சான்றோர் வழிகாட்ட வேண்டும்!

சான்றோர் வழிகாட்ட வேண்டும்!
Updated on
3 min read

 தமிழ் இலக்கண நூலான நன்னூல் மாணவனின் இலக்கணம் பற்றிச் சொல்லும்போது, "களிமடி மானி காமி கள்வன் பிணியன் ஏழை பிணக்கன் சினத்தன் துயில்வோன் மந்தன் தொன்னூற்கு அஞ்சித் தடுமா றுளத்தன் தறுகணன் பாவி படிறன் இன்னோர்க்குப் பகரார் நூலே' என்று கூறுகிறது.
 அதாவது, கள் குடிக்கும் குடிகாரன், சோம்பல் உடையவன், பெருமை பேசிக்கொள்பவன், காமுகன், கள்வன், நோயாளி, அறிவற்றவன், மாறுபடப் பேசுபவன், சினமுடையவன், மிகுதியாக உறங்குபவன், மந்தபுத்திக்காரன், தொன்னூல்களைக் கற்க அஞ்சுபவன், அஞ்சவேண்டிய செயல்களுக்கு அஞ்சாதவன், பாவத்தைச் செய்யும் இயல்பு கொண்டவன், பொய் பேசுபவன் மாணவன் ஆவதற்குத் தகுதியற்றவன் என்று விளக்குகிறது.
 இந்த நூற்பாவைப் படிக்கும்போது நமக்கு இன்றைக்கு நிகழும் வருந்தத்தக்க சம்பவங்கள் கண்முன் வருகின்றன. தொடர்ந்து மாணவர்கள் மது அருந்துவது போன்ற காணொலிகளைப் பார்க்கிறோம். சற்றும் அச்சமின்றி சீருடைகளில் இருக்கும்போதே மாணவர்கள் குழுவாகச் சேர்ந்து மது அருந்துகின்றனர். வகுப்பறைகளில், பள்ளி வளாகங்களில் இத்தகைய செயல்கள் அரங்கேறுகின்றன.
 ஆண் குழந்தைகள் மட்டுமல்ல பெண் குழந்தைகளும் சீருடையில் பொது இடத்தில் பலர் எதிரில் சற்றும் தயக்கமின்றி மது அருந்தி கும்மாளம் போடுகின்றனர். மது அருந்துபவன் மாணவன் ஆக முடியாது என்று தமிழ் இலக்கணம் வகுத்திருக்கிறது. தமிழகத்தில் மாணவர்கள் நிலை இன்றைக்கு இத்தகைய அவல நிலையில் இருப்பதற்கு யார் பொறுப்பு?
 மாணவர்கள் பலர் சேர்ந்து வகுப்பறையில் தங்கள் இருக்கைகளை உடைத்து மகிழும் காட்சி பொறுப்பற்ற சமூகம் உருவாகிக் கொண்டிருப்பதை உணர்த்துகிறது. இந்த மாணவர்களின் எதிர்காலம் என்ன? நாளைய தலைமுறை எப்படி இருக்கும்? தமிழர் பெருமையை என்னவென்று இவர்கள் நிலைநிறுத்துவார்கள்?
 ஒரு வகுப்பில் ஆசிரியர் பாடம் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருக்கிறார். அதே வகுப்பில் சில மாணவர்கள் திரைப்படப் பாடலைப் பாடிக் கொண்டு நடனம் ஆடுகிறார்கள். ஆசிரியர் செய்வதறியாது தன்னுடைய கடமை பாடம் நடத்துவது என்பது போல பாடம் நடத்துவதில் கவனமாக இருக்கிறார்.
 வகுப்பறையில் மாணவர்கள் இப்படி நடந்து கொள்ளும்போது ஆசிரியர் அவர்களைக் கண்டித்து நல்வழிப்படுத்த வேண்டாமா என்று நமக்குத் தோன்றலாம். ஆனால், இன்றைய சூழ்நிலையில் அது சாத்தியமில்லை என்பதை மற்றுமொரு காணொலி நமக்கு உணர்த்துகிறது.
 ஆசிரியரை வகுப்பறையிலேயே தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டு அடிக்கச் செல்கிறார் ஒரு மாணவர். அவரின் மூர்க்கத்தனத்தைப் பார்க்கும் நமக்கே அச்சம் மேலிடுகிறது எனும்போது ஆசிரியரின் நிலையை நினைத்துப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.
 ஒரு மாணவன் இப்படி நடந்து கொள்வது மற்ற மாணவர்கள் மனதில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சமூகம் சிந்திக்க வேண்டும். பள்ளிக்கூடத்தில் ஆசிரியருக்குப் பாதுகாப்பற்ற சூழ்நிலை இருக்குமானால் என்னதான் செய்ய முடியும்?
