ஓதலின் சிறந்தன்று ஒழுக்கமுடைமை!

ஓதலின் சிறந்தன்று ஒழுக்கமுடைமை!
Updated on
3 min read

 மாந்தனை வளர்ப்பது ஒழுக்கம்; அவனை உலகில் உயர்த்துவது பண்பாடு. மாந்த வாழ்வு சமூக வாழ்வு. அதனால்தான், வள்ளுவப் பெருந்தகை "உலகத்தோடு ஒட்ட ஒழுகல்' என்றார். உலகம் வேண்டுவது ஒழுக்கமே. பல்வேறு இனம் சார்ந்தவர்களாக நாமிருப்பினும் நாம் மாந்தர்தான். "அனைவரும் ஊரோடு ஒத்திசைந்து வாழ்தல் குடிமைப் பண்பு' என்கிறார் சுவாமி விவேகானந்தர்.
 வாழ்க்கையில் வெற்றி பெறாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால், நல்லவர்களாக ஒழுக்கமாக வாழ வேண்டும் என்பதை பெற்றோர்தான் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். நம் மொழியிலுள்ள இலக்கியங்கள் அற ஒழுக்கத்தை உணர்த்தும் வலிமையுடையனவாக விளங்குகின்றன. மாந்தர்களுக்கும் மாக்களுக்குமான வேறுபாட்டைக் காட்டுவது மக்களின் அற ஒழுக்கமே.
 இலக்கியங்கள் இவ்வாழ்வியல் முறையைத் தான் நமக்குக் காட்டுகின்றன. மனம், மொழி, மெய்களைத் தீய வழியில் செல்லவிடாமல் தடுத்து நன்னெறிப்படுத்த இலக்கியங்கள் உதவுகின்றன. சினம், பொய், களவு, காமம், பகை என இவை நீக்கி, பிறரிடத்தில் அன்பும் அருளும் கொண்டு வாழ நம்மைப் பழக்குவதே மாந்த ஒழுக்கம் ஆகும்.
 ஒழுக்கம் என்பது கல்வியை விட மேலானது. "ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் ஓதலின் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை' என்கிறது முதுமொழிக் காஞ்சி.
 ஆனால், அண்மைக்காலமாக, கல்விச் சாலைகளில் ஏற்படும் முறையற்ற நிகழ்வுகள், கற்றல் காலத்தில் தன்னையே மாய்த்துக்கொள்ளும் கொடிய செயல்கள், பெற்ற கல்வியறிவை வெறும் உயர் பணிக்காக மட்டும் எண்ணல், பயிற்று மொழிதான் உலகறியச் செய்யும் என்றெண்ணி தாய்மொழியை ஒதுக்கல், பிறந்த மண்ணின் மாண்பை மறந்து பிறமொழி நாகரிகத்தில் ஒட்டி உறவாடல் - இவையெல்லாம் இன்றைய இளைஞர்களின் நனிமிகு நாகரிகமாக விளங்குவதைக் கண்டால் நெஞ்சம் பதைக்கிறது.
 நம் பண்டைய கல்வி முறையில் கல்வி வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது. "அ' விற்கு "அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்' என்றது. "அறம் செய விரும்பு', "ஆறுவது சினம்', "ஊக்கமது கைவிடேல்', "எண் எழுத்து இகழேல்', "ஓதுவது ஒழியேல்' என்று அறத்தின் வழிப் பொருளீட்டி வாழ வகை செய்தது.
 ஆனால், இன்றைக்கு, தொலைக்காட்சி, திரைப்படம், கைப்பேசி, கணினி என வெகுமக்கள் செய்தித் தொடர்பால் தடம் மாறித் தொலைந்துவிட்ட இளையோரை மீட்டுருவாக்கம் செய்யபோவது யார்? பண்டைய கல்விமுறை, அறம், ஒழுக்கம், அன்பு, ஈகை, பெற்றோரைப் பேணிக்காத்தல் ஆகிய நற்பண்புகளை வெளிக்கொணர்ந்தது. ஆனால், இன்றைய கல்விமுறை அதிலிருந்து விலகி வெகு தொலைவு சென்றுவிட்டது.
 பிள்ளை நெறி தவறும்போது அன்பு காட்டி அரவணைத்து உன் துன்பங்கள் நீக்க நாங்கள் உடன் இருக்கிறோம் என்ற பாதுகாப்பு உணர்வைப் பெற்றோர் தர வேண்டும். குழந்தைகள் மனம் விட்டுப் பெற்றோரிடம் பேசும் துணிவை நாம் உறுதிப்படுத்த வேண்டும். மொத்தத்தில் குடும்ப அன்பும் அரவணைப்புமே ஒரு குழந்தையை அதன் பாதையில் இருந்து தடம் பிறழாமல் காக்கும்.
