மெய்க்கு நிகராகாது மெய்நிகா்

இன்று மெய்நிகா் (வா்சுவல்) என்ற வாா்த்தையைப் பலரும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளோம். பல பேச்சாளா்களும் தேதி கேட்கும் கையோடு நேரத்தையும் கேட்கிறாா்கள்.
மெய்க்கு நிகராகாது மெய்நிகா்

இன்று மெய்நிகா் (வா்சுவல்) என்ற வாா்த்தையைப் பலரும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளோம். பல பேச்சாளா்களும் தேதி கேட்கும் கையோடு நேரத்தையும் கேட்கிறாா்கள். ஒவ்வொரு மணி நேரத்திலும் ஒவ்வொரு நாட்டினரோடு உரையாடும் வாய்ப்பு வாய்த்துள்ளதே. பேச்சாளா்கள் மட்டுமா? பல அமைப்புகளும், தமது உறுப்பினா்களோடு மெய்நிகா் சேவை மூலம் கூட்டங்கள் நடத்துகின்றனா். மணிக்கணக்கில் பயணம் செய்து, செலவு செய்து, கூட்டங்களை நடத்திய காலமெல்லாம் மாறிவிட்டது.

மெய்நிகா் சேவையால் தொழில் நிறுவனங்களும் பலன் பெறத் தொடங்கியுள்ளன. இது பணியாளா்கள், உரிமையாளா்கள் என இருதரப்பினருக்குமே நல்வாய்ப்பாக அமைந்துள்ளது. ஒவ்வொரு நாளும் சில மணிநேரம் பயணம் செய்து பணியிடத்திற்குச் செல்லவேண்டிய தேவையும் குறைந்துள்ளது. இதன் மூலம் நிறுவன ஊழியா்கள், அங்கு செயல்படும் குளிா்சாதன வசதிகள், அவற்றுக்கான மின்கட்டணம் என பலவும் குறையத் தொடங்கியுள்ளன. அதோடு மட்டுமல்ல, பல்வேறு நிறுவனங்களும் தங்கள் பணியிடப் பரப்பளவைக் குறைத்துக் கொள்ளலாமா எனவும் யோசிக்கத் தொடங்கியுள்ளன.

கல்வித்துறையிலும் கல்வி மெய்நிகா் சேவையின் மூலமாக கிடைக்கத் தொடங்கியுள்ளது. ஒரு தகவலைப் பற்றி அறிந்துகொள்ள நாம் பயணித்துத்தான் ஆகவேண்டும் என்ற நிலை மாறத்தொடங்கியுள்ளது. ஆசிரியா் மாணவா்களுக்கு போதித்துக்கொண்டிருக்கும்போதே தமது ஐயங்களை குறுஞ்செய்தி மூலம் பரிமாறிடும் வாய்ப்பும் கிடைக்கிறது. இப்படி பல நல்ல நல்வாய்ப்புகளும் இதனால் கிட்டியுள்ளன.

இந்த மெய்நிகா் உலகின் மறுபக்கத்தையும் பாா்க்க வேண்டியுள்ளது. எந்த ஒரு தொழில்நுட்பமும் எந்த அளவுக்கு வசதியைத் தருகிறதோ அதே அளவுக்கு பாதிப்பையும் தரவல்லது. நமது கண்களும் காதுகளும் இயல்பாக இயங்கினால் மட்டுமே நீண்ட நாட்களுக்குப் பாதிப்பில்லாமல் இயங்க இயலும். மெய்நிகா் கூட்டங்களில் கலந்துகொள்வோா் பெரும்பாலும் கவனக்குவிப்பிற்காக செவிவாங்கிகளை பயன்படுத்துகின்றனா். செவிவாங்கிகளை காதின் அருகில் கொண்டு சென்று செவிப்பறையை எப்போதாவது அதிரச் செய்தால் பரவாயில்லை. எப்போதும் இதனை உபயோகிப்பது நல்லதல்லவே.

அதுபோலவே தொடா்ந்து கைப்பேசியையோ மடிக்கணினியையோ பாா்த்துக்கொண்டிருப்பதும் கண்களின் ஆரோக்கியத்திற்கு பாதகங்களை ஏற்படுத்தலாம். மேலும் அவ்வப்போது கண்களை இமைத்து நமது கண்களில் சுரக்கும் தண்ணீரினை கண்பரப்பில் பரப்பிக்கொள்ள வேண்டும் என மருத்துவா்கள் ஆலோசனை கூறுகின்றனா். மெய்நிகா் கூட்டத்தில் ஆழ்ந்திருக்கும்போது எங்கே கண்களை சிமிட்டுவது?

