கடன் வேண்டாம்; கலக்கம் வேண்டாம்!

கடன் வேண்டாம்; கலக்கம் வேண்டாம்!
Published on
Updated on
3 min read

அண்மையில் கடலூரைச் சேர்ந்த ஆயுதப்படைக் காவலர் செல்வகுமார் என்பவர், கந்துவட்டிக் கொடுமையால் தற்கொலை செய்துகொண்டார். அந்த சம்பவம் காவல்துறையினரிடையே ஏற்படுத்திய அதிர்ச்சியின் விளைவாக , தமிழ்நாடு முழுவதும் கந்துவட்டிக் கும்பல்களுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த உத்தரவிட்டிருக்கிறார், காவல்துறைத் தலைவர் சைலேந்திரபாபு.
 கந்துவட்டிக்குப் பணம் பெறுவோர், அதற்குப் பிறகு அனுபவிக்க நேருகின்ற அவமானங்களும், கொடுமைகளும், சித்திரவதைகளும் சொல்லி மாளாதவை!
 எவ்வகையிலும் சட்டத்துக்கு உட்படாமல் முறைகேடாக கடனாளிகளிடம் பணம் பறிக்கின்ற கந்துவட்டியாளர்கள், தாங்கள் எழுதுகின்ற வட்டிக் கணக்குகளை, தங்களிடம் பணம் பெறுவோரிடம் முறையாகவோ எழுத்துபூர்வமாகவோ தெரிவிப்பதில்லை. அதே வேளையில், தங்களிடம் கடன் பெறுவோரை தேவைப்பட்டால் சட்டபூர்வமான நடவடிக்கைகளுக்கு உட்படுத்த ஏதுவாக வெற்றுத் தாள்களிலும், நிரப்பப்படாத விண்ணப்பங்களிலும் கையொப்பங்களையும் வாங்கி வைத்துக் கொள்கின்றனர். அதாவது சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்படுகிற அவர்கள், சட்டப்படியும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முனைகின்றனர்.
 எனவேதான் கந்துவட்டிக்காரர்களின் வசமிருக்கின்ற கடனாளிகள் கையொப்பமிட்ட வெற்றுத் தாள்கள், கடனாளிகளின் கையொப்பம் பெறப்பட்ட வெற்றுக் காசோலைகள், அவர்களின் கணக்கு ஆவணங்கள் போன்றவற்றைப் பறிமுதல் செய்யுமாறு மாநில அளவில் காவல்துறையினருக்குக் கட்டளையிட்டுள்ள காவல்துறைத் தலைவர், கந்துவட்டி கலாசாரத்துக்கு எதிரான காவல்துறையின் நடவடிக்கைக்கு, "ஆபரேஷன் கந்துவட்டி' என்று பெயரிட்டுள்ளார்.
 கந்துவட்டிக் கொடுமையால் பாதிக்கப்பட்டு ஏராளமானவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்; பலர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர். இது தமிழ்நாட்டில் நெடுங்காலமாக நடைபெறும் தொடர்கதை என்றாலும்கூட, கடந்த ஆறு ஆண்டுகளில் இத்தகைய அவலங்கள் அதிர்ச்சி தரத்தக்க அளவுக்கு தீவிரம் பெற்றுள்ளன.
 செங்கற்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தை அடுத்த புத்தூர் பகுதியில் வசிக்கும் ரவி என்பவர், அச்சரப்பாக்கத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று, லாரி, பொக்லைன் போன்றவற்றை வாங்கினார். அதற்கு ரவியின் நெருங்கிய நண்பரான நீலமேகம் என்பவர், நிதி நிறுவனத்தின் ஜாமீன் பத்திரத்தில் கையொப்பமிட்டுள்ளார்.
