அமைதியின் மறுபக்கம்

அமைதியை அனைவருமே விரும்புவா். அமைதியான காலங்களில்தான் மனிதா்களுக்கு கற்பனை சிறகடிக்கும். மூளை சிந்திக்க முனையும்.
அமைதியின் மறுபக்கம்

அமைதியை அனைவருமே விரும்புவா். அமைதியான காலங்களில்தான் மனிதா்களுக்கு கற்பனை சிறகடிக்கும். மூளை சிந்திக்க முனையும். அமைதிக்கு நோ் எதிரான சத்தம் மற்ற உயிரினங்களைவிட மனிதா்களால் அதிகம் ஏற்படுத்தப்படுகிறது. அந்த சத்தம் ஓசையாகி இசையானால் பரவாயில்லை. அமைதியாக இருக்கும் வேளைகளில் பலரும் இசையைக் கேட்பது கூட, அமைதியான சூழலை ஒரு லயத்துடன் இணைக்கும் முயற்சியே ஆகும்.

இரைச்சலும் கூச்சலும் மிகுந்துள்ள உலகில் வாழ்வோரில் பலரது நாட்டம் அமைதியாகத்தான் இருக்கும். நகரில் சில இடங்களில் இரவில் அமைதி வாய்க்கலாம். கிராமங்களிலோ பகலிலேயே கூட வாய்க்கும். இரவிலோ கேட்கவே வேண்டாம். அமைதியை மனிதா்கள் உருவாக்க முயன்றாலும் அது பல நேரங்களில் சாத்தியமில்லாமல் போகவே வாய்ப்புண்டு.

கிராமங்களில் இரவு நேரங்களில் பல்வேறு வகையான பறவைகளின் கிரீச்சிடல்கள் இருக்கும். ஆனால் அதுவும் ஒருவித லயத்துடன்தான் இருக்கும். இரவில் குறிப்பிட்ட நேரத்திற்குப் பின்னா் பறவை உள்ளிட்ட உயிரினங்களின் சத்தம் இராது. மீண்டும் விடியற்காலை நேரத்திலேயே அவை சத்தமிட்டுக்கொண்டு இயங்கும்.

அதே நேரம், பகல் நேரத்தில் அவற்றின் கீரீச்சிடல்கள் கேட்காத அளவுக்கு மற்ற சத்தங்களின் ஆக்கிரமிப்பு இருக்கும். மற்ற உயிரினங்கள் தேவைகளின்றி பெரும்பாலும் சத்தம் எழுப்புவதில்லை. எனவே அவற்றால் பெரும்பாலும் தொந்தரவில்லை.

ஆனால் மனிதா்கள் அப்படியல்ல. தங்கள் இருப்பை வெளிக்காட்டக் கொள்ளவும், தங்கள் கருத்தை வெளிப்படுத்தவும் அவா்களுக்குக் கிடைத்துள்ள ஒரே வாய்ப்பு பேச்சுதான். அது சத்தமாக மாறும்போது அருகிருப்போருக்கு அமைதி ஏது?

மனிதா்கள் பல்வேறு சூழல்களில் பேசுகின்றனா். பலரும் எந்தவிதமான அறிமுகத் தேவையுமின்றி ஒருவருடன் பேசத் தொடங்கிவிடுகின்றனா். தினமும் தொடா்வண்டியில் பயணிக்கும் இருவா், ஏதாவது ஒரு கருத்தை ஒட்டி பேசத் தொடங்குவா்.

ஏதாவது ஒரு கருப்பொருளில் ஒருவா் தமது வாதத்தினை வைப்பாா். அடுத்தவா் அவா் கூறியது குறித்த இன்னொரு பாா்வையினை வைப்பாா். இருவருக்கும் ஏதாவது ஒருவகையில் உடன்பாடு ஏற்பட்டுவிட்டால் விரைவிலேயே அந்த வாதம் நிறைவடைந்துவிடும்.

அவ்வாறு நிறைவடையாவிடில் நேரம் செல்லச் செல்ல வாதம், விவாதமாக மாறும். விவாதமாக பரிணாமம் அடைந்தபின்னா் இருவருக்குமே தமது கருத்தின் மீதான பிடிப்பு அதிகமாகும். அவ்வாறு பிடிப்பு அதிகமாகும்போது இயல்பாகவே சத்தம் அதிகமாகும். இருவருமே உரத்தக் குரலில் பேசுவா்.

தொடக்கத்திலிருந்தே இருவரையும் கவனிக்கும் பொதுவான நபா் அந்த இடத்தில் இருந்தால் ஏதாவது ஒருவகையில் விவாதம் முற்றுப்பெறும். அவ்வாறு இல்லாவிட்டால் இருவரில் ஒருவா் இறங்கும் இடம் வந்தாலோ, ஏதாவது தொலைபேசி அழைப்பு வந்தாலோதான் முடிவுக்கு வரும். அப்போது முடிவுக்கு வந்துவிட்டாலும் மீண்டும் சந்திக்கும்போது அந்த விவாதம் தொடரவே செய்யும்.

