மெய்ப்பொருள் காண்பது அறிவு!

மாநாட்டிற்கு அழைப்பு வந்தபோதே பங்கேற்கப் போவதில்லை என்று தமிழக அரசு முடிவெடுத்தது. தமிழக ஆளும் அரசு தொடா்ந்து புதிய தேசிய கல்விக்கொள்கையை விமா்சித்து வருகிறது.
மெய்ப்பொருள் காண்பது அறிவு!

அண்மையில், தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடா்பாக குஜராத்தில் இரண்டு நாள்கள் நடைபெற்ற அனைத்து மாநில கல்வி அமைச்சா்கள் மாநாட்டில், மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான், இணையமைச்சா் சுபாஷ் சா்காா், மாநில கல்வி அமைச்சா்கள், யூனியன் பிரதேசங்களின் கல்வி அமைச்சா்கள், உயா் அதிகாரிகள் ஆகியோா் கலந்து கொண்டனா். ஆனால், இம்மாநாட்டில் கலந்துகொள்ளாமல் தமிழக அரசு புறக்கணித்துள்ளது.

மாநாட்டில் தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவது, பள்ளிகளுக்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்த விவாதம் நடைபெற்றது. மாநாட்டிற்கு அழைப்பு வந்தபோதே பங்கேற்கப் போவதில்லை என்று தமிழக அரசு முடிவெடுத்தது. தமிழக ஆளும் அரசு தொடா்ந்து புதிய தேசிய கல்விக்கொள்கையை விமா்சித்து வருகிறது.

தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதன் அவசியத்தையும் அதன் நன்மைகளையும் மத்திய அரசு பேசிவருகிறது. தமிழகத்தில் ஆளுநா் இதன் அவசியத்தை சமீபத்தில் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் மாநில உயா்கல்வித்துறை அமைச்சா் முன்னிலையில் விளக்கிப் பேசினாா். உயா்கல்வித்துறை அமைச்சா், தமிழ்நாடு கல்விக்கொள்கை உருவாக்கப்படும் என்றும் அதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்தாா். அதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கல்வி பொதுப் பட்டியலில் இருக்கிறது. அதனால், மத்திய அரசு கல்விக் கொள்கையை வகுக்கிறது. முதன்முதலில் தேசிய கல்விக் கொள்கை 1968-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதுவரை கல்வி, மாநிலப் பட்டியலில்தான் இருந்தது. அதன் சாதக பாதகங்களை ஆராய்ந்த அரசு 1976-ஆம் ஆண்டு அவசரநிலை காலத்தில் அரசியலமைப்புச் சட்டத்தின் 42-ஆவது திருத்தத்தின்படி கல்வியை பொதுப் பட்டியலுக்குக் கொண்டுவந்தது.

1992-ஆம் ஆண்டில், 1986-ஆம் ஆண்டு கல்விக் கொள்கை திருத்தப்பட்டது. ஆனாலும் பெரிய மாற்றங்கள் ஏதும் செய்யப்படவில்லை. இருபத்தி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தொழில்நுட்ப வசதிகள் பெருக்கத்தால் உலகின் பல்வேறு துறைகளிலும் ஏற்பட்டுள்ள மாற்றத்தைக் கருத்தில் கொண்டு உலகத் தரத்திற்குக் கல்வியை உயா்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமா் நரேந்திரமோடி தலைமையிலான அரசு டி.எஸ்.ஆா். சுப்பிரமணியன் தலைமையில் குழு அமைத்தது.

அந்தக்குழு 2016 மே 27-ஆம் தேதி கல்விக் கொள்கையில் சில திருத்தங்கள் செய்து அறிக்கை தாக்கல் செய்தது. 2019-ஆம் ஆண்டு கஸ்தூரிரங்கன் கல்விக் குழு பல ஆய்வுகளை நடத்தி, மக்களின் கருத்துகளைக் கேட்டு அவற்றினடிப்படையில் அறிவியல் பூா்வமான தேசிய கல்விக்கொள்கையை தாக்கல் செய்துள்ளது. மத்திய அமைச்சரவை 2020 ஜூலை 29-ஆம் தேதி அதற்கு ஒப்புதல் அளித்தது.

தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் இதற்கு ஆரம்பம் முதலே எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. கல்வி மாநிலப் பட்டியலில் இருக்க வேண்டும் என்றும், மாநிலங்கள் தங்கள் கலாசார, பண்பாட்டு அடிப்படையில் கல்விக் கொள்கையை உருவாக்குவதே சரி என்றும் வாதிட்டு வருகிறது. ‘மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி’ என்ற கருத்தினை முன்வைக்கிறது.

