கோப்புப் படம்.
கோப்புப் படம்.

மின்சாதனங்களில் எச்சரிக்கை தேவை

 எங்கள் குடியிருப்பில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் தினமும் காலை வேளையில் மின்தடை ஏற்படுவதுண்டு. நானும் மனைவியும் கீழே "சிறு நடை' பயின்று, மேலே வர, மின்தூக்கி விசையை அழுத்தினால், அது நகரவே நகராது. ஒவ்வொரு முறையும், என் மகன் மேலே சென்று, மின்தூக்கியை மூன்றாவது மாடிக்குக் கொண்டுபோய், கீழே இறக்குவான். பிறகுதான் "லிப்ட்' வேலை செய்யத் தொடங்கும்.
 ஒரு வீட்டின் உரிமையாளர், மும்பையிலிருந்து மேற்பார்வையாளருக்கு கடுமையாக புகார் செய்தார். குடியிருப்பவர்கள் வயதானவர்கள். ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வது என்று அவர் கேட்டார். நானும் மின்னஞ்சலில் என் கவலையைத் தெரிவித்தேன். வழக்கமாக "சேவை' செய்து வருகிறவர் வந்து சோதனை செய்தார். நானும் கூட லிப்டில் ஏறினேன். திடீர் திடீரென்று இடையில் "மக்கர்' செய்தது.
 பிறகு அவரும் ஒரு பழுது பார்க்கும் நிபுணரை அழைத்து, மின்தூக்கியின் தொடர்பு இடத்தைப் பார்த்துவிட்டு, "எர்த் நியூட்ரல் சரி இல்லை சார்' என்று கண்டுபிடித்து, அதை சரி செய்வதற்கு இவ்வளவு தொகை ஆகும் என்று குத்துமதிப்பாக ஒரு தொகையைச் சொன்னார்.
 ஆண்டுதோறும் நாங்கள் "லிப்ட்' பராமரிப்புக்காக செலவிடும் தொகையில் இந்த செலவுத்தொகை சேராதாம். வேறு வழியின்றி பணம் தர ஒப்புக் கொண்டோம்.
 அவர்களின் அறிவுரையின்படி சரி செய்த இடத்தில் நீர் ஊற்றினோம். சில நாட்கள் மின்தூக்கியைப் பயன்படுத்தவே இல்லை. அதற்கு பிறகு பயன்படுத்தும்போது லிப்டில் பிரச்னை ஏற்படவில்லை.
 எங்களுடைய தளம் நான்கே இருப்புகள் கொண்டதால், பொறுப்பு என் மீது விழுந்தது. இருபது, முப்பது இருப்புகள் கொண்ட தளங்களில், இதற்கென்றே தனியாக காரியதரிசிகள் இருப்பார்கள். லிப்ட், ஜெனரேட்டர், நீர்க்கசிவு போன்ற சில்லறை தொந்தரவுகளைப் பார்ப்பது அவர்கள் பணி.
 நீர்க்கசிவு என்றவுடன் ஞாபகம் வருகிறது. சில நாட்களுக்கு முன் பக்கத்து தள நண்பர் என்னை சந்தித்தார். சில நாட்களுக்கு முன் பெய்த லேசான மழைத் தூறலின் காரணமாக, கூடத்து உத்தரத்தில் வியர்வைத் துளிகள் போல, நீர் தென்பட்டதாம். "புதிதாகக் கட்டி குடிவந்து ஆறு வருடம்தானாகிறது. அதற்குள் இப்படி' என்றார்.
 "இதற்கு மேல் யார் குடியிருக்கிறார்கள்' என்று கேட்டேன். "ஓ... அதுவா? கெஸ்ட் ஹவுஸ் போலத்தான். ஓனர் அயல் நாட்டில். அவர் எப்போதாவதுதான் இங்கு வருவார்' என்றார்.
 அடுத்து, நான் சொன்னபடி பரபரவென்று செயலில் இறங்கினார். உரிமையாளரின் காரியதரிசி ஓடோடி வந்தார்.
 நண்பர், என் மகன், காரியதரிசி மூன்று பேரும் இரண்டாவது மாடிக்கு சென்று பார்க்கும்போது, வாசல் படியில் காலைக் கூட வைக்க இயலவில்லை. பனிக்கட்டியை போல உறைந்திருந்தது. சென்ட்ரல் ஏஸியை போட்டுவிட்டு, அணைக்காமல் இருந்திருக்கிறார். அவர் மன்னிப்பு கோரிவிட்டு, உடனே அகன்று விட்டார். நண்பரின் வீட்டு கூட உத்தரத்தில் தானாகவே நீர்த்துளிகள் மறைந்துவிட்டன.
