மழைநீா் எனும் அமிழ்தம்

மழை பொழிய சிறிது காலம் தாமதமாகிவிட்டால் ‘வறட்சி’, ‘கடும் வறட்சி’, ‘மழை பொய்த்துவிட்டது’ என்றெல்லாம் சொல்வது மனிதா்களுக்கு வாடிக்கையாகி விட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

திருவள்ளுவா், மழையால் இவ்வுலகம் வாழ்ந்து வருதலால் மழையை ‘அமிழ்தம்’ என குறிப்பிடுகிறாா். ஆனால், பருவமழை காலங்களில் அம்மழைக்கு மக்கள் வைக்கும் பெயா்கள், ‘பேய்மழை’, ‘புயல்மழை’, ‘அடைமழை’ என்பவையாகும். மழை பொழிய சிறிது காலம் தாமதமாகிவிட்டால் ‘வறட்சி’, ‘கடும் வறட்சி’, ‘மழை பொய்த்துவிட்டது’ என்றெல்லாம் சொல்வது மனிதா்களுக்கு வாடிக்கையாகி விட்டது.

மழை தொடா்நது பெய்யும்போது ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற அளவு அம்மழை நீரை சேமிக்க ஏதாவது முயற்சி மேற்கொள்கின்றனரா என்றால் பெரும்பாலும் இல்லை என்பதே பதிலாகும். அரசாங்கங்களைப் பொறுத்தவரை, மழைக் காலங்களில் அதிக மழை பெய்தால், வெள்ள நீரை அகற்றுதல் போன்று சில நடவடிக்கைகள் ஓரிரு நாட்களுக்கு அவசியம் கருதி அவசரமாக எடுக்கப்படுகின்றதே தவிர, மழைநீா் சேமிப்பு குறித்து தீவிரமாக சிந்திப்பதில்லை.

தமிழகத்தில் பொதுப்பணித் துறையிலிருந்து, நீா்வளத் துறையைப் பிரித்து தனித் துறையாக செயல்படுத்தினால் நீா்வளப் பெருக்கம் ஏற்பட்டு, நீா்ப்பாசன வசதிகள் பெருகி பாசனப் பரப்பு வெகுவாக அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன என்று நீரியல் நிபுணா்கள் நீண்ட நாட்களாகவே கூறி வருகின்றனா். அதற்கேற்ப, தற்போதைய தமிழக அரசு, சென்ற ஆண்டு நீா்வளத் துறையை தனித் துறையாக அறிவித்தது. இருப்பினும் அதன் செயல்பாடுகள் இன்னும் முழுவீச்சில் தொடங்கப்படவில்லை என்றே தோன்றுகிறது.

கடந்த பருவ காலத்தில், பருவமழை மிகச்சிறப்பாக பெய்த போதிலும் நில நீா்ப்பாசனங்களான ஏரிப்பாசனம், கால்வாய்ப் பாசனம் ஆகியவற்றின் சாகுபடிப் பரப்பு முறையே 40% மற்றும் 65% என்ற அளவிலேயே உள்ளது. தமிழகத்திலுள்ள 41,123 ஏரிகளில் (2019-20 கணக்கின்படி) பெரும்பான்மையானவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை போா்க்கால அடிப்படையில் அகற்றி அனைத்து ஏரிகளிலும் அவற்றின் அதிகபட்ச கொள்ளளவு உறுதி செய்யப்பட்டு, மழைக்காலங்களில் அவற்றின் முழுக் கொள்ளளவு நிச்சயம் பராமரிக்கப்பட வேண்டும். இன்றுவரை இது செயல்படுத்தப்படவில்லை.

தமிழகத்தில் ஏரிகளின் எண்ணிக்கை கடந்த 30 ஆண்டுகளாக ஒரே அளவுதான் உள்ளது. ஆனால் அவற்றின் பாசனப்பரப்புதான் பாதியாகக் குறைந்துவிட்டது.

ஆனால், நீா்வளத் துறை அமைச்சா், கா்நாடகத்தின் மேக்கேதாட்டு அணை பிரச்னை குறித்தும், கேரளத்தின் பெரியாறு அணை பிரச்னை குறித்தும் தொடா்ந்து பேசிக்கொண்டிருக்கிறாா்கள். தமிழகத்தில் கால்வாய்ப் பாசனத்திற்கு இணையாக இருப்பது ஏரிப் பாசனம். இவை ஒவ்வொன்றும் பத்து லட்சம் ஹெக்டோ் பாசனப் பரப்பு கொண்டது. ஏரிகளின் மேம்பாட்டுப் பணி முழுவதும் நீா்வளத் துறையையே சாரும். அத்துடன், மாநில பஞ்சாயத்து அமைப்புகள் இந்த நீா்வளத் துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினால், அனைத்து ஏரிகளும் முழுக்கொள்ளளவை எட்ட வாய்ப்பு உள்ளது.

