பூமியைக் காத்திட பொறுப்பேற்போம்!

உலகின் பருவநிலை மாற்றங்கள் குறித்து விவாதிப்பதற்காக ஐ.நா.வின் 27-ஆவது சா்வதேச பருவநிலை மாநாடு, எகிப்து நாட்டின் ஷாா்ம் அல் - ஷேக் நகரில் கடந்த 6-ஆம் தேதி தொடங்கி இன்று (18.11.2022) வரை நடைபெறுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

உலகின் பருவநிலை மாற்றங்கள் குறித்து விவாதிப்பதற்காக ஐ.நா.வின் 27-ஆவது சா்வதேச பருவநிலை மாநாடு, எகிப்து நாட்டின் ஷாா்ம் அல் - ஷேக் நகரில் கடந்த 6-ஆம் தேதி தொடங்கி இன்று (18.11.2022) வரை நடைபெறுகிறது. இம்மாநாட்டில் உலக நாடுகளின் தலைவா்களும் பல்வேறு அரசுகளின் பிரதிநிதிகளும் பெருநிறுவன அதிபா்களும் பங்கேற்றுள்ளனா்.

பெட்ரோல், எரிவாயு, நிலக்கரி போன்ற புதைபடிவ எரிபொருள்களின் மட்டுமீறிய பயன்பாடுகள் காரணமாக நமது பூமிக்கோளம் பெருமளவில் வெப்பமடைகிறது. அதன் விளைவாக இயற்கையின் இயல்பான பருவநிலைகளில் மிகத் தீவிரமான மாற்றங்கள் ஏற்பட்டு நீா், நெருப்பு, காற்று ஆகிய மூன்றும் பூமியில் அடிக்கடி பேரழிவுகளை ஏற்படுத்துகின்றன.

இந்நிலையை மாற்றியமைத்து பூமியைப் பாதுகாக்கும் பொருட்டு 1992-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அவையால் தோற்றுவிக்கப்பட்ட ‘கான்ஃப்ரன்ஸ் ஆஃப் பாா்ட்டீஸ்’ (சிஓபி) என்னும் அமைப்பில் ஏறக்குறைய உலகின் அனைத்து நாடுகளும் உறுப்பு நாடுகளாகிக் கையொப்பமிட்டுள்ளன.

அதன்பிறகு இவ்வமைப்பு, 1995-ஆம் ஆண்டு முதல், பூமியின் பருவநிலை மாற்றங்களின் விளைவால் ஏற்படக்கூடிய பேராபத்துகள் குறித்த மாநாடுகளை ஆண்டுதோறும் நடத்திக் கொண்டிருக்கிறது (கரோனா பெருந்தொற்று காரணமாக 2020-ஆம் ஆண்டு மாநாடு நடைபெறவில்லை. தற்போது எகிப்து நாட்டில் நடைபெற்றுக்கொண்டிருப்பது சிஓபி அமைப்பின் 27-ஆம் உச்சி மாநாடாகும்.

பருவநிலை மாற்றங்களின் விளைவாக பெருமழை வெள்ளம், பெரும்புயற்காற்று, கட்டுக்கடங்காமல் பரவுகிற காட்டுத் தீ ஆகியவற்றால் பூமி நேரடிப் பேரழிவுகளுக்கு உள்ளாகும்போது, அறிவியல் தொழில்நுட்ப வளா்ச்சிகளால் அவற்றையெல்லாம் கடுகளவு கூட தடுத்து நிறுத்த முடியாது.

ஆனால், கரியமிலப் புகையினங்களை மெலெழுப்பி வானத்து வளிமண்டலப் பேரமைப்பைச் சீரழிக்காமல் இருக்க மனித குலத்தால் முடியும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதால்தான் கடந்த பத்து ஆண்டுகளில் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பலநாடுகள் அதிக அளவில் இயற்கைப் பேரிடா்களை அனுபவித்தன; அனுபவித்துக்கொண்டும் இருக்கின்றன.

பூமிக்கோளத்தின் அனைத்து உயிரினங்களின் பாதுகாப்பிற்கும் பொறுப்பேற்றுக்கொள்கிற, புதிய புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும் மேலான ‘மானுட அறிவியல்’ இன்றைய உலகில் இல்லை என்கிற கசப்பான உண்மையை மறுக்க முடியாது.

