பூட்டிக் கிடக்கலாமா போர்பந்தர் வீடு?

கோப்புப் படம்.
கோப்புப் படம்.

இந்தியாவின் மேற்குப் பகுதியில் அரபிக் கடலோரம் கத்தியவார் என்று ஒரு தீபகற்பம். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அப்பகுதியில் மூன்று சமஸ்தானங்கள் சுதேச மன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தன.
 1872-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, போர்பந்தரில் 72,077 பேர், ராஜ்கோட்டில் 36,770 பேர், வாங்கனேரில் 28,750 பேர் வசித்து வந்தார்கள். அன்றைய சமஸ்தான மன்னர்கள் ஆங்கிலேயர்களுக்கு பயந்தும், பணிந்தும் நடந்தார்கள்; ஆனால் தங்கள் சமஸ்தான மக்களை பல வழிகளில் கொடுமைப்படுத்தினார்கள்.
 மகாத்மா காந்தியின் தாத்தா உத்தம்சந்த், போர்பந்தர் சமஸ்தானத்தில் திவானாகப் பதவி வகித்தார். அப்போது நடைபெற்ற அரசியல் சூழ்ச்சியாலும், மன்னரின் செயல்பாடு பிடிக்காததாலும் உத்தம்சந்த் தன் பதவியை ராஜிநாமா செய்தார்.
 தாத்தாவின் பின்னணி இது என்றால், தந்தை கரம்சந்த் காந்தி ராஜ்கோட் சமஸ்தானத்தின் திவான் பொறுப்பை ஏற்றார். அக்காலகட்டத்தில் மன்னரை ஆங்கிலேய அரசின் ஏஜென்ட் தரக்குறைவாகப் பேசினராம்; அப்படிப் பேசியது தவறு என்று கண்டித்தாராம் கரம்சந்த்.
 கொதிப்படைந்த ஆங்கிலேய அரசு பிரதிநிதி, கரம்சந்த்-ஐ கைது செய்தார்; மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆணையிட்டார். ஆணையை ஏற்க மறுத்த கரம்சந்த், பதவியிலிருந்து விலகினார். இவ்வாறு உண்மைக்கும், உறுதிக்கும் பெயர் பெற்றவர்கள்தான் காந்திஜியின் முன்னோர்.
 காந்திஜி பிறந்த போர்பந்தர், அரபிக் கடலோரத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரம். "சூரியோதய காலத்திலும், சாயங்காலத்திலும், அந்நகரத்தின் கோபுரங்கள் மீது விழும் ஒளிக்கதிர்களால் அந்நகரம் அழகுடன் காட்சி அளிக்கிறது' என்று அண்ணலின் ஐரோப்பிய நண்பரும், சீடருமான சி.எப். ஆண்ட்ரூஸ் கூறுகிறார்.
 போர்பந்தரின் கோயில்களே அந்நகரின் சின்னங்களாக விளங்கின. மேலை நாட்டு நாகரிக அடையாளங்கள் வேகமாகப் பரவி வந்த அக்காலகட்டத்தில், போர்பந்தரில் அவை புகவில்லை. காரணம் அது கடலோரப் பகுதியில் ஒதுக்குப்புறமாக அமைந்திருந்ததுதான்.
 போர்பந்தர் நகரின் மையப் பகுதியில் ஒரு அழகான விசாலமான, ஆனால் ஆடம்பரம் இல்லாத ஒரு வீடு உள்ளது. அந்த வீட்டையும், சுற்றியுள்ள இடத்தையும் 1777-ஆம் ஆண்டு காந்திஜியின் கொள்ளு தாத்தாவான ஹர்ஜிவான்ஜி ரஹிதாஸ்ஜி காந்தி வாங்கினார். காந்திஜியின் தாத்தா உத்தம்சந்த் காந்தி காலத்தில் தரைத்தளத்தை மட்டுமே கொண்டிருந்த அந்த இல்லம், பின்னர் மூன்று தளங்களைக் கொண்டதாக விரிவாக்கப்பட்டது.