 கரோனா பெருந்தொற்று கால பொருளாதார சீர்குலைவு காரணமாக அக்கடனுக்கான தவணைகளை முறையாகச் செலுத்துவதில் ரவிக்கு தொய்வு ஏற்பட, அந்த நிறுவனம் அவருடைய வாகனங்களைப் பறிமுதல் செய்ததோடு, அதுவரை ரவி கட்டிய தவணை அனைத்தும் வட்டிக்கே சரியாகிவிட்டது என்றும், அவருக்கு ஜாமீன் கையொப்பமிட்ட நீலமேகத்தின் நிலத்தைப் பறிமுதல் செய்வோம் என்றும் நெருக்குதல் கொடுத்ததோடு, நீலமேகம் தனது சொத்துகளை வேறு எவருக்கும் விற்றுவிட முடியாதபடி இணையவழியில் வில்லங்கத்தையும் ஏற்படுத்தியது.
 இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான நீலமேகம், ஒருநாள் இந்த பிரச்னை தொடர்பாக நிதி நிறுவனத்தாரிடம் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருக்கும்போதே மயங்கி விழுந்து இறந்து போனார். இக்கொடுமை, கடந்த ஜனவரி மாதத்தில் அரங்கேறியது.
 அதற்கு முன்பாக, 2020 -ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் விழுப்புரத்தில், இதே போல கந்துவட்டிக் கொடுமையால் மோகன் என்கிற தச்சுத் தொழிலாளி, அவரது மனைவி, அவர்களின் மூன்று குழந்தைகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் தற்கொலை செய்துகொண்டு இறந்து போயினர்.
 தருமபுரி மாவட்டத்தின் சித்தேரி மலைப்பகுதிகளில் கலசப்பாடி, கருக்கம்பட்டி, தொங்கலூத்து போன்ற கிராமங்களில் வாழுகின்ற மலைவாழ் பழங்குடியின மக்களான காராளக் கவுண்டர்கள், தீபாவளி பண்டிகை, பொங்கல் பண்டிகை செலவுகளுக்காக அயலூர்களைச் சேர்ந்த கந்துவட்டிக்காரர்களிடம் தங்களது நிலங்களை அடகு வைத்துவிட்டு ஆண்டுக் கணக்கில் அவற்றை மீட்க முடியாமல் திணறுவதும், சிலர் தங்களின் நிலத்தை நிரந்தரமாக இழந்து விடுவதும் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்புவரை வழக்கமாக இருந்தது. இப்போதும் அங்கே அந்த நிலை முழுதாக மாறிவிட்டது என்று கூறமுடியாது.
 சிவகங்கை மாவட்டத்தில் சிங்கம்புணரி ஒன்றியத்தைச் சேர்ந்த எஸ். மாம்பட்டி ஊராட்சியில் உள்ள மாம்பட்டி, ஒப்பிலான்பட்டி, சந்திரபட்டி, தும்பைப்பட்டி, இடையப்பட்டி, கிலுகிலுப்பைப்பட்டி, திருப்பதிப்பட்டி, வளையப்பட்டி, கச்சப்பட்டி கழுங்குப்பட்டி, தோப்புபட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள், கடந்த ஐம்பத்தாறு ஆண்டுகளாக தீபாவளியைக் கொண்டாடவில்லை என்று 2014-ஆம் ஆண்டு வெளியான செய்தியொன்று தெரிவிக்கிறது.
 ஒவ்வோர் ஆண்டும் தீபாவளி பண்டிகைக்காக கடன் பெற்று அதற்கு வட்டிமேல் வட்டி கட்டி நொடித்துப்போன நிலையில் ஊர்ப்பஞ்சாயத்தில் இப்படியொரு முடிவு எடுக்கப்பட்டதாக அவ்வூரின் பெரிய அம்பலக்காரர் தெரிவித்திருக்கிறார். இப்போது கூட அவ்வூர்களின் நிலையில் மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்று சொல்ல முடியாது. வட்டிக்குப் பணம் வாங்கி ஒரு மகிழ்ச்சியைக் கொண்டாடித் தீர்த்து விட்டால் அடுத்து கண்ணுக்கெட்டிய தூரம் வரை எந்த மகிழ்ச்சியும் தென்படாது என்பதையே தருமபுரி, சிவகங்கை மாவட்ட கிராமங்களின் நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.
