ஜாதி இரண்டொழிய வேறில்லை!

ஜாதி இரண்டொழிய வேறில்லை!

உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த 1991-ஆம் ஆண்டு ஒரு பெண் உள்பட மூன்று பேர் ஆணவக் கொலை செய்யப்பட்டனர். இந்த ஆணவக் கொலை வழக்கை கடந்த 2011-ஆம் ஆண்டு விசாரித்த உத்தர பிரதேச மாநில விசாரணை நீதிமன்றம், 35 பேரைக் குற்றவாளிகள் என அறிவித்து, அவர்களில் 8 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த வழக்கு, அலாகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டு விசாரணைக்கு வந்தபோது, குற்றவாளி என விசாரணை நீதிமன்றம் அறிவித்த 35 பேரில் இருவரை விடுவித்தும், 8 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியும் உத்தரவிட்டது.
 இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அண்மையில் இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி எல். நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், குற்றம் சாட்டப்பட்டவர்களின் தெளிவான அடையாளம் இல்லாததன் அடிப்படையில் தண்டனை அளிக்கப்பட்டவர்களில் மூன்று பேரை விடுவித்து உத்தரவிட்டனர். மற்ற 22 பேருக்கு அலாகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியானதே என்று தீர்ப்பளித்தனர்.
 முன்னதாக நீதிபதிகள், "இந்த வழக்கில் 12 சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறியுள்ளபோதும், அவர்களின் வாக்குமூலத்தை சாட்சியமாக ஏற்றுக் கொள்ள முடியும். எந்தவித அழுத்தத்துக்கோ அச்சுறுத்தலுக்கோ இடமின்றி சாட்சிகள் நீதிமன்றத்தில் சுதந்திரமாக சாட்சியம் கூறுவது இன்றைக்கு மிகவும் குறைந்துள்ளது. இது அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள் 19(1) மற்றும் 21 ஆகியவை வழங்கும் உரிமைக்கு எதிராகும்.
 சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறுவதற்குக் காரணம், மாநில அரசு அவர்களுக்குப் போதிய பாதுகாப்பு அளிக்காததும்தான். இது துரதிருஷ்டவசமானது. எனவே சாட்சிகள் எந்தவித பயமுன்றி நீதிமன்றத்தில் சாட்சியம் கூறுவதற்குத் தேவையான பாதுகாப்பை மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும். ஜாதியின் பெயரில் நடைபெறும் இதுபோன்ற கொடூர குற்றங்கள் மீது பொதுச்சமூகம் வலுவான எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்' என்றனர்.
 நம் நாட்டில் கிராமசபை தொடங்கி நாடாளுமன்றம் வரை தேர்தல் வெற்றிக் கணக்கைக் கூட்டவும், பெருக்கவும் பயன்படும் கருவியாக ஜாதி, மதங்களை அரசியல்வாதிகள் கைக்கொண்டுள்ளனர். ஒரு குழந்தை தொடக்கப் பள்ளியில் நுழையும் போதே அதன் ஜாதி குறிக்கப்பட்டு விடுகிறது. இந்த ஜாதிக் குறியீடு ஆவணங்களில் இருந்து நீங்கும் வரை ஜாதி, மதப் பிணக்கும், பகையும் நிற்றல் அரிது.
 மகாபாரதக் காலத்தில் மனித சமூகத்தை ஒரு மனிதனாக உருவகப்படுத்தி அவனது அங்கங்களுக்கென்று நான்கு பிரிவுகளை வகைப்படுத்தினர். இதனை வர்ணம் என்றும் அழைத்தனர். உலகின் முழுமுதற் பொருளான பரம்பொருளை வழிபாடு இயற்றுவோரை உயர்நிலையில் வைக்கும் வண்ணம் முகத்திற்கும், நாட்டைப் பாதுகாக்க வல்ல தோளாண்மை பெற்றவர்களை தோள்களுக்கும், கொண்டும் கொடுத்தும் வணிக வினையாற்றுவோரை உடலில் இடை பாகத்திற்கும், உடலைத் தாங்கி நிற்கும் கால்களை வேளாண் குடியினருக்கும் என வைத்தனர்.
 மூத்த வேதமான ரிக் வேதம், பிறப்பால் அனைவரும் சமம் என்றே போதிக்கிறது. செய்யும் தொழிலால்தான் ஒருவரை வேறுபடுத்த முடியுமேயின்றி பிறப்பினால் அல்ல என்ற பொருளில்தான் திருக்குறளும் "பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்புஒவ்வா செய்தொழில் வேற்றுமையான்' என்கிறது.
 சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளாக 4 பிரிவுகளாக தொழில்முறை அடிப்படையில் மனித இனம் வகுக்கப்பட்டிருந்தது. பின்னர் பஞ்சமர் என்று 5-ஆவது பிரிவினை ஏற்படுத்தினர். மொகலாயர்கள் காலத்தில் அவர்தம் பெண்களின் வசதிக்காக வீட்டிற்குள்ளாகவே கழிவறைகளைக் கட்டி அதனை சுத்தம் செய்ய ஒரு பிரிவினைரை பணியமர்த்தினர். மனிதக் கழிவுகளைக் கையாளும் மக்களை தீண்டத்தகாதோர் எனவும் அழைக்கலாயினர்.
 காலப்போக்கில் ஆயிரமாயிரம் உட்பிரிவுகள் உண்டாயின. அவற்றிற்கெல்லாம் பெயர் வழங்கப்பட ஜாதிய கலாசாரம் வேர் பிடித்தது.
 1000 ஆண்டுகளுக்கு முன்னர் ராமாநுஜர், சமூகத்தால் விலக்கப்பட்டவர்களுக்கு "திருக்குலத்தார்' எனப் பெயர் சூட்டி அவர்களை உயர்த்தி மகிழ்ந்தார். அவர்கள் ஏனையவரோடு கலக்கவும் வழிகோலினார். பின்னாளில் மராட்டிய தேசபக்தர் வீர சாவர்க்கர்கூட பிற்படுத்தப்பட்டவர்களை ஏனைய சமூகம் ஒதுக்கியபோது, அவர்களுக்கு முப்புரிநூல் அணிவித்து, வேதம் கற்பித்து சமூகத்தில் ஏற்றத்தாழ்வு இருக்கலாகாது என்று முழங்கினார்.
 மகாகவி பாரதியும் "ஜாதி மதங்களைப் பாரோம். உயர் ஜென்மம் இத்தேசத்தில் எய்தினராயின் வேதியராயினும் ஒன்றே அன்றி வேறு குலத்தினராயினும் ஒன்றே' என்று பாடினார். ஒளவையாரும் "சாதி இரண்டொழிய வேறில்லை' என்று சொல்லி வைத்தார். திருமூலர், "ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்று கூறினார்.
 சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பின்னரும் ஜாதி, மத கொடூரங்கள், ஆணவக் கொலைகள் ஒழிந்திடவில்லை என்று உச்சநீதிமன்றம் கவலை அடைய வேண்டாம். பிரார்த்தனை கூடமொன்றில் சிறு சிறு குவளைகளில் சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா, யமுனை, கோதாவரி, கிருஷ்ணா, காவேரி போன்ற நதிகளின் புண்ணிய நீர் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. பின்னர் வேள்வி நடத்துபவர் அனைத்தையும் பெரியதொரு பாத்திரத்தில் கொட்டி விட்டார். இப்போது அது எந்த நதியின் புனித நீர் என்று பிரிக்க இயலுமா? முழுதுமே புனித நீர்தான் என்பதுபோல, எல்லா ஜாதிகளையும் இரண்டு வகையாக பிரித்து விட்டால், பின் உன் ஜாதி, என் ஜாதி ஏது? யாரால் பிரித்து கூறி வெறுப்பு அரசியல் நடத்தவியலும்?
 திண்டிவனத்திற்கு அருகில் உள்ள கிராமத்தில் பிறந்தவர் அசோக் எள்ளுச்சாமி என்ற இளைஞர். அவர் தனது படிப்பாற்றலால் உயர்ந்து அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று அந்நாட்டின் மோட்டார் கார் நிறுவனங்கள் பலவற்றில் பணியாற்றிய அனுபவத்தோடு புகழ் பெற்ற "டெஸ்லா' நிறுவனத்தில் சேர்ந்தார். இவர் தனது விஞ்ஞான தொழில்நுட்பத் திறனால், செல்ல இருக்கும் இடத்தை தானே கணித்துக் கொண்டு, ஒட்டுநர் இன்றி சாலையில் தானே பயணித்து தனது இலக்கை அடையவல்ல உலகின் முதல் காரை உருவாக்கினார். இவரது படிப்பிற்கோ, பணி உயர்வுக்கோ, கண்டுபிடிப்புத் திறமைக்கோ இவரது ஜாதி, மத பின்புலம் காரணமல்ல என்பதை உணர வேண்டும்.