 வீட்டைச் சுற்றிலும் வராந்தாக்கள் உள்ளன. தரைத்தளத்திலிருந்து, மேலே செல்வதற்கு மரத்தினால் ஆன படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. நுழைவாயில் கதவு, விசாலமானதாக அமைந்துள்ளது. அவ்வீட்டின் மூன்று தளங்களிலும் மொத்தம் 22 அறைகள் உள்ளன. காற்றோட்ட வசதி கருதி, வளைவுகள் கொண்ட அழகிய ஜன்னல்கள் அமைந் துள்ளன.
 அந்த வீட்டின் தரைத்தளத்தில் 19.5 அடி நீளம், 11 அடி அகலம், 10 அடி உயரம் உள்ள ஓர் அறை உள்ளது. அதன் வலப்பக்கக் கோடியில், வெளிச்சம் அதிகம் இல்லாத இடத்தில், புத்லிபாய், 1869, அக்டோபர் 2 அன்று, தனது நான்காவது குழந்தையைப் பெற்றெடுத்தார். அக்குழந்தைதான் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி.
 இப்போது அப்பகுதியில் வாழும் மக்கள், அவ்விடத்தை "காந்திஜியின் ஜென்ம பூமி' என்றே கூறுகிறார்கள். காந்திஜி பிறந்த இடத்தில் "ஸ்வஸ்திக்' கோலம் போட்டு வைத்திருக்கிறார்கள். அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மகாத்மா அவதரித்த புண்ணிய பூமியை வணங்கிச் செல்கிறார்கள்.
 அங்கிருந்து இரண்டு நிமிட நேரம் நடந்து சென்றால், அன்னை கஸ்தூர்பா பிறந்து வளர்ந்த வீடு உள்ளது. காந்தியின் வீட்டைவிட, கஸ்தூர்பாவின் வீடு விரிந்ததாகவும், செல்வச் செழிப்புமிக்க வீடாகவும் தோற்றமளிக்கிறது. அவ்வீட்டில் இரண்டு சமையல் அறைகள். திருமணம் ஆகும் வரை கஸ்தூர்பா இந்த வீட்டில்தான் வாழ்ந்தார்.
 மோகன்தாஸின் மூத்த சகோதரர் லட்சுமிதாஸ் ஒரு வழக்குரைஞர்; அடுத்த அண்ணன் கர்சன்தாஸ் அரசாங்கத்தில் சப் இன்ஸ்பெக்டர் பணி. இருவரும் இறந்து போனார்கள். ஒரே தமக்கை ரலியாத் பென். இவர் திருமணத்திற்குப் பின் ராஜ்கோட்வாசியாகி விட்டார். காந்தியும், கஸ்தூர்பாவும் தென்னாப்பிரிக்காவில் வசிக்கத் தொடங்கினார்கள். பூர்விக இல்லத்தில் வசிக்கவும், அதைப் பராமரிக்கவும் எவரும் இல்லை என்ற நிலை உருவானது. அதனால், அவ்வீடு சிறிது சிறிதாக சீர்கெடத் தொடங்கியது.
 இச்சூழலில் 1945-இல் எவரும் எதிர்பாராத இனிய நிகழ்வு ஒன்று நடந்தது. அப்போது தென்னாப்பிரிக்காவில் நிதி மற்றும் கல்வி அமைச்சராகப் பதவி வகித்தவர் ஜேன் ஹென்ட்ரிக் ஹோஃப்மியர் என்பவர். அவர் மகாத்மாவின் மீது மிகுந்த மதிப்பு கொண்டவர். காந்திஜி பிறந்த புண்ணிய பூமியான போர்பந்தரைத் தரிசித்து மகிழ்வதற்காக இந்தியாவுக்கு வருகை தந்தார்; போர்பந்தர் சென்றார்.
