எடுக்கும் உரிமை அவருக்கு இல்லை' என்று பதில் தந்தார்.
 ஆனால், குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்பவர், "அரசியலமைப்பு சட்டத்தை கண்காணித்துப் பாதுகாப்பேன். நாட்டு மக்களின் நலனுக்காகவும், சேவைக்காகவும் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வேன்' என்றுதான் உறுதிமொழி எடுத்துக்கொள்கிறார். எந்த அதிகாரமும் இல்லாதவர் என்றால், எடுத்த உறுதி மொழியை எப்படிக் காப்பாற்ற முடியும் என்பது இன்றும் தொடரும் விவாதப் பொருள்.
 நம் நாட்டின் முதல் குடியரசுத் தலைவரான பாபு ராஜேந்திர பிரசாத், முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேரு இருவருமே அப்பழுக்கற்ற தேசபக்தர்கள். தேர்ந்த சட்ட மேதைகள். அவர்களுக்கிடையே கூட குடியரசுத் தலைவரின் அதிகாரம் பற்றி கருத்து மாறுபாடு எழுந்தது.
 18.9.1951 அன்று, ராஜேந்திர பிரசாத், பண்டித நேருவுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதில், "குடியரசுத் தலைவர் நாடாளுமன்றம் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் நிறுத்தி வைக்கலாம். அமைச்சரவையைப் பதவி நீக்கம் செய்யலாம். அமைச்சரவையைக் கலைத்துவிட்டு, பொதுத்தேர்தல் நடத்துவதற்கு ஆணையும் பிறப்பிக்கலாம். இதற்குரிய அதிகாரங்கள் குடியரசுத் தலைவருக்கு உண்டு' என்று வாதிடுகிறார்.
 அது தொடர்பாக அன்றைய அட்டர்னி ஜெனரல் சீதல்வாட்டின் கருத்தையும் அல்லாடி கிருஷ்ணசாமி ஐயரின் கருத்தையும் கேட்கிறார்கள். இருவருமே "அமைச்சரவையின் ஆலோசனை அல்லது பரிந்துரையின்படிதான் குடியரசுத் தலைவர் செயல்பட முடியும்' என்று கூறுகின்றனர். அதன் பின்னர்தான், "அமைச்சரவையின் ஆலோசனை, குடியரசுத் தலைவரைக் கட்டுப்படுத்தும்' என்ற சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது.
 அமைச்சரவையின் பரிந்துரையை அப்படியே ஏற்பது என்றால், குடியரசுத் தலைவர் பதவி ஒரு அலங்காரப் பதவியா என்ற கேள்வி எழுகிறது. இல்லவே இல்லை! இவருக்கென்று சில கடமைகளும் பொறுப்புகளும் உள்ளன.
 தேர்தலில், எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத குழப்பமான சூழல் எழுமானால், குடியரசுத் தலைவரின் நிலைப்பாடு முக்கியத்துவம் பெறுகிறது. இருப்பவற்றில் எந்தக் கட்சிக்கு பெரும்பான்மை பலம் இருப்பதாக குடியரசுத் தலைவர் கருதுகிறாரோ, அதன்படி செயல்படும் உரிமை அவருக்கு உண்டு.
 அதன்படிதான் அவர் பிரதமரை நியமனம் செய்கிறார். இரண்டாவதாக, அமைச்சரவையின் பரிந்துரை, அரசியல் சட்டத்திற்கு முரணானதாகவோ, மக்கள் நலனுக்கு எதிரானதாகவோ இருப்பதாக அவர் கருதினால், அப்பரிந்துரை குறித்து விளக்கம் கேட்கலாம். மறுபரிசீலனை செய்யுமாறு கூறலாம். தேவையெனில் ஆலோசனையும் வழங்கலாம்.
 பண்டித நேரு பிரதமராக இருந்தபோது, இடைக்கால நாடாளுமன்றத்தில் ஹிந்து நெறி சட்ட மசோதாவை நிறைவேற்ற முயன்றார். அப்போது, குடியரசுத் தலைவராக இருந்த ராஜேந்திரபிரசாத், "மக்களின் வாழ்வையும் கலாசாரத்தையும் பாதிக்கும் இத்தகைய முக்கிய மசோதாவை இப்போதைய இடைக்கால நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவது சரியல்ல. இம்மசோதாவை, தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அடங்கிய நாடாளுமன்றத்தின் முன் வைப்பதே சரியாக இருக்கும்' என்று கூறி இருமுறை மசோதாவைத் திருப்பி அனுப்பினார்.
 ஒருமுறை, அரசின் அணுகுமுறை, கொள்கை முடிவுகளின் மீது தனக்கு திருப்தி இல்லாததை குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிரதமர் நேருவிடம் நேரடியாகவே தெரிவித்தார் என்று அவரது பாதுகாப்பு அதிகாரி மேஜர் சி.எல். தத்தா பதிவு செய்துள்ளார்.
 இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, "1972-இல் நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலை 1971-லேயே நடத்தவேண்டும். அதற்கு முன்னதாக நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும். அதற்கான ஆணையை வெளியிட வேண்டும்' என்று அப்போதைய குடியரசுத் தலைவர் வி.வி. கிரி-க்கு கடிதம் எழுதினார். அவர், "உங்கள் ஆலோசனை அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டதா? அப்படியாயின் அமைச்சரவையின் பரிந்துரை எங்கே' எனக் கேட்டார்.
 அதன்பின் இந்திரா காந்தி அவசரமாக அமைச்சரவையைக் கூட்டி, அதன் ஒப்புதலைப் பெற்று மீண்டும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார். அதன் பின்பே குடியரசுத் தலைவர் கிரி ஒப்புதல் அளித்தார். வி.வி. கிரி குடியரசுத் தலைவர் பதவி பெறுவதற்கு காரணமே பிரதமர் இந்திரா காந்திதான் என்றாலும், தனது அதிகாரத்தை நிலைநிறுத்தினார் அவர்.
 பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டபோது, காங்கிரஸ் எம்.பி.க்கள் தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வரை அன்றைய குடியரசுத் தலைவர் ஜெயில் சிங் காத்திருக்கவில்லை. நெருக்கடியான சூழலில் பிரதமரை நியமிக்கும் அதிகாரம் தனக்கு இருக்கிறது என்றும், அதற்குள்ள ஒரே நிபந்தனை, தன் நியமனத்தை மக்களவை பின்னேற்பு செய்ய வேண்டும் என்றும் கூறி ராஜீவ் காந்தியை பிரதமராக்கி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
 1991 மார்ச்சில், காங்கிரஸ் கட்சி தன் ஆதரவை விலக்கிக் கொண்டபோது பிரதமர் சந்திரசேகர் தனது பதவி விலகல் கடிதத்தை குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமனிடம் கொடுத்தார். அதுவரை 1991-92-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நிறைவேற்றப்படவில்லை! பட்ஜெட் நிறைவேற்றாமல் அரசை நடத்துவது எப்படி?
 அப்போது "பிரதமர் சந்திரசேகரின் பதவி விலகலை ஏற்கிறேன். ஆனால் பட்ஜெட் நிறைவேற்றப்பட்ட பின்புதான், பதவி விலகல் நடைமுறைக்கு வரும்' என்ற புதுமையான அதுவரை முன் மாதிரி இல்லாத ஆணையைப் பிறப்பித்தார் ஆர். வெங்கட்ராமன்.
 அடல் பிகாரி வாஜ்பாய், தனக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ள பெரும்பான்மை உறுப்பினர்களின் பட்டியலை, குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணனிடம் கொடுத்தபோது, அதில் தமிழக அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் இருப்பதைக் கண்ட கே.ஆர். நாராயணன், அதற்கு ஆதாரமாக அதிமுக தலைவரான ஜெயலலிதாவின் உறுதிக் கடிதம் வேண்டும் என வலியுறுத்திப் பெற்றார். அதன் பின்னர்தான் வாஜ்பாய்-க்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.
 பிகார் அரசைக் கலைத்துவிட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்ற வாஜ்பாய் அரசின் பரிந்துரையை கே.ஆர். நாராயணன் ஏற்க மறுத்ததோடு, முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு அறிவுரையும் வழங்கினார்.
 ஆகவே குடியரசுத் தலைவர் என்பவர் தேசத்தின் முதல் குடிமகன் மட்டுமல்ல; முன்மாதிரிக் குடிமகனாகவும் விளங்கவேண்டும். மரபு சீர்முறை வரிசையில் அவரே முதல் இடம் வகிக்கிறார்.
 இத்தகைய பெருமைக்கும் சிறப்புக்கும் உரிய, பல்வேறு அதிகாரங்கள் உடைய குடியரசுத் தலைவர் பதவியில் இதுவரை பெரும்பாலும் அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களே அமர்த்தப்பட்டுள்ளார்கள். டாக்டர் ராதாகிருஷ்ணன், ஜாகீர் உசேன், கே.ஆர். நாராயணன், ஏ.பி.ஜே. அப்துல் கலாம் போன்றவர்கள் அதற்கு விதிவிலக்கு.
 ஆளுங்கட்சித் தலைவர் அல்லது பிரதமரே குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளரை முடிவு செய்கிறார். எதிர்க்கட்சிகள் இணைந்து ஒரு மாற்று வேட்பாளரை முன் நிறுத்துகிறார்கள். இது போட்டிக்கு வழிவகுக்கிறது.
 தேசத்தின் மிக உயர்ந்த பதவியான குடியரசுத் தலைவர் பதவிக்கு கருத்தொற்றுமை அடிப்படையில் போட்டியின்றி ஒருமனதாக ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவதே சிறப்பாக அமையும். அதற்கான வழிமுறையை மூத்த தலைவர்கள், சிந்தனையாளர்கள் கலந்து பேசி முடிவு செய்யவேண்டும்.
 
 கட்டுரையாளர்:
 காந்திய சிந்தனையாளர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com