 கடந்த இரு ஆண்டுகளாக கரோனா நோய்த்தொற்றுப் பரவலும், அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பாக மத்திய அரசு மேற்கொண்ட உயர்மதிப்பு செலாவணி செல்லாததாக்கப்பட்ட நடவடிக்கையும் நமது நாட்டின் ஏழை எளிய மக்களுக்கு ஏற்படுத்திய பொருளாதார பாதிப்புகளும், குளறுபடிகளும், குழப்பங்களும், சிக்கல்களும் கொஞ்சநஞ்சமல்ல.
 பதிவு செய்துவிட்டு, தொடங்காமல் கைவிடப்பட்ட ஆயிரக்கணக்கான சிறு குறு தொழில்களின் பட்டியல், அடகு வைத்தவர்களால் ஆண்டுக் கணக்கில் மீட்க முடியாமல் கிடக்கின்ற நகைகளின் ஏலப் பட்டியல், கடன் பெற்றுத் திரும்ப செலுத்தாமல் இருக்கின்ற கடனாளிகளின் பெயர்ப் பட்டியல், கடன் பெற்று திருப்பிச் செலுத்த இயலாமல் இருப்போருக்கான புதிய சலுகைகள்போன்றவற்றை வங்கிகளும், நிதி நிறுவனங்களும் நாளேடுகளில் விளம்பரங்களாக வெளியிட்டு வருகின்றன.
 முன்பெல்லாம் அவ்வப்போது வெளியான இவ்வகை விளம்பரங்கள் இப்போதெல்லாம் அடிக்கடியும், அதிக அளவிலும் வெளியிடப்படுவதிலிருந்து, நமது நாட்டில் கடனாளிகளாகிவிட்ட "இயலாதோரின்' எண்ணிக்கை மட்டுமீறிப் பெருகிவிட்டதை உணர முடிகிறது.
 இன்னொரு பக்கத்தில், தனிப்பட்ட முறையில் தங்களுக்குத் தெரிந்தவர்களிடமும், தெரிந்தவர்களுக்குத் தெரிந்தவர்களிடமும் கடன் பெறுவோர் தொடர்பான சிக்கல்களும், மோதல்களும், கொலைகளும் ஆயிரக்கணக்கில் விரிகின்றன. இவ்வகைக் கடன்கள் குறித்த அவலங்கள், ஊடக விளம்பரங்களாக அல்லாமல் பதற வைக்கின்ற செய்திகளாக வெளிவருகின்றன.
 மற்றொரு பக்கத்தில், வாங்கும் கடனைத் திருப்பிச் செலுத்துகின்ற தகுதியிருந்தும் கூட நமது நாட்டில் பதினைந்து கோடி பேர் "கடனே வேண்டாம்' என்று ஒதுங்கி நிற்பதாக கிரெடிட் இன்ஃபர்மேஷன் பியூரோ இந்தியா லிமிடெட் (சிபில்) ஆய்வு தெரிவிக்கிறது. வங்கிகளும், நிதி நிறுவனங்களும் தங்களிடம் கடன் பெற்றவர்களின் பட்டியலையும், அவர்கள் கடனை முறையாக திருப்பிச் செலுத்துகின்றனரா என்கிற விவரத்தையும் மாதந்தோறும் இந்த "சிபில்' அமைப்புக்கு அறிக்கையாக அளிக்கின்றன.
 அந்த அறிக்கையின் அடிப்படையில் கடன்பெறத் தகுதியானோரின் பட்டியலை இவ்வமைப்பு ஆய்வு செய்து தரவரிசைப்படுத்தி நிதி நிறுவனங்களுக்கு வழங்குகிறது. இந்த அறிக்கையின் அடிப்படையில்தான், நிதி நிறுவனங்களும், வங்கிகளும் கடன் பெறத் தகுதியானோரின் பெயர்ப் பட்டியலை கையில் வைத்துக்கொண்டு கடன் பெற்றுக் கொள்ளுமாறு நம்மை தொடர்ந்து நச்சரித்துக் கொண்டிருக்கிறது.