 அண்ணல் பிறந்த அந்த பழைய வீட்டை கண்டார்; கண்கலங்கி நின்றார். "மனிதப் புனிதர் பிறந்த இந்த வீட்டின் நிலை இதுவா? அனைவரும் வந்து வணங்கி மகிழும் ஆலயமாகவல்லவா இது திகழவேண்டும்? நம் நாட்டில் டர்பன் நகர் அருகில், அண்ணல் நிறுவிய ஃபீனிக்ஸ் ஆசிரமம் வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழ்கிறதே! அந்நிலைக்கு இதனை மாற்ற வேண்டும்' என எண்ணினார்.
 போர்பந்தரில் அப்போது வசித்துவந்த புகழ்பெற்ற தொழில் அதிபரும், வள்ளல் குணம் படைத்தவருமான ராஜ் ரத்னா நாஞ்சி காளிதாஸ் மேத்தாவை சந்தித்தார். "மகாத்மாவின் மகிமையை நாங்கள் நெஞ்சில் வைத்துப் போற்றுகிறோம். அவரது தாய்நாடு அவரை மறக்கலாமா? நீங்கள்தான் இதற்கொரு தீர்வு காணவேண்டும்' என்றார்.
 மேத்தாவும் அவரது மனைவி சன்டோகாவும் அண்ணலின் சீடர்கள்; சேவாகிராமம் ஆசிரமத்தில் சில காலம் தங்கியிருந்தவர்கள். மேத்தா உடனே சேவாகிராமம் ஆசிரமம் சென்றார். காந்திஜியை சந்தித்தார். பாழடைந்த நிலையில் உள்ள வீட்டைப் பற்றி விளக்கினார். செய்தி அறிந்து அண்ணலின் மனம் சிறிது கலங்கியது. ஆனாலும், "அந்த வீட்டுக்கு இன்று உரிமையாளர்கள் பலர்; இன்று நாடு இருக்கும் நிலையில் நான் எதுவும் செய்வதற்கு இல்லை' என்பதே அவர் பதிலாக இருந்தது.
 மேத்தா தன் முயற்சியை கைவிடுவதாக இல்லை. போர்பந்தர் சமஸ்தான மன்னர் மகாராணாவிடம் தன் கோரிக்கையை முன்வைத்தார். பல பிரமுகர்களையும் சந்தித்தார். அவரது தொடர் முயற்சியால் பலர் அளித்த நன்கொடையில் ரூ. 75,000 காந்திஜியின் வீட்டில் உரிமையுள்ளவர்களாக உறுதி செய்யப்பட்ட 29 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.
 இறுதியாக இந்தியா சுதந்திரம் பெற்ற 1947-ஆம் ஆண்டில், மகாத்மாவின் போர்பந்தர் இல்லத்தைப் புதுப்பிக்கவும், புதிய நினைவகம் ஒன்றை நிறுவவும் அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. அடிக்கல் நாட்டிய பெருமகன், அப்பகுதியின் இளவரசர் பதவியைத் துறந்து விடுதலைப் போராட்ட வீரராக மாறிய கோபால் தாஸ் அம்பால் தாஸ் என்பவர்.
 மேத்தா அத்துடன் நிற்கவில்லை. காந்திஜியின் பூர்விக வீட்டைச் சுற்றியுள்ள நிலத்தையும் விலைக்கு வாங்கினார். அங்கு அழகிய நினைவு மண்டபத்தை எழுப்பினார். அது கலைநயம் மிக்கதாக வடிவமைக்கப்பட்டது. மண்டபம் சலவைக்கல் பதிக்கப்பட்ட அரங்கு, நூலகம், அருங்காட்சியகம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக உள்ளது.
 அந்த நினைவு மண்டபத்திற்கு "கீர்த்தி மந்திர்' (புகழ்மிக்க ஆலயம்) என்ற பெயரும் சூட்டப்பட்டது. 1965-இல் அன்னை கஸ்தூர்பாவின் இல்லமும் நினைவு மண்டபத்தோடு இணைக்கப்பட்டது. இதனைக் கட்டி முடித்த கட்டடக் கலைஞர் மிஸ்ரி புருஷோத்தம் பாய் என்பவர்.