 ஒவ்வொருவரிடமும் நல்லொழுக்கம் எப்படி உதிக்கும்? இதை மூவரால்தான் செய்ய முடியும். அவர்கள் அப்பா, அம்மா, ஆசான் ஆகியோர். அதிலும் கூட ஆரம்பப் பள்ளி ஆசிரியர்தான் ஒழுக்கத்தைக் கற்பிப்பதில் முதலிடத்தில் இருக்கிறார்.
 ஆசிரியர் தவறாகக் கூறினாலும்கூட அதைத்தான் சரியென்று கூறும் மழலையின் மனம். அங்குதான் நாம் தனிமனித ஒழுக்கத்தை ஆழமாக விதைக்க வேண்டும்; வேரூன்றச் செய்ய வேண்டும். இளமையில் பெறக்கூடிய ஒழுக்கமே முதுமை வரை துணை நிற்கும்.
 அறநெறிச் சிந்தனைகளை ஆழ்ந்து பயிலுங்கால் அதன் மீதான ஆக்க விளைவுகள் பற்றி எண்ணுதல் தொடரும். ஒரு சொல்லை சிரமமின்றி உங்களால் படிக்க முடிந்தால், அதன் பொருளைச் சிந்திக்க முடியும். ஓர் இசைப்பண்ணை உங்களால் தன்னியல்பாக வாசிக்க முடியுமானால் அந்த இசைக்கு விளக்கம் தருவது எப்படி என்பதைப் பற்றியும் சிந்திக்க முடியும்.
 தொல் இலக்கியங்களான சங்க இலக்கியங்கள், சங்கம் மருவிய இலக்கியங்கள், பிற்கால இலக்கியங்கள் அனைத்தும் ஒவ்வொரு தளத்திலும் நின்று விழுமியக் கல்வியைப் போதிப்பவையாக உள்ளன. விழுமியங்களை ஒழுக்கத்துடன் இணைத்து அதுவே அறிவு என்றனர். அதாவது, அறிவே ஒழுக்கம். இன்றைய கல்வி முறையும் விழுமியங்களுடன் இணைந்து கற்பிக்கப்படும்போது மாணவர்களிடையே மாந்த நேயம் மாண்பாக மலரும்.
 கல்வியறிவு என்பது சிந்திக்கச் செய்யும்; பகுத்தாய்ந்து விளங்கவும் செய்யும்; நுட்பங்களை நுண்மையாக்கும். ஆனால், ஒழுக்கம் சேராத கல்வியறிவு வெறும் காட்சிக்கு மட்டும்தான் கவர்ச்சியாகும். கானல் நீரைப் போல தோன்றி மறையும்.
 "இதயமெல்லாம் அன்பு நதியினில் நனைப்போம்' என்ற புரட்சிக்கவியின் கூற்றின்படி மனித இதயங்களை அன்பின்வழி ஆற்றுப்படுத்த அறம்சார்ந்த கல்வி நெறியே சாலச் சிறந்தது என்பதை இளையோர் உணர்ந்து நல்வழியில் பயணிக்க வேண்டும்.
 நல்லொழுக்கமே செல்வம் என்கிறது நான்மணிக்கடிகை. அதே வேளையில் ஒழுக்கம் தவறியவர்களிடத்துச் செல்வம் தங்காது என்கிறது.
 திருவும் திணை வகையான நில்லார் பெருவலிக்
 கூற்றமும் கூறுவசெய்து உண்ணாது ஆற்ற
 மறைக்க மறையாதாம் காமம் முறையும்
 இறைவகையான் நின்று விடும் (நான்: 39)
 வெள்ளையன் நம்மை அடிமைப்படுத்த தீட்டிய சூழ்ச்சியின் முதல் கட்டம் அவன் தன் கல்வி முறையை நமக்குள் புகுத்தியது. ஓர் இனத்தின் பாரம்பரிய கல்வி முறையை அழித்தால் அவ்வினத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் தடைப்படுத்தலாம். இதனை அவன் ஆண்ட நாடுகளில் ஆங்கில மொழி மூலம் சாத்தியப்படுத்தினான். உலகில் ஆதிக்க நாடுகளில் எல்லாம் வெற்றி கண்ட அவனால் தமிழ் இனத்திடம் வெற்றிகாண முடியவில்லை. காரணம், அறம் சார்ந்த நம் கல்வி முறை காலங்காலமாக நம் வாழ்வின் விழுமியங்களாக ஒட்டியதால் தப்பிப் பிழைத்து வருகிறோம்; தடுக்கி விழுந்தாலும்
 எழுந்து நிற்கிறோம்.