 தற்காலத்தில் வீட்டுச் சமையலறைக்குள்ளேயே, பல மின்சாதனங்கள் நுழைந்துவிட்டன. மிக்ஸி, கிரைண்டர், எரிவாயு அடுப்பு, மைக்ரோவேவ் ஓவன் என்று நீளமாக சொல்லிக் கொண்டே போகலாம். முக்கியமான அம்சம் என்னவென்றால், இவற்றில் ஏதாவது ஒன்றை உபயோகப்படுத்தும்போது, கவனம் வேறெங்கும் சிதறிப் போகக் கூடாது.
 தொலைபேசி அழைப்பு, அழைப்பு மணி சப்தம், வேறு ஏதாவது ஞாபகம் - போன்றவற்றைப் புறக்கணிக்க வேண்டும். நினைவில்லாமல் கேûஸ பற்ற வைத்துவிட்டு, போன் பேசிவிட்டுத் திரும்பிப் பார்த்தால், பொங்கி வழிந்து பால் தரையெங்கும் ஓடிக் கொண்டிருக்கும். இன்றைய நாளில் பெரும்பாலோர் கைப்பேசியில் மூழ்கிவிட்டால், உலகத்தையே மறந்து விடுவார்கள். எனவே சமையலறை வேலை முடியும்வரை கைப்பேசியைத் தவிர்ப்பது நல்லது.
 மைக்ரோவேவ் அடுப்பு இந்தியா போன்ற நாடுகளுக்கு அவசியமில்லைதான். என்றாலும், சிலர் அதைப் பெருமைக்கு உரிய பொருளாகக் கருதுகிறார்கள். விருந்தினர்களுக்குப் பரிமாறும்போது, மைக்ரோவேவ் என்ற சொல்லை உதிர்க்கையில் பெருமை பொங்கும்.
 காலமாற்றத்துக்கு ஏற்ப, எழுதுபொருள் கடைகளில் கணினிக்குத் தேவையான பொருட்களை விற்கிறார்கள். பிரிண்டர், கார்ட்ரிட்ஜ், தாள்கள் போன்றவை கிடைக்கின்றன. அதே போல் கைப்பேசியைப் பழுது பார்க்கும் பொருட்களுக்காகவே தனி கடையும் இருப்பதை பார்க்கிறோம்.
 ஆனால் மின்சாதனம், மின்னணுக் கருவி இவற்றில் முக்கியமான உதிரிப் பொருள் கெட்டுவிட்டால், பழுது பார்த்து சரிசெய்யும் திறமையான நிபுணர்கள் இங்கு குறைவு.
 அண்மையில், ஒரு விற்பனைக் கடையில் ஏர்கண்டிஷனரை சரிசெய்ய போன இரண்டு பேர், வேலையில் ஈடுபட்டிருக்கும் போதே, கம்ப்ரஷர் வெடித்துச் சிதறி மரணமடைந்தார்கள் என்ற செய்தி வந்தது. இவர்களுக்கு நல்ல தேர்ச்சியும், பழுத்த அனுபவமும் தேவை.
 சிலர், ஏடுகளில் வருகிற விளம்பரத்தால் கவரப்பட்டு, இரண்டாம் நிலை ஏஸி, கைப்பேசி இவற்றை வாங்கி விடுகிறார்கள். மின்சாதனங்களில் தரம் மிக முக்கியம். இதற்கான செலவில் சமரசம் கூடாது.
 கைப்பேசியிலுள்ள பாட்டரி வெடித்துச் சிதறுவது, அதன் "வீக்கத்தினால்'தான். இரவு பூராவும் கைப்பேசியை மின் ஏற்றத்துக்காக பிளக்கில் பொருத்தி வைப்பது உசிதமல்ல. மழைக்காலமும், தீபாவளியும் நெருங்குகின்றன. மின்கசிவு, மழையினால் அறைக்குள் சாரல், மின்சார ஏற்ற இறக்கம், ஒரு "பேஸ்' வேலை செய்யாமலிருப்பது - போன்றவை நிகழ்வதற்கானச் சாத்தியக்கூறுகள் அதிகம். மின் ஏற்ற இறக்கம் அடிக்கடி இருந்தால், வீட்டையே இருளடைய செய்து விடும்.
 மண், மரம், நிலம், நெருப்பு, நீர், ஊர்தி போன்ற எல்லா இடத்திலிருந்தும் தன்னை முருகர் காப்பாற்ற வேண்டுமென, பாம்பன் சுவாமிகள் சண்முக கவசத்தில் பாடியுள்ளார். இன்றைய சூழலில், அவர் குறிப்பிட்ட எல்லாவற்றிலுமே மின்சாரம் ஊடுருவி உள்ளது. இல்லத்தரசிகளும், குடும்ப தலைவர்களும் இடர்களைத் தவிர்க்க மிகமிக எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com