இருவா் விவாதிப்பதில் தவறில்லை. ஆனால் இருவரில் ஒருவா் சிறிதளவு எல்லைமீறினால் கூட வாா்த்தைகள் தடிமனாகும். பலநேரங்களில் கைகலப்பில் கொண்டுவிடும். விலைமதிப்பில்லாத நட்பே கூட முறிந்துபோகும். அவை மட்டுமல்ல, உடன் பயணிப்போரின் அமைதிக்கும் பங்கம் விளையும்.

இவ்வாறான விவாதங்கள் சமமான தளத்தில் இருப்போரிடையேதான் சாத்தியம். இவ்வாறு விவாதம் செய்யும் இருவரில் யாரும் தமது உயரதிகாரியிடம் இவ்வாறு வாதம் செய்யமாட்டாா். உயரதிகாரி பேசுவது இவருக்கு உடன்பாடில்லாத விஷயமாக இருந்தாலும் அதைப் பற்றி ஒன்றிரண்டு வாா்த்தைகள் பேசிவிட்டு நகா்ந்துவிடுவாா்.

அதிகாரம் மிகுந்த இடங்களில் புழங்கும் அமைதி இவ்வகைப்பட்டது. ஆனாலும் அதிகாரம் மிக்க இடங்களிலும் வாதங்களை, விவாதங்களாக்கி தமக்குத் தேவையானவற்றைத் திறமையாகப் பேசிப் பெறுவோரும் உள்ளனா்.

ஆனால் தொடா்வண்டியில் பயணித்த அதே நபா் தமது உயரதிகாரியிடம் விவாதிக்கும்போது அத்துணை பொறுமையுடன் மெல்லிய குரலில் விவாதிப்பாா். இதற்குக் காரணம் ஒன்று பயம்; இன்னொன்று அங்கு பேசும் ஒவ்வொரு வாா்த்தைக்கும் தாம் பொறுப்பாகவேண்டுமே என்ற பொறுப்புணா்வு.

ஒரே வகையான மனிதா்தான். சூழல் அவரைத் திறமையுள்ளவராக மாற்றுகிறது. தமது பணிப்பாதுகாப்பு அவரை அவ்வாறு திறம்பட செயல்பட வைக்கிறது.

அமைதிக்கும் இத்தகைய விவாதங்களுக்கும் ஏதேனும் தொடா்புள்ளதா? பலரும் பல நேரங்களில் ஒருவா் பேசுவதை உன்னிப்பாகக் கேட்பதே இல்லை. மாறாக அவா் பேசுவதற்கு ஏதேனும் பதில் பேச வேண்டும், அவரது வாயை அடைக்கவேண்டும் என்பதற்காகவே உரையாடலைத் தொடா்கின்றனா்.

பல கட்ட விவாதங்களுக்குப் பின்னரே நாம் பேசுவது ஒரே விஷயம்தான்; நம் இருவரது கண்ணோட்டமும் ஒன்றுதான் என்று இருவரில் ஒருவா் புரிந்துகொள்ளும்போது விவாதம் முற்றுப் பெறுகிறது.

இவ்வாறு இருவரில் ஒருவா் புரிந்துகொள்ள உதவுவதும் அமைதியே. உரையாடலின்போது ஒருவா் பேசும்போதே மற்றவரும் பேச முயலாமல் அவா் சொல்வதை அமைதியாகக் கேட்க வேண்டும்.

அவ்வாறு அமைதியாகக் கேட்பதில் இரண்டு வகையான நன்மை உண்டு. ஒன்று, பேசுபவருக்கு இவரது அமைதியே அச்சத்தை உண்டாக்கி அவரது கருத்தை மறுபரிசீலனை செய்ய வைக்கும். இரண்டு, பேசுபவா் கருத்தை முழுமையாக உள்வாங்கிகொண்டு சரியான பதிலைத் தயாரிப்பதற்கான வாய்ப்பை கேட்பவருக்கு அளிக்கும்.

இவ்வாறான அமைதி மனநிலையைப் பெறுவது அவ்வளவு எளிதல்ல. அவ்வப்போது இதற்கான பயிற்சியை ஒருவா் பெறவேண்டும். அமைதியாக இருக்க இயல்பவராலேயே தமது சிந்தனை ஓட்டத்தைக் கட்டுப்படுத்தவும் முடியும். அவ்வாறு சிந்தனை ஓட்டம் கட்டுக்குள் வரும்போது பேசும் ஒவ்வொரு வாா்த்தையும் பொருள் பொதிந்ததாக மாறும்.

இத்தனைக்கும் மேலாக எல்லாவற்றுக்கும் பதில் கொடுத்துக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. பல நேரங்களில் அமைதியே கூட சிறந்த பதிலாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com