 இதோடு முடியவில்லை. இன்னொரு ஊரில் மாணவர் ஒருவர் தன்னைத் தாக்கியதாக ஆசிரியர் ஒருவர் ஊடகங்களில் புகார் தெரிவிக்கிறார். மாணவர், தன்னைக் கன்னத்தில் அறைந்து விட்டதாகவும் கட்டையுடன் மாணவன் வகுப்புக்கு வெளியே காத்திருப்பதாகவும் தனக்கு உயிர் அச்சம் நிலவுவதாகவும் அந்த ஆசிரியர் சொல்லும்போது பண்பிற் சிறந்த இனத்தின் இன்றைய நிலை இப்படியா என்ற மனச்சோர்வு நமக்கு ஏற்படுகிறது.
 மாணவர் ஆசிரியரிடம் எப்படி கல்வி கற்க வேண்டும் என்பதைக் கூறவந்த நன்னூல்,
 கோடல் மரபே கூறும் காலைப்
 பொழுதொடு சென்று வழிபடல் முனியான்
 குணத்தொடு பழகி அவன்குறிப்பிற் சார்ந்து
 இருவென இருந்து சொல்லெனச் சொல்லிப்
 பருகுவன் அன்ன ஆர்வத்தன் ஆகிச்
 சித்திரப் பாவையின் அத்தகவடங்கிச்
 செவி வாயாக நெஞ்சுகளன் ஆகக்
 கேட்டவை கேட்டவை விடாது
 ளத்தமைத்துப்
 போவெனப் போதல் என்மனார் புலவர்
 என்று கூறுகிறது.
 அதாவது, ஆசிரியர் குறிப்பிட்ட நேரத்தில் மாணவன் அவ்விடம் சென்று முதலில் அவரை வணங்க வேண்டும். ஆசிரியரின் இயல்பறிந்து குறிப்புணர்ந்து மாணவன் செயல்பட வேண்டும். "அமர்ந்துகொள்' என்று அவர் கூறிய பிறகே அமர வேண்டும்.
 ஆசிரியர் சொல்லியபடி பாடத்தைப் படித்தல் வேண்டும். தாகம் கொண்டவன் தண்ணீரைக் கண்டதும் எப்படி ஆர்வத்துடன் பருகுவானோ அப்படிப் பாடத்தில் ஆர்வம் மிகுந்தவனாக மாணவன் இருக்கவேண்டும்.
 சித்திரப்பாவை போல ஆசிரியர்முன் அடக்கத்துடன் இருக்கவேண்டும். பாடங்களைக் காதால் கேட்டு மனதில் இருத்த வேண்டும். முதல்நாள் ஆசிரியரிடம் கேட்டவற்றில் கொண்டுள்ள ஐயங்களை மீண்டும் கேட்டுத் தெளியவேண்டும். "போகலாம்' என ஆசிரியர் சொல்லியபிறகே மாணவன் எழுந்து போகவேண்டும்.
 இவைதான் ஒரு மாணவன் ஆசிரியரிடம் பாடம் கேட்கும் முறைகள். இப்படி நம் முன்னோர்கள் வகுத்திருந்த தொன்று தொட்டுப் பின்பற்றி வந்த ஒழுக்க விதிகளை இன்றைய சமூகம் மறந்தது எதனால்? மாணவர்கள் இதையெல்லாம் அறியாமலே இருக்கிறார்கள் என்பதற்கு யார் பொறுப்பேற்பது?
 நன்னூல் சொல்லும் இந்தக் கருத்துகளை பள்ளிகள் சொல்லிக்கொடுத்திருந்தால், மாணவர்கள் அவற்றைப் படித்திருந்தால் இன்றைய அவல நிலை தோன்றியிருக்குமா? அரசியல்வாதிகள் "நமக்குத் தேவை இருமொழிக் கொள்கையா, மும்மொழிக் கொள்கையா' என்று விவாதித்துக் கொண்டே அரை நூற்றாண்டு காலமாக அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.
 இந்த ஆரவாரத்தில் நாம் நம் மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய தமிழையும், தமிழ் மரபையும் கலாசாரத்தையும் அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கத் தவறிவிட்டோம். தமிழ் அறியாத சமூகத்தை உருவாக்கிவிட்ட பின் இருமொழிக் கொள்கை குறித்தும், மும்மொழிக் கொள்கை குறித்தும் பேசி ஆகப்போவதென்ன?
 புறநானூற்றில் பிசிராந்தையார், "யாண்டு பலவாக நரையில வாகுதல் யாங்கா கியரென வினவுதிராயின் மாண்டவென் மனைவியொடு மக்களும் நிரம்பினர் யான்கண் டனையர் என் இளையரும் வேந்தனும் அல்லவை செய்யான் காக்கும் அதன் தலை ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் பலர் யான் வாழும் ஊரே' என்கிறார்.
