தரவு பாதுகாப்பு மசோதா: ஒரு பார்வை! 

கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
2 min read

நாள்தோறும் அதிகரித்து வரும் இணைய குற்றங்களைத் தடுக்கவும், சமூக வலைதள நிறுவனங்களைக் கட்டுப்படுத்தவும் மத்திய அரசு தயாரித்துள்ள தரவுகள் பாதுகாப்பு மசோதா, வரும் நாடாளுமன்ற குளிர்க்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

இதன்படி சமூக வலைதள நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அனைத்தும் ஒழுங்குமுறை வாரியத்தின் அதிகார வரம்புக்குள் கொண்டுவரப்பட உள்ளன. இதன்மூலம் தனிமனித, ராணுவ, புலனாய்வு அமைப்பு உள்ளிட்ட நாட்டின் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு தரவுகள் பாதுகாக்கப்படும். 

எண்ம உலகில் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் கண்காணிக்கப்படுகிறது. நமது தேவை, விருப்பம் என பல்வேறு தளங்களில் நம்மிடம் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் சமூக வலைதள நிறுவனங்கள் செயல்படுகின்றன.

இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் புள்ளிவிவரப்படி 2022-இல் 25 கோடி இணையதள இணைப்புகள் உள்ளன; 65.8 கோடி பேர் இணையதளத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்; 80 கோடி பேர் இணையத்துடன் கூடிய அறிதிறன்பேசியைப் பயன்படுத்துகின்றனர். 

அண்மையில் மருத்துவ ஆராய்ச்சிக்காக என்று கூறி பேஸ்புக் பயனாளர்களிடமிருந்து தரவுகளைப் பெற்று கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் அமெரிக்க தேர்தலில் வாக்காளர்களை மூளைச்சலவை செய்த சம்பவம் தொழில்நுட்ப உலகில் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது. 

அதேபோல இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் பலரது கைப்பேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் நாடாளுமன்றத்தையே உலுக்கியது. இந்தப் பின்னணியில்தான் தரவுகள் பாதுகாப்பு, சமூக வலைதங்களின் பங்களிப்பு கவனம் பெறத் தொடங்கின. 

உலக அளவில் இணையப் பயன்பாட்டில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இணையப் பாதுகாப்புக்காகக் கொண்டுவரப்பட்ட இந்திய தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000- ஐப் பயன்படுத்தி தரவுகளைப் பாதுகாப்பாக கையாள முடிவதில்லை. நிதி சார்ந்த சேவைகளை அளிக்கும் நிறுவனங்களைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கியும், முதலீடுகளைக் கண்காணிக்க 'செபி' அமைப்பும் இருப்பது போல, தகவல் தொடர்பு தரவுகளைப் பாதுகாக்க சட்டம் இயற்ற மத்திய அரசு தீவிரம் காட்டுகிறது. 

'டிஜிட்டல் இந்தியா' திட்டம் சிறப்பாகச் செயல்படும் அதேவேளையில் தரவுப் பாதுகாப்பும் முக்கியம் என்பதை மத்திய அரசு கவனத்தில் கொண்டுள்ளது. இதற்காக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.என். கிருஷ்ணா தலைமையில் பத்து பேர் கொண்ட ஆணையம் அமைக்கப்பட்டு, தனிநபர் தகவல்களைத் திரட்டுவது, சேமித்து வைப்பது, பயன்படுத்துவது, தகவல்களைத் தவறாகப் பயன்படுத்தினால் அபராதம் விதிப்பது போன்ற விதிமுறைகள் உருவாக்கப்பட்டன.

2019-இல் தரவுப் பாதுகாப்பு சட்ட மசோதாவை முதல் முறையாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது. இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால் தனிநபர்களின் தகவல்களை அரசு கண்காணிக்கும் எனக் கூறி எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. இதையடுத்து நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்ட இந்த மசோதாவில் 81 திருத்தங்கள், 12 பரிந்துரைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதையடுத்து அந்த மசோதா நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வாபஸ் பெறப்பட்டது. 

அப்போது விரிவான சட்டக் கட்டமைப்புடன் புதிதாக மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்படும் என தெரிவித்திருந்த அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் , மூன்று மாதங்களுக்குள் புதிய தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதாவை கட்டமைத்துள்ளார். இந்த புதிய மசோதா ஆஸ்திரேலிய, ஐரோப்பிய, சிங்கப்பூர், அமெரிக்க சட்டங்களின் பகுதிகளை ஆய்வு செய்து உருவாக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் தவறான தகவல்கள், ஆபாசப் பதிவுகளை 72 மணி நேரத்துக்குள் நீக்கவும், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் தகவல்களை உடனடியாக நீக்கவும் மசோதாவில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அதேபோல பொதுமக்கள் அளிக்கும் தரவு சார்ந்த புகார்களை சமூக வலைதள நிறுவனங்கள் 24 மணி நேரத்துக்குள் பெற்றுக் கொள்ள வேண்டும். அதுதொடர்பாக 15 நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து சமூக வலைதள நிறுவனங்களும் இந்தியாவுக்குள் மேல்முறையீட்டுக் குழுவை மூன்று மாதத்திற்குள் அமைக்க வேண்டும்.

இந்த தரவுப் பாதுகாப்பு மசோதா தொடர்பான தகவல் தொழில்நுட்ப வழிகாட்டு விதிகள் மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன. இதுகுறித்து டிசம்பர் 17-ஆம் தேதி வரை பொதுமக்கள் கருத்து தெரிவிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மசோதாவில், விதிமுறைகளை மீறும் சமூக வலைதள நிறுவனங்களுக்கு ரூ. 500 கோடி வரை அபராதமும் சிறைத்தண்டனையும் விதிக்க இடம் உள்ளது. மசோதாவின் சிறப்பு அம்சமாக தரவுப் பாதுகாப்பைப் பாதுகாக்கும் பொறுப்பு அரசுக்கும் உள்ளது. இதன்மூலம் சமூக வலைதளத்தில் வெளியாகும் தனிமனிதர் மீதான கருத்து தாக்குதலுக்கு கடிவாளம் இடப்படும். 

நம்பிக்கைக்குரிய தரவு நிறுவனங்களுக்கு மட்டுமே தரவுப் பாதுகாப்பு மசோதாவில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவில் மத்திய அரசு எந்தவொரு துறைக்கும் விலக்கு அளிக்க வாய்ப்புள்ளது. இதன்மூலம் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி தனிநபர் தரவுகளைக் கண்காணிக்க முடியும் என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு.

தொழில்நுட்பத்தைக் கையாளும் நிறுவனங்கள், குறிப்பாக 50 லட்சத்துக்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்ட சமூக வலைதள நிறுவனங்கள் இந்தியாவில் அலுவலகம் அமைத்தாக வேண்டும். இந்த மசோதாவால் இந்தியாவில் தொழில் புரிவதில் சிக்கல் ஏற்படும் என சில சமூக வலைதள நிறுவனங்கள் கருதுகின்றன. அமெரிக்காவைச் சேர்ந்த கிரெடிட் கார்டு நிறுவனங்களும், அமேசான் போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்களும் இந்த மசோதா குறித்து அதிருப்தி அடைந்துள்ளன. 

கூகுள், பேஸ்புக், ட்விட்டர் போன்ற நிறுவனங்களை இந்த மசோதா கட்டுப்படுத்துவதால் சமூக வலைதள நிறுவனங்களின் வேறு நோக்கங்கள் இனி நிறைவேறாது. இந்த மசோதா, மத்திய அரசுக்குக் கூடுதல் அதிகாரங்களை வழங்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com