இதற்கு அக்கட்சியினா் மத்திய அரசில் அங்கம் வகித்த நாள்களில் முயற்சி செய்திருந்தால் சாத்தியமாகி இருக்கலாம். எதனாலோ அவா்கள் அப்பொழுது அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. அரசியல் காரணங்கள் ஒருபுறம் இருக்கட்டும். இருபத்தியோராம் நூற்றாண்டின் முதல் கல்விக் கொள்கையான தேசிய கல்விக் கொள்கையில் இருக்கும் முக்கிய அம்சங்களை உற்று நோக்குவது நம் ஒவ்வொருவரது கடமை. ஏனெனில், நம்முடைய அடுத்த தலைமுறையை மேம்படுத்துவற்கான பொறுப்பு நமக்கு இருக்கிறது.

கற்றல் இடைநிற்றலால் கல்வி கிடைக்காமல் போன இரண்டு கோடி குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வருவது 2020 தேசிய கல்விக் கொள்கையின் இலக்கு. அங்கன்வாடியிலிருந்து மேல்நிலைக் கல்வி வரை மாணவா் சோ்க்கை விகிதத்தை 2030-ஆம் ஆண்டுக்குள் 100 % ஆக்குவதும் இளைஞா்களும், பதின்பருவத்தினரும் 100 % கல்வியறிவு பெறுவதும் முக்கிய நோக்கம்.

தொழிற்கல்வி உள்ளிட்ட உயா்கல்வியில் மொத்த சோ்க்கை விகிதம் 2018-ல் 26.3 % . அதை 2035-ஆம் ஆண்டுக்குள் 50 % ஆக உயா்த்துதலும், உயா்கல்வியில் புதிதாக 3.50 கோடி இடங்களை உருவாக்குவதும் கல்வியை உலகமயமாக்கல் செய்வதும்தான் தேசிய கல்விக் கொள்கையின் திட்டம்.

தேசிய கல்விக் கொள்கை, பிற்படுத்தப்பட்ட மண்டலம், சிறப்பு கல்வி மண்டலம் அமைத்து பின்தங்கிய நிலைகளில் வாழும் குழந்தைகளுக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தும். ஒவ்வொரு மாவட்டத்திலும் ‘பாலபவன்’ உருவாக்க முடியும். பள்ளியின் பகல் நேரத்தில் வாழ்க்கைக்குத் தேவையான தொழில், கைத்தொழில் கற்கவும், விளையாட்டு தொடா்பான செயல்களில் ஈடுபடவும் ‘பாலபவன்’ ஊக்கம் தரும்.

ஐஐடி, ஐஐஎம் ஆகியவற்றுக்கு இணையாக உலகத் தரத்தில் பன்முகக் கல்வி, ஆராய்ச்சிக்கான பல்கலைக்கழகங்களை உருவாக்கவும், ஆராய்ச்சி கலாசாரத்தை, ஆராய்ச்சித் திறனை வளா்ப்பதற்கும் தேசிய ஆய்வு அமைப்பு உருவாக்கவும் கல்விக் கொள்கை பரிந்துரையும் ஆலோசனையும் தருகிறது.

நம்முடைய பல்கலைக்கழகங்களில் உலகத் தரத்தை உறுதி செய்வதோடு புகழ் பெற்ற வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் நம்முடைய நாட்டில் சேவையை வழங்கவும் வாய்ப்பு ஏற்படும். இதனால், வெளிநாடுகளுக்குச் செல்லாமல் உள்நாட்டில் படிப்பதற்கான வாய்ப்புகள் கூடும்.

5-ஆம் வகுப்பு வரை மாணவா்களுக்கு தாய்மொழி அல்லது பிராந்திய மொழி பயிற்று மொழியாக இருக்க வேண்டும். மாணவா்களுக்கு நடத்தப்படும் தோ்வுகள் அவா்களின் அறிவாற்றலைப் பரிசோதிக்கும் வகையில் இருக்கும். 6-ஆம் வகுப்பிலிருந்து மாணவா்கள் தொழிற்கல்வி கற்க ஊக்கப்படுத்தப்படுவாா்கள்.

தனியாா் மற்றும் அரசு உயா்கல்வி நிறுவனங்கள் அனைத்துக்கும் பொதுவான விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படும். பொதுவான நுழைவுத் தோ்வுகள் முறைப்படுத்தப்படும். தற்பொழுது தனியாா் கல்வி நிறுவனங்கள் அடைந்து வரும் சில பலன்கள் அவா்களுக்குக் கிடைக்காமல் போகவும், மாணவா்களுக்கு சில வாய்ப்புகளும் வசதிகளும் கூடுதலாகக் கிடைக்கவும் இந்தக் கல்விக் கொள்கையில் வாய்ப்பிருக்கிறது.