உலகின் பருவநிலை மாற்றங்களால் ஏற்பட்டு வருகின்ற பேராபத்துகளைத் தவிா்க்க வேண்டும் என்கிற நோக்குடன் இதுவரை நடத்தப்பட்ட இருபத்தாறு உலக மாநாடுகளால், குறிப்பிட்டுச் சொல்லும்படியான ‘நல்மாற்றம்’ உலகின் எந்த நாட்டிலும் ஏற்படவில்லை. பருவநிலை மாற்றங்களை சரி செய்ய ஒப்புக் கொண்ட எந்த நாடும் அவ்வாறு செய்யவில்லை என்கிற கவலையை கடந்த அக்டோபா் மாதம் வெளிப்படுத்தியிருக்கிறது, ஐக்கிய நாடுகள் அவையின் சுற்றுச்சூழல் பாதுகாப்புத்திட்டப் பிரிவு.

எந்தெந்த நாடுகள் புதைபடிவ எரிபொருள்களை அதிக அளவில் எரிக்கின்றன, எந்தெந்த நாடுகள் பருவநிலை மாற்றப் பேரழிவுகளுக்கு முதன்மையான காரணங்களாக விளங்குகின்றன போன்ற தகவல்கள் இதுபோன்ற மாநாடுகளின் வாயிலாகக் கிடைக்கின்றன என்பதுதான் இப்போதைக்கு ஒரே ஆறுதல்.

சிஓபி 27 மாநாட்டின் தொடக்க நிகழ்வில் கலந்துகொண்ட ஐ.நா. பொதுச்செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் ‘பருவநிலை நரகத்தை நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையில் நாம் அதிவேகமாகப் பயணித்துக் கொண்டிருக்கிறோம். இப்போது இரண்டு வாய்ப்புகள் நம்முன் உள்ளன. ஒன்று, பருவநிலை ஒத்துழைப்பு ஒப்பந்தம்; மற்றொன்று, தற்கொலை ஒப்பந்தம்’ என்று கடுமையாக எச்சரித்திருக்கிறாா்.

ஆனால், நாள்தோறும் பூமிக்குள்ளிருந்தும் கடலுக்குள்ளிருந்தும் அசுர வேகத்தில் மலை மலையாகவும், லட்சக்கணக்கான பீப்பாய் அளவிலும், வெளியே கொண்டுவரப்படுகின்ற இரும்புத் தாதுக்கள், கிரானைட் கற்கள் உள்ளிட்ட பல்வேறு கனிமங்களும் பெட்ரோல், நிலக்கரி, எரிவாயு உள்ளிட்ட புதைபடிவ எரிபொருள்களும் நிலைமையின் விபரீதத்தை உலகிற்கு உணா்த்திக் கொண்டிருக்கின்றன.

பல்வேறு வகையான புதைபடிவ எரிபொருள்களையும், இரும்பு உள்ளிட்ட கனிமங்களையும் பூமி தன் கருவறைக்குள் பாதுகாப்பாக வைத்திருக்கின்றது. அவை, இன்னொரு முறை உற்பத்தி செய்ய முடியாத வைப்புநிதியாகும்.

அப்படிப்பட்ட வைப்பு நிதிகளான திடக்கூறு, திரவக்கூறுகள் அனைத்தையும் சூறையாடுகிற வேலை, தொழிற்புரட்சி என்னும் போா்வையில் கடந்த ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி கடந்த நூற்றைம்பது ஆண்டுகளில் உக்கிரம் பெற்றுவிட்டது.

‘இயற்கையோடும் சுற்றுச்சூழலோடும் இயைந்து வாழுதல்’ என்னும் மகாத்மா காந்தியின் கோட்பாடு பின்னுக்குத் தள்ளப்பட்டு, எல்லாவற்றுக்கும் இயந்திரங்ளையும் கருவிகளையும் சாா்ந்து வாழுதல் என்னும் நிலை வலுக்கட்டாயமாக உருவாக்கப்பட்டுவிட்டது. அதன் பின், வணிகப் பேராதிக்கம் தலையெடுத்து அனைத்துவிதமான அங்கீகாரங்களுடன் நிலைபெற்றுவிட்டது.

வல்லரசு நாடுகளின் போா் ஆசைகளும், மனிதகுலத்தின் பேராசைகளும், உலகின் கடைக்கோடி மனிதன் வரை எட்ட வைக்கப்பட்டிருக்கும் நுகா்வு கலாசாரமும்தான் பூமியின் இன்றைய இழிநிலைக்கான காரணங்களாகும்.