 இன்றும் போர்பந்தர் நகரின் மத்திய பகுதியில் "கீர்த்தி மந்திர்' உள்ளது. நுழைவாயிலுக்கு முன்பு மகாத்மாவின் மார்பளவுச் சிலை உள்ளது. இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும், பிற நாடுகளிலிருந்தும் வரும் சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கும் புனித பூமியாக நினைவாலயம் நிற்கிறது. அதன் முகப்பில், "தி ஹவுஸ் வேர் மகாத்மா காந்திஜி வாஸ் பான்' (இது மகாத்மா காந்திஜி பிறந்த வீடு) என்ற பலகை உள்ளது. அந்த வீடும், கீர்த்தி மந்திரும் இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன.
 ஆனால், அண்ணல் அவதரித்த இல்லமும், அங்கு எழுப்பப்பட்டுள்ள நினைவு மண்டபமும் இன்று இருக்கும் நிலை பரிதாபகரமானது. அங்குள்ள சுவர்கள் பழுதடைந்துள்ளன; பூசப்பட்ட வண்ணங்கள் தூசுபடிந்துள்ளன; வரையப்பட்டுள்ள ஓவியங்களின் உரு சிதைந்துள்ளன. முறையான பராமரிப்பு இல்லாததால் வருகை தருவோர் எண்ணிக்கை குறைந்து விட்டது என்கிறார்கள். இன்றைய உடனடித் தேவை மறுசீரமைப்பும், தொடர் கண்காணிப்பும்.
 சமீபத்தில் வெளிவந்த செய்தியின்படி, அண்ணலின் வீடும், நினைவு மண்டபமும் பூட்டிக்கிடக்கிறதாம் ஓராண்டு காலமாக. என்ன அவல நிலை இது? அண்ணலையே மறந்துவிட்ட நாம், அவர் காட்டிய வழியில் பயணிக்கத் தவறிய நாம் அவர் பிறந்த வீட்டையும், நினைவு மண்டபத்தையும் பாதுகாக்கவாவது முயற்சி எடுக்க வேண்டாமா?
 அண்ணலின் வீட்டை நினைவிடமாக்க வேண்டும் என்ற கருத்தை விதைக்க தென்னாப்பிரிக்காவின் அமைச்சர் ஜேன் ஹென்ட்ரிக் தேவைப்பட்டார். அதனை செயல்படுத்த ஆர்.என். காளிதாஸ் மேத்தா என்ற ஓர் இந்தியர் முன்வந்து, முயன்று முடித்தார்.
 பூட்டிக்கிடக்கும் வீட்டையும் நினைவாலயத்தையும் சீரமைப்பதற்கு வெளிநாட்டிலிருந்து எவரும் வரவேண்டுமா? வளம் மிகுந்த இந்திய தேசத்தில், சுமார் 140 கோடி மக்களைக் கொண்ட இந்திய தேசத்தில் சிலர் செயல்படத் தொடங்கினால் போதுமே!
 மகாத்மா பிறந்த வீட்டின், அவர் நினைவிடத்தின் மறுசீரமைப்பு பணிகள் உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும்; பூட்டிக்கிடக்கும் வீடும் ஆலயமும் திறக்கப்பட வேண்டும். வருங்கால சமுதாயத்திற்கு வழிகாட்டும் ஒளிவிளக்காக அவை திகழ வேண்டும்!
 அனைத்தையும் அரசே செய்ய வேண்டும் என எதிர் பார்ப்பது பேதமை என்றார் தேசப்பிதா! ஆகவே இதனை ஒரு தேச சேவையாக, தெய்வீகப் பணியாக ஏற்றுச் செயலாற்ற ஒவ்வொரு இந்தியனும் உறுதி ஏற்க வேண்டும்! மக்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால், நிச்சயம் நிறைவேறும் நம் ஆசை!
 
 கட்டுரையாளர்:
 காந்தியவாதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com