 அதே வேளையில், கடனைத் திருப்பிச் செலுத்தும் நோக்கமில்லாதவர்கள்தான், போலியான ஆவணங்களைத் தயாரித்து கடன் பெறுவதில் வல்லவர்களாக இருக்கிறார்கள் என்றும் இன்னொரு ஆய்வு சுட்டிக் காட்டுகிறது.
 எது எப்படியிருப்பினும், நமது நிகழ்காலத்தின் தேவைகளும், மட்டுமீறிய பேராசைகளும், நுகர்வு கலாசார வெறியும், வட்டிக் கணக்குகளை விளங்கிக் கொள்ளத் தெரியாத அறிவின்மையும் தற்போது கோடிக்கணக்கான மக்களை கடன்கார நடைப்பிணங்களாக மாற்றியுள்ளன என்று கூறுவது சற்றும் மிகையன்று.
 மக்களின் அனைத்து விதமான பலவீனங்களையும் பயன்படுத்திக் கொண்டு, கோடிகளைக் குவிப்பதில், கந்துவட்டிக்காரர்களும், சில நிதி நிறுவன நிர்வாகிகளும் குறியாக இருக்கின்றனர்.
 குறைந்தபட்ச ஆவணங்களைப் பெற்றுக் கொண்டு, நயமாகப் பேசி விரைந்து கடன் கொடுக்கிற நிதி நிறுவனங்கள் பெருகி வருகின்றன. அப்படிச் செய்வது அவர்களின், "டார்கெட்' என்றாகிவிட்டது.
 தங்களின் நிதி நிறுவனத்தின் வாயிலாக, மக்களுக்குக் கடன் கொடுக்க நயம்படப் பேசுவோரும், கொடுத்த கடனைக் கேட்டு மிகவும் இழிவாகப் பேசுவோரும் வேறு வேறானவர்களாக இருக்கின்றனர். ஒரு நிதி நிறுவனத்தில் கடன் பெறுகிற நூறு பேரில் பத்து பேருக்குக் கூட அக்கடனுக்குள் ஒளிந்திருக்கிற நுட்பமான சுரண்டல் முறைகள் தெரிவதில்லை.
 குறித்த காலத்தில் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் பெரும்பாடுபட்டு பணம் திரட்டி, வட்டி மட்டும் செலுத்தி வாழ்விழந்து போவோரே, இங்கே பல நிதி நிறுவனங்களுக்கான, "காமதேனு'களாக உள்ளனர். போதாக்குறைக்கு இப்போது கடன் செயலிகள் வேறு களமிறக்கப்பட்டு விட்டதால் கடன் அவலங்கள் பெருகி வருகின்றன.
 கந்துவட்டி, மீட்டர் வட்டி உள்ளிட்ட பல்வேறு வகையான நேரடி பொருளாதாரக் குற்றங்களோடு, தற்போது இணையவழி பொருளாதாரக் குற்றங்களும் சேர்ந்து கொள்வதால் நமது காவல்துறைக்கும், அரசுக்கும் நெருக்கடி கூடியுள்ளது.
 இந்நிலையில், கேடுகெட்ட கந்துவட்டிக்காரர்களிடமிருந்தும், பேராசைபிடித்த நிதி நிறுவனங்களிடமிருந்தும் தங்களைத் தற்காத்துக் கொள்ள மக்களுக்கு இருக்கும் ஒரே வழி எச்சரிக்கையோடு அவர்களிடமிருந்து முற்றாக விலகியிருப்பதுதான்.
 அரசும், காவல்துறையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவான நடவடிக்கைகளில் இறங்கலாம். ஆனால் அவ்வாறு நீதி கோருகின்ற நிலைக்கு ஆளாகாமல் இருப்பதே நல்லது.
 கட்டுரையாளர்:
 கவிஞர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com