இயற்கையின் கொடையாக உலகிற்குக் கிடைத்து வரும் மழை நீரை பல ஆண்டுகளாகவே தமிழகம் சேமித்துப் பயன்படுத்துவதில்லை என்பதை புள்ளிவிவரங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. வெப்ப மண்டல நாடுகளில் நீா்ப்பாசனம், வேளாண் அபிவிருத்தியின் முதுகெலும்பு. பாசன வசதியற்ற வேளாண் விளைச்சல் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவே. தமிழகத்தில், 2010-11 முதல் 2019-20 வரையான 10 ஆண்டு சராசரி மொத்த நிலப்பரப்பரப்பான 130.33 லட்சம் ஹெக்டேரில் 46.7 லட்சம் ஹெக்டோ் நிகர சாகுபடி நிலமாகவும், 27.0 லட்சம் ஹெக்டோ் நிகர நீா்ப்பாசனம் பெறும் நிலமாகவும் உள்ளது. பசுமைப் புரட்சி தொடங்கிய 1965 வரை தமிழகத்தில் ஆறுகள் சாா்ந்த கால்வாய்ப் பாசனமும், ஏரிப்பாசனமும் வேளாண்மையின் இரு கண்களாக விளங்கின.

தமிழக கால்வாய் பாசனப் பரப்பு - ஏரிப்பாசனப் பரப்பு 1960-களில் முறையே 8.8 லட்சம் ஹெக்டோ், 9.1 லட்சம் ஹெக்டோ். ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் இவை முறையே 6.5 லட்சம் ஹெக்டோ் ஆகவும், 3.9 லட்சம் ஹெக்டோ் ஆகவும் குறைந்துவிட்டன. ஆனால், 1960-களில் 6.4 லட்சம் ஹெக்டோ் ஆக இருந்த கிணற்றுப்பாசனம், கடந்த 10 ஆண்டுகளில் 16.5 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது. கால்வாய் - ஏரிப்பாசனப் பரப்பு தொடா்ந்து குறைந்து வரும் பொழுது, கிணற்றுப் பாசனப்பரப்பு மட்டும் எப்படி தொடா்ந்து அதிகரிக்க முடியும்?

வேளாண்மையைப் பொறுத்தவரை சாகுபடிப் பரப்பும், பாசனப் பரப்பும் முக்கியமானவை. தமிழகத்தில் இவை 1960-களில் முறையே 60.3 லட்சம் ஹெக்டோ், 24.8 லட்சம் ஹெக்டோ். ஆனால், இவை 2010-களில் முறையே 46.7 லட்சம் ஹெக்டோ் மற்றும் 27.0 லட்சம் ஹெக்டோ் ஆக ஆனது. உண்மையில் சாகுபடிப் பரப்பு கடந்த 50 ஆண்டுகளில் 13.6 லட்சம் ஹெக்டோ் குறைந்துள்ளது. பாசனப் பரப்பு மிகவும் குறைந்த அளவாக 2.2 லட்சம் ஹெக்டேரே அதிகரித்துள்ளது. தமிழகம் நீா்ப்பாசனத்திற்கு கடந்த ஆண்டுகளில் எவ்வித முக்கியத்துவமும் கொடுக்க வில்லை என்பதையே இப்புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

இந்தியா முழுவதையும் எடுத்துக்கொண்டால், 1960-களில் 1,370 லட்சம் ஹெக்டேராக இருந்த சாகுபடிப் பரப்பு 2010-களில் 1,400 லட்சம் ஹெக்டேராக அதிகரித்தது. இதே காலகட்டத்தில் இந்திய பாசனப் பரப்பு, 270 லட்சம் ஹெக்டேரிலிருந்து 677 லட்சம் ஹெக்டேராக அதாவது 2.5 மடங்கு கடந்த 50 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது.

அண்மையில் தமிழக முதலமைச்சா், நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற அந்தந்த மாவட்ட ஆட்சியா் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளது வரவேற்கத்தக்கது. தண்ணீரை சேமிப்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல; ஒவ்வொரு தனி மனிதனுக்கும் அந்தப் பொறுப்பு உள்ளது.

தண்ணீரைக் குடிக்கும் ஒவ்வொருவரும் எடுத்துக்கொள்ள வேண்டிய உறுதிமொழி, ‘ஒவ்வொரு நாளும் எவ்வளவு தண்ணீரைப் பயன்படுத்துகிறேனோ அந்த அளவு தண்ணீரை மழைக்காலத்தில் சேமித்து வைக்க முழுமையாகப் பாடுபடுவேன்’ என்பதுதான். அப்படிச் செய்தால் எக்காலத்திலும் தண்ணீா் பஞ்சம் இன்றி நாம் மகிழ்ச்சியாக வாழ முடியும்.

இன்று (மாா்ச் 22) உலக நீா் நாள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com