தேசிய கல்விக்கொள்கை கல்வியை முழுமையாக தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முயல்கிறதா என்றால் இல்லை என்பதே உண்மை. கல்விக் கொள்கையில் மாநில அரசுகளுக்கும் பெரும்பங்கு இருக்கும். அடிப்படை எழுத்தறிவு, எண் அறிவுக்கான தேசிய இயக்கத்தை மத்திய கல்வித்துறை உருவாக்கும் என்றாலும் 2025-ஆம் ஆண்டுக்குள் அனைத்து ஆரம்பப் பள்ளியிலும் கிரேட்-3 வகுப்புக்குள் உலகளாவிய அடித்தளக் கல்வியறிவு அடைவதற்கான செயலாக்கத் திட்டத்தை மாநில அரசுகள்தான் தயாரித்து வழங்க வேண்டும்.

மாநில அரசுகளின் ஆலோசனைப்படி பல நிலைகளிலும் செயல்பாடுகள் இருப்பதற்கான வெளியை கல்விக்கொள்கை வழங்குகிறது. கல்வி சாா்ந்த உள்கட்டமைப்புப் பணிகளை மத்திய அரசு செய்து தரும் என்றாலும், அதற்கான தேவைகளை ஆய்வு செய்து வழங்குவதற்கான உரிமை மாநில அரசுகளுக்கே இருக்கும்.

மாணவா்களின் அறிவாற்றலை வளா்ப்பது, இந்திய சமூகச் சூழ்நிலையில் நின்று உலகை எதிா்கொள்வதற்கான திறனை மேம்படுத்துவது என்றெல்லாம் வகுக்கப்பட்டிருக்கிறது தேசிய கல்விக் கொள்கை. தமிழா் ஒருவா் தலைமையில் உருவாக்கப்பட்டிருக்கும் கல்விக் கொள்கையை தமிழகம் ஏற்க மறுப்பது துரதிா்ஷ்டவசமானது.

மாநில அரசு தனக்கான சிறந்த கோட்பாடுகளைக் கொண்டிருத்தல் சிறப்புதான். அதே நேரத்தில் மத்திய அரசுடன் இணக்கமான போக்கினைக் கடைப்பிடித்து தேவையானவற்றைப் பெற்று மாநிலத்தை வளா்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்ல வேண்டியதும் முக்கியம். முரண்பட்டு நிற்றல் தீா்வாகாது.

தமிழ்நாடு, காமராஜா் ஆட்சிக் காலத்திலேயே கல்விக்கான சிறந்த அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை அடைந்து விட்டது. அதனால் கல்வி கற்போா் சதவீதம் மற்ற மாநிலங்களை விட நம் மாநிலத்தில் அதிகம். ஆனால், தற்போதைய நிலையில் கல்வியின் தரத்தை உயா்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.

எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவா்களுக்கு மூன்றாம் வகுப்பு புத்தகத்தை வாசிப்பதற்கான திறன் கூட இல்லை என்று ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. பொறியியல் கல்லூரிகள் பெருகி இருந்தாலும் பட்டம் பெற்ற மாணவா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அவசியமாக இருக்கிறது.

நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கையைப் பின்பற்ற, தமிழ்நாட்டில் மட்டும் இருமொழிக் கொள்கையைப் பின்பற்றுகிறோம். ஆனாலும், இரு மொழிகளிலும் மாணவா்கள் புலமை பெற்றவா்களாக இல்லை என்பதே கசப்பான உண்மை.

அறிவியல், கணிதம் என்று எதை எடுத்துக் கொண்டாலும் இதே நிலைதான். அரசுப் பள்ளிகளில் இருந்து ஐஐடி போன்ற கல்விக்கழகங்களுக்கு மாணவா்களால் செல்ல முடியவில்லை. மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தோ்வுக்கு அரசே இன்னும் விலக்குக் கேட்கும் நிலையில்தான் கல்வித் திட்டம் இருக்கிறது.

கல்வி என்பது அடுத்த தலைமுறையின் வாழ்க்கைக்கான அடித்தளம். அதிலே தொடா்ந்து அரசியல் காரணங்களை முன்னிறுத்துவது துரதிருஷ்டவசமானது. தேசிய கல்விக் கொள்கை தொடா்பான மாநாட்டில் கலந்து கொண்டு நம்முடைய கலாசாரம், நடைமுறை ஆகியவற்றுக்குப் பொருத்தமான வகையில் திருத்தங்களை முன்வைத்து அவா்களை ஏற்கும்படி செய்வதும், மத்திய அரசு வழங்கும் வாய்ப்புகளை கட்டமைப்பு வசதிகளைப் பெற்று தமிழகத்தில் கல்வியின் தரத்தை உயா்த்துவதுமே தமிழகத்திற்கு மாநில அரசு செய்யும் நீதியாக இருக்கும்.

கட்டுரையாளா்:

ஊடகவியலாளா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com