 "மாட்சிமை பொருந்திய மனைவியும் அறிவிலும் பண்பிலும் நிறைவு பெற்ற பிள்ளைகளும் வாய்க்கப் பெற்றவன். அதோடு, வாழும் ஊர் சான்றோர் நிறைந்த ஊர் என்பதால் வருத்தம் ஏதுமின்றி மகிழ்ச்சி நிறைவால் முதுமை ஏற்படாமல் வாழ்கிறேன்' என்று விளக்குவதில் தமிழ் சமூகம் சான்றோர் நிறை சமூகமாக, ஒழுக்கத்தில் மேன்மை பெற்ற சமூகமாக வாழ்ந்ததைப் புலப்படுத்துகிறார்.
 இன்று நாம் காணும் மாணவ சமூகம் இப்படித் தகப்பனைப் பெருமைப்படுத்துமா? சான்றோர் நிறைந்த ஊரில் வாழ்வதாகப் பெருமை கொள்ளும் புலவரைப் போல நாளை இந்த இளைஞர் கூட்டம் வாழும் ஊரில் வாழ்பவர்கள் பெருமை கொள்ள முடியுமா?
 நம் பிள்ளைகள் இத்தகைய பண்பாட்டை ஊட்டும் இலக்கியங்களைக் கற்கவில்லையே ஏன்? தமிழ் வாழ்க என்ற கோஷம் மட்டும் தமிழையும் தமிழரையும் வாழ வைத்துவிடுமா?
 தாய்மொழி சொல்லும் விழுமியங்களை அறிந்து கொள்ளாமல் மொழியை, இனத்தை எப்படிக் காப்பார்கள்? உலகுக்கே நாகரிகம் கற்றுக் கொடுத்த தமிழ் மரபும், சிந்தனையும் நம் காலத்தில் நம் கண்முன்னரே மடிவது நமக்கு சம்மதமா? தமிழன் பண்பாடு என்பது, ஆசிரியரைத் தாக்குவதும் வகுப்பறையில் மது அருந்தி மயங்குவதும் என்று வருங்கால சரித்திரத்தில் எழுதிக் கொண்டு பெருமைப்படப் போகிறதா தமிழகம்?
 ஒற்றை ஆறுதல், இந்த மாணவர்களின் செயலைக் கண்டு அவர்களுக்கு வகுப்பறையின் அவசியத்தை எடுத்துச் சொல்லும் காவல்துறை தலைவர் சைலேந்திர பாபுவின் காணொலி.
 வகுப்பறையில்தான் நாம் உலகத்தைத் தெரிந்துகொள்ள முடியும் என்று ஒரு தகப்பனுக்கே உரிய வாஞ்சையோடு அவர் விளக்கும் காட்சி சற்று ஆறுதல் தருகிறது. "அரசு ஏழை மாணவர்களுக்காகவே பள்ளிகளைப் பலகோடிகள் செலவு செய்து நடத்துகிறது.
 பள்ளிக்கூடங்கள் நம்முடைய மதிப்புமிக்க சொத்து. நம்முடைய ஏழ்மையைப் போக்கும், முன்னேற்றத்தைத் தரும் சொத்து என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்' என்று அன்புடன் அவர் எடுத்துச் சொல்கிறார். இந்தப் பொறுப்புணர்வே இன்றைய அத்தியாவசியத் தேவை.
 திரைப்படங்களை உண்மை என்று நம்பி அதன் நாயகன் போல தன்னை நினைத்துக் கொள்ளும் மாணவர்களுக்கு, நல்வழி காட்ட வேண்டிய கடமை திரைப்படத்தில் நாயகர்களாய்த் தோன்றுவோருக்கு இருக்கிறது.
 வகுப்பறையில் ஆசிரியரை மதிக்காமல் தன் பாடலைப் பாடி நடனம் ஆடும் மாணவனுக்கு ஒழுக்கத்தை உணர்த்த வேண்டிய பொறுப்பு அந்த நடிகருக்கு இருக்கிறது அல்லவா?
 பன்னெடுங் காலமாய் அறிவிற் சிறந்த சமூகம், மீண்டும் புத்துயிர் பெற சான்றோர்கள் மாணவர்களுக்கு வழிகாட்ட முன்வர வேண்டும். துறைதோறும் இருக்கும் அறிஞர்கள் மாணவர்களை நெருங்கி வந்து அவர்களுக்குள் இருக்கும் நற்பண்புகளை வெளிக்கொணர வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.
 நம் கடந்த காலப் பெருமைகளை விளக்கி, வருங்காலத்தின் மகத்துவத்தை உணர்த்தி குழந்தைகளை நெறிப்பட்ட பாதையில் கொண்டு வந்து சேர்ப்பதற்கான பொறுப்பு நம் தலைமுறையினர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. இந்தப் பொறுப்பைத் துறந்துவிட்டால் வரலாறு நம்மை மன்னிக்காது.
 
 கட்டுரையாளர்:
 ஊடகவியலாளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com