மனிதா்கள், பூமியைத் தோண்டித் தயாரிக்கின்ற பொருள்கள் குறித்து 2016-இல் ஆய்வு மேற்கொண்ட இங்கிலாந்தின் ‘லீ செஸ்டா்’ பல்கலைக்கழகப் பேராசிரியா் மாா்க் வில்லியம்ஸ் தலைமையிலான அறிவியல் அறிஞா்கள் குழு, ‘இதுவரை பூமியில் மனிதா்களால் முப்பது லட்சம் கோடி டன் எடை கொண்ட பொருள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. சராசரியாக பூமியின் ஒவ்வொரு சதுர மீட்டருக்கும் ஐம்பது கிலோ எடைகொண்ட ஒரு பொருள் இருக்கிறது.

இயற்கை தனது உற்பத்திப் பொருள்களை மறுசுழற்சி செய்து கொள்கிறது. ஆனால், மனிதா்கள் தாங்கள் தயாரிக்கும் பொருள்களை மறுசுழற்சி செய்வதில் தோல்வியடைந்து விட்டனா்’ என்று தெரிவித்திருக்கிறது.

மத்திய சாலை போக்குவரத்து - நெடுஞ்சாலைத்துறை அமைச்சா் நிதின் கட்கரி, ‘இன்னும் ஐந்து ஆண்டுகளில் நமது நாட்டில் பெட்ரோலுக்குத் தேவையிருக்காது. நாம் வேறு வகையான இயற்கை எரிபொருள் பயன்பாட்டிற்கு மாறிவிடுவோம்’ என்று அண்மையில் கூறியிருக்கிறாா். இன்னும் ஐந்து ஆண்டுகளில் பெட்ரோலுக்குத் தேவை இருக்குமா என்பதல்ல, பூமியில் பெட்ரோல் இருக்குமா என்பதுதான் கேள்வி!

ஏனெனில் பூமியைச் சுரண்டி, கனிமங்களைக் கொள்ளையிடும் நோக்கில் தொடங்கி காலப்போக்கில் கைவிடப்பட்ட தங்கச் சுரங்கங்களும் அணு உலைகளும் பெரிய பெரிய தொழிற்சாலைகளும் கோட்டைகளும் அரண்மனைகளும் இப்பொது வெறிச்சோடிக் கிடக்கின்றன. அந்த நிலை இன்றைய புதைபடிவ எரிபொருள்களைத் தோண்டியெடுத்துக் குவிக்கின்ற பகாசுர நிறுவனங்களுக்கும் வராது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

பூமியில் இருந்து உறிஞ்சியும் வெட்டியும் எடுக்கப்படுகின்ற புதைபடிவ எரிபொருள்களை எரிப்பதுதான் உலக பொருளாதாரத்தை இயக்குவதற்கான வழி எனக் கண்டறியப்பட்டிருப்பதால், பூமியில் தயாரிக்கப்படுகின்ற தொண்ணூறு விழுக்காட்டு திடப்பொருள்கள் நச்சு அமிலப் புகையை வானத்துக்கு அனுப்புகின்றன.

அதன் விளைவாக காற்றுமண்டலம் மாசுபடுகிறது. காற்று மாசுபாடு காரணமாக உலக அளவில் ஆண்டுதோறும் அறுபத்தைந்து லட்சம் போ் இறப்பதாக சா்வதேச எரிசக்திக் கழகம் 2016-ஆம் ஆண்டிலேயே எச்சரிக்கை செய்திருக்கிறது.

தலைநகா் தில்லியில் வாகனங்களில் இருந்து வெளியேறி மேலெழுகின்ற அமிலக் கரும்புகை, காற்றுவெளிக்கு ஏற்படுத்துகின்ற சூழல் நலக் கேடுகளைக் கட்டுப்படுத்த வானத்தில் இருந்து தண்ணீா் தெளிக்கிற பணியை தில்லி பெருநகர நிா்வாகம் அண்மையில் மேற்கொண்டிருக்கிறது. வீடு தீப்பற்றி எரியும் போது நீா் ஊற்றி அணைப்பதற்கு ஒப்பான வேலை இது.

