பணப்புழக்கம் எனும் சக்கர வியூகம்

ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக அரசால் பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படுவது வழக்கம்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக அரசால் பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டும் அதேபோல் 2021-22-க்கான பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில், பணப் பரிமாற்றத்தின்  (மானிட்டரி டிரான்ஸ்மிஷன்) கீழ் சில விவரங்கள் உள்ளன. இங்கு பணப் பரிமாற்றம் என்பதன் பொருள் ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டிக்கு ஏற்ப வங்கிகள் தாங்கள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை மாற்றி அமைப்பதே.

அதிக அளவு பணப்புழக்கத்தாலும், தொடர்ந்து பணப்புழக்கத்தில் தாராளமயத்தை வரும் காலங்களிலும் முன்னெடுப்பதற்கான சாத்தியம் இருப்பதாலும் வங்கிகள் தாங்கள் வழங்கும் கடன்களுக்கு வெளிப்புற அளவுகோல் (எக்ஸ்டேனல் பென்ச்மார்க்) வட்டியினை அனுசரிப்பதாலும் பணப் பரிமாற்றத்திற்கு அவை உதவுகின்றன.

வங்கிக் கடனும் வைப்பு விகிதங்களும்: பிப்ரவரி 2019 முதல் (தற்போதைய தளர்வு சுழற்சி) ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 250 அடிப்படைப் புள்ளிகள் (பேஸிஸ் பாய்ண்ட்) குறைத்துள்ளது. பிப்ரவரி 2019 முதல் நவம்பர் 2021 வரையிலான காலகட்டத்தில், வங்கிகளின் புதிய ரூபாய் கடன்களுக்கான சராசரி கடன் வட்டி விகிதம் (வெயிட்டெட் ஆவெரேஜ் லெண்டிங் ரேட்) 197 அடிப்படைப் புள்ளிகள் குறைந்துள்ளது. மேலும் நிலுவையில் உள்ள கடன்களின் மீது வட்டி விகிதம் 133  அடிப்படைப் புள்ளிகள் குறைந்துள்ளது.

இந்த பணப் பரிமாற்றம், 2021 ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் தனியார் வங்கிகளில் அதிகமாக இருந்தாலும், ஒட்டுமொத்த தற்போதைய பணமதிப்பு நீக்க சுழற்சியில் தனியார் வங்கிகளை விட பொதுத்துறை வங்கிகளில் சற்று அதிகமாக உள்ளது.

2019 பிப்ரவரி முதல் 2021நவம்பர் வரையிலான காலகட்டத்தில், நிலுவையில் உள்ள ரூபாய் கடன்களுக்கான சராசரி கடன் வட்டி விகிதம், பொதுத்துறை வங்கிகளுக்கு 135 அடிப்படை புள்ளிகள் ஆகவும், தனியார் வங்கிகளுக்கு 123 அடிப்படை புள்ளிகள் ஆகவும் குறைந்துள்ளது, அதே சமயம் புதிய ரூபாய் கடன்களுக்கான சராசரி கடன் வட்டி விகிதம், பொதுத்துறை வங்கிகளுக்கு 210 அடிப்படைப் புள்ளிகள் ஆகவும், தனியார் துறை வங்கிகளுக்கு 177 அடிப்படைப் புள்ளிகள் ஆகவும் குறைந்துள்ளது.

மேற்கண்ட புள்ளிவிவரத்திலிருந்து தெரியவருவது, ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டியை 250 புள்ளிகள் குறைத்த போதிலும் வங்கிகள் அந்த அளவு கடனுக்கான வட்டியைக் குறைக்கவில்லை என்பதே. ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டிக்கு ஏற்ப வங்கிகளும் தங்களது கடன் வட்டியை குறைக்கவோ அதிகரிக்கவோ வேண்டுமென அரசும், ரிசர்வ் வங்கியும் எதிர்பார்ப்பது தவறான சிந்தனை. அது போன்றே, வங்கிகள் வெளிப்புற அளவுகோலைக் கடைப்பிடிக்கவேண்டும் என்று அறிவுறுத்துவதும் சரியானதல்ல. 

எந்த ஒரு பொருளின் சில்லறை விற்பனை விலையும், அது வாங்கப்பட்ட இடத்தின் கொள்முதல்  விலையைப் பொறுத்தே அமையும். வட்டி என்பதும் பணத்திற்கான விலையே. வங்கிகள் வழங்கும் கடன்களுக்கான விலை, அதாவது வட்டி, வங்கிகள் தாங்கள் பெற்ற டெபாசிட்டின் வட்டியை பொறுத்தே அமைய முடியும். வேறு சில விகிதங்களின் அடிப்படையில் கடன் விகிதங்களை நிர்ணயம் செய்யும்படி வங்கிகளைக் கேட்பது முற்றிலும் தன்னிச்சையானது. ஆனால், ரிசர்வ் வங்கியின் செயல்பாட்டை யாரும் கேள்வி கேட்காதது வியப்பளிக்கிறது.