 திறன் மிகுந்தவர்களை உலகம் இருகரம் கூப்பி வரவேற்கும் என்பது முழு உண்மை. உலகின் 10 முன்னணி நிறுவனங்களில் 9 நிறுவனத் தலைவர்கள் இந்தியர்கள். அமெரிக்க மருத்துவர்களில் 38 சதவீதம், விண்வெளி ஆய்வு மையத் தலைவர் பில் நெல்சன் கூறியதுபோல் நாசாவில் 36 சதவீதம், மைக்ரோ சாப்ட் நிறுவனத்தில் 34 சதவீதம், ஐ.பி.எம். நிறுவனத்தில் 28 சதவீதம், இண்டெல் நிறுவனத்தில் 27 சதவீதம் பணியில் இந்தியர்கள் இருப்பதற்கு அவர்களுடைய ஜாதி, மத அடையாளங்கள் உதவவில்லை.
 இதற்காகத்தான் நம் நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட, எளிய மக்கள் தங்கள் திறனை வளர்த்துக் கொண்டு எவரோடும் போட்டியிட வல்லவர்களாக மாற வேண்டிய காலக்கெடுவை, ஒரு கால எல்லைக்குள் வரையறை செய்து அரசியல் சாசனத்தில் அண்ணல் அம்பேத்கர் எழுதி வைத்தார். ஆனால், நாம் இன்னும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஆனாலும் ஜாதி, மத அடையாளங்களைக் குறைவுபடாமலும், பழுது அடையாமலும் பாதுகாத்து நம்மை நாமே வெட்டி சாய்த்துக் கொள்வோம் என சூளுரைக்கிறோம். அடங்காது அடம் பிடிக்கிறோம்.
 அடுத்த 50 ஆண்டுக்காலத்திற்குத் தொடக்கப் பள்ளி பதிவேடுகள் முதல் பல்கலைக்கழகப் பதிவேடுகள் வரை எந்த ஒரு விண்ணப்ப படிவத்திலோ சான்றிதழ்களிலோ ஜாதி, மதக் குறியீடுகள் குறிக்கப்படாது என்றதொரு நிலையை உச்சநீதிமன்றம் ஆணையாக அளிக்க வேண்டும். அதனைப் பின்பற்றி மத்திய, மாநில அரசுகள் அரசாணை பிறப்பிக்க வேண்டும்.
 இன்றைக்குப் பல ஆண்டுகள் முன்னர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அணு விஞ்ஞானி ஏ.பி.ஜே. அப்துல் கலாமை அன்றைய பிரதமர் இந்திரா அம்மையார் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது அடல் பிகாரி வாஜ்பாய் கலாமை ஆரத்தழுவி பாராட்டினார்.
 அப்போது இந்திரா காந்தி குறும்பாக சிரித்துக்கொண்டே, "அவர் ஒரு இஸ்லாமியர்' என்று வாஜ்பாயிடம் சொன்னார். அதற்கு வாஜ்பாய், "கலாம் முதலில் ஓர் இந்தியர். பின்னர்தான் இஸ்லாமியர்' என்றார். அவர் கூறியதை அவை உறுப்பினர்கள் மிகவும் ரசித்தார்கள்.
 இன்றைக்குக்கூட, நாட்டில் திரை அரங்குகளில், பேருந்துகளில், தொடர் வண்டிகளில், உணவு விடுதிகளில், இன்ன பிற பொது இடங்களில் நடமாடுபவர்களில் யார் யார் என்னென்ன ஜாதி, என்னென்ன மதம் என்று தெரியுமா? தெரிய வாய்ப்பில்லை. அவர்களுக்கு ஒதுக்கப்படும் இருக்கைகளில் ஜாதி, மத அடையாளங்கள் இருப்பதில்லை. ஒருமுறை அண்ணல் அம்பேத்கர் ஆர்.எஸ்.எஸ். கூட்டம் நடந்த இடத்திற்கு சென்றபோது, அங்கே யாரும் ஜாதியை கேட்பதில்லை என்பதை அறிந்து வியப்புற்றார் என்பது வரலாறு.
 எனவே, ஜாதி, மத அடையாளங்களை ஒரு 50 ஆண்டு காலத்திற்காகவது ஒத்திவைப்போம். அதன் விளைவாக, ஜாதி, மதம் இல்லாத இந்தியன் தோன்றுவான் என்பது நிச்சயம்.
 
 கட்டுரையாளர்:
 தலைவர்,
 திருக்கோவலூர் பண்பாட்டுக் கழகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com