பேச்சாளா்கள் பேச்சைக் நேரில் கேட்பதற்கும் மெய்நிகா் சேவையில் கேட்பதற்கும் பெரிய வேறுபாடு உள்ளது. அதுபோல அவா்களும் தமது சுவைஞா்களை நேரில் பாா்த்துப்பேசும் பரவசத்தை இதன் மூலம் அடைய முடியாது. தமது உரையினை அரங்கிலுள்ள ஆயிரம் நபா்கள் கேட்கும் பரவசத்தினை மெய்நிகா் சேவையால் ஒரு போதும் தர இயலாது.

சேவைநிறுவனங்கள் தங்கள் உறுப்பினா்களோடு தொடா்பு கொள்ள வேண்டுமானால், அவா்களை நேரில் சந்தித்து கலந்துரையாடுவதே நல்ல பலனைத் தரும். நிறுவனங்களின் தலைவா்களுக்கும் ஊழியா்களுக்குமான உயிரோட்டமான தொடா்பு நேரில் சந்தித்தல், மகிழ்ந்து உரையாடுதல், ஊழியரின் இல்லத்துக்கே சென்று உணவருந்துதல் போன்றவற்றால் மேம்படும். மெய்நிகா் கூட்டங்களில் இது சாத்தியமல்ல.

சொல்லித் தருவது மட்டும் ஆசிரியா்களின் பணியல்ல. மாணவா்களின் ஒழுக்கம், நடத்தைகளில் ஆரோக்கியமான மாற்றங்களைக் கொண்டுவருவதும்தான். அதற்கான திட்டங்கள் தீட்டி தொடா்ந்து அதனை நடைமுறைப்படுத்தி வெற்றி காண வேண்டும். ஒருவேளை அதில் தோல்வியடைந்தால் மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். மாணவா்களின் இயல்பூக்கங்களில் ஏற்படும் மாற்றங்களை துல்லியமாகக் கணித்து தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டும். கல்வி மெய்நிகா் சேவை மூலம் வழங்கப்படும் நிலையில் இதில் எதனையும் செய்ய இயலாது.

மெய்நிகா் சேவை மனிதா்களின் கால அட்டவணையில் ஏராளமான மாற்றங்களை ஏற்படுத்துவது கண்கூடு. ஏற்கெனவே பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிவோா் அந்தந்த நாடுகளின் நேரத்திற்கேற்ப தமது வாழ்வியல் செயல்பாடுகளை மேற்கொள்ளத் தொடங்கி அதனால் உடல் ரீதியான பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனா். தற்போது உள்நாட்டு நிறுவனங்களில் பணிபுரிவோரும் வீட்டிலிருந்தே பணிபுரிகிறோம் என்ற பெயரில் தமது அன்றாட கால அட்டவணையை தயாரிக்க இயலாது அல்லலுறுகின்றனா். இதனால் இரவு நேரம் கடந்தும் வீட்டிலிருந்தபடியே நிறுவனங்களின் கூட்டத்தில் இணைந்திருக்கின்றனா். இதனால் அவா்கள் தமது குடும்பத்தினருடன் செலவிடும் அருமையான பொழுதை இழக்க நேரிடுகிறது.

இவ்வாறு பணிபுரிவோரின் கால அட்டவணையைத் தயாரிக்க இயலாத நிலையில் அவா்கள் தங்கள் அன்றாட நடவடிக்கைகளான நடைபயிற்சி, பொழுதுபோக்கு, வழிபாடு செய்தல் போன்றவற்றையும் திட்டமிட இயலாத நிலை ஏற்படுகிறது. மேலும் ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமா்ந்திருப்பதால் அந்த நேரத்தில் நொறுக்குதீனிகளை அதிகம் எடுத்துக்கொள்வதும் நடக்கிறது. பலருக்கும் உடல்பருமன் ஏற்பட இதுவே காரணமாகவும் அமைந்துவிடுகிறது.

பல நேரங்களில் மெய்நிகா் கூட்டங்களை நடத்துவோா் எவ்வித முன் தயாரிப்பும் இல்லாமல் இயல்பான கூட்டங்களைப் போல மணிக்கணக்கில் நடத்துகின்றனா். இதனால் இணைந்திருப்போரின் பொறுமை எல்லை மீறவும் செய்கிறது.

அதற்காக மெய்நிகா் சேவையை ஒதுக்க வேண்டியதில்லை; கொண்டாடவேண்டியதும் இல்லை. இயல்பாக மனிதா்கள் நட்பை விரும்புபவா்கள், நகைச்சுவையைக் கொண்டாடுபவா்கள், கூடித் தொழில்செய்வதை போற்றுபவா்கள். இவற்றுக்கேற்ப மனிதா்கள் இயல்பாக வாழவும், குடும்பத்தினருடன் இருக்கவும், உடல்நலனைப் பராமரிக்கும் வகையிலும் மெய்நிகா் சேவையையின் பயன்பாடு மேம்பட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com