ரெப்போ ரேட் என்பது என்ன? அது ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு திடீர் பற்றாக்குறை ஏற்படும்போது வழங்கும் அன்றாட (இடைக்கால) கடன்களுக்கான வட்டி விகிதம். இதற்கு வங்கிகள் தங்களிடம் உள்ள அரசு பத்திரங்களில் செய்த முதலீட்டை ஈடாகக் கொடுக்க வேண்டும். எந்த வங்கியும் இதுபோல் ரிசர்வ் வங்கி வழங்கும் கடன் தொகையை மட்டும் வைத்து தனது வாடிக்கையாளர்களுக்கு கடன் கொடுக்க முடியாது. அவ்வாறு இருக்க ரெப்போ ரேட்டைப் பொறுத்து பணப் பரிமாற்றம் எப்படி நடக்கும்?

உதாரணமாக, 2022 ஜனவரி 14 நிலவரப்படி, அனைத்து திட்டமிடப்பட்ட வங்கிகளும் ரூ.1,18,52,628 கோடி கடனை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி உள்ளன. அதே நாளில், இந்த வங்கிகள் பொதுமக்களிடமிருந்து ரூ.1,64,11,405 கோடி டெபாசிட் பெற்றிருக்கின்றன.  இந்த நாளில் வங்கிகள், ரிசர்வ் வங்கியிடம் இருந்து ரூ.94,732 கோடி மட்டுமே ரெப்போ அடிப்படையில்  கடன் பெற்றுள்ளன. எனவே, வங்கிகளின் கடனானது, பொது மக்களிடமிருந்து திரட்டப்பட்ட வைப்புத் தொகையை அடிப்படையாக கொண்டதே  தவிர, ரிசர்வ் வங்கியிடமிருந்து வாங்கிய கடனை  அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை என்பது தெளிவாகிறது. 

வங்கிகள் வழங்கிய கடன் தொகையில், வெறும் 0.79 சதவீதம் மட்டுமே ரிசர்வ் வங்கியிடம் இருந்து கடனாகப் பெற்றது.  பிறகு எப்படி ரெப்போ விகிதம் வங்கிகளின் கடனை தீர்மானிக்கும் காரணியாக இருக்க முடியும்? ரெப்போ விகிதம் வங்கிகள் தங்கள் கடன் விகிதத்தைக் குறைக்க அல்லது அதிகரிக்க ரிசர்வ் வங்கியின்  ஒரு சமிக்ஞையாக மட்டுமே இருக்க முடியும்; அதற்கான அளவுகோலாக இருக்க முடியாது. 

மேலும் ரெப்போ விகிதம் குறைக்கப்படும் போது வங்கிகளின் வைப்பு விகிதங்களில் குறைப்பு இருக்காது. வங்கிகளின் தற்போதைய நிலையான வைப்பு கணக்குகள் முதிர்வு வரை ஒப்பந்த வட்டி விகிதத்தை ஈர்க்கும். கடன் வாங்குபவர்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்க வங்கிகளை வற்புறுத்துவது வங்கிகளின் நிகர வட்டி விகிதத்தில் வீழ்ச்சிக்கும் வங்கிகளின் நஷ்டத்திற்குமே வழிவகுக்கும்.

பொதுவாக புழக்கத்தில் உள்ள நிதியின் அளவையும் அதற்கான தேவையையும் பொறுத்தே வட்டி விகிதம் அமையும். மார்ச் 21-ஆம் தேதி ரிசர்வ் வங்கியின் கவர்னர் "வளர்ச்சியை ஆதரிப்பதற்குத் தேவையான பணப்புழக்கத்தை மத்திய வங்கி தொடர்ந்து வழங்கும். தாராள பணவியல் கொள்கையை இறக்குவதற்கு பரவலாக எதிர்பார்ப்புகள் இருந்தபோதிலும், ரிசர்வ் வங்கி அதை தவிர்த்து வந்துள்ளது' என்று தெரிவித்துள்ளார். மேலும் பணப்புழக்கம்  அதிகரிப்பதை "சக்கர வியூக'த்துடன் ஒப்பிட்ட அவர், "அதில் நுழைவது எளிது. ஆனால், வெளிவருவது கடினம். ரிசர்வ் வங்கி வெளிவருவதற்கான சரியான திட்டத்துடன் உள்ளது' என்று தெரிவித்துள்ளார். பொறுத்திருந்து பார்ப்போம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com