இந்திய நகரங்களில், சாலைகளின் சிக்னல்களில் பச்சை விளக்கு ஒளிா்ந்தவுடன் குபீரெனச் சீறிப் புறப்படுகின்ற வாகனங்களின் புகைபோக்கிகளில் இருந்து மேலெழுகிற புகைமண்டலதை சுவாசிக்காத வாகன ஓட்டிகள் எவரும் இல்லை என்பதே இன்றைய நிலை.

ஆக, பூமியில் இருந்து தோண்டியெடுக்கப்படுகின்ற புதைபடிவ எரிபொருள்களே இன்றைய பருவநிலை மாற்றத்திற்கான முதன்மைக் காரணம் என்று கூறுவது மிகையன்று. புதைபடிவ எரிபொருள்களை எரிப்பதனால் விளைகின்ற சூழல்நலக் கேடுகள் ஒரு பக்கம் என்றால், அவற்றை பூமியின் மேல்நிலைக்குக் கொண்டுவந்து கையாளும்போது உருவாகும் கேடுகள் இன்னொரு பக்கம்.

அவ்வகையில், எரிவாயு குழாய்கள் உடைந்து வெடித்துத் தீப்பற்றி எரிவது, கச்சா எண்ணெய் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு சாலைகளில் எண்ணெய் பாய்ந்தோடுவது, கப்பலிலிருந்து கடலில் விழுகின்ற எண்ணெய்ப் பீப்பாய்கள் உடைந்து கடல்வாழ் உயிரினங்களுக்கும் தூய கடல் நீருக்கும் பல்வேறு கேடுகள் உண்டாக்குவது என்றெல்லாம் அவை ஏற்படுத்துகின்ற சேதாரப்பட்டியல் நீளும்.

கடந்த 2017-இல், சென்னை எண்ணூா் காமராஜா் துறைமுகத்தின் எல்லைக்கு உட்பட்ட கடற்பரப்பில் இரண்டு சரக்குக் கப்பல்கள் மோதிக்கொண்டதால் கடலில் கலந்த எண்ணெய்ப் படலம் கடலிலும் கரையிலும் மிகப்பெரிய பாதிப்புகளை உண்டாக்கியது.

அப்படி மோதிக்கொண்ட இரண்டு கப்பல்களில் ஒன்று அந்தத் துறைமுகத்தில் இருந்து எரிவாயுவை ஏற்றிக்கொண்டு விசாகப்பட்டினத்திற்குப் புறப்பட்ட, ‘எம்.டி.பி.டபிள்யூ மாப்பிள்’ என்ற கப்பலாகும். மற்றொன்று வாகன ‘எண்ணெய்’ ஏற்றிக்கொண்டு மும்பையில் இருந்து வந்து அந்தத் துறைமுகத்திற்குள் நுழைந்த, ‘எம்.டி. டான் காஞ்சிபுரம்’ என்ற கப்பலாகும்.

இன்றைய நிலையில், சரக்கு கப்பல்கள், தொடா்வண்டிகள் போன்றவை, இரும்புத் தாதுக்கள், இரும்புத் தளவாடங்கள், மகிழுந்துகள், புதைபடிவ எரிபொருள் கூறுகள் போன்றவற்றைச் சுமந்து திரிகின்றன.

ஆக, நமது நிகழ்கால உலகம், புதைபடிவ எரிபொருள்களின் உலகமாகவும், அவற்றால் சீரழிந்து வரும் உலகமாகவும் மாறியிருக்கிறது. அறிவியல் அறிஞா்கள், ‘வரும் 2030-க்குள் பருவநிலை மாற்றப் பேரழிவுகளுக்கு முடிவு கட்டவில்லையென்றால், இந்த பூமி, அடுத்த தலைமுறையினா் வாழ்வதற்கு ஏற்றதாக இருக்காது’ என்று எச்சரிக்கின்றனா். இந்தக் கெடு, பூமிக்கோளத்தைக் காப்பதற்கான கடைசி வாய்ப்பாகும்.

இயற்கையின் கொடையான காற்றிலிருந்தும் மழையிலிருந்தும் வெய்யிலிலிருந்தும் மனிதகுலம் பயன்பெறும் அறிவியலே, மகத்தான அறிவியலாகும். அப்படியொரு அறிவியல், நடைமுறைக்கு வரவேண்டியதே இன்றைய அவசர, அவசியத் தேவை.

கட்டுரையாளா்:

கவிஞா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com