 இது எவ்வளவு காலத்திற்குத் தொடரும் என்று தெரியவில்லை. தாய்மொழிக் கல்வியால் தெளிவும் அறிவும் எளிதாகக் கிடைக்கும். அதனால் ஒருவன் பண்பாட்டை எக்காலத்திலும் எந்நாட்டிலிருந்தாலும் பேணிப் பாதுகாப்பான். அதை விடுத்து ஆதியில் வந்த அருந்தமிழ் அறிவுகளைப் புறந்தள்ளி, பாதியில் வந்த புகுத்தப்பட்ட ஆங்கிலமொழிச் சூழலில் கல்வி பயின்று இளையோர் தகுதிப்படுத்திக் கொண்டாலும், தாம் பெறும் கல்வியறிவை சமூகத்திற்குப் பயனாக்க தாய்மொழியில் பெற்ற அறநெறிசாரம்தான் அச்சாரமாக விளங்குமென்பதை அவரவர் பெறும் அனுபவத்தால் அறிவர்.
 அல்லலுறும் மனங்களை ஆற்றுப்படுத்த, பள்ளி, கல்லூரி காலங்களில் தாய்மொழியில் கற்ற அற இலக்கியங்கள் அவர்களுக்குத் தாயாகத் துணைநின்று அன்புடன் பரிவையும் மனத்தெளிவையும் உண்டாக்குமென்பதை இன்றைய இளையோர் உய்த்துணர்தல் வேண்டும்.
 "மக்கள் தாமே ஆறு அறிவுயிரே' என்பார் தொல்காப்பியர். காரணம் உற்று அறிவதும், நாவால் சுவையுணர்வதும், மூக்கால் முகர்தலும், கண்ணால் கண்டு தெளிதலும், செவியால் கேட்டுப் புரிதலும் எல்லாவற்றிற்கும் மேலாக மனத்தால் மேற்கண்ட அறிவுகளோடு இயைந்து பகுத்தறிதல் உலக உயிர்களில் மாந்தனுக்கு மட்டுமே உள்ளது என்பதை உலக அறிஞர்களிலேயே முதன் முதலாக உணர்த்தியவர் தொல்காப்பியர்.
 இந்த மாந்த இனம் வாழுகின்ற உலகம் எதனால் படைக்கப்பட்டது? இவ்வுலகில் யாராலும் வரையறுக்க இயலாக் காலத்தில் "நிலம், தீ, நீர், வளி, விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம்' என்று கூறியவர் தொல்காப்பியர்.
 அவ்வாறு முகிழ்த்த ஞாலத்தில் இலக்கியப் படைப்புகள் எவ்வாறு படைக்கப்பட்டன என்றால், "மரபு நிலை திரிதல் செய்யுட்கு இல்லை மரபு வழிப்பட்ட சொல்லினான'
 என்கிறார்.
 இதனால் தமிழ் என்பது வெறும் மொழி மட்டுமல்ல. அம்மொழி பேசும் மாந்த இனத்தை மாந்த நேயமாக வைத்திருப்பது, அவர்கள் படைக்கும் படைப்புகளில் அறநெறிக் கூறும் மரபு நிலைகளை மறைக்காமலும், திரிக்காமலும் எடுத்துரைப்பது. கூறும் சொற்களே மரபினால் சார்ந்து பிறருக்குக் கேடு விளைவிக்காத அரும்பெறல் சொற்களைக் கொண்டிலங்குவது எனத் தொல்காப்பியர் வழி நின்று இளைஞர்கள் உய்த்துணர வேண்டும்.
 அறிவியல் விந்தைகளில் நாம் வாழ்க்கை நெருக்கடியில் பிணைத்துக் கொண்டாலும், மனத்திட்பம், நன்னெறி வழக்கங்களால் உலகில் எம்மூலையிலும் நாம் நம்மை வென்று உலகத்தை வெல்ல முடியும். ஆனால், பொறுமையால் பண்பாட்டு பழக்கவழக்கத்தால் மட்டுமே இதனைச் செய்ய இயலும்.
 அண்மையில் அவ்வப்பொழுது அற்ப காரணங்களுக்காக உயிரை மாய்த்தல் கொடுமை என்பதை,
 ஆனாலும் புவியின் மிசை உயிர்களெல்லாம்
 அநியாய மரணமெய்தல் கொடுமையன்றோ
 தேனான உயிரை விட்டுச் சாகலாமோ
 என்று கேட்பார் மகாகவி பாரதியார்.
 அதனால் என்னரும் இளைஞர்களே! எழிலார்ந்த தேசத்தின் இன்பவாணர்களே! நாளை நற்பொழுதுகளின் நாயகர்களே!
 சிந்தையில் சினம் காக்க வேண்டாமே! மனம் அதற்கான களமில்லை. வருங்கால வாழ்வை அரும் பெறல் நெறியோடு உணர்ந்து எம்மொழி கற்றாலும் ஆற்றல்மிகு அருந்தமிழ்மொழி கொண்டு அகிலத்தை அன்பால் படைப்போம்.
 
 கட்டுரையாளர்:
 இயக்குநர்,
 செந்தமிழ்ச் சொற்பிறப்பியல்
 அகரமுதலித் திட்ட இயக்ககம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com